privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுர்ரட்சித் தலைவி

புர்ரட்சித் தலைவி

-

12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் டான்சி  நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை வாங்கிய குற்றத்திலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து அவரது மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்தது உச்சநீதிமன்றம். அதை ஒட்டி புதிய கலாச்சரம் இதழில் வெளியான தலையங்கத்தை இங்கு தருகிறோம். 

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகளும் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை தெளிவாக்குகிறது. நீதித்துறை நீதியின் பால் இயங்குவதில்லை என்பதை டான்சி தீர்ப்பும் வெளிப்படையாக தெரிவிக்கிறது.

டான்சி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை இரண்டே வரிகளில் இப்படிச் சுருக்கிக் கூறலாம். தி.மு.க உச்சநீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது; உச்சநீதிமன்றமோ ஜெயலலிதாவின் மனசாட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது. ஜெயலலிதா தண்டிக்கப்பட வேண்டுமென விரும்பியவர்களும், நிச்சயம் தண்டிக்கப்பட்டு விடுவாரென நம்பியவர்களும் தீர்ப்பைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதையும், “நீதி தேவதைக்கு நன்றி” என அவர்கள் ஒட்டிய சுவரொட்டிகளையும் கண்டு மனம் வெதும்பிய சிலர், “பெட்டி வாங்கிட்டான்னு நாமும் போஸ்டர் அடிச்சு ஒட்டினா என்ன? நீதிமன்ற அவமதிப்புன்னு கைது பண்ணுவானா? பண்ணட்டும். எத்தனை ஆயிரம் பேரைக் கைது பண்ணுவான்னு பார்ப்போம்” என்று குமுறினார்கள்.

“டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை இரண்டே வரிகளில் இப்படிச் சுருக்கிக் கூறலாம். தி.மு.க உச்சநீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது; உச்சநீதிமன்றமோ ஜெயலலிதாவின் மனசாட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது.”

“நீதித்துறையைப் பெட்டிக்குள் அடக்க முடியாது” என்று அவர்களிடம் நாம் வாதாட முடியாது. நீதிபதிகளில் சுமார் 25 சதவீதம் பேர் கறை படிந்தவர்களென்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியே ‘தீர்ப்பளித்திடும்போது’ அவரை மறுத்து வாதாடுமளவுக்கு நம்மிடம் ஆதாரமில்லை.

எனினும், “நீதி பெட்டிக்குள் அடங்கி விட்டது” என்ற வகையிலான இந்தப் பொதுக்கருத்தை நாம் மறுப்பதற்கு வேறு காரணமிருக்கிறது. இந்த அரசமைப்பு நீதியானதென்றும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், நீதித்துறையும் சட்டத்தைக் கறாராகப் பற்றியொழுகினால் பூலோக சொர்க்கத்தை இந்தியாவில் உருவாக்கி விடலாமென்றும் ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் மாயையை இந்தப் பொதுக்கருத்து வழிமொழிகிறது. மாறாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போ மேற்படி மாயைகளைப் பொடிப்பொடியாக நொறுக்குகிறது. பட்டப்பகலில் வழிப்பறி செய்தாலும் “ஓட்டுக் கட்சிகளையோ, அதிகாரவர்க்கத்தையோ சட்டப்படி தண்டிக்க முடியாது” என்ற உண்மையை இந்தத் தீர்ப்பு மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

பாசிச ஜெயா
படம் : ஓவியர் முகிலன்

***

சந்தை விலையை விடக் குறைவான விலைக்குத்தான் டான்சி சொத்து விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்றும், இதனால் அரசுக்கு இழப்பும், ஜெயலலிதா-சசிகலாவுக்கு ஆதாயமும் கிட்டியிருக்கிறதென்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது. அதனடிப்படையில் தண்டனையும் விதித்து. “ஒரு பொருளின் சந்தை மதிப்பை யார் எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?” என்ற தத்துவ ஞானக் கேள்வியை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்தது.

இதை வழிமொழிந்ததுடன் நில்லாமல், உச்சநீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றிருக்கிறது. இந்தப் பரிவர்த்தனையில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறான ஆதாயம் அடையவில்லை. டான்சி நிறுவனம் தவறான நட்டமும் அடையவில்லையெனக் கூறியிருக்கிறது.

அப்படியானால் ஒரு வர்த்தகப் பரிவர்த்தனையில், “நியாயமான லாபம், நியாயமான நட்டம் என்பனவற்றைத் தீர்மானிக்கும் அளவுகோல் எது?” என்ற கேள்வி நமக்கு எழுகிறது. நெல்லுக்கும் கரும்புக்கும் நியாயமான விலை கேட்கும் விவசாயி, முதலுக்கு மோசமில்லாத விலையை நியாயவிலை என்று கருதுகிறான். உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலை நிர்ணயிக்கும் பன்னாட்டு நிறுவனங்களோ 300 சதவீத லாபத்தை நியாயமான லாபமாகக் கருதுகின்றன. இதைத் ‘தவறான லாபம்’ என்று கூறித் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கோ, நீதிமன்றத்துக்கோ இல்லை.

“பட்டப்பகலில் வழிப்பறி செய்தாலும் “ஓட்டுக் கட்சிகளையோ, அதிகாரவர்க்கத்தையோ சட்டப்படி தண்டிக்க முடியாது” என்ற உண்மையை இந்தத் தீர்ப்பு மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறது.”

அதேபோல, 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள மாடர்ன் ஃபுட் நிறுவனத்தை வெறும் 120 கோடி ரூபாய்க்கும், பால்கோ நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கும் விற்பனை செய்த அமீனாத்துறை அமைச்சர் அருண் ஷோரியும் “இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு இவ்வளவுதான்” என்று வாதாடுகிறார். ஆகவே, ஒரு பொருளின் சந்தை விலையை இன்னதென்று தீர்மானிக்கவியலாது எனும்போது அதை வாங்கியவர் எவ்வளவு லாபமடைந்தார் என்பதையும் திட்டவட்டமாக யாரும் கூற முடியாது.

இன்னதென்று கூற முடியாத சந்தை விலை, இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத வழிகளின் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உருவாக்கப்படுகின்ற முன்மாதிரி விலை (guiding value) என்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு எந்தச் சட்டத்தால்தான் குற்றத்தை நிரூபிக்க முடியும்? அதனால்தான், “யாரும் தவறான லாபமோ, நட்டமோ அடையவில்லை.” என்று மிகவும் எச்சரிக்கையுடன் வரம்பிட்டுக் கொள்கிறது தீர்ப்பு.

அப்படியானால் “தவறான முறையில் ஆதாயமடைவது” என்ற நோக்கமில்லாத புரட்சித்தலைவி, டான்சி நிலத்தை ஏன் வாங்கினார்? முடவர்களுக்கு மூன்று சக்கர வண்டி வழங்குவதைப் போல, நொடித்துப் போன டான்சி நிறுவனத்துக்கு அம்மா அவர்கள் தாயுள்ளத்துடன் தனது கைக்காசை வழங்கியிருக்கிறார் என்பதைத் தவிர வேறென்ன நோக்கம் கற்பிக்க முடியும்?

***

டான்சி நிலம் அரசுச் சொத்தென்றும் அதை அரசு ஊழியராகிய முதல்வர் வாங்கியது குற்றமென்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டையும் இத்தீர்ப்பு நிராகரித்து விட்டது. “அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், ஒரு ‘அரசு நிறுவனம்’ என்பதற்கு தனித்த சட்ட அடையாளம் இருக்கிறது. எனவே அரசுச் சொத்தையும் அரசு நிறுவனத்தின் சொத்தையும் ஒன்றெனக் கருதவியலாது. மேலும், ‘அரசு நிறுவனத்தின் சொத்தை அரசு ஊழியர் வாங்குவது குற்றமே’ என்று சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை” என்று விளக்கமளிக்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

இத்தீர்ப்பின் விளைவாக அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை ஒளிவுமறைவான முறைகளில் திருடவேண்டிய அவலநிலை ஒழிக்கப்பட்டு விட்டது. எடுத்துக் காட்டாக, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் வாங்கிக் கொள்ளலாம். அவற்றுக்கான நியாயமான விலையையும் அவர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

சொத்துக் குவிப்பு வழக்கு
படம் : ஓவியர் முகிலன்

ஒருவேளை சென்னை கடற்கரை போன்ற நேரடியான அரசுச் சொத்தை வாங்க சசிகலா அம்மையார் விரும்பினால், முதலில் ஒரு அரசு உத்தரவின் மூலம் மெரினா கடற்கரையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமாக்க வேண்டும். பிறகு கடற்கரையை விலைக்கு வாங்கியதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து சுற்றுலாக் கழகத்தை மீட்க புரட்சித் தலைவியவர்கள் தன் சொந்தக் காசைக் கொடுத்து மேற்படி கடற்கரையை தன் பெயருக்கே மாற்றிக் கொள்ளலாம்.

அரசுச் சொத்து வேறு, அரசுத்துறைச் சொத்து வேறு என்று கூறும் இத்தீர்ப்பு, “பொதுத்துறை (Public Sector) பொது மக்களுக்குச் சொந்தமானது” என்ற மாயையைத் தகர்த்து, “அது அதிகாரவர்க்கத்தின் உடைமை” என்ற உண்மையை நிலைநாட்டியிருக்கிறது. பொதுத்துறையைத் தனியார்மயமாக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் / சட்டமன்றத்தின் ஒப்புதல் கூடத் தேவையில்லை என்பதற்கும் அத்தகைய முடிவுகளை அதிகாரவர்க்கமே மேற்கொள்ளலாம் என்பதற்கும் ஏற்கனவேயுள்ள சட்டத்தில் பொதிந்திருக்கும் வாய்ப்புகளை இத்தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

***

சந்தை விலை, அரசுச் சொத்து என்ற இரு கருத்தாக்கங்களையும் நிராகரித்ததுடன் உச்சநீதிமன்றம் நிற்கவில்லை. “இந்தச் சொத்தை குறைந்த விலைக்கு வாங்க ஜெ, சசி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் சதித்திட்டம் தீட்டினர்” என்ற குற்றச்சாட்டையும் ஏற்க மறுத்திருக்கிறது. “முதல்வர் விரும்பும் வகையில் இந்த விற்பனை இடையூறின்றி நடந்து முடிய வேண்டுமென்பதில் அதிகாரிகள் பேரார்வம் காட்டியிருப்பார்கள்” என்று ஒப்புக் கொள்ளும் இத்தீர்ப்பு வேறொரு கேள்வியை எழுப்புகிறது. “குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய சிந்தனைகள் வெவ்வேறு கட்டங்களில் எவ்வாறு சந்தித்தன, அவர்களுடைய பொதுத்திட்டம் என்ன என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை” என்பதால் சதி (குற்றப்பிரிவு 120-B) என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது.

சதியை எப்படி நிரூபிப்பது? தீவிரவாதிகளின் சதியை நிரூபிப்பது சுலபம். அவர்கள் பாலத்தின் அடியிலோ, புதர்களின் மறைவிலோ, பாழடைந்த மண்டபத்திலோ நள்ளிரவில் காடா விளக்கொளியில் ஒன்று கூடுவார்கள். “சட்டபூர்வமாக அமைந்த இந்த அரசை, செக்சன் : 120-B-யின் கீழ் தூக்கியெறிவோம்” என்று பத்தடி தூரத்தில் ரோந்து போகும் ஏட்டின் காதில் விழும்படி சபதம் செய்வார்கள். அந்த நேரத்தில் அதே இடத்திற்கு சிறுநீர் கழிக்க வரும் கிராம நிர்வாக அதிகாரியைச் சாட்சியாக்கி குற்றம் நிரூபிக்கப்பட்டு ‘தீவிரவாதிகள்’ தண்டிக்கப்படுவார்கள்.

ஆனால், ஜெ-வும், அதிகாரிகளும் தீவிரவாதிகள் அல்ல என்பதுடன் அவர்கள் பாழடைந்த மண்டபத்திலும் சந்திப்பதில்லை என்பதால் ஏட்டுகளால் அவர்களை வேவு பார்க்க முடியாது. குறிப்பாக, சட்டபூர்வமாக அமைந்த அரசின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள் என்ற முறையில் அவர்கள் கோட்டையில் சந்தித்துப் பேசும் போது அது வளர்ச்சித் திட்ட விவாதமா, சதியாலோசனைக் கூட்டமா என்று சோதித்தறியும் அதிகாரமும் யாருக்கும் வழங்கப்படவில்லை. மேலும், காதலர்களின் உள்ளம் குறிப்பறிந்து செயலாற்றுவதைப் போலவே களவாணிகளின் உள்ளமும் குறிப்பறிந்து செயல்படுகிறது. சாட்சியங்களோ அரிதாக ஓரிரு வழக்குகளில் சிக்கலாம். அது சீப்பில் சிக்கிய முடியைப் போன்றது. எனவே, விளைவிலிருந்து சதியை ஊகிக்க முடியுமேயன்றி, சதித்திட்டத்தின் கூட்டக் குறிப்பை கண்டுபிடிக்க ஒருக்காலும் முடியாது. எனினும் ஊகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்ட முடியாது என்கிறது உச்சநீதிமன்றம். “பாபர் மசூதியை இடிக்கும் சதித்திட்டத்தில் அத்வானியின் பங்கை நிரூபிக்க ஆதாரமில்லை” என்று கூறி விடுவித்ததைப் போல.

***

அடுத்ததாக, “டான்சி சொத்தை வாங்கியதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை ஜெயலலிதா மீறியிருக்கிறாரா? ஆம், எனில் அந்த நன்னடத்தை விதிமீறல் என்பது இ.பி.கோ. 169-வது பிரிவின்படி தண்டிக்கத் தகுந்த குற்றமா?” என்ற கேள்வியைப் பரிசீலிக்கிறது இத்தீர்ப்பு.

ஜெயா நீதி
படம் : ஓவியர் முகிலன்

“அரசு ஊழியர் நன்னடத்தை விதி என்பது கனவான்கள் ஏற்கும் ஒரு ஒப்பந்தம்; அதனை மீறுவது நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக் கூடிய கிரிமினல் குற்றமாகி விடாது. மேலும், நன்னடத்தை விதியின் சொற்களை ஜெயலலிதா மீறவில்லை (டான்சி நிலம் நேரடியான அரசுச் சொத்தல்ல என்ற காரணத்தினால்); அதன் உணர்வைத்தான் மீறியிருக்கிறார்” என்று விளக்கமளிக்கிறது உச்சநீதிமன்றம்.

நன்னடத்தை விதியை மீறுவது கிரிமினல் குற்றமாகி விடாது என்று தீர்ப்பு கூறுவது ஒருபுறமிருக்கட்டும்; 1968-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட அந்த விதி என்ன கூறுகிறது தெரியுமா? “அசையாச் சொத்து எதையும் அரசிடமிருந்து வாங்குவதையோ விற்பதையோ அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்” என்கிறது.

இதனை “விதி” என்று பெயரிட்டு அழைக்கவியலுமா? இது ஒரு நல்லொழுக்க போதனை, அவ்வளவுதான். இந்த விதி ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டதல்ல; எனவே, இதற்காக அவரை நாம் குற்றம் சாட்ட முடியாது.

நன்னடத்தை விதி மட்டுமல்ல, குற்றப்பிரிவு : 169-ம் மேம்போக்காகவே உள்ளது. எவையெவை அரசுச் சொத்துக்களாகக் கருதப்படும் என்பதை இச்சட்டத்திலேயே தெளிவுபடுத்தியிருக்க முடியும். இது கவனக்குறைவாக நேர்ந்த தவறல்ல; கவனமாகச் செய்யப்பட்டிருக்கும் சூழ்ச்சி. சட்டத்தின் சொற்களையும், வாக்கியங்களையும் அமைக்கும் ஆளும் வர்க்கச் சட்ட வல்லுநர்கள் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஆராய்ந்து தேவையான சொற்களுக்கு அடிக்குறிப்பும் பொருள் விளக்கும் அளிக்கிறார்கள்.

“இத்தீர்ப்பின் விளைவாக அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை ஒளிவு மறைவான முறைகளில் திருட வேண்டிய அவல நிலை ஒழிக்கப்பட்டு விட்டது !”

வெள்ளையனால் உருவாக்கப்பட்டு இன்னும் அமலில் இருக்கும் தேசத்துரோகச் சட்டம் (பிரிவு 124-A) முதல், பொடா வரையிலான சட்டங்கள் கூறுவதென்ன? செயலால் மட்டுமல்ல, பேச்சு – எழுத்து – சைகை ஆகிய எந்த வடிவில் இருந்தாலும் ‘தேசத்துரோக – பயங்கரவாதக் குற்றங்களை’ அவை அடையாளம் காட்டுகின்றன. ஜெயலலிதாவின் ‘டெஸ்மா’வோ போராட்டத்தை ஆதரித்துக் கருத்து கூறுவது, தொழிற்சங்க உண்டியலில் காசு போடுவது உள்ளிட்ட அனைத்தையும் குற்றமாக இனம் காண்கிறது. ஆனால், இத்தகைய சட்டங்களை உருவாக்கிய மேதைகளால் அரசாங்கச் சொத்துக்கள் எவையெவை என்பதை மட்டும் தெளிவாக இனம் காட்ட முடியவில்லையாம்! ஒரு வேளை சுண்டெலிகள் தப்பிச் செல்வதற்காக வேண்டுமென்றே விடப்பட்டிருக்கும் சட்டத்தின் ஓட்டையாக அது இருந்திருக்கக் கூடும்! ஆனால், அதையே குடைந்து பெரிதாக்கி, பெருச்சாளி தப்பிவிட்டது. ஓட்டையை ஆராய்ந்த நீதிமன்றம் அதை அடைக்குமாறு உத்தரவிடவில்லை. ‘நன்னடத்தை விதியின் உணர்வு’ என்று அந்த ஓட்டைக்குப் பெயரிட்டிருக்கிறது.

ஜெயலலிதா, ‘விதி’யை மீறவில்லை; விதியின் உணர்வைத்தான் மீறியிருக்கிறார். விதியும், சட்டமும் அறிவுபூர்வமானவை; எனவே அவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றம். உணர்வோ மனம் சார்ந்தது. எனவே ஜெயலலிதாவின் மனச்சாட்சிக்கு வேண்டுகோள் விடுகிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பின் இரண்டாவது அத்தியாயம் இங்கே தொடங்குகிறது.

***

ஜெயா - சசி கோயில் வழிபாடு
வெறும் மனச்சாட்சியினால் உச்ச நீதிமன்றத்தையே வீழ்த்திய ஜெயா – கற்சிலை அம்மனுக்கு நன்றி சொல்கிறார்.

சட்டப்படி ஜெயலலிதா குற்றவாளியல்ல என்ற போதிலும், அவர் வகிக்கின்ற பதவி கோருகின்ற நடத்தையும், அவரது உண்மையான நடத்தையும் முரண்படுவதை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது. “… நிபந்தனையற்ற முறையில் டான்சி சொத்தைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் தனது தவறுக்கு அவர் பிராயச்சித்தம் தேட வேண்டும்… அது மட்டுமல்ல, ‘சொந்த ஆதாயத்திற்காக விதிகளை வளைக்கிறார்’ என்ற சந்தேகம் எழும் வகையில் நடந்து கொண்டதும், நன்னடத்தை விதிகளின் உணர்வை மீறியதும் சரிதானா’ என்று ஆழ்ந்து சிந்தித்து அவர் தன்னுடைய மனசாட்சிக்கே பதில் சொல்ல வேண்டும்” என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறது நீதிமன்றம்.

சாட்சிகளை மிரட்டிப் பல்டியடிக்க வைத்ததன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றக் காரணமாயிருந்த மனச்சாட்சியிடம், சிறைத் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த போதும் நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமரத் தயங்காத மனச்சாட்சியிடம், டான்சி ஒப்பந்தத்தில் தான் போட்ட கையெழுத்தையே ‘போர்ஜரி’ என்று கூண்டிலேறிப் பொய்ச் சத்தியம் செய்யத் தயங்காத மனச்சாட்சியிடம் தான் தாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்ற உண்மை நீதிமன்றத்துக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. எனினும், இந்த மனச்சாட்சிக்குள்ளே இன்னொரு உண்மையான மனச்சாட்சி ஒளிந்திருக்கக் கூடுமென நீதியரசர் நம்பியிருக்கலாம். சரியாகச் சொன்னால், அத்தகையதொரு நம்பிக்கையை நமக்கு உருவாக்க அவர்கள் முனைந்திருக்கலாம்.

எவ்வாறு இருப்பினும் அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேணுகோபால். “புரட்சித் தலைவி அவர்கள் மேற்படி சொத்தை டான்சி நிறுவனத்துக்கு ஏற்கனவே தானமாக வழங்கி விட்டார்” என்ற உண்மையை நீதிமன்றத்தின் முன் எடுத்துக் கடாசினார். இதன் மூலம் மேற்படி வழக்கின் நிலவரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் அறியாமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமல்ல, “தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே புரட்சித் தலைவியின் மனச்சாட்சி முன் தேதியிட்டு அதனை அமல்படுத்தி விட்டது” என்ற உண்மையையும் அவர்களுக்கு உணர்த்தினார்.

***

புரட்சித் தலைவியின் மனச்சாட்சிக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் இத்தீர்ப்பில் துருத்திக் கொண்டிருக்கும் முரண்பாடுகள் நீதிபதிகளின், ‘மனச்சாட்சி’யைக் குத்தத் தொடங்குகின்றன போலும். “சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு வேறொரு சட்டமா? நன்னடத்தை விதி என்பது என்ன? அது சும்மா அருங்காட்சியகத்தில் வைத்து வேடிக்கை பார்க்கத் தக்க புராதனக் கலைப்பொருளா? இந்த விசயங்கள் எங்கள் மனச்சாட்சியை கவலைக்குள்ளாக்குகின்றன” என்று அங்கலாய்க்கிறார்கள்.

“அவை கலைப் பொருட்களல்ல, கொலைப் பொருட்கள்” என்று கதறுகிறார்கள் தமிழகத்தின் அரசு ஊழியர்கள். எந்த நன்னடத்தை விதியை “தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமல்ல” என்று இந்தத் தீர்ப்பு கூறுகிறதோ, அதே விதிகளின்படிதான் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒப்புக் கொண்ட ஊதியத்தைத் தர மறுக்கும் தமிழக அரசின் ‘ஒப்பந்த மீறல்’ (Breach of Contract) உச்சநீதிமன்றத்தால் அன்று கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மாறாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசு ஊழியர்கள் நன்னடத்தையிலிருந்து வழுவியதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் எச்சரித்தது. “வேலை நிறுத்தம் செய்வதற்கான தார்மீக உரிமையோ சட்டபூர்வ உரிமையோ அரசு ஊழியர்களுக்குக் கிடையாது” என்று மிரட்டியது. ஆனால், அரசு நிறுவனத்தின் சொத்தை முதலமைச்சர் விலைக்கு வாங்குவது சட்டப்படி குற்றமல்ல என்றும், அது தார்மீக ரீதியில் தவறு என்பதால் முதல்வர் மனம் வருந்தித் தனது சொந்த மனச்சாட்சிக்குப் பதிலளிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுகிறது. மனம் வருந்தி மன்னிப்புக் கேட்ட ஊழியர்களையோ நீதிபதிகள் இரக்கமின்றி தண்டிக்கிறார்கள்.

“உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற ‘சர்வ வல்லமை’ பொருந்திய இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம் போல நொறுக்கிய புரட்சித் தலைவி உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.”

“சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா” என்ற கேள்வி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களிடமிருந்து வெடித்துக் கிளம்பும் கேள்வி. அந்தக் கேள்விக்கு விடை சொல்ல வேண்டிய உச்சநீதிமன்றமோ புரட்சித் தலைவியின் பாதாரவிந்தங்களில் மேற்படி கேள்வியை சமர்ப்பிக்கிறது. உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற ‘சர்வ வல்லமை’ பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.

ஒரு தத்துவஞானக் குறிப்புடன் தீர்ப்பு முடிவடைவதாகக் கூறுகிறது ‘இந்து’ நாளேடு. அதன் சாரம் பின்வருமாறு : “பொதுவாக கிரிமினல் சட்டம் என்பது கிரிமினல்களைக் கையாள்வதற்கானது; உயர்பதவிகளை வகிப்பவர்களிடமோ நாம் அதியுன்னதமான நாணயத்தை எதிர்பார்க்கிறோம்.”

அவலச்சுவை ததும்பும் இந்தத் தத்துவக் குறிப்பு வெளிப்படுத்தும் உண்மை இதுதான். சூத்திரனுக்குத் தண்டனை; பார்ப்பானுக்குப் போதனை; ஆளப்படும் மக்களுக்கு பாசிசம்; ஆளும் வர்க்கங்களுக்குப் பரிகாரம்; அசுரர்களுக்கு நஞ்சு, தேவர்களுக்கு அமிழ்தம்!

இந்திய ஜனநாயகம் எனும் பாற்கடலை டான்சி வழக்கெனும் மத்தால் எட்டாண்டுகள் இடையறாது கடைந்து, இந்த தேவரகசியத்தை உலகறியச் செய்த ‘புரட்சி’த் தலைவிக்கு நன்றி சொல்வோம்.

இனி, உண்மையானதொரு புரட்சிக்கு ஆக வேண்டிய வேலைகளைக் கவனிப்போம்!

– மருதையன்
________________________________
புதிய கலாச்சாரம், டிசம்பர் 2003
சிறப்புத் தலையங்கம்
________________________________

  1. டேய் யாருடா அது சவுண்டு உடறது?

    அடுத்த அமெரிக்க ஜனாதிபதி எங்க ஆத்தாடா?

    கங்கை கொண்டானும்,கடாரங்கொண்டானும்
    கவுந்து படுத்த நாடுடா இது!

  2. //அவலச்சுவை ததும்பும் இந்தத் தத்துவக் குறிப்பு வெளிப்படுத்தும் உண்மை இதுதான். சூத்திரனுக்குத் தண்டனை; பார்ப்பானுக்குப் போதனை; ஆளப்படும் மக்களுக்கு பாசிசம்; ஆளும் வர்க்கங்களுக்குப் பரிகாரம்; அசுரர்களுக்கு நஞ்சு, தேவர்களுக்கு அமிழ்தம்!//

    உங்களுக்கு தெரியாதா?
    அந்த காலத்திலேயே பாலச்சந்தர் தனது அரங்கேற்றத்தில் அரங்கேற்றியிருக்கிறார்,

    அதுபோலத்தான் இதுவும்.

  3. என்ன அரங்கேற்றினார்? அந்த படத்தை பார்க்கவில்லை.

    • Mr.கற்றது கையளவு

      “அதாவது மேற்படியாளர்கள் மேற்படி தொழில் செய்வது
      தன் தம்பியை மேல் படிப்பு படிக்க வைக்கவும்,
      குடும்ப ஏழ்மையை போக்கவும்தான்.”

      என்று பிரமிளா மூலம் பாலச்சந்தர் தன் ஜாதி கருத்தை வெளிப்படுத்துவார்

      • பாலசந்தர் படங்களை நான் பார்க்க விரும்புவதில்லை. நடைமுறைக்கு ஒவ்வாத உறவுமுறை காதல், கூடா காதல், கள்ள காதல் என்று அவரது படங்கள் எல்லாம் வக்கிரமாக உள்ளன. ஆனாலும் பூநூல்கள் அவரை ஆகா, ஓகோ என்று புகழ்வது தான் சகிக்கவில்லை.

        பாலசந்தர் இயக்கத்தில் எனக்கு பிடித்த படங்கள் தண்ணீர் தண்ணீர், பாமா விஜயம். ஆனால் அப்படங்களை இயக்கியது மட்டும் தான் அவர். கதை அவருடையது அல்ல. மற்ற எல்லா படங்களிலும் வக்கிரங்கள் தான் கோலோச்சுகின்றன.

  4. இந்த பீடை எந்த தண்டனையும் பெறாமல் வெளியே வந்ததன்
    மூலம் நீதிமன்றங்களின் நிஜமான யோக்கியதை என்ன என்பது தெரிந்தது.
    அது குறித்து மகிழ்ச்சி அடைவோம்.

  5. அம்மாவின் குத்தாட்டம் இன்று ஆரம்பமானதல்ல! டான்சி வழக்கில் உச்சனீதிமன்றம் கெஞ்சல் தீர்ப்பின் போதே, அவாள் இந்த சாமானியர் சட்டங்களுக்கு அப்பார்ப்பட்டவர் என்பது வெளிச்சமாகிவிட்டது! குஜராத் பாணியில் பொது தேர்தல் , அதில் அவாள் தேர்தல் கமிஷன் திருவிளையாடல்கள், என்ரான், கோரஸ், பிரான்சின் உருக்காலை முதலீடு முதலிய அன்னிய செலாவணி கடத்தல்கள் மூலம் வெளினாட்டிற்கு சென்ற, வெள்ளையடிக்கப்பட்ட கருப்புபணம் பொது தேர்தலில் விளையாடியது, பிஜேபிக்கு 1500 கோடி கொடுத்த டாடாவின் தாராள மனசு எல்லாம் இந்திய அரசியலில் சாமானியனுக்கு எதிராக விளையாடியது, அவாளின் தமிழ்னாட்டு ஏக பிரதினிதியான அம்மாவிற்கு துணைபோனது! மிக கேவலமாக நீதி தேவன் துகிலுரியப்பட்டு, மே11-ல் கொலை செய்யப்பட்டு, இன்று சங்கு ஊதி பாலும் தெளித்தாகிவிட்டது! இனி எவனாவது நேர்மை,நீதி என்று பேச முடியுமா? முக்கியமாக தமிழிசை, ஈவிகேஎஸ்?

  6. உலகில் வேறு எந்த நாட்டிலும் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் இந்த அளவிற்கு வளைத்தல் இயலாது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக அடையாளம் காணப்படும் இந்த நாட்டில் அதிகாரம், பணம் மிகுந்தவர்களுக்கே சட்டம் தன்னால் இயன்ற அளவிற்கு வளைந்து கொடுக்கின்றது. ஓர் அரசு ஊழியர் வருவாய்க்கு அதிகமாக ஒரு ரூபாயை ஈட்டினாலும் அது குற்றம்தான். ஆனால் வருவாய்க்கு மேல் 10 விழுக்காடு சொத்தினைச் சேர்த்தால் அது தவறில்லை என்கிறது நீதிமன்றம். எனில் வருவாய்க்கு மேல் எந்தவகையில் சொத்தினை ஈட்டவியலும்?. 18 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையில் ஒருமுறைகூட பொருத்தமாக வாராத கணக்கு வழக்குகள் தற்பொழுது மட்டும் எவ்வாறு பொருந்திவந்தன. பிறழ்சாட்சிகளை நேர்மையுள்ள எவரும் சாட்சிகளாக ஏற்கமாட்டார். ஆனால் இவ்வழக்கில் ஏற்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பில் இருக்கும் பிழையைத் திருத்தினால் தீர்ப்பு மாறும் என்பதை எளிய மக்கள்முதல் சட்ட மற்றும் நீதிதுறை வல்லுநர்கள்வரை அனைவரும் அறிவர். அவ்வடிப்படையில் பொதுநலவழக்கு எனும் நிலையில், வழங்கப்பட்டத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என எவரேனும் மனு கொடுத்தால் அதை சுயவிளம்பரம் எனக்கூறி வழக்குத் தொடுத்தவருக்கே ரூபாய் 25,000 த்தினை தண்டமாக வித்திக்கின்றது நீதிமன்றம். குற்றம் இழைத்தோரை குற்றமற்றவர் என்று சிறுபிள்ளைகள் வாதம் போன்று வாதிட்டு அவர்தம் சொத்துகளைத் திருப்பியளிக்க ஆணையிடும் நீதிமன்றம் அதுகுறித்த ஓர் உடனடி மனுவினைத் தள்ளுபடி செய்கின்றது விந்தையானது. உண்மையில் நீதிமன்றங்கள் மீதான கருத்தியல் பிம்பங்கள் ஒட்டுமொத்தமாய்ச் சரிந்தது இந்த வழக்கில்தான்.

    இந்த நாடு ஒரு காடு. இந்தக்காட்டில் வலிமையுள்ள, அதிகாரமுள்ள, வளமையுள்ள அனைத்து கொடுவிலங்குகளும் தாம் வைத்ததே சட்டம்; தாம் உரைப்பதே சரி என்று அறுதியிட்டு காட்டின் அனைத்து வளங்களையும் நுகர்கின்றன. உண்மையில் மிக வேதனையாக இருக்கின்றது. இங்கு சாதியை இன்னும் பலர் விரும்பி போற்றுகின்றனர். தாங்களே வேறு எவ்வினத்தினும் உயர்ந்தவர் எனக் கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின்றனர். தம்மைபோன்ற மனித இனத்தினரை தீண்டத்தகாதோர் எனக் கூறி அவர்கள் தொட்டால் தீட்டு என்று மனிதர் மட்டுமன்றி தெய்வமன்றங்களும் கூறுகின்றன. பல்வேறு நாடுகளில் உணவு என்பது பழக்கமாக, விருப்பமாக இருக்க இங்குமட்டும் அது அரசியலாக இருக்கின்றது. அரசியல் துறையில் ஊழலில் எந்த வேறுபாடுமின்றி பலரும் திளைத்திருப்பினும் வழக்கில் மாட்டிய ஒன்றிரண்டு நபர்களும் சாதி, அடிப்பொடிகள், பணம், அதிகாரம், அரசியல் பயன், ஆகியவற்றினடிப்படையில் தப்பிச்சென்று மீண்டும் அதிகார மையத்தில் அமர்வதைக் காணும்பொழுது இந்த நாடாகிய காட்டில் பிறந்ததற்கும் வாழ்வதற்கும் வெட்கம்கொள்ள வேண்டும். ஆயினும் போராடுவதே நமது வாழ்வின் அடிப்படை. ஆகையால் வீறுகொண்டு போராடுவோம். அதுவே நாம் தொடர்ந்து மனித மதிப்புகளை மீட்கவும் அதிகார குவிமையங்களை ஒழுங்குபடுத்தவும் அடிப்படையாய் அமையும்.

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க