Saturday, May 3, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விநடந்தாய் வாழி கல்லூரி !

நடந்தாய் வாழி கல்லூரி !

-

நடந்தாய் வாழி கல்லூரி!
( குடந்தை அரசுக்கல்லூரியின் கவின்மிகு நாட்கள்…)

கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி
வேப்பமரம், வேங்கை மரம் அரசமரம், செம்பருத்தி- என அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள் தாண்டியும் எங்களுக்கு அங்கங்கே வகுப்புகள் உண்டு.

ன்று நினைத்தாலும் புத்துணர்ச்சி
எங்கள் அரசுக் கல்லூரி – அதனோடு
தொன்று தொட்ட உறவாய்
தொட்டு உரசி விளையாடும் காவிரி!

மேட்டூர் இதழ் விரிய
கல்லணை சொற் கூட்டும்
கல்லூரி பாலம் வந்து
காவிரி கவி பாடும்.

அரசினர் ஆடவர் கல்லூரியின்
அரும்பு மீசையாய்
எழும்பியிருக்கும் பாலம்- அது
வேறு மாதிரியும் தோன்றும்,
விருப்பமில்லா தடுப்புகளையும்
வேண்டாத குப்பைகளையும்
தாண்டி வந்த பொன்னி நதியின்
போராட்ட நெளிவு சுளிவு
புன்னகையின் நீர் நிழலாய்
நீண்டிருக்கும் அந்தப் பாலம்

காற்று கன்னம் கிள்ள
வரிவரியாய் கூசும் நதி முகம்
நேற்றுப் பார்த்ததுதான் என்றில்லை
நித்தம் கரைப்பூக்களில் பல புதுமுகம்

கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி
“மேட்டூர் இதழ் விரிய கல்லணை சொற் கூட்டும் கல்லூரி பாலம் வந்து காவிரி கவி பாடும்.”

துணி துவைக்கும் பெண்ணின்
தூரத்து மூச்சொலியில் வல்லோசை
வாங்கிப்பாடுவது போல் நீரலையில் மிதந்து வரும்
தனிக் குயிலின் மெல்லோசை…
இடை இடையே நீர்ச்சுழியில் பார்வை அலசி
துள்ளிக் குதிக்கும் மாணவரின் இடையோசை..
மொழி இலக்கணத்தை
வழியிலேயே கற்றுத்தரும் ஆறு … எங்கள்
அரசுக் கல்லுரி அன்றி
யாருக்கு வாய்க்கும் இந்தப் பேறு!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு
இந்த இயற்கையை சுவாசித்தவரின்
நுரையீரல் போல்,
பாலம் கடந்து அடி வைத்தால்
நுழைவாயில் கூடம்
ஈர நினைவுகளின்
காலக் குளிர்ச்சியாய்.

வேப்பமரம், வேங்கை மரம்
அரசமரம், செம்பருத்தி- என
அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள் தாண்டியும்
எங்களுக்கு
அங்கங்கே வகுப்புகள் உண்டு.
சேர்க்கை உத்திரவு இல்லாமலே
எல்லா வகுப்பறையிலும்
புகுந்து வரும் பொன் வண்டு.

கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி
இன்று நினைத்தாலும்…எங்கள் உணர்வுடன் பிணைந்தது கல்லூரி எங்கள் உயிருடன் பாய்ந்தது காவிரி அனைத்துக்கும் இனிமை அரசுக் கல்லூரி!

பல்லுயிரும் பயிலும்
எங்கள் அரசுக்கல்லூரி
செத்துப்போன உணர்ச்சி – அங்கே
சிற்றெறும்புக்கும் இல்லை!
பாடம் நடத்தையில் பாடம் ஆகாமல்
கூடகூட கேள்வி கேட்கும் பச்சைக்கிளி
சாமி தியாகராஜன்
சங்க இலக்கியம் நடத்துகையில்
ஜன்னலோரம்
எட்டிப்பார்க்கும் வெட்டுக்கிளி

ஷேக்ஸ்பியர் பாடத்தை
நடத்தும் அழகில்
ஆங்கிலத்துறை பக்கம்
ஓடும் அணிலும்
சிலிர்த்து தலையாட்டி ரசிக்கும்

கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி
“ஆற்றின் அழகு ஊரை அழகாக்கும் உன் அகத்தின் அழகு உலகை அழகாக்கும்”

எங்கள் தாவரவியல் பேராசிரி்யரின்
தெளிவான விளக்கத்தில்
திறமான விவரணையில்
காம்பை மறந்து
வகுப்பறைக்கு பறந்துவரும் அரச இலை.

“பணவேட்டைக்காக படிக்காதே
பகுத்தறிவுக்காக படி – முழு
சமுதாயத்துக்காகவும் துடி…
பார் பெரியார்.. அம்பேத்கர்..
பகத்சிங்… ” என்று

பேராசிரியர் செல்வராஜ்
பேசிய கனீர் குரல்
காற்று வெளியிடை
இன்றும் ஒலிக்குது!

நிமிர்ந்துநில்.. நேர்பட பேசு
ஆற்றின் அழகு ஊரை அழகாக்கும்
உன் அகத்தின் அழகு உலகை அழகாக்கும்
அழகை ரசித்து வாழ்.. இன்னும்
பாடங்கள் தாண்டி வகுப்பறையில்
மதிப்புக்குரிய மது. ச. விமலானந்தம்
வழங்கிய வாழ்க்கை கண்ணோட்டம்
அரசுக் கல்லூரியின் அழகியல் தோட்டம்.

“படித்தால் மட்டும்
போதுமா?
வா.. வாரம் ஒரு முறை
ஊரைச்சுற்றுவோம்” என
மிதிவண்டி பயணம் தூண்டி
எங்களுக்கு
வெளி உலகில் வகுப்பெடுத்த
பேராசிரியர் பொன்.முத்தையன்
அழியா ஒவியம்…

கலை, அறிவியல்
விளையாட்டு மட்டுமா – சமூக
நிலை பற்றியும் நெஞ்சில் தைக்க
பேசிய பேராசிரியர்கள் பலர்,
“இதோ.. எவர்சில்வர் பட்டறை
தொழிலாளியின் மகன்..
இதோ.. நெசவாளி வீட்டுப்
பையன் இவன்…
இதோ.. கூலி விவசாயின்
மகன்…
பல வழி வந்த
சிறு நதி நீங்கள்
ஒரு வழி ஆனால் கடலின் பலம் “.. என
பாடத்தின் ஊடே
ஒன்றுபடுத்திய உணர்ச்சிகள்
அரசுக்கலூரியின் பயிற்சிகள்

சாதிய மனம் அசிங்கம்
சமத்துவ மனமே அழகு என
பாடத்திற்கு வெளியேயும்
ஊட்டி வளர்த்த குரல்கள்
சம்பளத்தில் கரையாத உயிர்கள்!

அதனால்தான்.. அங்கே
எங்கள் ஆசிரியர்கள்
நடக்கும் பாதையில்
நதிக்கரையோரம்
நாகரீகம் கற்றதற்காய்
நாணல்கள் வணங்கும்
காவிரிக் கெண்டையும்
எங்களுடன் கலந்து மகிழும்
அவர் கண்களில் உலவ விரும்பும்.

அனைத்தும் தந்தது
அரசுக் கல்லூரி…
மறுமுனை ஓட முடியாமல்
ஓணான் மூச்சிரைக்கும்
எதிர்முனை இழுக்கும்…
மலர் தெரியாமல்
வண்ணத்துப் பூச்சி
வழி மயங்கும்..
அவ்வளவு பெரிய
விளையாட்டுத் திடல்
எங்கள் அரசுக்கல்லூரியிலேயே
உண்டு

எங்கள்
கால்கள் விளையாடாத போது
காற்று விளையாடும்
வாரி இறைக்கும்
சிறு மண் தூசியில்
பூக்களின் மணம் கூடும்

கல்லூரிக்குள்ளேயே
பொய்கை ஒன்று
அல்லியும், தாமரையும்
அருகருகே உண்டு
குளத்தருகே புன்னைமரம்
காணும் மனங்களில்
கற்பனை பல ஊறும்.

மதிய உணவு
வாய்க்காத வயிறுக்கு
இலந்தை மரம்
சோறு போடும்.
மாநிலத்தே சமூக நிகழ்வுகள்
மரம் போல் நிற்காதே போராடு
என தேக்கு மரம் ஆணையிடும்!

தாவரவியலின்
செய்முறை ஏட்டுக்கு
ஊர் உலகெங்கும் அலையவிடாமல்
தன்னையே தரும்
கல்லூரி வளாகத் தாவரங்கள்
உயிரியலின் செய்முறைக்கு
உயிரையே தரும்
விடுதி எலிகள்.

இயற்பியல் சமன்பாட்டை
இயல்பாக கற்றுத்தந்த
கல்லூரிக்கு அருகேயிருக்கும்
பாலக்கரை காய் கனிச் சந்தையின்
படிக்காத சுமை தூக்கும் தொழிலாளிகள்.

கல்வி மறுக்கப்பட்ட
ஒரு தலைமுறையிருந்து
கூட்டம் கூட்டமாக படிக்கப்போகும்
மாணவர் குழாமின் மகிழ்ச்சி பார்த்து
பக்தபுரி அக்கிரகாரத்து
பார்வையில் சுரக்கும் அமிலம்
எங்கள் வேதியியல் ஆய்வுக்கு உதவும்

கல்வியாண்டு முடியும் தருணம்
மெல்ல மெல்ல சிறகுள் முறியும்
திசைகள் வேறாய் பிரியும் வேளை
ஆற்றுப்படுத்த முடியாமல்
ஊற்றுக்கண்ணால்
காவிரியும் அழும்
எங்கள்
அந்த கால உயிரோட்டம்
அரசுக் கல்லூரியின்
புதிய தலைமுறையில் எழும்!

இன்று நினைத்தாலும்…
எங்கள் உணர்வுடன்
பிணைந்தது கல்லூரி
எங்கள் உயிருடன்
பாய்ந்தது காவிரி
அனைத்துக்கும் இனிமை
அரசுக் கல்லூரி!

பல் வகைப் பூக்கள்
அரசுக் கல்லூரிகள் – வெறும்
பாப்கார்ன் தெறிப்புகள்
தனியார் கல்லூரிகள்.

செல்லக்கிளிகளின்
இயல் மொழி அரசுக்கல்லூரி
செதுக்கிய உதடுகளின்
மரப்பாச்சி தனியார் கல்லூரி

அரசுக் கல்லூரிச் சூழலே
அனைத்தையும் வாழவைக்கும் பல கலைகள்..
தனியார் கல்லூரியோ
தாங்க முடியாத தற்கொலைகள்..

சுடு காட்டில் படிப்பெதற்கு?
வாழும் இனிமை வேண்டுமா
வா.. அரசுக்கல்லூரி இருக்கு
இந்தச் சூழலை அமைக்காத
அரசாங்கத்தை ‘இறுக்கு’!

– துரை. சண்முகம்

( கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத் தூண்டினால் {கட்டுரைகளாய் – வினவு} மகிழ்ச்சி!)