privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்எச்சரிக்கை : இந்திய ரயில்வே இனி மக்களுக்கில்லை

எச்சரிக்கை : இந்திய ரயில்வே இனி மக்களுக்கில்லை

-

ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும் பேருந்து கட்டணம் எக்கச்சக்கமாக எகிறியது. அதுவரை 600 ரூபாயாக இருந்த மாதாந்திர பயண அட்டை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இனி பேருந்தில் பயணிக்கவே முடியாது என்று லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்திற்கு மாறினர். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் மக்கள் பெரிதும் நம்பியிருப்பது ரயில்களைத் தான். அனைத்து ரயில்களிலும் நான்கு பெட்டிகள் தான் பொதுப்பெட்டிகளாக இணைக்கப்பட்டாலும் நூற்றுக்கணக்கானவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு பயணிக்கின்றனர். மோடி ஆட்சியின் கீழ் இனிமேல் அதற்கும் வழியில்லை.

ஐ.சி.எஃப்
சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தற்போது ஐம்பதாயிரமாவது பெட்டியை தயாரித்துள்ளது.

ரயில்களுக்கான பெட்டிகளையும், இன்ஜின்களையும் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களே தயாரித்து வருகின்றன. சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தற்போது ஐம்பதாயிரமாவது பெட்டியை தயாரித்துள்ளது. ஆனால் தற்போது ரயில்களுக்கான பெட்டிகளையும், இன்ஜின்களையும் தயாரிக்க 2,500 கோடி ரூபாயை கொட்டி 15 ரயில் ஷெட்டுகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கவிருக்கிறது மோடி அரசு. இவற்றை வாங்குவதோடு ஏழு ஆண்டுகளுக்கு அவற்றின் முழு பராமரிப்பையும் வாங்கிய தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைக்கவிருக்கிறது. இதற்காக விரைவில் உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட இருக்கிறது.

12,617 பயணிகள் ரயில்கள், 7,421 சரக்கு ரயில்கள், 7,172 ரயில் நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ ரயில் பாதை, 13 லட்சம் ஊழியர்கள் என்று உலகிலேயே மிகப்பிரம்மாண்டமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் இந்திய ரயில்வே. இந்திய ரயில்களில் தினமும் 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர். தனியார் முதலாளிகளுக்கு நிலம், நீர், மின்சாரம், வரிச்சலுகை, பல ஆயிரம் கோடி கடன்கள் என்று வாரி வழங்கும் அரசு, பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை கை தூக்கிவிடாமல் எட்டி உதைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது, இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.

விவேக் தேவ்ராய்
மத்திய கொள்கைக் குழுவின் உறுப்பினரும், உலகமயமாக்கலுக்கு ஆதரவான பொருளாதாரவாதியும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவ்ராய்.

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறதாம். இவ்வாறு கடனிலும் நட்டத்திலும் இயங்கும் ரயில்வே துறையை மேம்படுத்துவது பற்றி ஆராய்வது என்கிற பெயரில், மத்திய கொள்கைக் குழுவின் உறுப்பினரும், உலகமயமாக்கலுக்கு ஆதரவான பொருளாதாரவாதியும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவ்ராய் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை நியமித்தார் மோடி. உடனே சுறுசுறுப்பாக ‘ஆய்வு’ மேற்கொண்ட குழு தனது பரிந்துரைகளை 300 பக்க அறிக்கையாக மார்ச் மாதம் அளித்தது.

அந்த அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வே துறையை முழுமையாக ‘மேம்படுத்துவதற்கான’ ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறது.. மேம்படுத்துவது என்றால் தனியார்மயமாக்குவது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன ?

  • ரயில்வே மண்டலங்கள் ஒவ்வொன்றின் கணக்குகளையும் தனித்தனியே நிர்வகிக்க வேண்டும்.
  • மண்டல பொது மேலாளர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அதிகாரமளிக்க வேண்டும்.
  • ரயில் பெட்டிகள், இன்ஜின்களை பராமரிக்க தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும்.
  • பயணிகள் ரயிலை தனியார்மயமாக்குவதற்கு முன்னோட்டமாக சரக்குப் போக்குவரத்தை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • ரயில்வே துறைக்கு தனி அமைச்சகம், தனி பட்ஜெட் தேவையில்லை.
  • ரயில்வேயை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்து விட வேண்டும்.

 

  • ரயில்வே துறையை உள்கட்டமைப்புக் கழகம், போக்குவரத்துக் கழகம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். உள்கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக்க வேண்டும்.
  • உள்கட்டமைப்புக்குள் எவை எல்லாம் அடங்கும்? தண்டவாளங்கள் போடுவது, ரயில் நிலையங்களைப் பராமரிப்பது, சிக்னல்களை பார்த்துக் கொள்வது போன்றவை மட்டும் இதில் அடங்கும்.
  • போக்குவரத்துக் கழகத்தை தனியார் நிர்வகிக்க வேண்டும்.

அதாவது ரயில் நிலையத்தை அரசாங்கம் நிர்வகித்து பராமரித்துக் கொள்ள வேண்டும். அதில் தனியார் முதலாளிகள் ரயில்களை இயக்குவார்கள். அதாவது விமான நிலையங்கள் போல.

ரயில்வே மருத்துவமனை
இப்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
  • புறநகர் ரயில்கள் போன்ற நட்டம் ஏற்படுத்தும் ரயில்களை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட வேண்டும். அல்லது, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இயக்கலாம். அல்லது அதையும் தனியாரிடமே ஒப்படைத்து விடலாம்.
  • இப்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, ரயில் போக்குவரத்தில் மட்டுமே ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும்.
  • கட்டணம் நிர்ணயிப்பதில் அரசு தலையிடக்கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • ஓய்வுபெறும் ஊழியர்கள் மற்றும் பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட நிதியை பணமாகத் தராமல், புல்லட் பாண்ட்டாக – ஒருவகையான நிதி பத்திரம் – தரவேண்டும். (இதை 30 ஆண்டுகள் கழித்து தான் பணமாக்க முடியும்).
  • தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும், கட்டணத்தைக் கண்காணிக்கவும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
  • அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது

என்பது போன்ற கொடூரமான பரிந்துரைகளை, அவற்றை அமுல்படுத்துவதற்கான கால இலக்குடன் வழங்கியிருக்கிறது இக்குழு.

ரயில்வே தனியார்மயம்
குழுவின் பரிந்துரைகள் வெளியாகி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்ததும் மோடியும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்களைப் போல போகும் இடமெல்லாம் மழுப்பினர்.

இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்ததும் மோடியும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்களைப் போல போகும் இடமெல்லாம் மழுப்பினர். “நிதி திரட்டுவது தான் நோக்கமே தவிர, எந்த நிலையிலும் ரயில்வே துறை தனியார்மயமாகாது” என்றார் சுரேஷ் பிரபு.

பொய்யிலும் ஆங்காங்கே உண்மைகள் தூவி சதுரங்கவேட்டை நாயகன் போல பேசுவதில் மோடியை மிஞ்ச யாருமே இருக்க முடியாது. அவ்வாறு, வாரணாசியில் செய்தியாளர்களிடமும், ரயில்வே தொழிற்சங்கத்தினரிடமும் பேசிய போது மோடி கூறினார்.

“ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் ஒரு போதும் இல்லை, இதில் அன்னிய நேரடி முதலீடு பற்றி கவலைப்படத் தேவையில்லை. அன்னிய நேரடி முதலீடு ரயில்வேயின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்” என்றும், “இந்த அந்நிய நேரடி முதலீடு தான், ரயில்வே துறையில் தனியார்மயம் கொண்டுவரப்படுகிறது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்றும், “கடந்த 60 ஆண்டுகளில் காணாத அளவுக்கு ரயில்வே துறையில் வளர்ச்சியை காண விரும்புகிறேன். ரயில்வேயை போக்குவரத்துக்கான கருவியாக மட்டும் நான் பார்க்கவில்லை. அதை நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் துறையாக மாற்ற விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

மோடி - ஒபாமா
அந்நிய முதலீடு, மாற்றம், வளர்ச்சி, சீர்திருத்தம், நவீனமயம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் ஏகாதிபத்தியதாசர்களின் அகராதியில் ஒரே பொருள் தான்.

அந்நிய முதலீடு, மாற்றம், வளர்ச்சி, சீர்திருத்தம், நவீனமயம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் ஏகாதிபத்தியதாசர்களின் அகராதியில் ஒரே பொருள் தான். அரசு துறைகளை தனியார்மயமாக்குவது, தூக்கிக் கொடுப்பது, ஊத்திமூடுவது என்பது தான் அதன் பொருள். உண்மையை மூடிமறைக்க புத்திசாலி போல பேசுவதாக நினைத்துக்கொண்டு, மோடி அவிழ்த்துவிட்டிருக்கும் அனைத்தும் ரயில்வேயை தனியார்மயமாக்கத்தான் போகிறோம் என்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றன.

ஜெயலலிதா மற்றும் மோடியின் அடிமைகளில் சிறந்த அடிமையாகவும், ஊடக ஜால்ராவாகவும் இருந்து வரும் தினமணி வைத்தி ‘மாற்றம் அவசியம்’ என்கிற பெயரில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். “ரயில்வேயை தனியார்மயமாக்குவது மக்கள் விரோத போக்கல்ல, ரயில்வேயில் நடக்கவிருக்கும் மாற்றங்களை முடக்க முயற்சிப்பது தான் மக்கள் விரோதப் போக்கு” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “விவேக் தேவ்ராய் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும் பகுதியை அப்படியே நிறைவேற்றினால் தான் ரயில்வே துறை பிழைக்கும்” என்றும், “இக்குழுவின் பரிந்துரைகள் ரயில்வே துறையை தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறவில்லை. ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று தான் பரிந்துரைத்திருக்கிறது” என்றும் அக்குழுவின் அறிக்கைக்கும், தனியார்மயத்திற்கும் புதிய விளக்கமளித்திருக்கிறார் வைத்தி மாமா.

ரயில்வேயில் தனியார்மயம் என்பது தற்போதே அமுலில் தான் இருக்கிறது. ரயில்களை சுத்தப்படுத்துவது, உணவு சமைத்து பரிமாறுவது, குளிர்சாதனப் பெட்டிகளில் கம்பளிப் போர்வை வழங்குவது, ரயில் நிலையங்களில் கழிவறைகளை பராமரிப்பது ஆகியவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தனியாரின் கைகளால் சுத்தப்படுத்தப்பட்டு வரும் ரயில்கள் என்ன லட்சணத்தில் இருக்கின்றன, கழிவறைகள் எப்படி இருக்கின்றன, கேட்டரிங் எப்படியிருக்கிறது என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். மட்டுமின்றி இவற்றில் எல்லாம் வரையமுறையின்றி கட்டணக் கொள்ளையும் அடிக்கப்படுகின்றன.

இங்கிலாந்து ரயில்வே
1990 களில் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு

தினமணி வைத்தி உட்பட பல அறிவாளிகளும் ரயில்வேயை தனியார்மயமாக்குவது அவசியம், தனியார்மயமானால் தான் சேவைத்தரம் உயரும், வசதிகள் பெருகும் என்று வாதிடுகின்றனர். பல செய்தி ஊடகங்கள் இதற்காகவே பிரச்சார இயக்கம் நடத்தி வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் ஐரோப்பாவில் உள்ள  ஒரு ரயில் நிலையத்தையும் காட்டி உங்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் போல வேண்டுமா, அல்லது இந்த மாதிரி வேண்டுமா என்று கேட்கின்றன.

இவர்கள் விருப்பப்படி ரயில்வே துறையில் தனியார் முதலாளிகளை அனுமதித்தால்

  • தற்போது இயக்கப்படும் பல தடங்களில் ரயில்கள் நிறுத்தப்படும்.
  • வருமானம் அதிகமுள்ள பெருநகரங்களுக்கு மட்டும் அதிக சேவை இருக்கும். அதிலும் கட்டணம் பல மடங்கு உயரும்.
  • சிறு நகரங்களுக்கோ, ஊரகப் பகுதிகளுக்கோ போகும் ரயில்களும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் ஒழிக்கப்படும்.
  • தொழிலாளர்கள் குறைக்கப்படுவார்கள். ஒப்பந்த சேவை அடிப்படையில் தொழிலாளிகள் இருப்பார்கள். அவர்கள் கசக்கி பிழிந்து வேலை வாங்கப்படுவார்கள். பாதுகாப்பு உணர்வு அதிகம் தேவைப்படும் ரயில்வேயில் அது குறையும்.
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவ்வப்போது தீர்மானிக்கப்படுவது போல கட்டணங்களும் சீசனுக்கேற்ப, கிராக்கிக்கேற்ப தீர்மானிக்கப்படும். இதனால் காசுள்ளவருக்கே உடன் சேவை என்று ரயில்வே துறை மாற்றியமைக்கப்படும்.

ஒரு பொதுத்துறை தனியார் மயமானால் என்ன தீமை?

இந்தியாவில் உள்ள எந்த குக்கிராமத்திற்கு இணைப்பு கேட்டாலும் பி.எஸ்.என்.எல் வழங்கும். ஆனால் டாடாவோ, அம்பானியோ, அவ்வாறு வழங்குவதில்லை. அதே போல இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அடிக்கட்டுமானங்களை பயன்படுத்திக்கொண்டு தான் இன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. டிராயிடமிருந்து அலைக்கற்றைகளை பெற்று சேவை வழங்குவதற்கு பதிலாக, அவற்றை பல நாட்கள் கையில் வைத்துக்கொண்டு பிற நிறுவனங்களிடம் பேரம் பேசி எப்படி கொளையடித்தனவோ அப்படி கொள்ளையடிக்கும் துறையாக ரயில்வேயும் மாறிவிடும்

இதற்கு சிறந்த உதாரணம் இங்கிலாந்து ரயில்வே. 1990 களில் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு. 2013-ம் ஆண்டு Centre for Research on Socio-Cultural Change (CRESC) என்கிற குழு “ரயில்வேயை தனியார்மயமாக்கியதால் கிடைத்த நன்மை என்ன” என்கிற ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் இறுதியில் தொகுக்கப்பட்ட  அறிக்கைக்கு “ஒரு மாபெரும் ரயில் கொள்ளை-ரயில்வே தனியார்மயத்திற்கு பிறகு” என்று அவர்கள் பெயரிட்டனர்.

இந்திய ரயில்வேயை கொள்ளையடிப்பதற்காக மோடி நிபுணர் குழு அமைத்தார், நிபுணர்களும் கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட்டனர். அடுத்து, கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும். இங்கிலாந்து ரயில்வேயில் என்ன நடந்ததோ அது தான் இந்தியன் ரயில்வேயிலும் நடக்கப்போகிறது. துவங்குவதற்கு முன்பே முடிவு தெரிந்துவிட்டது, நாம் என்ன செய்யப்போகிறோம் ?

– வையவன்

மேலும் விபரங்களுக்கு