ஐ.பி.எல் முறைகேடுகள் வெளியானதையடுத்து இந்தியாவை விட்டு ’பாதுகாப்புக்’ காரணங்களுக்காக ஓடிப் போன லலித்மோடியை இந்திய புலனாய்வு அமைப்புகள் துரத்துவது போல பாசாங்கு செய்தன. அவரைக் கைது செய்து தண்டிப்பது என்பது ஒரு பிரிவு முதலாளிகளோடு முடியக்கூடிய ஒன்றல்ல. அதனால் உளவு அமைப்புகளின் உண்மையான நோக்கம் மோடி மீண்டும் இந்தியா வரக்கூடாது என்பதே.

இதை மோடியின் எதிர் கோஷ்டியான சீனிவாசன் – ஜேட்லி கும்பல் உத்திரவாதம் செய்து கொண்டது. ப.சிதம்பரம் தனிப்பட்ட முறையில் அருண் ஜேட்லியின் நண்பராக இருந்ததாலும், காங்கிரசு லலித் மோடியால் சசி தரூர் விவகாரத்தில் விரலைச் சுட்டுக் கொண்ட ஆத்திரத்தில் இருந்தது. இதைத்தாண்டி அரசாங்கத்தின் அத்தனை கரங்களும் லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர எல்லா முயற்சிகளையும் எடுத்து வந்தன. இதுதான் மோடி குறித்த திருடன் – போலீஸ் விளையாட்டின் போக்கு.
லலித் மோடி ஒன்றும் சாதாரண பேருந்து பிக்பாக்கெட் திருடனில்லை என்பதால், அமலாக்கத்துறை உள்ளிட்டு இந்தியாவின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை லண்டனில் இருந்தவாறே ’திறமையாக’ எதிர் கொண்டார். இந்த இழுபறி போட்டியில் ஒரு திருப்பமாக லலித் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி லலித் மோடியுடனான தனது வெளிப்படையான தொடர்புகளை மழுப்பத் துவங்கிய சமயத்தில் 2013-ம் ஆண்டு ஜெய்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாரதிய ஜனதாவின் அப்போதைய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமனிடம் லலித் மோடிக்கும் கட்சிக்கும் உள்ள கள்ளத் தொடர்புகள் பற்றிய கேள்விகளுக்கு ஆத்திரத்தோடு பதிலளித்தார் –
“யார் இந்த லலித் மோடி? அவர் ஒரு தலைமறைவுக் குற்றவாளி. அவரோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை”

சரியாக ஒருவருடம் கழித்து 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மினாளினி மோடியின் கல்லீரல் புற்று நோய் சிகிச்சைக்காக லண்டனில் இருந்து போர்ச்சுகல் நாட்டில் உள்ள சம்பாலிமோடு மருத்துவ ஆராச்சி மையத்திற்கு லலித் மோடி சென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் தான் சுஷ்மா சுவராஜின் தாயுள்ளம் விழித்துக் கொள்கிறது. லலித் மோடியின் பாஸ்போர்ட்டை 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முடக்கிய முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இங்கிலாந்து அரசு அவருக்கு பயண ஆவணங்கள் எதுவும் வழங்கக் கூடாதென்றும், அப்படி வழங்கினால் அது இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்திய அரசால் விசாரணைக்காக தேடப்படும் ஒரு நபரின் பயண ஆவணங்களுக்காக இங்கிலாந்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதிய சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்கிற பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சுஷ்மா சுவராஜின் மனிதாபிமானம் வெட்டியாக பொங்கவில்லை.

சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுஷால் லலித் மோடியின் நெருங்கிய நண்பர். மைனர் முதலாளியான லலித் மோடியின் திருவிளையாடல் காரணமாக எழும் சட்டப் பிரச்சினைகளை சுமார் 22 ஆண்டுகளாக கவுஷால் தான் கவனித்து வந்தார். சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் 7 ஆண்டுகளாக லலித்மோடியின் சட்ட ஆலோசகராக செயல்பட்டுள்ளார். ராஜ்தீப் சர்தேசாயிடம் லலித் மோடி வழங்கியுள்ள பேட்டியில், இவர்கள் இருவரும் தன்னிடம் காசு வாங்காமல் இலவச சட்ட ஆலோசனை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
நட்பினடிப்படையில் ’இலவச’ சட்ட ஆலோசனை – அதுவும் யாருக்கு? பாரதிய ஜனதாவே ‘தேடப்படும்’ குற்றவாளி என்று அறிவித்த ஒருவருக்கு – வழங்கிய தந்தையும் மகளும் சாதாரணர்கள் அல்ல. தில்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகளில் தலையைக் காட்ட மணிக்கு சில லட்சங்களை வாங்கும் வக்கீல்கள். இதற்கு முன் யாருக்கும் ‘நட்பின்’ அடிப்படையிலோ மனிதாபிமானத்தின் அடிப்படையிலோ இலவசமாக சட்ட சேவை செய்த வரலாறும் இல்லை.
எனவே இவர்களுக்குள் உள்ள மறைமுகமான வியாபாரத் தொடர்புகள், சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இன்ன பிற விசயங்களை சம்பந்தப்பட்டவர்களே வாயைத் திறந்து சொன்னால் தான் மக்கள் அறிந்து கொள்ள முடியும். நடப்பது பாரதிய ஜனதாவின் ஆட்சி என்பதால், வழக்கு விசாரணை என்பதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்றாலும், பத்திரிகைகள் துருவியதில், சுஷ்மா சுவராஜின் கணவர் கவுஷாலின் உறவினர் லண்டனில் மேற்படிப்பு படிக்க லலித்மோடி உதவி செய்துள்ள விவரம் மட்டும் கிடைத்துள்ளது.
விவகாரம் வெடித்து அம்பலமானதும் வசுந்தராவுக்கும் சுஷ்மாவுக்கும் எதிராக இருந்த உட்கட்சி கோஷ்டிகள் துவக்கத்தில் கொஞ்சம் சலம்பிப் பார்த்தனர். எனினும், கட்சித் தலைமை உறுதியாக இவர்கள் இருவரின் பக்கமே நிற்பதைக் கண்டு தற்போது வாயடைத்துக் கிடக்கின்றனர். வசுந்தராவை நேரில் சந்திக்கச் சென்ற நிதின் கட்காரி, அவருக்கு தமது கட்சி வழங்கியுள்ள உறுதியான ஆதரவை நேரில் தெரிவிக்கவே வந்ததாகவும், பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

லலித்மோடி விவகாரம் குறித்து பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “ஊழல் புகார்களுக்காக பதவி விலக நாங்கள் ஒன்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இல்லை, நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியாக்கும்” என்று கொக்கரித்துள்ளார்.
ஊழல் அற்ற அரசாங்கத்தை வழங்குவதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்த ஒரு கட்சி இப்படிச் செய்வது முறையா என்று முதலாளித்துவ பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன. வசுந்தரா ராஜேவுக்கும் சுஷ்மா சுவராஜுக்கும் எதிராக கட்சியில் உள்ள கோஷ்டிகள் எவையெவை, அவற்றில் யாரெல்லாம் உள்ளனர், அவர்களின் கூட்டணிப் பலாபலன்கள் என்னவென்பதைப் பீறாய்ந்து இவர்களிருவருக்கும் எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும், எப்போது எடுக்கப்படும் என்று கணிப்புகளை முன்வைத்து வருகின்றன.
மொத்த விவகாரத்தின் பின்னும் உள்ள அரசியல் சீரழிவையும், ஓட்டாண்டித்தனத்தையும் மறந்து விட்டு வெறுமனே இதில் உள்ள கிசுகிசு கிச்சன் கேபினெட் அரசியல் உள்குத்தை விளையாட்டாக சுருக்கும் மானங்கெட்ட வேலையில் முதலாளித்துவ பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன. எந்தவொரு ஊழல் முறைகேட்டு புகார்கள் மற்றும் அது வெளியாவதை ஒட்டி எழும் பரபரப்புகள் இந்தவிதமாக பரிலீக்கப்பட்டு அவற்றின் ஆயுட்காலம் ஒரு சில நாட்களோ ஒரு சில வாரங்களோ தான் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள பாரதிய ஜனதா மேல்மட்டத் தலைவர்கள், தெனவெட்டாக பேட்டியளித்துக் கொண்டுள்ளனர்.

பத்திரிகையில் எழுதும் அறிஞர் பெருமக்கள் “இவ்வளவுக்கும் தூய்மையான நிர்வாகத்தை அளிக்கப் போவதாக வாக்களித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று மிகவும் ’சிக்கலான’ கேள்வி ஒன்றை எழுப்பி தங்களது அரசியல் ‘ஆராய்ச்சிக் கட்டுரைகளை’ நிறைவு செய்கின்றனர். ந.மோடி இதற்கு எப்போதோ பதிலளித்து விட்டார். அந்த பதிலின் அர்த்தம் விளங்காதவர்கள், ந.மோடியின் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் அவரை நிழலாகத் தொடரும் கவுதம் அதானியிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம். தவிர லலித்மோடி ஐ.பி.எல் சர்க்கசை நடத்தி கல்லா கட்டிக் கொண்டிருந்த போது அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத குஜராத் மாநில கிரிக்கெட் வாரியத்தின் அப்போதைய தலைவரே நரேந்திர மோடி தான்.
குஜராத்தின் முதல்வராக இருந்தவரை அம்மாநிலத்தை அதானி குழுமத்தின் லாப வேட்டைக்கு திறந்து விட்டவர் நரேந்திர மோடி. தற்போது பிரதமராக வெளிநாடுகளில் அதானி குழுமத்தின் விற்பனைப் பிரதிநிதியாக செயல்பட்டு வருவது முதலாளித்துவ ஊடகங்கள் அறியாத இரகசியமல்ல. அதே போல் முகேஷ் அம்பானி சன் தொலைக்காட்சியைக் கைப்பற்ற ராஜ்நாத் சிங் தீயாக வேலை செய்து வருவதும், அதற்காகவே சன் குழுமத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய தடையில்லாச் சான்றிதழை தடுத்து வைத்திருப்பதும் தொடர்பான விவரங்கள் சமீபத்தில் தான் ஊடகங்களில் வெளியாயின.
சட்டம், நீதி, நெறிமுறைகள் என்று சகலத்தையும் கிடைமட்டமாக கிடத்தி அவற்றின் மேல் மூத்திரம் பெய்துள்ளார் லலித்மோடி. அரசாங்க மட்டத்தில் தமக்குள்ள தொடர்புகளின் பலத்தைப் பொருத்து ஒவ்வொரு முதலளித்துவ கார்ட்டல்களும் சிண்டிகேட்டுகளும் குடிமைச் சமூகத்தின் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு அற மதிப்பீடுகளையும் வல்லுறவுக்கு உட்படுத்தி வருகின்றன. முதலாளிகளின் சமூகத்தின் உள்ளேயே இருக்கும் வெவ்வேறு கும்பல்களின் நலனுக்காக, அந்த கும்பல்களின் ஆதரவு பெற்ற அரசியல் தரகர்கள் நடத்தும் ஆபாசக் கூத்து தான் இந்திய ஓட்டுக் கட்சி அரசியலின் தராதரம் என்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.
ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கும் அரசியல்வாதிகள் முன்பெல்லாம் கொஞ்சம் வெட்க உணர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இன்றோ எந்த புகாரையும் துடைத்துப் போட்டு விட்டு எந்த கூச்ச நாச்சமும் இன்றி திமிருடன் திரிகின்றனர். திருட்டு என்றால் அது இருட்டில் தான் நடக்க வேண்டும் என்று இருந்த பழைய நியதியை பாரதிய ஜனதா உடைத்தெறிந்துள்ளது. ஓட்டுக்கட்சி அரசியலுக்கு இருந்ததாக சொல்லப்பட்ட ’புனிதம்’ இன்று திரை விலக்கி தனது பல்லைக் காட்டுகிறது. அரசின் ஒவ்வொரு துறையும் முதலாளிகளின் சிண்டிகேட்டுகளுக்கு சேவை செய்யத் தான் இருக்கிறதே ஒழிய அவற்றுக்கு மக்கள் நலனின் மயிரளவுக்கும் அக்கறை இல்லை என்பது மெய்பிக்கப்பட்டு விட்டது.
இதற்கு மேலும் ”பாரதிய ஜனதாவை நம்பி வாக்களித்த அப்பாவிகளே….” என்று கட்டுரையை நிறைவு செய்ய வேண்டிய தேவை காலாவதியாகி விட்டது. அந்த நம்பிக்கையின் மேல் நரகலைப் பூசி மொழுகி நாட்கள் பல கடந்து விட்டன. ஒருவேளை இதற்கு மேலும் அந்த அப்பாவிகள் மௌனத்தைக் கடைபிடிப்பீர்களாயின் அதன் பொருள் அப்பாவித்தனமல்ல – அயோக்கியத்தனம்!
– தமிழரசன்
முதல் பகுதி : மைனர் லலித் மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க