privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்முன்னோடிகள்கோவையில் லெனின் பிறந்த நாள் - கம்யூனிஸ்டின் தகுதி எது ?

கோவையில் லெனின் பிறந்த நாள் – கம்யூனிஸ்டின் தகுதி எது ?

-

ன்பார்ந்த தோழர்களே !.

தோழர் லெனின்
இந்தச் சேனையில் வீரர்களாயிருப்பதைத் தவிர, மேலதிகமான உயர்வான கவுரவம் வேறெதுவும் இல்லை.

விளாடிமிர் இலியீச் உல்யானவ் 1870 ஏப்ரல் 22ஆம் தேதி ரசியாவில் வால்கா நதிக் கரையிலுள்ள ஸிம்பீர்ஸ்க் என்னும் நகரில் பிறந்தார். தன்னுடைய 54 ஆண்டு கால வாழ்வில் உழைப்பாளி மக்களை அணிதிரட்டி போராடி உலகில் முதன் முதலாக தொழிலாளிகள் அரசு ஏற்படுத்தினார்.

தோழர் லெனினை பற்றி தோழர் ஸ்டாலின் கூறுகிறார்.

தோழர்களே கம்யூனிஸ்டுகளாகிய நாம் தனி வார்ப்பிலானவர்கள். நாம் தனி வகை மூலப்பொருள்களால் ஆக்கப்பட்டவர்கள். நாம் மகத்தான் பாட்டாளி வர்க்க போர்த் தந்திர நிபுணரின் படையை தோழர் லெனினுடைய படையைச் சேர்ந்தவர்கள். இந்தச் சேனையில் வீரர்களாயிருப்பதைத் தவிர, மேலதிகமான உயர்வான கவுரவம் வேறெதுவும் இல்லை. தோழர் லெனினை நிறுவனராகவும் தலைவராகவும் கொண்ட கட்சியின் உறுப்பினர் என்பதை விட, மேலதிகமான உயர்வான பட்டம் வேறேதுவும் இல்லை. இத்தகைய கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது எல்லோருக்கும் வாய்க்கின்ற ஒன்றல்ல. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருப்பதால் ஏற்படும் எல்லா நெருக்கடிகளையும் தாங்கி போராட்ட புயல்களை எதிர்கொள்ள இயலுவது எல்லோராலும் முடியக் கூடிய ஒன்றல்ல. தொழிலாளர் வர்க்கத்தின் புதல்வர்கள்தான் வாழ்க்கையில் இல்லாமையை எதிர்கொண்டும், போராட்டத்திற்கு அஞ்சாத புதல்வர்கள்தான், நம்பவொண்ணா வறுமையிலும் வீரஞ்செறிந்த முயற்சிகளை மேற்கொள்ளும் புதல்வர்கள்தான் எல்லோரையும் முந்திக் கொண்டு இத்தகைய கட்சியில் உறுப்பினராக வேண்டும். இதனால்தான், லெனினிய வாதிகளின் கட்சி, பொதுவுடைமையாளர்களின் கட்சி, தொழிலாளி வர்க்கத்தின் கட்சி என்று அழைக்கப்படுகிறது.”

நாள் தோறும் 16 மணி நேரம் கடும் உழைப்பில் கம்பெனிகளில் வேலை செய்த தொழிலாளர்கள் லெனின் கட்சியில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராகி ரசியாவை மாற்றிக் காட்டினார்கள். உலக முதலாளிகளை நடுநடுங்க வைத்தார்கள்.

லெனின், ஸ்டாலின்மத வெறியர்களை எதிர்க்க முடியாது, பன்னாட்டு முதலாளிகளை எதிர்க்க முடியாது, தொழிலாளிகளை புரட்சிக்கு அணி திரட்ட முடியாது என்று இன்றும் நமது நாட்டில் பல பேர் ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களை பார்த்து தோழர் லெனின் கூறுகிறார்.

“முடியாது என்று சொல்லாதே
செய்ய மாட்டேன் என்று சொல்”

என இடித்துரைத்தார்.

தேர்தலில் தொழிலாளர்கள் ஒவ்வொரு முறை ஓட்டுப் போடும் போதும் ஒவ்வொரு உரிமையாக பறி போய்க் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவதன் மூலம் ஓட்டே போடாத முதலாளிகளுக்கு திமிர் அதிகம் ஏறுகிறது.

சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ முதலாளி அரசிடம் அனுமதி வாங்காமல் கம்பெனியை கதவடைப்பு செய்கிறார். நீதி மன்றத்தில் தடை உத்தரவு இருக்கும் போதே லாக் அவுட் செய்கிறார் எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது? சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் பிளவுபட்டு இருப்பதால்தான் இந்நிலை வந்தது. சோழா பம்ப்ஸ், ரேன்சர் உள்ளிட்ட CRI யின் ஆறு யூனிட் தொழிலாளிகளும் ஒன்றுபட்டால் முதலாளியின் ஆணவம் அடங்கி விடும்.

லெனின்
இந்த நாடு நம்முடையது, கம்பெனிகள் நம்முடையது எனும் உணர்வுடன் நாம் செயல்பட்டால் முதலாளித்துவத்தின் மூச்சடங்கும்.

இந்த நாடு நம்முடையது, கம்பெனிகள் நம்முடையது எனும் உணர்வுடன் நாம் செயல்பட்டால் முதலாளித்துவத்தின் மூச்சடங்கும். நம் போராட்டத்தின் கால வரையறை என்ன? மூடிய கதவை முதலாளியாக திறக்கும் வரை நம் போராட்டம் தொடர வேண்டும். பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்களும் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்களும் இதனை நெஞ்சில் வரித்துக் கொண்டு போராடி வெற்றி பெற வேண்டும்.

தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து தொழிலாளர் உரிமைகளை தக்க வைக்க வேண்டுமானால், புதிய உரிமைகளைப் பெற வேண்டுமானால் தோழர் லெனின் காட்டிய வழியில் புதிய ஜனநாயக அரசு அமைப்பதே தீர்வு. இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையால் இப்போது மட்டுமல்ல எப்போதுமே தொழிலாளர்கள் எந்த உரிமையையும் பெற முடியாது.

முதலாளியோ, வியாபாரியோ, அல்லது நிலப்பிரபுவோ தொழிலாளர்களுக்கு வேலைகளை வழங்கி விட்டார்கள் என்று கூறுவது சரியல்ல. மாறாக உழைப்பாளிதான் தனது உழைப்பின் மூலம் இந்த உலகை இயக்குகிறான். முதலாளி உள்ளிட்ட இந்த மொத்த உலகிற்கும் சோறு போடுகிறான். தனது உழைப்பின் பெரும் பகுதியை இனாமாக மற்றவர்களுக்கு வழங்குகிறான் என தோழர் லெனின் சுரண்டல் பேர்வழிகளை திரை கிழித்து தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டினார்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ
இயந்திரங்களை இயக்கி உழைப்பது மட்டும் நம் வேலையல்ல; தொழிற் சங்கமாக மட்டும் திரண்டு போராடுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு மேலேயும் போக வேண்டும்.

தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்; ஆசான். அவர் தலைமையில் ரசிய கம்யூனிஸ்டு கட்சி, உழைப்பாளி மக்களை அணி திரட்டியது. இயந்திரங்களை இயக்கி உழைப்பது மட்டும் நம் வேலையல்ல; தொழிற் சங்கமாக மட்டும் திரண்டு போராடுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு மேலேயும் போக வேண்டும். கூலி அடிமைத் தனத்தையே ஒழிக்க வேண்டும். நாட்டை ஆளவும் வேண்டும். உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைக்க வேண்டும். இந்தப் பாதையில் நாம் நடை போட வேண்டும். போராட வேண்டும். தானேயான தொழிலாளி வர்க்கத்தை தனக்கான வர்க்கமாக மாற்ற வேண்டும். இத்தகைய வரலாற்றுக் கடமையை தோழர் லெனின் காட்டிய வழியில் ரசியத் தொழிலாளர்கள் நிறைவேற்றியதால் சோசலிச அரசு அமைந்தது

அதன் சாதனைகள்:

  • ஆரம்ப பாட சாலை முதல் பல்கலைக் கழகம் வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. தொழிலாளர்கள் விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி அளிக்கப்பட்டது.
  • சோவியத் நாட்டில் வீடு இல்லாத மனிதனே கிடையாது எனும் நிலையை உருவாக்கியது.
  • சாதாரண காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரையில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
  • வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள்.
  • மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்கு வரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தையே சுற்றி வரலாம்.
  • ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சுற்றுலா பயணம்.
  • ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் கிடையாது.
லெனின்
ஆயிரக்கணக்கான சிறப்புகளை லெனின் தலைமையில் ரசியப் பாட்டாளிகள் நிகழ்த்தினர்.

இன்னும் இது போல ஆயிரக்கணக்கான சிறப்புகளை லெனின் தலைமையில் ரசியப் பாட்டாளிகள் நிகழ்த்தினர். இதனை நமது நாட்டிலும் அமுல்படுத்த வேண்டுமானால் லெனினிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எனவே தான் தோழர் ஆசான் லெனின் பிறந்த நாளை நமது சங்கம் கொண்டாடுகிறது. இதனை ஏற்க மறுப்பவர்கள் நிச்சயம் சமூக விரோதிகளாகத்தான் இருப்பார்கள்.

தொழிலாளர்கள் அனைவரும் சங்கம் அமைத்து போனஸ், சம்பள உயர்வு என பூச்சிகளைப் போல பேசிக் கொண்டு இருந்தால் போதாது. அரசு வேண்டும்; அதிகாரம் வேண்டும் என முழங்க வேண்டும். அதற்காக அணி திரள வேண்டும். நாம் நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்பு முறை முழுவதற்கும் தொழிலாளர் நலன்களுக்கும் இடையே இணக்கம் காண முடியாத பகைமையை, தொழிற்சங்கங்கள் எடுத்துக் காட்ட வேண்டும். மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிமைத் தனத்தை ஒழிக்க போராடுவதே முதன்மையான பணி என்பதை தொழிற்சங்கங்கள் விளக்க வேண்டும்.

மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்படுத்தப்பட்டுள்ளதை சட்ட மன்றமும் பாராளுமன்றமும் ஏற்கிறது. ஆனால் நமது பாதையோ உழைப்பை ஆள்பவனே உலகை ஆள வேண்டும் என்பதே, எனவே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். புரட்சிக்கு அணிதிரள வேண்டும்.

லெனின்
சொத்துடைமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுவதையே முழுமையான பணியாகக் கொள்ள வேண்டும்.

தொழிற்சங்கங்கள் கூலி உயர்வுக்கான போராட்டங்களோடு சொத்துடைமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுவதையே முழுமையான பணியாகக் கொள்ள வேண்டும்.

“தொழிலாளர்கள் தாங்கள் பெறும் சம்பளம் அல்லது கூலி உயர்வாகவோ குறைவாகவோ இருப்பதில் எந்த இழிவும் இல்லை. தன் உழைப்பில் உண்டான செல்வம் முழுவதையும் பெறுவதற்கு பதிலாக தான் சொந்த உற்பத்தி பொருளின் கூலி எனப்படும் பகுதியை மட்டும் பெறுவதோடு தொழிலாளி வர்க்கம் திருப்திப்பட வேண்டி இருப்பதுதான் மாபெரும் இழிவு”

என்கிறார் தோழர் லெனின்

நூறு ரூபாய் கூலி உயர்வுக்கு மேல் இருநூறு ரூபாய் கூலி உயர்வு கோருவது சாதாரண வர்க்க போராட்டம். உயர்ந்த வர்க்க போராட்டம் என்பது தொழிலாளர்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதுதான்.

தொழிலாளர்கள் தங்கள் நலனுக்காக மட்டுமல்லாமல் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் அவர்களுக்கு தலைமை தாங்கி நடத்தும் போராட்டம் தான் அரசியல் போராட்டம். இப்படியானதொரு உன்னதமான பாதையில் தோழர் ஆசான் லெனின் பாதையில் போராடும் சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து போராடுவோம் ! ஒட்டு மொத்த இயற்கைக்கும் மனித குலத்துக்கும் விரோதியான முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

லெனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நிகழ்ச்சி நிரல்

நாள் : 22.04.2015 மாலை 5 மணி

இடம் : சி‌ஆர்‌ஐ கம்பெனி நுழைவாயில் (சின்னவேடம்பட்டி)

தலைமை : தோழர் மூர்த்தி சி‌ஆர்‌ஐ கிளைத் தலைவர்

முன்னிலை : தோழர் திலீப் மாவட்டச் செயலர் பு..தொ.மு

தோழர் குமாரவேல் மாவட்டத் தலைவர், பு..தொ.மு

உரை வீச்சு : தோழர் நித்தியானந்தன் பெரோலிங்க்ஸ் கிளைச் செயலர்

தோழர் கோபிநாத் அமைப்புச் செயலர்

தோழர் கோபால் பங்கஜா மில் கிளைச் செயலர்

தோழர் மோகன் ராஜ் கம்போடியா மில் கிளைச் செயலர்

தோழர் ரங்கசாமி முருகன் மில் கிளைத் தலைவர்

தோழர் பூவண்ணன் மாவட்ட பொருளாளர் பு..தொ.மு

எழுச்சியுரை : தோழர் விளவை இராமசாமி மாநிலத் துணைத் தலைவர் , பு..தொ.மு

நன்றியுரை : தோழர் இராஜன் எஸ்‌.ஆர்‌.ஐ கிளைச் செயலர்

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை