privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி

ஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி

-

சொத்துத் திருட்டு வழக்கில் தீர்ப்பு வந்ததும் அ.தி.மு.க அடிமைகள் சாலைகளில் குத்தாட்டம் போட்டனர். ஊடக அடிமைகளோ தலையங்கங்களில் எழுத்தாட்டம் போட்டனர். அதில் தினமணியின் வைத்தி முதன்மையானவர். இன்றைய தலையங்கத்தின் (12-05-2015) இறுதியில் அவர் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை பாருங்கள்.

தினமணி வைத்தி தலையங்கம்
முதன்மை ஊடக அடிமை தினமணி வைத்தியின் எழுத்தாட்டம்

“இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 29-09-2014-ல் வெளியான “தினமணி’ தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை இங்கே மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

“ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை” என்பதுதான் அது.

இப்போது அதில் இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்!”

ஜெயாவை பாராட்டி தினுசு தினுசான வார்த்தைகளில் அபிசேஷகம் செய்து விளம்பரங்கள் வெளியிடுவது அ.தி.மு.க அமைச்சர்களின் உயிராதாரமான விசயம். அடுத்து ‘அம்மா’ முதல்வர் ஆகும் போது சிவப்பு விளக்கு பதவி கிடைக்குமா, துரத்துமா எனும் வலியை அவர்கள் போல எவரும் அனுபவிப்பதில்லை. இதன் பொருட்டு பலர் கோடம்பாக்கம் கவிராயர்களை வாடகைக்கு அமர்த்தி வார்த்தை அலங்காரங்களை உருவாக்கி அம்மா கண் காதுகளில் படுமாறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

ஆனால், அறிவில் மற்ற மக்களை விட அவாள்கள் ‘மேலானவர்கள்’ என்று ஆண்டவனும், வேதங்களும், ஸ்மிருதிகளும் அறிவித்திருப்பதால் ஜெயா துதியில் பார்ப்பனர்கள் அதை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. வைத்தி அதை அசால்ட்டாகவே நிரூபித்திருக்கிறார்.

தினமணி வைத்தி
அறிவில் மற்ற மக்களை விட அவாள்கள் ‘மேலானவர்கள்’ என்று எட்டு காலத்தில் நிரூபித்திருக்கும் வைத்தி.

தமிழகத்தில் ஒருவர் அதிக முறை முதல்வராகி சாதனை படைக்க வேண்டுமென்றால் அவர் அதிக முறை ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு பின்னர் நீதியை அதே ஊழலால் விலைக்கு வாங்கி மீண்டும் முதல்வரானால் ஐந்து முறை என்ன ஐம்பது முறை கூட முதல்வராக மாறலாம்.

அது கூட பரவாயில்லை, கருணாநிதியின் சாதனையை சமன் செய்யும் ஜெயா விரைவில் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆறாவது முறையும் முதல்வராகி சாதனை படைப்பார் இல்லை சரித்திரம் படைப்பார் என்று எழுத வேண்டுமென்றால் நெஞ்சை நக்கும் கலையில் வைத்தி அவர்கள் உலக சரித்திரமே படைத்து விட்டார் என்றே கூறலாம். இனி அறிவற்ற அ.தி.மு.க அமைச்சர்கள் இந்த வார்த்தைகளை சுட்டு விளம்பரங்களை வெள்ளமென ஓட விடுவர்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா சுட்டிக்காட்டியிருந்த அனைத்து அம்சங்களையும் நீதிபதி குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் தெளிவாக, மறு ஆய்வு செய்து, விரிவாக அலசி, விவரங்களுடன் கூறியிருக்கிறாராம். முக்கியமாக இது ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்லவாம். தீர்ப்பு வந்து, குமாரசாமியின் 919 பக்கங்களை படித்து கூடவே குன்ஹாவின் ஆயிரத்து சொச்சம் பக்கங்களையும் படித்து ஆய்வு செய்து வைத்தி தீர்ப்பளித்திருக்கிறார் என்றால் அவரது மேதா விலாசம் லேசானதல்ல.

தினமணி வைத்தி
பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் வாதிட்டதை விட பல படிகள் மேல் சென்று வாதிடும் வைத்தியின் மாமாத்தானம் பளிச்சிடுகிறது. (தினமணியின் 2-ம் பக்கம்)

கட்டுமானச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றை நீதிபதி குமாரசாமி சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார் என்றும், மிச்சமிருக்கும் 8.12% கூடுதல் சொத்துக்களை பழைய நீதிமன்ற தீர்ப்புகளின் படி பிரச்சினை இல்லை என்று அவர் கண்டுபிடித்ததையும் வைத்து வாதாடுகிறார் வைத்தி. வளர்ப்பு மகன் திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியாகட்டும், நல்லி சில்க்ஸ் பட்டுக்களாகட்டும், பந்தி பரிமாறிய தமிழக போலிசாகட்டும்…ஊரே காறித்துப்பிய ஒரு கொள்ளைக் கூட்ட திருமணத்தின் செலவு சரியாக மதிப்பிடப்படவில்லை என்றால் அது இன்னும் அதிகமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி குறையுமா?

திருமணச் செலவுகளை சாதாரணமாக பெண் வீட்டாரே செய்வார் என்றெல்லாம் போங்காட்டம் ஆட முடியுமென்றால் எதற்கு சுற்றி வளைக்க வேண்டும்? மைசூர் ராஜ வம்சத்தில் தொடர்புடைய ஒரு உயரிய ஐயங்கார் குடும்பத்தில் பிறந்து, மேன்மக்கள் படிக்கும் சர்ச்பார்க் கான்வெண்டில் படித்த செல்வி ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்திருக்கவே வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டால் முடிந்தது விசயம். ஏற்கனவே வெண்மணி படுகொலை வழக்கில் கொலைகார பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடுவை அப்படித்தான் விடுதலை செய்தார்கள்!

ஜெயா தரப்பு முன்வைத்த பல்வேறு சதி வாதங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் குமாரசாமி. அதிலொன்று ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி வருமானம் பெற்றதான கணக்கு. ஒரு விவசாயி ஓராண்டில் ஒரு கோடி வருமானத்தை பெற வேண்டுமென்றால் அங்கே கஞ்சா மட்டுமே விளைவிக்கப்பட்டிருக்க வேண்டும். இதல்லாமல் அரிசி, கரும்பு, கத்திரிக்காய் எல்லாம் எங்கே ஒரு கோடி வருமானத்தை தர முடியும்?

அரசுத்தரப்பின் குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் தீர்ப்பு, அரசுத் தரப்பே இல்லை என்பதை வசதியாக பயன்படுத்தியிருக்கிறது. பவானி சிங்கின் நியமனம் தவறு, அவரது வாதங்களை கணக்கில் கொள்ள வேண்டாம், ஒரு நாளில் புதிய அரசு வழக்குரைஞர் வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் குமாரசாமிக்கு தோதாக எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்திருந்தது.

காரித்துப்பும் தினமணி வைத்தி
ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றெல்லாம் நம்பிக் கொண்டிருப்போரின் முகத்தில் இந்த தீர்ப்பு மட்டுமல்ல, தினமணி வைத்தியும் காறித்துப்புகிறார்கள்!

இதைத்தான் முந்தைய தலையங்கம் ஒன்றில் “பவானி சிங் நியமனம் தவறு என்றாலும் புதிய விசாரணை தேவையில்லை” என்று உச்சநீதிமன்றம் கூறியதை வைத்தி அவர்கள் கொண்டாடியிருப்பார். அவரது தொலை நோக்கு அவ்வளவு ஆழமானது.

எனினும் இது அரசியல் ரீதியான பழிவாங்கும் வழக்கு என்று எகிறும் வைத்தி, இனி இத்தகைய பழிவாங்குதல்களை தடுக்கும் பொருட்டு புதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொங்குகிறார். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கறிஞர்கள்  வாதிட்டதை விட பல படிகள் மேல் சென்று வாதிடுகிறாரே வைத்தி அங்குதான் அவரது மாமாத்தானம் பளிச்சிடுகிறது.

இந்த தீர்ப்பு அ.தி.மு.க தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், அரசியல்சாரா சாமானியத் தமிழ் மக்களுக்கும் நிம்மதி பெருமூச்சையும் அளித்திருப்பதாக கூறுகிறார் வைத்தி. விட்டால் தமிழகத்தில் உள்ள ஆடு, மாடு, கொசு, குப்பைகள் கூட அம்மா விடுதலைக்காக ஏங்கி வந்தன என்பார் போலும்!

கட்சிக்காரர்களின் மகிழ்ச்சி தமது கொள்ளையையும், உள்ளூர் மாமூலையும் தொடர்வதற்கு அம்மாவின் கண்டிப்பான தலைமை வேண்டும் என்பதோடு தொடர்புடையது. மக்களின் நிம்மதி “ஒருவேளை ஜெயா குற்றவாளி என்று தீர்ப்பு வந்திருந்தால் மேற்கண்ட கூட்டம் நடத்தும் அட்டூழியங்கள் நடந்திருக்குமே” என்று நினைத்து பார்ப்பதோடு தொடர்புடையது.

ஜெயாவின் மன உறுதிக்கும், அவரது விடுதலைக்காக பிரார்த்தித்த தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று வெட்கமே இல்லாமல் எழுதுகிறார் வைத்தி. கிட்டத்தட்ட இதே வார்த்தைகள்தான் ஜெயாவின் அறிக்கையிலும் இருக்கிறது. அதன்படி வைத்திதான் அம்மாவின் கோஸ்ட் எழுத்தாளரா தெரியவில்லை. அல்லது பாம்பின் தடம் பாம்பறியும் தத்துவத்தின் படியும் சரிதான்.

இது போக இன்றைய தினமணியில் அ.தி.மு.க அமைச்சர்கள், மேயர்கள் என்று பலர் ‘அம்மா’ விடுதலைக்கு ஆர்ப்பரித்து அளித்திருக்கும் விளம்பரங்கள் ஏராளம். அந்த வகையில் வைத்தியின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பவுன் பரிசு பெறுகிறது. எனினும் இது அந்த பத்து சதவீத பிரச்சினைக்குள் கூட வராது. எல்லாம் சட்டப்பூர்வமாகத்தான்.

சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பனருக்கு ஒரு நீதி என்பதே மனுவின் வருணாசிரம நீதி. மனுதர்மம் இப்போது இல்லை, நீதிமன்றம் நடுநிலைமையானது, ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றெல்லாம் நம்பிக் கொண்டிருப்போரின் முகத்தில் இந்த தீர்ப்பு மட்டுமல்ல, தினமணி வைத்தியும் காறித்துப்புகிறார்கள்!