privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்உழைப்பாளிகளை ஒழிக்கும் அரசின் ஒப்பந்த சேவை

உழைப்பாளிகளை ஒழிக்கும் அரசின் ஒப்பந்த சேவை

-

அரசு ஒப்பந்த வேலைகள்  (OUTSOURCING) :

மக்கள் பணத்தைக்
கொள்ளையிடும் குறுக்கு வழிகள்

பொள்ளாச்சி வட்டாட்சியார், கோட்டாட்சியர் அலுவலக அரசு வாகன ஓட்டுநர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் குதித்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணத்தைக் கேட்ட அரசியல் அறியாத மக்கள் பலருக்கும் இப்படியெல்லாம் நடக்குமா என்று வியப்பாக இருக்கும். அரசியல் அறிந்தவர்களோ, “இதெல்லாம் சகஜமப்பா” என்று எடுத்துக் கொள்வார்கள். அரசு அலுவலகங்களுக்கென்று நன்கு ஓடும் நிலையில் அரசு வாகனங்கள் இருந்தபோதும், அதிகாரிகள் அவற்றைப் பயன்படுத்தாமல் வெளியாருக்குச் சொந்தமான வாகனங்களை ஒப்பந்த சேவை அடிப்படையில் அமர்த்திக் கொள்கிறார்கள். இதனால் பணி எதுமின்றி தாங்கள் சும்மாகவே இருப்பதாகவும், பிற்காலத்தில் இதையே காரணங்காட்டித் தமது வேலை பறிக்கப்படும் என்று அஞ்சுவதாகவும் பொள்ளாச்சி அரசு வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பொள்ளாச்சி அரசு வாகன ஓட்டுநர்கள் எழுப்பியிருக்கும் இந்தப் பிரச்சினை அரசின் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். போலீசு, தொலைத் தொடர்புத் துறை (பி.எஸ்.என்.எல்.), மின்துறை போன்றவற்றிலும் இதே கதைதான்!

இதனால், அரசுக்கோ இரட்டை நட்டம். வேலை வழங்கப்படாத அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஊதியம் மற்றும் தனியார் வாகனங்கள் ஒப்பந்த சேவைக்காக அமர்த்துவதால் செலவு என்று மக்கள் பணம் வீணடிக்கப்படுகின்றது. மக்கள் நலப் பணிகளுக்காகவும் இலவசமாகவும், குறிப்பாக விவசாயிகளுக்கு மானியமாகவும், கடன்-வட்டி தள்ளுபடியாகவும் அரசுப் பணம் செலவழிக்கப்படுவது குறித்து மண்டை வீங்கிப்போகும் பார்ப்பனியக் குட்டி முதலாளிய அறிவுஜீவிகள் இந்த வகையிலான அரச ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் (OUTSOURCING) காரணமாக நாட்டிலேயே மிகப்பெரும் கொள்ளையாக மேலிருந்து கீழ்வரை கட்டமைக்கப்பட்டிருப்பது குறித்துக் கண்டுகொள்வதே கிடையாது.

குடிநீர் வினியோகம்
ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் என்ற முறையின் கீழ் நடக்கும் குடிநீர் வியாபாரக் கொள்ளை.

அரசுப் பணிகளில் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் (OUT SOURCING) என்பது நமது நாட்டில் புதிதல்ல; காலனிய காலத்திலேயே புகுத்தப்பட்டதுதான். முக்கியமாக முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் போதே ஏகாதிபத்தியங்களின் நாடுபிடிக்கும் போர்களில் இராணுவத்திற்கான ஒப்பந்தச் சேவைகளில் ஈடுபட்ட இந்தியத் தரகு முதலாளிகள் தோன்றி, அப்போதே கோடி கோடியாக செல்வங்களைக் குவித்தனர். இவர்கள் மத்தியிலிருந்து நவீன இந்தியாவின் ஆளும் வர்க்கமாகத் தரகு முதலாளிகள் வலுப்பெற்றனர்.

காலனிய ஏகாதிபத்தியங்களின் தேவைக்காகக் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தமுறை (OUTSOURCING) அவர்கள் புகுத்திய தனியார்மயம்-தாராளமயம்-உலகமயமாக்கம் ஆகிய புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக 1980-களில் பன்முகமானதாக விரிவாக்கப்பட்டு, உள்நாட்டில் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தமுறையோடு (OUT SOURCING) வெளிநாடுகளில் அயலக ஒப்பந்தச் சேவை அமர்த்தம் (OFF SHORING) என்று விரிவாக்கப்பட்டது. பொதுவில், ஒப்பந்தச் சேவை அமர்த்தம் எதுவானாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் பிற செலவுகளைக் குறைத்து இலாபங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக செய்யப்படுவது.

குறிப்பாக, உலகின் மக்கள்தொகை மிகுந்த இரு பெரும் நாடுகளான இந்தியா, சீனா உள்ளிட்ட கீழை நாடுகள் மலிவான உழைப்புச் சந்தையைப் பெற்றுள்ளன. ஏராளமான மனிதவள ஆதாரங்களையும் உற்பத்தித் திறனையும் கொண்டுள்ளன. இந்தியாவும் சீனாவும், ஒவ்வொரு ஆண்டும் 2,00,000 பொறியாளர்கள் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. மேலும், இரண்டு நாடுகளும் குறைந்த செலவு பிடிக்கும் ஒப்பந்தச் சேவையளிக்கும் நாடுகளாக உள்ளன. ஆகவே, இங்கு வெளிநாடுகளின் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் உள்நாட்டுக் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கும் அயலக ஒப்பந்தச் சேவை அமர்த்தமுறையோடு (OFF SHORING) உள்நாட்டில் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தமுறையும் (OUTSOURCING) முக்கியமானவையாகி விட்டன. இதனால், பல்வேறு வகையிலான சிறிய, பெரிய புதிய தரகு முதலாளிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். மேலும், ஏகாதிபத்தியங்களுக்கு சேவகஞ்செய்யும் சமூக ஆதரவு சக்திகளும் பெருகிக்கொண்டே போகின்றன.

ஆதார் அடையாள அட்டை தயாரிக்கும் பணி
தனியார் முதலாளிகளின் கொள்ளைக்காக ஒப்பந்தச் சேவை மூலம் நடக்கும் ஆதார் அடையாள அட்டை தயாரிக்கும் பணி.

ஏகாதிபத்தியங்கள், அவற்றின் ஏகபோகக் கார்ப்பரேட் நிறுவனங்கள், அயல்நாடுகளிலும் உள்நாட்டிலும் இலாப நோக்கத்தில் ஒப்பந்தச் சேவைகளை அமர்த்திக்கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மக்களின் நலனுக்காக, மக்கள் சேவைகளுக்காக செயல்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசுகள் எதற்காக, எந்த நோக்கில் வெளியில் தனியாரிடம், அந்நியரிடம் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்திக் கொள்ள வேண்டும்? மக்களுக்கான நலன்கள், சேவைகள் செய்வதை நோக்கமாகக்கொண்டோ, தனது அரசு செலவுகளைக் குறைப்பதற்காகவோ இவ்வாறு செய்யவில்லை. அரசுப் பணத்தை, மக்கள் சொத்தை ஒப்பந்தச் சேவைகளுக்காக அரசு அமர்த்தும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களும், இவ்வாறான ஒப்பந்தங்கள் போடும் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கொள்ளையடிப்பதற்காகவே இந்த ஒப்பந்த முறை எல்லா அரசுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

நமது நாட்டில் பார்ப்பன குட்டி முதலாளிய அறிவுஜீவிகளின் அவதாரக் கடவுள், ராஜாஜி எனப்படும் சிறீமான் ராஜகோபாலாச்சாரியார். அமெரிக்கத் தாசனான இவர், 1950-களிலேயே தனியார்மயம், தாராளமயம் கொள்கைக்காக வாதாடி, பார்ப்பன – பனியா கும்பலின் ஆதரவு பெற்ற (இன்றைய பா.ஜ.க.வின் பொருளாதாரப் பதிலி) சுதந்திரா கட்சியைத் தொடங்கி, நிலைநாட்ட எத்தனித்தவர். நேருவின் கலப்புப் பொருளாதாரக் கொள்கையைக் கடுமையாகச் சாடினார். காங்கிரசு ஆட்சியை லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா ராஜ்ஜியம் என்று ஏளனம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் வந்த அரசுத் துறைத் தொழில்களை வெள்ளை யானைகளைக் கட்டி மேய்க்கும் வேலை என்று கேலி பேசினார். எதற்கு? எல்லாம் பார்ப்பன-பனியா-மார்வாரி-பார்சி தரகு முதலாளிகளின் கொள்ளைக்கு முழுமையாகத் திறந்து விடவேண்டும் என்பதற்காக! எல்லாம் தனியார்மயமாக்க வேண்டும் என்பதற்காக!

ஆவின் பால் ஊழல் பேர்வழி வைத்தியநாதன்
ஆவின் பால் ஊழல் பேர்வழி வைத்தியநாதன்

இப்போது அதனால்தான் தனியார்மயமாக்கம் அதற்குமேலே போய் நாலுகால் பாய்ச்சலில் நடக்கிறது. அரசுத்துறை தொழில்கள் எல்லாம் பார்ப்பன – பனியா – மார்வாரி – பார்சி தரகு முதலாளிகளின் கொள்ளைக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. அரச ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் (OUTSOURCING) என்பது இப்போது பலபரிமாணங்களைக் கொண்டதாகவும் பூதாகரமானதாகவும் எங்கும் விரவி ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விடுவதாகவும் வளர்ந்து விட்டது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் முதலிய புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்டபிறகு கட்டுமான மறுசீரமைப்பு, சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அரசின் மக்கள் நலப் பணிகள் அனைத்துக்கும் மூடுவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இருந்தாலும், நமது நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்பு முறைகளும் ஓட்டுக் கட்சி அரசியலும் இன்னமும் நீடிக்கின்றன. ஆகவேதான், மக்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, கழிப்பிடம், உணவு-குடிதண்ணீர், அடிப்படைக் கல்வி, சுகாதாரம், மருத்துவம், சாலை-நடைபாதை, இடுகாடு, இயற்கைப் பேரிடர்-போர்கள் நிகழும்போது நிவாரணங்கள், கொள்ளை நோய்கள் தாக்கும்போது தடுப்பு நடவடிக்கைகள் போன்ற குறைந்தபட்ச மக்கள் நலச் சேவைகளை, தேவைகளை செய்து கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு இருக்கிறது.

ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, பொதுவில் அரசுப் பணிகளுக்கும், குறிப்பாக மேற்கண்டவாறான மக்கள் நலப் பணிகளுக்கும், அடிப்படைத் தேவைகளுக்குமான பழைய அரசுக் கட்டுமான அமைப்புகள் எல்லாம் சிறுகச் சிறுகக் கலைக்கப்படுகின்றன. ஆட்குறைப்பும் வேலைச் சுமை ஏற்றமும் செய்யப்படுகின்றன. அல்லது புதிதாக வேலைக்கு ஆட்சேர்ப்பதில்லை; பல அரசுப் பணிகளுக்கான இடங்கள் காலியாக விடப்படுகின்றன. பல அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்ப்புக்கே தடை விதித்துள்ளனர்.

மேல்மட்ட அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், துணை இராணுவம் முதலிய அரச வன்முறை அமைப்புகள் தவிர, பிற எல்லா துறைகளிலும் எலும்புக்கூடு போன்ற வலைப் பின்னலாக அரசு மாற்றப்படுகின்றது. இந்த நிலையில், இனி மேற்கண்ட மக்கள் நலச் சேவைகளை, மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பது எந்த அமைப்புகள்?! இந்தக் கேள்விக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான், அரச ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் என்ற முறை.

குடிதண்ணீர் தேடி மக்கள் தெருத்தெருவாய் அலைந்து கடைசியில் காலிக்குடங்களோடு சாலை மறியலில் இறங்கி தடியடிபட்டுக் கலைகிறார்கள். செய்தியாளர்கள் கேட்டால், மந்திரிகள் சொல்கிறார்கள்: “தெருவுக்குத் தெரு லாரிகளில் குடிதண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடாகியுள்ளது.” குடம் தண்ணீர் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்காவது கிடைத்ததே என்று அன்றைய பொழுதுக்குப் பெருமூச்சு விடும் மக்களுக்குத் தெரியாது; இதெல்லாம் அரசின் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் என்ற முறையின் கீழ் ஏற்பாடாகியுள்ளது. ஒருபுறம், பழைய குடிநீர்த் திட்டங்கள் பாழடைந்து போகின்றன. அவற்றைச் சரிசெய்து பராமரிப் பதற்கான நிதி ஒதுக்கீடுகளும் முயற்சிகளும் ஏதுமில்லை. புதிய திட்டங்களுக்கான ஏற்பாடுகளுமில்லை. மறுபுறம், ஆளும் கட்சிப் பொறுக்கி வியாபாரிகள் – முதலாளிகள் முதல் அந்நிய கார்ப்பரேட் வரை தனியார் தண்ணீர் வியாபாரிகளின் கொள்ளை கொடிகட்டிப் பறக்கிறது.

கிராமப்புறங்களில் இருந்து அரசின் ஆவின் பால் நிறுவனத்துக்கு லோடுகள் எடுத்துவரும் ஒப்பந்தச் சேவைக்கு ஆளுங்கட்சிப் பிரமுகர் வைத்தியநாதன் அமர்த்தப்பட்டார். பால் லோடுகள் எடுத்துவரும் வழியில் அவர் ஆட்களை வைத்து ஒரு நாளுக்குப் பல இலட்சம் லிட்டர் வீதம் பத்தாண்டுகளாகப் பாலைத் திருடி வெளிக்கம்பெனிக்கு விற்றுவிட்டு, ஆவின்பாலில் தண்ணீரைக் கலந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். (அவர் பிடிபட்டு உச்சநீதிமன்றத்துக்கு பிணை கோரிப்போன வழக்கில் லோடுலாரி ஓட்டுநர்தான் குற்றவாளி என்று அரசே வாதாடியது.) தமிழ்நாட்டில் ஆற்றுமணல் தொழிலை ஏகபோகமாக அரசே எடுத்துக்கொண்ட பிறகு, மணல் வாருவதையும் லோடு செய்வதையும் தமிழகத்தின் ஏகபோக ஆற்றுமணற் கொள்ளை மஃபியா தலைவர்களான ஆறுமுகசாமியும் படிக்காசுவும் அரச ஒப்பந்தச் சேவைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அரசு அனுமதியை மீறி ஆற்று மணலைக் கொள்ளையிட்டு பலமடங்கு விலைக்கு விற்று அம்மாவுக்குக் கப்பமும் கட்டுகின்றனர்.

இவை ஒருசில எடுத்துக்காட்டுகள்தாம். இன்னும் அதிர்ச்சியூட்டும் ஏராளமான அரசு ஒப்பந்தச் சேவை அமர்த்தங்கள் நடக்கின்றன. வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் அடையாள அட்டைகள், பட்டியல் தயாரிப்பு, ஆதார் அடையாள அட்டை தயாரிப்பு, கட்டணக் கழிப்பறைகள் நடத்துவது, டாஸ்மாக் பார்கள் நடத்துவது, நகரங்களில் குப்பை அள்ளுவது முதல் வங்கிகளில் தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களுக்கு ரொக்கப்பணம் லோடுசெய்வது (அதிலும் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள், கள்ளநோட்டுக்களை வைக்கின்றன) வரை பலப்பல அரசுப் பணிகளுக்கும் ஒப்பந்தச் சேவை அமர்த்தங்கள் நடக்கின்றன.

அரசுப் போக்குவரத்துப் பேருந்துகளில் நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்கப் பயன்படுத்தும் கையடக்க இயந்திரங்கள்கூட நாள் வாடகை அடிப்படையில் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்பட்டுள்ளது. அது பழுதானால்கூட அதற்கும் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்பட்டுள்ளது. அம்மாதிரியான பயணச்சீட்டு வழங்கு இயந்திரங்கள் கால்நூற்றாண்டுக்கு முன்பே கோவை ஜி.டி.நாயுடு கண்டுபிடித்துப் பயன்படுத்தியிருக்கிறார். பயணச்சீட்டு வழங்கு இயந்திரங்களைச் சொந்தமாக வாங்குதைவிடப் பன்மடங்கு தொகையை ஆண்டாண்டு சேவை ஒப்பந்ததாரர்களுக்கு அரசு கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவுக்குப் பேசப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டு ஊழல்கள் இந்த வகையிலானவைதாம். அப்போட்டியின்போது ஏ.சி.க்கள், நாற்காலிகள், மின் விசிறிகள் அவற்றின் முழுவிலையைவிடக் கூடுதலான நாள் வாடகைக்கு ஒப்பந்தச் சேவை அடிப்டையில் அமர்த்தப்பட்டன. இதனால் ஐயாயிரம் கோடி ரூபாய்வரை ஊழல்கள் நடந்தன.

இம்மாதிரியான ஒப்பந்தச் சேவைகளுக்கு அரசு அமர்த்தும் செலவுத் தொகையை வைத்து அவற்றுக்கான எல்லாச் சாதனங்களையும் சொந்தமாக வாங்கிக் கொள்ளவும் முடியும். பல இலட்சம் பேருக்கு அரசு வேலையளிக்கவும் முடியும். இதெல்லாம் அரசு அதிகாரத்தை மக்களே கைப்பற்றிக் கொள்ளும்போது மட்டுமே நடக்கும். மக்கள் நலனுக்கு எதிராகக் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பெரும் கார்ப்பரேட் தரகு முதலாளிகளிடம் அதிகாரம் இருக்கும்வரை நடக்காது.

____________________________
புதிய ஜனநாயகம், மே 2015
____________________________