அன்பார்ந்த தோழர்களே !.

விளாடிமிர் இலியீச் உல்யானவ் 1870 ஏப்ரல் 22ஆம் தேதி ரசியாவில் வால்கா நதிக் கரையிலுள்ள ஸிம்பீர்ஸ்க் என்னும் நகரில் பிறந்தார். தன்னுடைய 54 ஆண்டு கால வாழ்வில் உழைப்பாளி மக்களை அணிதிரட்டி போராடி உலகில் முதன் முதலாக தொழிலாளிகள் அரசு ஏற்படுத்தினார்.
தோழர் லெனினை பற்றி தோழர் ஸ்டாலின் கூறுகிறார்.
“தோழர்களே கம்யூனிஸ்டுகளாகிய நாம் தனி வார்ப்பிலானவர்கள். நாம் தனி வகை மூலப்பொருள்களால் ஆக்கப்பட்டவர்கள். நாம் மகத்தான் பாட்டாளி வர்க்க போர்த் தந்திர நிபுணரின் படையை தோழர் லெனினுடைய படையைச் சேர்ந்தவர்கள். இந்தச் சேனையில் வீரர்களாயிருப்பதைத் தவிர, மேலதிகமான உயர்வான கவுரவம் வேறெதுவும் இல்லை. தோழர் லெனினை நிறுவனராகவும் தலைவராகவும் கொண்ட கட்சியின் உறுப்பினர் என்பதை விட, மேலதிகமான உயர்வான பட்டம் வேறேதுவும் இல்லை. இத்தகைய கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது எல்லோருக்கும் வாய்க்கின்ற ஒன்றல்ல. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருப்பதால் ஏற்படும் எல்லா நெருக்கடிகளையும் தாங்கி போராட்ட புயல்களை எதிர்கொள்ள இயலுவது எல்லோராலும் முடியக் கூடிய ஒன்றல்ல. தொழிலாளர் வர்க்கத்தின் புதல்வர்கள்தான் வாழ்க்கையில் இல்லாமையை எதிர்கொண்டும், போராட்டத்திற்கு அஞ்சாத புதல்வர்கள்தான், நம்பவொண்ணா வறுமையிலும் வீரஞ்செறிந்த முயற்சிகளை மேற்கொள்ளும் புதல்வர்கள்தான் எல்லோரையும் முந்திக் கொண்டு இத்தகைய கட்சியில் உறுப்பினராக வேண்டும். இதனால்தான், லெனினிய வாதிகளின் கட்சி, பொதுவுடைமையாளர்களின் கட்சி, தொழிலாளி வர்க்கத்தின் கட்சி என்று அழைக்கப்படுகிறது.”
நாள் தோறும் 16 மணி நேரம் கடும் உழைப்பில் கம்பெனிகளில் வேலை செய்த தொழிலாளர்கள் லெனின் கட்சியில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராகி ரசியாவை மாற்றிக் காட்டினார்கள். உலக முதலாளிகளை நடுநடுங்க வைத்தார்கள்.
மத வெறியர்களை எதிர்க்க முடியாது, பன்னாட்டு முதலாளிகளை எதிர்க்க முடியாது, தொழிலாளிகளை புரட்சிக்கு அணி திரட்ட முடியாது என்று இன்றும் நமது நாட்டில் பல பேர் ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களை பார்த்து தோழர் லெனின் கூறுகிறார்.
“முடியாது என்று சொல்லாதே
செய்ய மாட்டேன் என்று சொல்”
என இடித்துரைத்தார்.
தேர்தலில் தொழிலாளர்கள் ஒவ்வொரு முறை ஓட்டுப் போடும் போதும் ஒவ்வொரு உரிமையாக பறி போய்க் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவதன் மூலம் ஓட்டே போடாத முதலாளிகளுக்கு திமிர் அதிகம் ஏறுகிறது.
சின்னவேடம்பட்டி சி.ஆர்.ஐ முதலாளி அரசிடம் அனுமதி வாங்காமல் கம்பெனியை கதவடைப்பு செய்கிறார். நீதி மன்றத்தில் தடை உத்தரவு இருக்கும் போதே லாக் அவுட் செய்கிறார் எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது? சி.ஆர்.ஐ தொழிலாளர்கள் பிளவுபட்டு இருப்பதால்தான் இந்நிலை வந்தது. சோழா பம்ப்ஸ், ரேன்சர் உள்ளிட்ட CRI யின் ஆறு யூனிட் தொழிலாளிகளும் ஒன்றுபட்டால் முதலாளியின் ஆணவம் அடங்கி விடும்.

இந்த நாடு நம்முடையது, கம்பெனிகள் நம்முடையது எனும் உணர்வுடன் நாம் செயல்பட்டால் முதலாளித்துவத்தின் மூச்சடங்கும். நம் போராட்டத்தின் கால வரையறை என்ன? மூடிய கதவை முதலாளியாக திறக்கும் வரை நம் போராட்டம் தொடர வேண்டும். பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்களும் சி.ஆர்.ஐ தொழிலாளர்களும் இதனை நெஞ்சில் வரித்துக் கொண்டு போராடி வெற்றி பெற வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து தொழிலாளர் உரிமைகளை தக்க வைக்க வேண்டுமானால், புதிய உரிமைகளைப் பெற வேண்டுமானால் தோழர் லெனின் காட்டிய வழியில் புதிய ஜனநாயக அரசு அமைப்பதே தீர்வு. இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையால் இப்போது மட்டுமல்ல எப்போதுமே தொழிலாளர்கள் எந்த உரிமையையும் பெற முடியாது.
முதலாளியோ, வியாபாரியோ, அல்லது நிலப்பிரபுவோ தொழிலாளர்களுக்கு வேலைகளை வழங்கி விட்டார்கள் என்று கூறுவது சரியல்ல. மாறாக உழைப்பாளிதான் தனது உழைப்பின் மூலம் இந்த உலகை இயக்குகிறான். முதலாளி உள்ளிட்ட இந்த மொத்த உலகிற்கும் சோறு போடுகிறான். தனது உழைப்பின் பெரும் பகுதியை இனாமாக மற்றவர்களுக்கு வழங்குகிறான் என தோழர் லெனின் சுரண்டல் பேர்வழிகளை திரை கிழித்து தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டினார்.

தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்; ஆசான். அவர் தலைமையில் ரசிய கம்யூனிஸ்டு கட்சி, உழைப்பாளி மக்களை அணி திரட்டியது. இயந்திரங்களை இயக்கி உழைப்பது மட்டும் நம் வேலையல்ல; தொழிற் சங்கமாக மட்டும் திரண்டு போராடுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு மேலேயும் போக வேண்டும். கூலி அடிமைத் தனத்தையே ஒழிக்க வேண்டும். நாட்டை ஆளவும் வேண்டும். உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைக்க வேண்டும். இந்தப் பாதையில் நாம் நடை போட வேண்டும். போராட வேண்டும். தானேயான தொழிலாளி வர்க்கத்தை தனக்கான வர்க்கமாக மாற்ற வேண்டும். இத்தகைய வரலாற்றுக் கடமையை தோழர் லெனின் காட்டிய வழியில் ரசியத் தொழிலாளர்கள் நிறைவேற்றியதால் சோசலிச அரசு அமைந்தது
அதன் சாதனைகள்:
- ஆரம்ப பாட சாலை முதல் பல்கலைக் கழகம் வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. தொழிலாளர்கள் விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி அளிக்கப்பட்டது.
- சோவியத் நாட்டில் வீடு இல்லாத மனிதனே கிடையாது எனும் நிலையை உருவாக்கியது.
- சாதாரண காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரையில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
- வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள்.
- மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்கு வரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தையே சுற்றி வரலாம்.
- ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சுற்றுலா பயணம்.
- ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் கிடையாது.

இன்னும் இது போல ஆயிரக்கணக்கான சிறப்புகளை லெனின் தலைமையில் ரசியப் பாட்டாளிகள் நிகழ்த்தினர். இதனை நமது நாட்டிலும் அமுல்படுத்த வேண்டுமானால் லெனினிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எனவே தான் தோழர் ஆசான் லெனின் பிறந்த நாளை நமது சங்கம் கொண்டாடுகிறது. இதனை ஏற்க மறுப்பவர்கள் நிச்சயம் சமூக விரோதிகளாகத்தான் இருப்பார்கள்.
தொழிலாளர்கள் அனைவரும் சங்கம் அமைத்து போனஸ், சம்பள உயர்வு என பூச்சிகளைப் போல பேசிக் கொண்டு இருந்தால் போதாது. அரசு வேண்டும்; அதிகாரம் வேண்டும் என முழங்க வேண்டும். அதற்காக அணி திரள வேண்டும். நாம் நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்பு முறை முழுவதற்கும் தொழிலாளர் நலன்களுக்கும் இடையே இணக்கம் காண முடியாத பகைமையை, தொழிற்சங்கங்கள் எடுத்துக் காட்ட வேண்டும். மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிமைத் தனத்தை ஒழிக்க போராடுவதே முதன்மையான பணி என்பதை தொழிற்சங்கங்கள் விளக்க வேண்டும்.
மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்படுத்தப்பட்டுள்ளதை சட்ட மன்றமும் பாராளுமன்றமும் ஏற்கிறது. ஆனால் நமது பாதையோ உழைப்பை ஆள்பவனே உலகை ஆள வேண்டும் என்பதே, எனவே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். புரட்சிக்கு அணிதிரள வேண்டும்.

தொழிற்சங்கங்கள் கூலி உயர்வுக்கான போராட்டங்களோடு சொத்துடைமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுவதையே முழுமையான பணியாகக் கொள்ள வேண்டும்.
“தொழிலாளர்கள் தாங்கள் பெறும் சம்பளம் அல்லது கூலி உயர்வாகவோ குறைவாகவோ இருப்பதில் எந்த இழிவும் இல்லை. தன் உழைப்பில் உண்டான செல்வம் முழுவதையும் பெறுவதற்கு பதிலாக தான் சொந்த உற்பத்தி பொருளின் கூலி எனப்படும் பகுதியை மட்டும் பெறுவதோடு தொழிலாளி வர்க்கம் திருப்திப்பட வேண்டி இருப்பதுதான் மாபெரும் இழிவு”
என்கிறார் தோழர் லெனின்
நூறு ரூபாய் கூலி உயர்வுக்கு மேல் இருநூறு ரூபாய் கூலி உயர்வு கோருவது சாதாரண வர்க்க போராட்டம். உயர்ந்த வர்க்க போராட்டம் என்பது தொழிலாளர்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதுதான்.
தொழிலாளர்கள் தங்கள் நலனுக்காக மட்டுமல்லாமல் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் அவர்களுக்கு தலைமை தாங்கி நடத்தும் போராட்டம் தான் அரசியல் போராட்டம். இப்படியானதொரு உன்னதமான பாதையில் தோழர் ஆசான் லெனின் பாதையில் போராடும் சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து போராடுவோம் ! ஒட்டு மொத்த இயற்கைக்கும் மனித குலத்துக்கும் விரோதியான முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
லெனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நிகழ்ச்சி நிரல்
நாள் : 22.04.2015 மாலை 5 மணி
இடம் : சிஆர்ஐ கம்பெனி நுழைவாயில் (சின்னவேடம்பட்டி)
தலைமை : தோழர் மூர்த்தி சிஆர்ஐ கிளைத் தலைவர்
முன்னிலை : தோழர் திலீப் மாவட்டச் செயலர் பு.ஜ.தொ.மு
தோழர் குமாரவேல் மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு
உரை வீச்சு : தோழர் நித்தியானந்தன் பெரோலிங்க்ஸ் கிளைச் செயலர்
தோழர் கோபிநாத் அமைப்புச் செயலர்
தோழர் கோபால் பங்கஜா மில் கிளைச் செயலர்
தோழர் மோகன் ராஜ் கம்போடியா மில் கிளைச் செயலர்
தோழர் ரங்கசாமி முருகன் மில் கிளைத் தலைவர்
தோழர் பூவண்ணன் மாவட்ட பொருளாளர் பு.ஜ.தொ.மு
எழுச்சியுரை : தோழர் விளவை இராமசாமி மாநிலத் துணைத் தலைவர் , பு.ஜ.தொ.மு
நன்றியுரை : தோழர் இராஜன் எஸ்.ஆர்.ஐ கிளைச் செயலர்
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை
“இந்த நாடு நம்முடையது, கம்பெனிகள் நம்முடையது எனும் உணர்வுடன் நாம் செயல்பட்டால் முதலாளித்துவத்தின் மூச்சடங்கும்”. ……….ஹ்ஹூம் லெனின் ரசியாவைபற்றி இப்படி சொன்னதை பெருமையாக கருதமுடிந்தவர்களால் இதேபோன்ற கருத்தை இந்தியாவைப்பற்றி பலர் சொல்லும்போது ஏற்றுகொள்ள இயலாமல் போகிறது.அப்படி சொன்னவர்களின் சாதியையும் மதத்தையும் காரணம் காட்டி அவர்களைப்பற்றி இளக்காரமாக பேச மட்டுமே தெரிகிறது.
அற்புதமான பிரசூரம்.
அருமையான செயல்.
தொழிலாளி வர்க்கத்தின் தோழர் லெனின்
தொழிலாளி வர்க்கத்தின் தளையறுத்து
சுதந்திரக் காற்றினை
சுவாசிக்கச் செய்த
மண்ணுலகம் போற்றும்
மாபெரும் தலைவன்.
சிவப்பு சித்தாந்தத்தை
சிறப்பான முறையில்
செயல்படுத்திக் காட்டிய
செம்படையின் தலைவன்.
விளாதிமீர் இல்யீச்
லெனின் எனும் மாமேதை!
பொன்னுலகம் என்பது
விண்ணுலகில் இல்லை
பொதுவுடைமைப் பிறந்தால்
மண்ணுலகே சொர்க்கமென்று
உலகுக்கு உணர்த்திய
உயர்ந்ததொரு தலைவன்.
அவரது மரணத்தில்
அழுதது இவ்வுலகு – அவர்
உடலின் அடக்கத்தில்
உலக மக்களே
எழுச்சிமிகு உணர்வோடு
எழுந்து நின்றனர்!
இப்பேறு பெறுவதற்கு
என்ன செய்தார் லெனின்?
மார்க்சியத்தின் தோற்றம்
ஆண்டான் அடிமையென்றும்
பண்ணை அடிமையென்றும்
பலவாறாய் துன்புற்று – மக்கள்
பட்டறைத் தொழிலாளியாய்
ஆலைத் தொழிலாளியாய்
ஆனபோதும் அவர்களது
வாழ்க்கையில் வளங்களின்றி
வாடிய காலமதில்
உழைக்கும் வர்க்கத்தின்
உணர்வினை உள்வாங்கி,
உணவு மறந்து, உறக்கம் தொலைத்து,
உறவுடன் உடமைகள்
அனைத்தும் மறந்து,
ஆழ்ந்ததொரு படிப்பால்
மூலதனத்தின் மூர்க்கத்தனத்தை,
முதலாளிகளின் சுரண்டல் புத்தியை,
ஏற்றமிகு தொழிலாளரின்
ஏமாளித்தனத்தை,
உழைப்பை, உற்பத்தியை,
உபரி உழைப்பை, இலாபத்தை,
உற்பத்தி உடைமையில்
உழைப்பவனின் உறவை,
பண்டத்தை, பரிவர்த்தனையை,
பணத்தை, பங்கு மூலதனத்தை
“மூலதனம்” மூலமாக
“சமுதாய ஒப்பந்த” மாக
எக்காலும் துணைநின்ற
எங்கல்சின் உதவியோடு
ஏகாதிபத்தியத்தின்
இதயங்கள் நடுநடுங்க
தொழிலாளி வர்கத்தின்
சிந்தனை நிலங்களில்
கண்ணி வெடிகளாய்
பொதுவுடமைக் கருத்துகளைப்
புதைத்துச் சென்றிட்ட
மாபெரும் ஆசான்
மார்க்சின் தத்துவங்கள்
பாரெங்கும் பரவியது!
தத்துவம் கிடைத்தது,
சிந்தனை ஓங்கியது,
செயலாக்கம் செய்வதற்கும்
செயலூக்கம் கொடுப்பதற்கும்
தகுதி மிக்கதொரு
தலைமை வேண்டுமன்றோ?
சிம்பிர்ஸ்க் (ரசியா) நகரில்
சிங்கம் ஒன்றுதித்தது!
நேர்மையும், நேசமும்,
நியாயத்தை நிறுவுதற்கு
போராடும் குணங்கொண்ட – அவர்
மாமேதை லெனினன்றோ?
மாமேதையின் மனவுறுதி
அறிவியல் குறித்து
அளவற்ற நூல்களை
சிறுவயதில் கற்று
சிந்தனை பெருக்கியவர்.
அன்புத் தந்தையின்
அகால மரணம்,
அடுத்த சில மாதங்களில்
அடக்குமுறைக் காரனாம்
அரசன் ஜாரினால்
அண்ணன் அலெக்சாண்டர்
கொலையுண்ட போதினிலும்
மனம் தளர்ந்து போகாமல்
பள்ளியிறுதித் தேர்வில்
மாவட்டம் முழுமைக்கும்
முதன்மை மாணவனாய்
தேறியதோர் உளவலிமை!
சட்டக் கல்விக்கான
பட்டப் படிப்பின் காலம்
நான்காண்டு ஆயினும் – அவர்
படிப்புடன் நிற்கவில்லை!
பாட்டாளி வர்க்கத்தின்
பாடுகளைத் தீர்ப்பதற்குப்
பல்வேறு வழக்குகளைப்
பாங்குடனே நடத்தி வந்தார்.
மார்க்சின், எங்கல்சின்
படைப்புகளைப் படித்துவிட்டு
எடுத்ததொரு முடிவில்
பொதுவுடமைத் தழுவலானார்.
கண்துஞ்சா கடமையும் அயராத உழைப்பும்
உள்வாங்கிய தத்துவத்தை
ஊருக்கு உரைத்ததோடு
உழைக்கும் மக்களிடம்
விதைத்தார் விழிப்புணர்வை.
கொடுங்கோலன் ஜாரின்
கொடுமைகளுக் கெதிராக
உழைக்கும் மக்களெல்லாம்
உருக்குடனே போராட
கொளுத்தும் வெயிலிலும்
கொட்டும் பனியிலும்
ரசிய நாடெங்கும்
ரகசியக் கூட்டங்களில்
பொதுவுடமைத் தத்துவத்தை
புரட்சிகர சிந்தனையை
பரப்புரை செய்வதையே
பணியாகக் கொண்டிருந்தார்.
பயணத்தின் போது – அவர்
பல்வேறு தருணங்களில்
காவலர்கள் ஒற்றர்கள்
கண்ணில் மண்தூவி
விரைந்தோடும் இரயிலில்கூட
விரைந்தேறி மறைந்திடுவார்.
ஆயினும் ஒருமுறை
1889 ஆம் ஆண்டில்
ஜாரின் அரசால்
சிறை பிடிக்கப்பட்டு
கடுங்குளிர் வீசும்
சைபீரியப் பகுதிக்கு
நான்காண்டு காலம்
நாடு கடத்தப்பட்டார்.
நாடு கடத்தலிலும் நல்லதொரு நிகழ்வு !
உரமிக்க உடலையும்
உறுதிமிக்க மனதையும்
உறையும் பனிகூட
உருக்குலைக்க முடியவில்லை!
உறுதிமிக்க லெனினையும்
உயர்ந்ததொரு கொள்கையையும்
ஒருங்கே காதலித்த
கன்ஸ்தந்தி நாவ்னா
குருப்ஸ்கயாவை மணந்தார்.
புரட்சியின் தீப்பொறி
கடுங்குளிரை வெல்வதற்குக்
கடுத்த தீயின் தேவையைப் போல்
அடிமைத் தளை உடைக்க
மக்களின் மனதினிலே
புரட்சித் தீ ஏற்றுதற்கு
பொதுவுடமைப் பரப்புதற்கு
“தீப்பொறி” எனும் பொருளில்
“இஸ்கரா” எனும் இதழை
வெளியிடும் நோக்கமுடன்
விரைந்தார் ஜெர்மனிக்கு.
கொடுங்கோல் ஆட்சியின்
கொடுமையைச் சுட்டெரிக்க
காட்டுத் தீஎனவே
நாட்டுக்குள் பரவியது
இன்னல்கள் பல கடந்து
இயங்கியது ஊக்கமுடன்
இஸ்கரா எனும் இதழ்!
அடக்குமுறைகளும் ஆர்த்தெழுந்த போராட்டங்களும்
அரசியல், அறிவியல்,
வரலாற்று வகுப்புகளும்
பொதுவுடமைக் கோட்பாடும்
போதிக்கப்பட்டன தலைமறைவாகவே .
1905 ஆம் ஆண்டில்
அடக்குமுறைக்கு எதிராக
அமைதி ஊர்வலத்தில்
அணிவகுத்த தொழிலாளரை
கொடுங்கோலன் ஜாரரசு
கொன்றழித்த கொடுமை.
ரசியாவின் முதற்புரட்சி
ரத்த ஆற்றில் மூழ்கியது.
மனம் தளரா மாமனிதன்
மக்களுக்கு கூறினார்
“தோல்வியில் இருந்து பாடம் கற்போம்
தவறுகளைத் திருத்திக்கொள்வோம்
இறுதி வெற்றி நமதே”
புரட்சியோடு லெனினையும்
கொல்லத் துடித்தது
கொடிய ஜாரரசு.
அரசிடம் சிக்காமல்
மறைவிடம் தேடி
பணியால் உறைந்து
பாளமான கடலில்
கப்பலோ படகோ
செல்ல முடியா நிலையில்
உறைபனி மூடிய மேற்புறத்தில்
உறுதியுடன் சென்றார்.
உறைபனி உடைந்து – அவர்
உள்ளுக்குள் வீழ்ந்தபோதும்
உற்றசில தோழர்களின்
உதவியுடன் உயிர்த்தெழுந்தார்.
ரசியாவின் அண்டை நாடாம்
சுவீடனுக்கு சென்றடைந்தார் – ரசியாவில்
கம்யூனிஸ்டு தோழர்களுக்கு
கடுமையான ஒடுக்குமுறைகள்.
நடுங்கிய சிலரோ – இனி
நடக்காது புரட்சியென்று
புலம்பியே தீர்த்தவேளை
இறுதி வெற்றி நமதே என்ற
இஸ்கராவின் தாரகமந்திரம்
போராட்ட உணர்வை மீண்டும்
புதுப்பிக்கச் செய்து அங்கே
போர்க் குணத்தைத் தூண்டியது!
உரிமைப் போர் தொடங்கு முன்னே
உலகப் போர் தொடங்கியது;
முதல் உலகப் போர் என்னும்
மூர்கத்தனம் தொடங்கியது!
நாடு பிடிக்கும் போட்டிகள்
நடை பெற்ற காரணத்தால்
ஜாரின் அரசும்
போருக்குச் சென்றது.
உலகப் போரும் – உள்நாட்டுப் போரும்
எளியோனை வறியோனும்
தொழிலாளியை முதலாளியும் போல்
ஏழை நாடுகளை எஜமான நாடுகள்
கொள்ளை அடிப்பதற்கே – இந்த
கொலைகாரப் போரென்ற
புரட்சிகரத் தத்துவத்தை
எடுத்துரைத்துச் சொன்னதோடு
ஜாருக்கும் எதிராக – உலகப்
போருக்கும் எதிராக
புரட்சி செய்ய வேண்டுமென்று
பொதுவுடமைக் கட்சியும்
புரட்சித் தலைவர் லெனினும்
புரட்சிப் போருக்கு அறைகூவல் விடுத்தனர்.
மலர்ந்தது மற்றுமொரு புரட்சி (1917 பிப்ரவரி )
ஜார் ஆட்சி வீழ்ந்தது – ஆயினும்
சதிகார முதலாளிகள்
அதிகாரத்தைப் பிடித்தனர்!
தலை மறைவு வாழ்க்கை
இனித் தேவை இல்லை என
தாய் நாடு நோக்கி
விரைந்திட்டார் லெனின்.
அலைகடல் எனவே
ஆர்ப்பரித்த மக்கள் முன்
போர்க்குரலாய் முழங்கினார்.
“சோசலிசமே நமது பாதை
முன்னேறுங்கள் தோழர்களே
நாடாளுமன்றம் நமக்கனதல்ல
நமது பாதை புரட்சிப் பாதை” – என்றார்.
அடக்குமுறைச் சட்டங்கள்
அவிழ்த்து விடப்பட்டன.
பீனிக்ஸ் பறவைபோல்
தொழிலாளர் வர்க்கமும்
மாவீரர் லெனினும்
மாறுவேடம் பூண்டேனும்
மக்களுடன் வாழ்ந்து
“உழுபவனுக்கே நிலமென்றும்
உழைப்பவனுக்கே அதிகாரமேன்றும்”
போர்நிறுத்தம் கூட
பொதுவுடமைக் கட்சியால்தான்
சாதிக்க இயலுமென்று
போதித்து வந்தார்கள்.
மக்களது வாழ்க்கையில்
மாற்றம் வேண்டுமென்றால்
ஆயுதம் ஏந்தவேண்டும்
அதிகாரத்தைப் பிடிக்கவேண்டும்
இதுவே இறுதி முழக்கமாய் ஆனது.
கோழைகளைப் புறந்தள்ளி
வீரமிகு தோழர்களின்
இறுதிப் போர் தொடங்கியது (1917 நவம்பர் ௭)
வானொலி நிலையமும்,
காவல் நிலையங்களும்,
புகை வண்டி நிலையங்களும்,
கிரம்ளின் மாளிகையும்
ஆயுதப் போராட்டத்தால்
அபகரிக்கப்பட்டன.
புரட்சியால் அதிகாரம்
கைப்பற்றப்பட்டது.
புரட்சி வென்றது
நிறுவப்பட்டது தொழிலாளிவர்க்க சர்வாதிகாரம்!
நிர்மூலமானது முதலாளிகளின் எதேச்சாதிகாரம்!
அமைக்கப்பட்டது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்!
மாற்றப்பட்டது ரசியா ஒரு சோஷலிச நாடாக.
அவிவிக்கப்பட்டது போர் நிறுத்தம்
விடுவிக்கப்பட்டன அண்டை நாடுகள்!
பகிர்ந்தளிக்கப்பட்டன விளைநிலங்கள், உழுபவர்க்கே!
நிறுவப்பட்டன மக்கள் சர்வாதிகார மன்றங்கள்!
ஆலைகளின் நிர்வாகம் தொழிலாலர்களிடத்தில்!
அண்டை நாடுகளின் விருப்பத்தைப் பெற்று
அமைந்தது சோஷலிச மன்றம்.
முதலாளித்துவ நாடுகளின் படையெடுப்பும்;
தொழிலாளர் தேசத்தின் பதிலடியும் !
சோவியத் எழுச்சியை சோசலிச மலர்ச்சியை
பொதுவுடைமை வளர்ச்சியை பொறுக்காத நாடுகள்
சோவியத்தை ஒடுக்க போர்த்தொடுத்து வந்தன!
அடிமை நாடுகளின் உரிமைப்போரை ஆதரித்து
குரல் கொடுத்த ரசியாவின் குரல்வளையை நெரிக்க
போர்தொடுத்து வந்தன போர்வெறி நாடுகள்.
இன்னும் ஒருமுறை தோற்றுவிட்டால்
ஈன்ற சுதந்திரம் பறிபோகும்
என்பதை உணர்ந்த மக்கள்
செம்படையில் அணிவகுத்து
எதிரிகளின் ஆயுதத்தை
எதிர்கொண்டு போரிட்டு
தாய்நாட்டை மீட்டர்கள் – ஆயினும்
மாவீரர் லெனினை
மறைந்திருந்து சுட்டான் – ஒரு
அமெரிக்க கைக்கூலி
உயிர் பிழைத்தார் – அதிலும்
உறுதிமிக்க லெனின்.
போரினால் பஞ்சமும் கண்துஞ்சா உழைப்பும்!
போரின் பின்விளைவாய்
நாடெங்கும் வறுமையும்
பட்டினியும் வாட்டின.
நாட்டின் வளர்ச்சியே
தான் கொண்ட குறிக்கோளாய்
இராணுத்தை வழிநடத்தி
உணவோடு கல்வித்
துறைகளுக்கும் பொறுப்பேற்று
தொழிற்கல்வி ஓங்கிடவும்
ஓயாது உழைத்தார்.
நாடிவந்த மக்களை
ஓடிவந்து வரவேற்று
உற்றதொரு குறைகேட்டு
உரியதொரு தீர்வு செய்தார்.
பலநாள் அவரும்
பட்டினியாய் கிடந்தார்.
தலைவன் பசிகேட்டு
துடிதுடித்த மக்கள்
எண்ணற்ற பொருட்களைத்
ஏராளமாய் வழங்கிடவே
தனது தேவை மிகவும் குறைவு
என்றுரைத்து லெனினும்
காப்பகத்தில் வளர்கின்ற
குழைந்தைகள் பசிதீர்த்து
குறை உணவைத் தனதாக்கி
கொள்கை வழி நின்றார்.
பசியோ பட்டினியோ பள்ளிகள்
பல்லாயிரக்கணக்கில் திறக்கப்பட்டன.
மனப்பாடக் கல்விக்குத் தடை விதிக்கப்பட்டது.
திறன் வளர்க்கும் கல்வியே
திக்கெட்டும் மலர்ந்தது.
மாமேதை லெனினும்
மக்களும் அவரோடு
கடின உழைப்பாலும்
கண்துஞ்சா பனியாலும்
சோவியத் நாட்டை
மேன்மையுறச் செய்தனர்!
தலைவர் மறைந்தாலும் தத்துவம் வாழ்கிறது!
ஓயாத உழைப்பும்
உள்ளிருந்த ஒரு குண்டும்
மாமேதை லெனினை
மக்கள் தலைவனை
உழைத்தது போதுமென்று
உணர்த்திய கையோடு
உறக்கத்தில் ஆழ்த்தின.
மறைந்தார் மாமேதை!
மறையவில்லை; அவர் நமக்கு
விட்டுச் சென்ற தத்துவமும்,
வீரமிக்க செயல்பாடும்
ஆர்வமுடன் அவர் வளர்த்த
அறிவியல் சாதனையால்
அவருடல் இன்றளவும்
அழியாது வாழ்கிறது!
அவருடல் மட்டுமல்ல
அவரது சிந்தனைகள்,
பொதுவுடைமைக் கருத்துக்கள்
பூமியெங்கும் நிறைந்திருக்கும்.
அணையாது ஒளிவீசும்
ஆற்றல்மிகு செஞ்சுடராய் – அவர்
ஏற்றிவைத்த தீபத்தை
கம்யூனிச தீபத்தை
அணையாது காத்திடுவோம்!
– கவிதை ஆக்கம் –
பாவல்.
( இவர்தான் லெனின் என்னும் குறு வெளியீட்டின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)
எமது ஆசான் ,தோழன் லெனின் அவர்களின் 146வது பிறந்தநாளை கோவை தொழிலாள-தோழர்கள் ஒருங்கிணைந்து நாளை நடத்தபோவது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. 1917வரை கோட்பாடுவடிவில் மட்டுமே இருந்த மார்சிய தத்துவத்தை உலகிலேயே முதன்முறையாக நடைமுறைக்கு கொண்டு வந்த USSRன் தலைவன் ,சக தோழன் அவர். ஜார் மண்ணின் ஆளுமையில் அடிமைபட்டு கிடந்த ரஷ்ய மக்களை-தொழிலார்களை தம் அறிவாயுதம் கொண்டு தட்டி எழுப்பியவன் எம் தோழன் லெனின்…….
வினவு தோழர்களுக்கு ,
தோழர்லெனின் அவர்களின் 146வது பிறந்தநாளை நாளை சென்னையில் கொண்டாடும் நிகழ்ச்சிகள் எதேனும் உண்டா ? தயவு செய்து காலைக்குள் பதில் அளிக்கவும்
//ஆரம்ப பாட சாலை முதல் பல்கலைக் கழகம் வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. தொழிலாளர்கள் விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி அளிக்கப்பட்டது.
சோவியத் நாட்டில் வீடு இல்லாத மனிதனே கிடையாது எனும் நிலையை உருவாக்கியது.
சாதாரண காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரையில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள்.
மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்கு வரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தையே சுற்றி வரலாம்.
ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சுற்றுலா பயணம்.
ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் கிடையாது.//
It was heaven on earth…Not sure why Russians do not want to go back to communism and create such a heaven?