Wednesday, May 7, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஐ.ஐ.டி நிர்வாகத்தின் நரித்தந்திர வேலைகள்

ஐ.ஐ.டி நிர்வாகத்தின் நரித்தந்திர வேலைகள்

-

.ஐ.டி நிர்வாகம் தனது ஆளும் வர்க்க நரித்தந்திரத்தை பயன்படுத்தி, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததில் தனது குற்றத்தை மறைக்க முயற்சிக்கிறது. அது தொடர்பாக APSC தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலைத்தகவலை தமிழில் மொழிபெயர்த்து தருகிறோம்.

– வினவு

APSC தடை - பேச்சுவார்த்தை
ஐ.ஐ.டி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, 02-06-2015 கண்டன போராட்டத்துக்குப் பிறகு APSC உறுப்பினர்கள் பொறுப்பு இயக்குனரை சந்தித்தனர்.

.ஐ.டி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நேற்று (02-06-2015) கண்டன போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் பொறுப்பு இயக்குனரை சந்தித்தோம். பொறுப்பு இயக்குனர், தனது அதிகார வரம்புக்குள் வராத “மனித வளத்துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்ற கோரிக்கையைத் தவிர எங்களது பிற கோரிக்கைகளை வாய் வார்த்தையாக ஏற்றுக் கொண்டார். ஆனால், “இந்த விவகாரத்தை அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்தான் மாணவர்கள் அவையின் முன்பு எடுத்துச் செல்ல வேண்டும், நிர்வாகம் அதைச் செய்யாது” என்று கூறினார். இந்த நிபந்தனையை நாங்கள் நிராகரிக்கிறோம். இது தொடர்பாக பொறுப்பு இயக்குனருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எங்களது நிலைப்பாடு விளக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை கீழே தருகிறோம்.

————————————————————————–

அனுப்புநர்

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – மெட்ராஸ்,
சென்னை – 600 036

பெறுநர்
இயக்குனர் (பொறுப்பு)
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – மெட்ராஸ்,
சென்னை – 600 036

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நமது சந்திப்பின் முடிவு குறித்து APSC-ன் நிலைப்பாடு.

உங்கள் கோரிக்கைக்கிணங்க, 02-06-2015 பிற்பகல், எங்கள் குழுவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் உங்களை உங்கள் அலுவலகத்தில் சந்தித்தோம்; எங்களது கோரிக்கை பட்டியலை உங்களிடம் அளித்தோம். அந்த சந்திப்பின் போது, மனித வளத்துறை அமைச்சகம் உங்கள் அதிகார வரம்புக்குள் வருவதில்லை என்பதால் அது தொடர்பான கோரிக்கையைத் தவிர எங்களது மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக கூறினீர்கள்.

ஆனால், இதை ஒரு கடிதமாக எழுதித் தருவதற்கு பதிலாக, ‘எங்களது கோரிக்கைகளை நாங்கள் மாணவர்கள் அவையின் முன்பு முன்வைத்த பிறகுதான் அவற்றை ஏற்றுக் கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று கூறினீர்கள். APSC இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக எழுதித் தரப்பட வேண்டும்.

இது தொடர்பாக APSC குழு விவாதித்து செய்த முடிவு என்னவென்றால், நிர்வாகம்தான் மாணவர்கள் அவையின் முன்பு தேவையான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். APSC மாணவர்கள் அவையின் முன் வாதிடுவது பொருத்தமற்றதும், தொடர்பற்றதுமாகும் என்று கருதுகிறோம்.

கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது குறித்து APSC-ம் மாணவர் அவையும் இணைந்து முடிவெடுக்கும் என்று கூறுவது ஐ.ஐ.டி-மெட்ராஸ் நிர்வாகம் இந்த பிரச்சனையில் தனது பொறுப்பை கைகழுவுவதாகும். அங்கீகார ரத்து விவகாரம் மாணவர் அவைக்கும் APSC-க்கும் இடையிலானது இல்லை, மாணவர்கள் விவகாரங்களுக்கான முதல்வர் (ஐ.ஐ.டி-எம் நிர்வாகம்)-க்கும் APSC-க்கும் இடையேயானதுதான் என்பதால் நாங்கள் மாணவர் அவையை சந்திக்க மறுக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறோம்.

இந்த விவகாரம் பேசித் தீர்க்கப் படாத நிலையில், மாணவர் விவகாரங்களுக்கான குழு (SAC) 31-05-2015 அன்று மாணவர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்த ஆரம்பித்தது. அதில் “மாணவர் அவை கூடுவதற்கு முன்பாகவே APSC அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டுமா” என்பன போன்ற கேளவிகள் இடம் பெற்றிருந்தன.

மாணவர் விவகாரங்களுக்கான குழுவின் இந்தச் செயல் பிரச்சனை என்ற  பனிமலையின் ஒரு சிறு விளிம்பை காட்டுகிறது. அங்கீகரிக்கப்பட்டவை, அங்கீகரிக்கப்படாதவை என்று மாணவர் அமைப்புகளை பிரிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், நன்னடத்தை விதிகள் என்று ஐ.ஐ.டி-எம் நிர்வாகமும் மாணவர் விவாகரக் குழுவும் முன்வைக்கும், இப்போது நடைமுறையில் இருக்கும் மாணவர் அமைப்புகளை வகை பிரித்தல், வர்ணாசிரம கட்டமைப்பின் நவீன பதிப்புதான். சுதந்திரமான மாணவர் அமைப்புகளை இன்ஸ்டிட்யூட்டால் அங்கீகரிக்கப்பட்டது, அங்கீகரிக்கப்படாதது என்று வகை பிரிப்பது, பொது நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் நிற்கும் மாணவர் அமைப்புகளுக்கு வசதிகளையும் (அரங்கு, செயல்படுவதற்கான இடம், இணைய வசதி, நிதி முதலியன) உரிமைகளையும் மறுப்பதற்கான ஒரு வழி ஆகும். இதன் மூலம், “அங்கீகரிக்கப்படாத” மாணவர் அமைப்பை நீங்கள் “சூத்திரர்”களின் நிலைக்கு தாழ்த்துகிறீர்கள்.

மேலும், நாங்கள் புதிதாக எதையும் கோரவில்லை. “பிரிவு 19a-க்கு எதிரான ஜனநாயக விரோத நன்னடத்தை விதிகளை ரத்து செய்”, என்ற கோரிக்கையையும், “அனைத்து சுதந்திரமான மாணவர் அமைப்புகளையும் அதிகாரபூர்வமாக அங்கீகரி” (அதாவது, மாணவர் அமைப்புகளில் “அங்கீகரிக்கப்படாதவை”, “அங்கீகரிக்கப்பட்டவை” என்ற எந்த வகை பிரித்தலும் இருக்கக் கூடாது) என்ற கோரிக்கையையும் தவிர, பிற கோரிக்கைகளுக்கும் மாணவர் அவைக்கும் எந்த தொடர்பும் இல்லை. “அனைத்து படிப்பு வட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வசதிகள்” என்ற கோரிக்கையும் புதிதானதல்ல, ஏனெனில் விவேகானந்தா படிப்பு வட்டம் நாங்கள் கோரும் வசதிகளை ஏற்கனவே அனுபவித்து வருகிறது.

APSC-க்கும், ஊடகங்களுக்கும் நிர்வாகம் கொடுத்த திரிக்கப்பட்ட அறிக்கைகள், மாணவர் விவகாரங்களுக்கான குழுவின் சட்டவிரோத நடத்தை இவற்றின் காரணமாக உங்கள் வாய்வழி உறுதிமொழிகளின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். எனவே, APSC அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெறுவது தொடர்பாகவும், “பிரிவு 19a-க்கு எதிரான ஜனநாயக விரோத நன்னடத்தை விதியை ரத்து செய்தல்” “அனைத்து சுதந்திரமான மாணவர் அமைப்புகளையும் அதிகாரபூர்வமாக அங்கீகரி” (அதாவது, மாணவர் அமைப்புகளில் “அங்கீகரிக்கப்படாதவை”, “அங்கீகரிக்கப்பட்டவை” என்ற எந்த வகை பிரித்தலும் இருக்கக் கூடாது) ஆகிய கோரிக்கைகளை மாணவர் அவையில் நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஐ.ஐ.டி.எம்-ன் எழுத்து பூர்வமான அதிகார பூர்வ அறிக்கையை நாங்கள் கோருகிறோம்.

வணக்கத்துடன்,

APSC குழு

APSC-க்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முழக்கங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]