privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

-

சகாயம் விசாரணை
இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய கிரானைட் கொள்ளையை விசாரித்து வரும் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம்

சகாயம் : அதிகார வர்க்க சட்டவாதப் போலி போர்வீரன்!

துரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் எனப்படும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய கிரானைட் கொள்ளையை விசாரித்து வரும் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயத்துக்கு இரண்டாவது கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுவும் வழக்கம்போல ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது கொலை மிரட்டல் வழக்கு என்னவானது என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. சகாயத்தைக் கிரானைட் கொள்ளைக் குற்றவாளிகள் கொலை செய்ய முயலுவதாக திருச்சி சிறைக் கைதிகள் பேசிக்கொண்டதாக அவரது குடும்பத்திற்குத் தகவல் கிடைத்ததாகவும், முறைப்படி அரசிடம் அவருக்குப் பாதுகாப்புக் கோரியதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் துணிச்சலாகத் தனது கடமையில் கண்ணாகப் பணியாற்றுவதைப் போன்ற தோற்றம் முதலாளிய ஊடகங்களால் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், சகாயமோ கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” காட்டுகிறார். அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்வதா, இல்லை அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற முட்டாள்தனமென்று சொல்வதா? விரைவிலேயே தெரிந்துவிடும்!

இதையே வேறு கோணத்திலும் பார்க்கலாம். நெல்லையில் வேளாண்துறை அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஆகிய இருவர் அடுத்தடுத்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கர்நாடகா, கோலாரில் அரசு நிர்வாகப் பணி அதிகாரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். கேரளாவில் இன்னொரு அதிகாரி இரு மகன்களோடு கொல்லப்பட்டார். பீகாரில் ஊழலுக்கு எதிராகப் போராடிய பொறியாளர்கள் மஞ்சுநாத் சண்முகம், சத்யேந்திர துபே ஆகியோர் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். குஜராத், ராஜஸ்தான், மராட்டியத்தில் தகவலறியும் சட்டத்தின் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டுவர முயன்ற சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் சிலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இவையெல்லாம் ஒருசில எடுத்துக்காட்டுகள்தாம். உ.பி., ம.பி., அரியானாவையும் ஆந்திராவையும் சேர்த்தால் இன்னும் பல கொலைகள், தற்கொலைகள் நடந்துள்ளன. எல்லாம் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களால் (மஃபியாக்களால்), கூலிப்படைகளை வைத்து நடத்தப்பட்டவை. தமிழ்நாடு இதற்கு விதிவிலக்கு அல்ல. பாலாறு, காவிரி, தாமிரபரணி மணற்பரப்புகளில் களப் பலியானவர்களைப் பார்த்தாலே இந்த உண்மை புரியும்.

கிரானைட் கொள்ளை
இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆதிக்கத்தின் கீழ் அரசு நிர்வாகம் முழுவதும் போய்விட்டது.

சகாயம் எந்த முறைகேடுகள் மீது விசாரணை நடத்துகிறாரோ அவற்றைச் செய்தவர்கள், அவர்களின் அரசியல் கூட்டாளிகள், அவர்களின் கிரிமினல் குற்றப் பின்னணிகள் பற்றிய உண்மைகள் அரசியல் அறிந்த யாரும் அறியாத இரகசியங்கள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் மட்டுமல்ல; நாடு முழுவதுமுள்ள நிலம், கடல், ஆறு, காடுகள், மலைகளில் குவிந்துள்ள கனிமங்கள், தாதுப் பொருட்கள், எரிபொருட்கள் போன்ற பொதுமக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆதிக்கத்தின் கீழ் அரசு நிர்வாகம் முழுவதும் போய்விட்டது. இந்தக் கொள்ளைகளுக்குப் பாதுகாப்பாகவும் அவற்றை எதிர்த்துத் தன்னெழுச்சியாகப் போராடும் மக்களை ஒடுக்குவதாகவும் அரசுக் கட்டமைப்பு முழுவதும் மாறிவிட்டது.

நாட்டின் இந்த உண்மை நிலைமைகளோடு, சகாயம் விசாரணையில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கும் பின்வரும் செய்திகளைப் பொருத்திப் பாருங்கள்:

பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களின் மோசடிக்கு மூல காரணமே அதிகாரிகள்தான் என மக்கள் பலரும் சகாயத்திடம் குற்றம்சாட்டினர். பணியில் இருக்கும் வருவாய்த் துறையினர் ஆவணங்களைத் திருத்தவும், கிரானைட் கற்களை வெட்டிப் பாதுகாக்கவும் துணை போகின்றனர். பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் வருவாய்த் துறை, டாமின் அதிகாரிகள் பி.ஆர்.பி. நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்து விடுகின்றனர். எப்படியெல்லாம் அரசு நிலத்தை மோசடி செய்யலாம் என இவர்கள்தான் பி.ஆர்.பி.க்கே யோசனை கூறுகின்றனர். அரசு நிலத்தை வளைத்துப் போடுவது எப்படி, அரசுக்கு தெரியாமல் மோசடியாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது எப்படி என கிரானைட் கொள்ளைக்கு அனைத்து வழிகளிலும் இந்த அதிகாரிகள்தான் உதவியுள்ளனர். 2012-ம் ஆண்டுவரை இதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றனர்.

கீழையூர் அருகே ரெங்கசாமிபுரம் என்ற கிராமத்தைத் தடம் தெரியாமல் அழித்துவிட்டு, அந்த இடத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் அங்கு சென்று சகாயம் ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் சகாயத்திடம் கூறும்போது, கிரானைட் நிறுவனங்களுக்கு நாங்கள் விரும்பி நிலங்களை கொடுக்கவில்லை. மிரட்டியதால் வேறு வழியின்றி கொடுத்துவிட்டோம். தர மறுத்தவர்களின் நிலங்களில் கற்களைக் கொட்டினர். குளங்களுக்கு நீர் செல்லும் வாய்க்கால், பாசனக் கிணறுகளிலும் மண்ணைப்போட்டு மூடிவிட்டனர். இதுபற்றி நாங்கள் அளித்த புகாரை காவல், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த அழிவுக்கு அரசு அதிகாரிகள்தான் முக்கிய காரணம். மேலூர் தாலுகா அலுவலகத்தில் பி.ஆர்.பி. குடும்பத்தினர் பெயரில் நிலப்பட்டா மாறிவிட்டால், அதை முழுமையாகப் பாதுகாப்பது அதிகாரிகள்தான் என கிராமத்தினர் சரமாரியாக குற்றம் சாட்டியதை சகாயம் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்தப் பகுதியில் அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள் ஓய்வுக்குப் பின் கிரானைட் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து விட்டனர். எனவே அதிகாரிகள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நீதிமன்றத்தில் இது பற்றிய விவரங்களை சமர்ப்பிப்பதாக அவர்களிடம் சகாயம் உறுதியளித்தார்.

சகாயம் விசாரணை
கிரானைட் கொள்ளை குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தும் சகாயம்.

கிரானைட் முறைகேடு குறித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாக கவனித்து மேலிடத்துக்கு உடனுக்குடன் தகவல் அளித்து வருகின்றனர். மதுரையில் முதற்கட்ட விசாரணைக்கு வந்தபோது ரயிலில் அவசரப் பிரிவில் இருக்கை ஒதுக்கீடு பெற்றுத்தரவில்லை என்றும், மதுரையில் அவர் தங்கியிருந்த அறையில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகள் விசாரணையை கண்காணிப்பதாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சகாயம் மதுரையில் இறங்குவது முதல் திரும்பிச் செல்வது வரை அவரின் நடவடிக்கைகளை உளவுத்துறையினர் முழுமையாகக் கண்காணித்தனர். புகார் விவரம், அதை அளிப்பவர்களின் பின்னணி, சகாயத்தை சந்திப்பவர்கள், விசாரணைக்கு வந்து செல்லும் அதிகாரிகள், விசாரணையில் தெரிவிக்கும் தகவல்கள், அரசியல் கட்சியினர் சந்திப்பு உள்பட அனைத்து விவரங்களையும் உளவுத்துறையினர் சேகரிக்கின்றனர். இதற்காக 2 முதல் 4 உளவுப்பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டனர். குவாரிக்கு சகாயம் நேரடி ஆய்வு செய்யச் சென்ற இடங்களில் எல்லாம் உளவுத்துறையினர் கண்காணித்தனர். இவர்கள் சேகரிக்கும் தகவல்களை உடனுக்குடன் மேலிட அதிகாரிகளுக்குத் தெரிவித்தபடி இருந்தனர். இத்துடன் வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் என பல்வேறு துறை அலுவலர்களும் சகாயம் விசாரணை குறித்த தகவல்களைத் தங்கள் உயரதிகாரிகளுக்குப் புள்ளி விவரங்களுடன் தெரிவித்து வருகின்றனர். அந்தந்த துறை மாவட்ட அதிகாரிகள் மூலம் துறையின் தலைமையிடத்து அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்படுகிறது.

சகாயத்திடம் பொதுமக்கள் புகார் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பி.ஆர்.பி. தரப்பில் இருந்து வேவு பார்த்த சூப்பர்வைசர் கண்ணன், பொதுமக்களிடமும் சகாயத்திடமும் சண்டைக்கு வந்தார். குரலை உயர்த்திப் பொதுமக்கள் சொல்லும் குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை செய்து வந்தவரை சகாயம், “உங்களிடம் நான் எதுவும் பேசவில்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் முறைப்படி புகாராக எழுதி உங்கள் தரப்பு விவரத்தைச் சொல்லுங்க” என்று சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.

“சகாயம் சார்கிட்ட புகார் கொடுத்துட்டு வந்திருக்கேன். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கு” என்று புகார் கொடுத்தவர்களில் ஒருவர் சொன்னார். “இது வெறும் மலைகள் இல்லை. நாம் வாழ்ந்த வரலாற்றின் ஆவணம். அதை எப்படி அழிக்க மனசு வரும்” என்று வருத்தப்பட்டு சகாயம் பேசினார். அந்த நேரத்தில் மழைத் தூறல் ஆரம்பிக்க சகாயம் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தார். சகாயத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கிரானைட் மாஃபியாக்கள், அதை முடக்கக் காத்திருக்கின்றனர். நீதிமன்றமும், மக்கள் மன்றமும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் சகாயத்தின் பயணம் தொடர்கிறது!”

சகாயம் விசாரணையிலிருந்து தொகுக்கப்பட்ட இந்த செய்திகளை நாட்டின் நிலைமைகளோடு பொருத்திப் பார்க்கும்போது ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. சகாயம் கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” தான் காட்டுகிறார்; அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்லமுடியாது; அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நம்பும் “அவரது முயற்சிகள் முட்டாள்தனம்” என்றுதான் இப்போதைக்குச் சொல்லமுடியும்.

  • கிரானைட் நிறுவனங்களின் மோசடிகளுக்கு மூல காரணமே அதிகாரிகளும் போலீசும்தான்.
  • சகாயத்தின் கண் முன்பாகவே புகார் கொடுக்க வந்தவர்களை கிரானைட் நிறுவன சூப்பர்வைசர் மிரட்டுகிறார்; சுதந்திரமாகவும் பயமின்றியும் புகார்கள் பெறவும் விசாரணை அதிகாரி முயலவில்லை. குற்றவாளிகளின் அடியாளிடம் மென்மையாகப் பேசுகிறார்.
  • சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார், வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் – எனப் பல்வேறு துறை அலுவலர்களும் குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகளும் சகாயம் விசாரணை குறித்த தகவல்களைத் திரட்டித் தமது மேலிடங்களுக்கு அனுப்புகின்றனர்.
  • மேலும், சகாயம் தனது விசாரணையை மட்டுமின்றி, குற்றவாளிகளைத் தண்டிப்பதையும் இந்த அதிகார வர்க்கத்தையும் நீதிமன்றத்தையும் கொண்டு செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்.

இதன் மூலம் அதிகார வர்க்க சட்டவாதத்துடன் நின்றுகொண்டு இன்னொரு போலிப் போர்வீரன் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. கனிமவளக் கொள்ளைகளுக்குத் துணைநிற்கும், பாதுகாக்கும் அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே நின்று கொண்டு அதனைவைத்தே குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும் என்று சகாயம் நம்புகிறார். அந்த முயற்சியில் தன்னோடு ஒத்துழைக்காத அதிகாரிகளைப் பார்த்து, “ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் ஆசிரியரிடம் பெயரெழுதிக்கொடுத்து விடுவேன்” என்று எச்சரிக்கை விடுக்கும் தோரணையில் “நீதிமன்றத்திடம் அறிக்கை கொடுத்து விடுவேன்” என்று பணிவோடு மிரட்டுகிறார்.

சகாயம் விசாரணை
சகாயம் குறித்தும், அவரது விசாரணை குறித்தும் உருவாக்கப்படும் பிரமைகள்.

ஆனால், சகாயம் போன்ற இன்னொரு சட்டவாதப் போர்வீரனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு சகாயத்துக்குச் (தமிழ் தி இந்து நாளிதழில்) சில கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில், முக்கியமாக நீதிமன்றங்களின் ஒத்துழைப்போடுதான் கிரானைட் கொள்ளைகளே நடந்திருக்கின்றன; அதையும் சகாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். சகாயமோ இதைக் கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் காலில் விழாத குறையாக அதிகாரிகளும் நீதிபதிகளும் நடந்து கொள்கிறார்கள். அந்தக் குற்றவாளிஅரசின் எல்லா முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருப்பதோடு, அவற்றுக்கு எதிராக நியாயம் கோரிப் போடப்படும் வழக்குகளைக் அடியில்போட்டு உட்கார்ந்து கொள்ளும் இந்த நீதிமன்றங்களிடமே நீதி-நியாயம் கிடைக்கும் என்று நம்பச்சொல்லுகிறார்.

“வேறென்ன செய்ய முடியும்? வேறு மாற்று ஒன்றுமே இல்லாதபோது, சகாயம் – ஏதோ அத்திபூத்தாற் போன்று ஒரு நேர்மையான, துணிச்சலான அரசு நிர்வாகப் பணி அதிகாரி வாய்த்திருக்கிறார். முறைகேடுகளை எதிர்த்துப் போராடும் அவரது நற்பணிக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எல்லோரையும் எல்லாவற்றையும் குறைசொல்லுவதைப் போல சகாயத்தையும் விமர்சிக்கலாமா?” என்ற கேள்வியை நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதார சிக்கலைப் புரிந்துகொள்ளாத அரசிலற்றவர்கள் எழுப்புகிறார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை சகாயம் போன்ற தனிநபர்களின் தனிப்பட்ட நேர்மை, துணிச்சல் அல்ல. சகாயம் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தவர் அல்ல. அரசு நிர்வாகப் பணி தேர்வில் வெற்றிபெற்று, அதற்கான முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர். அரசு நிர்வாகப் பணியின் சூட்சுமங்களையும் அதன் இன்றைய போக்குகளையும் கற்றுத் தேர்ந்தவர். தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை அவரது சொந்த அனுபவங்களே உணர்த்தியிருக்கும். இருந்தாலும் அவ்வாறானதொரு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் என்றுதான் விமர்சிக்கிறோம்.

நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைக்கு எதிராக தமது சொந்த பலத்தால், மாபெரும் மக்கள் எழுச்சியும் புரட்சியுமில்லாமல் தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு காண முடியாது. ஆனால், அவ்வாறான மாற்றுப் பாதையை கையிலெடுக்கும் நேர்மையும் துணிவுமில்லாத பல குட்டி முதலாளிய அரசியல் குழுக்களும், அறிவுஜீவிகளும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவ்வப்போது சகாயம், உதயகுமாரன், கேஜரிவால் போன்ற தலைமையை முன்னிறுத்தி தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகாணும் வழிமுறையின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கச்சொல்லுகிறார்கள். அவசியமான, சரியான பாதையையும் தீர்வையும் நோக்கிச் சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டுவதற்குத் துணிவு கொள்வதற்குப் பதிலாக, ஒன்றுமில்லாததற்கு இதையாவது ஆதரிப்போம் என்ற மாயையில் மக்களை ஆழ்த்துகிறார்கள்.

– ஆர்.கே.
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________