privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்மோடி - அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை !

மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை !

-

ட்ஜெட் வெளியான ஒரு சில நாட்களிலேயே, ரயில் நிலைய நடைமேடை கட்டணத்தை ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்த்தப் போவதாக அறிவித்தது, மோடி அரசு. மேலும், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகச் சேரும் திருவிழா நேரங்களில் இக்கட்டணத்தை அதிகாரிகள் தமது மனம்போனபடி ஏற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் கூட்டம் அதிகமாகவுள்ள நாட்களில் நடக்கும் கள்ள டிக்கெட் வியாபாரத்தை, மோடி அரசு ரயில் நிலையங்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறது.

09-modi-jaitley-thieves-1இப்படியுமா பொதுமக்களைக் கொள்ளையடிக்கத் துணிவார்கள் என நீங்கள் எண்ணினால், மோடியோ அதற்கும் மேலேயும் போய் இந்திய மக்களை அதிர வைக்கிறார். ஆட்சியில் அமர்ந்தவுடன் அவரது அரசு அறிவித்த பிரீமியம் ரயில் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன்படி, பிரீமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க நெருங்க, அதற்கு டிக்கெட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த ரயில்களின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துகொண்டே போகும். திருவிழா காலங்களில் ஆம்னி பஸ் முதலாளிகள் அடிக்கும் சட்டவிரோதக் கொள்ளைகூட இந்தளவிற்கு வக்கிரமாக இருப்பதில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ விலை சரிந்தபோதெல்லாம் மோடி அரசு அதன் மீது விதிக்கப்படும் கலால் வரியை அடுத்தடுத்து உயர்த்திக் கொண்டே போனது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலையும் டீசலையும் அவற்றின் அடக்கவிலையைவிடப் பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து வாங்கித் தீர வேண்டிய கட்டாயத்திற்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள். இந்த கலால் வரி உயர்வின் மூலம் மட்டும் பட்ஜெட்டிற்கு முன்பாகவே பொதுமக்களிடமிருந்து மோடி அரசு கொள்ளையடித்த தொகை ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்.

09-modi-jaitley-thieves-2பட்ஜெட்டிலோ ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது நான்கு ரூபாய் அளவிற்குச் சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் வெளியான அன்றிரவே ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் கட்டண உயர்வு, வரி உயர்வு இவற்றின் மூலம் மட்டுமே இந்த ஆண்டு மைய அரசிற்குக் கிடைக்கவுள்ள கூடுதல் வருவாய் 50,000 கோடி ரூபாய். இதற்கு அப்பால் கடந்த ஆண்டில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியம் 60,000 கோடி ரூபாயில் 30,000 கோடி ரூபாயை ஒரே சொடுக்கில் இந்த பட்ஜெட்டில் வெட்டி, அச்சுமையையும் மக்களின் மீது ஏற்றிவைத்துவிட்டது.

09-modi-jaitley-thieves-3வரிக்கு மேல் வரி விதித்து விவசாயிகளையும் பொதுமக்களையும் கசக்கிப் பிழிவதில் வரலாற்றில் இழிபுகழ் பெற்ற சக்கரவர்த்திகளையும் மன்னர்களையும் பாளையக்காரர்களையும் விஞ்சி நிற்கிறது, மோடி அரசு. ஊரறிந்த, உலகறிந்த கார்ப்பரேட் விசுவாசியான ப.சிதம்பரம்கூட இக்கொள்ளையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், இது ஏழைகளின் நலனைக் கருத்தில் கொள்ளாத, பெரு நிறுவனங்களுக்கும் வரி செலுத்துபவர்களுக்கும் சாதகமான பட்ஜெட்” என விமர்சித்திருக்கிறார். இந்த பட்ஜெட் ஏழைகளின் நலன்களைப் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டது என்பது மட்டுமல்ல, உள்நாட்டு தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய நிறுவனங்கள், புதுப் பணக்காரர்கள் ஆகியோரை மேலும் கொழுக்க வைப்பதற்காக மக்களின் தாலியை அறுத்திருக்கிறார், மோடி.

அடுத்த ஆண்டு பணவீக்கம் 5% சதவீதம் முதல் 6% சதவீதம் வரை இருக்கும் என வைத்துக்கொண்டால், சமூகப் பாதுகாப்புத் துறைகளில் அரசின் செலவுகள் 6% அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ உணவு, உரம் மற்றும் எரிபொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் 10% சதவீதம் வரை வெட்டியிருப்பதோடு, சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியிலும் கணிசமாகக் கைவைத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தை நலத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18,588 கோடி ரூபாய். அது இந்த பட்ஜெட்டில் 10,382 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 1,963 கோடியிலிருந்து 1,767 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 39,238 கோடியிலிருந்து 33,150 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அனைவருக்குக் கல்வி இயக்கத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்பொழுது 22 சதவீத நிதி வெட்டப்பட்டு, 22,000 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் இருநூறு ரூபாய் வழங்கும் தேசிய சமூக உதவித் திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

09-captionஉழைக்கும் மக்களின், நடுத்தர வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கும் மோடி, அதனை காப்பீடு நிறுவனங்களின் கையில் ஒப்படைத்து, அவற்றின் வருவாயையும் இலாபத்தையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார். இன்னொருபுறமோ, அடிக்கட்டுமானத் திட்டங்களை காண்டிராக்டு எடுத்துச்செய்யும் முதலாளிகள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைவதை அரசின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது, யாருடைய நலனில் அக்கறை செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.

கட்டண உயர்வு, மானிய வெட்டு மட்டுமல்ல, மக்களின் மீது வரி விதிப்பதிலும் மோடி அரசு வக்கிரமான எல்லையைத் தொட்டிருப்பதை சேவை வரி உயர்வு எடுத்துக் காட்டுகிறது. தூய்மை இந்தியா என்ற பெயரில் நடந்துவரும் கூத்தைத் தொடருவதற்கும் மக்கள் மீது சேவை வரியைத் திணித்துள்ள மோடி அரசு, கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் யோகா வகுப்புகளுக்கு வரியை ரத்து செய்திருக்கிறது. செல்வந்தர்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்வ வரி நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகளான சேவை வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து 23,383 கோடி ரூபாயைக் கூடுதலாகக் கறந்துள்ள மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்காரர்களுக்கும் 8,315 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.

இந்த 8,315 கோடி ரூபாய் வரிச் சலுகை என்பது வெளியே தெரியும் முகடுதான். கட்டுக்கட்டான பட்ஜெட் கோப்புகளின் உள்ளே முதலாளி வர்க்கத்திற்கும் புதுப் பணக்காரர்களுக்கும் அளிக்கப்படும் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகள் மறைந்துள்ளன என்பதே உண்மை. இக்கும்பல் வெளிநாடுகளிலிருந்து நாய்க்குட்டிகளை இறக்குமதி செய்துகொள்வதற்குக்கூட 250 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றனர்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் குறைவாக நிதி ஒதுக்கிவிட்டு (34,699 கோடி ரூபாய்), “நாங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதில்லை” என எகத்தாளமாகப் பதில் அளித்துள்ள மோடி அரசு, மாலை நேர விருந்துகளில் அழகுப் பதுமைகளாகச் சுற்றி வரும் புதுப் பணக்கார சோம்பேறிக் கூட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து தங்க, வைர நகைகளை இறக்குமதி செய்து கொள்வதற்காக 75,000 கோடி ரூபாய் சுங்க வரிச் சலுகை அளித்திருக்கிறது. இந்த 75,000 கோடி ரூபாய் வரிச் சலுகையை அனுபவிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுள், மோடிக்கு பத்து இலட்ச ரூபாய் கோட்டு-சூட்டைப் பரிசளித்த கார்ப் நிறுவனமும் அடங்கும்.

இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், புதுப் பணக்காரர்கள் ஆகியோரின் நலனை முன்னிறுத்தி அளிக்கப்பட்டுள்ள சுங்க வரி, கலால் வரி மற்றும் கார்ப்பரேட் வரிச் சலுகைகளால் இந்த ஆண்டு மைய அரசிற்கு ஏற்படும் வருமான இழப்பு 5,48,451 கோடி ரூபாய். கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள இழப்பு ஏறத்தாழ 42 இலட்சம் கோடி ரூபாய். அக்கும்பலுக்கு அளிக்கப்படும் இந்த அசாதாரணமான வரிச்சலுகைகள்தான் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன.

இந்த வரிச் சலுகைகளை ஒழித்துக் கட்டாமல் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாது. ஆனால், மோடி அரசோ ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகைகளைத் துண்டுதுண்டாக அளிப்பதற்குப் பதிலாக, அவற்றின் மீது விதிக்கப்படும் வரியை 30% சதவீதத்திலிருந்து 25% சதவீதமாகக் குறைக்கப் போவதாக அறிவித்து, வரிச் சலுகைகளை நிரந்தரமாக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

எட்டு சதவீதத்திற்கு மேலான பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பது என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான மூலதனம் நிதியாகவும், வங்கிக் கடனாகவும் வாரி வழங்கப்படுகிறது. அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து கடன்களைத் திரட்டிக் கொள்ள அரசே உத்தரவாதம் அளிக்கிறது. அவர்களின் இலாபத்தை உத்தரவாதப்படுத்துவதற்காகப் பழைய சட்டங்கள் கைவிடப்படுகின்றன அல்லது திருத்தப்படுகின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நெருக்கடிகளின் சுமையைத் தாங்கும் இடிதாங்கிகளாக மக்கள் நிறுத்தப்படுகின்றனர். பட்ஜெட் பற்றாக்குறையை ஈடு செய்ய உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் வெட்டப்படுகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி குறைக்கப்படுகிறது. மக்களின் வரிப் பணத்தால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் நிதி முதலாளிகளுக்கு விற்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் வாராக் கடனைச் சுமக்குமாறு தள்ளப்படுகின்றன.

இந்திய ஆளுங்கும்பல் தனியார்மயம்-தாராளமயத்தைத் தொடங்கி வைத்தபொழுது, “இனி தொழிற்துறையை தனியார் முதலாளிகள் கவனித்துக் கொள்வார்கள்; சமூக நலத் திட்டங்களை அரசு கவனித்துக் கொள்ளும்” என்ற மயக்கு வார்த்தைகளை அள்ளிவீசியது. ஆனால், நடைமுறையிலோ மக்கள் போராடிப் பெற்ற அனைத்துவிதமான சலுகைகளையும், உரிமைகளையும் பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் படையல் போடும் பூசாரியாக அரசு மாறி நிற்பதைத்தான் பார்க்கிறோம். அதாவது, முதலாளி வர்க்கம் அரசின் அரவணைப்பிலும் சலுகையிலும் பாதுகாப்பிலும் காலந்தள்ளுவது முன்னைக் காட்டிலும் இப்பொழுது மிகவும் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் தனியார்மயம்-தாராளமயம் பெரும் தோல்வியைத் தழுவிவிட்டது என்பது மட்டுமல்ல, அந்த வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், தூக்கியெறியாமல் மக்களுக்கு விடிவு காலம் இல்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.

– ரஹீம்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________