Wednesday, May 7, 2025
முகப்புசெய்திபென்னாகரம்: கல்லூரி முதல்வர் அநீதியை எதிர்த்த தோழர்களுக்கு சிறை

பென்னாகரம்: கல்லூரி முதல்வர் அநீதியை எதிர்த்த தோழர்களுக்கு சிறை

-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட பெரியார் பல்கலைக் கழக உறுப்பு அரசுக் கல்லூரியில் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் ஈகோ பிரின்சிபால் செல்வவினாயகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்த மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்த பு.மா.இ.மு தோழர்கள் மீது பொய் வழக்கு, கைது, சிறை!

பெரியார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி பென்னாகரம் வட்டத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தருமபுரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும், மலை கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். கிராமப்புற பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு முறையான பேருந்து வசதிகள் இல்லை. வருகின்ற ஓரிரு பேருந்துகளில் சிரமப்பட்டுதான் வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதில் 5 நிமிடம் தாமதமாக வரும் மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிப்பதில்லை. அனுமதிக்க வேண்டும் என்றால் பிரின்சிக்கு தண்டம் கட்ட வேண்டும் .

கல்லூரி விடுமுறை விடுத்தால் (ரூ 100) தண்டம் கட்ட வேண்டும். லீவு லட்டர் கொடுத்திருந்தால் (ரூ 50) கட்ட வேண்டும். இதை மீறினால் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

பெற்றோர்கள் வேட்டி அல்லது லுங்கி அணிந்து வந்தால் அந்த மாணவர்களை தனியே கூப்பிட்டு “நீங்க எந்த காலத்துலடா இருக்கிறீங்க, பேண்ட், சர்ட் போட்டுட்டு வரணும்னு தெரியாதா” என்று மாணவர்கள் தலை குனியும் படி பேசி திட்டி தீர்க்கிறார் செல்வவினாயகம்.

pennagaram-college-rsyf-noticeமதிய உணவு இடை வேளையில் மாணவர்களை சாப்பிடுவதற்கு கூட வெளியே விடுவதில்லை, தனியார் பள்ளி வளாகத்தை விட கேவலமாக நடத்துகிறார். குறிப்பாக மாணவிகள் கேட்டால் போதும், “நீங்கயெல்லாம் வீட்டில இருந்து சாப்பாடு செஞ்சி எடுத்து வராம, என்ன புடுங்குற வேலையை செய்றீங்க”, என்று ஆணாதிக்க கண்ணோட்டத்தோடு மாணவிகளை தலைகுனிந்து செல்லும் அளவிற்கு நடத்துகிறார். இதனால்,பெரும்பாலான மாணவ, மாணவிகள் பட்டினியோடுதான் பாடம் படிக்கின்றனர்.

இந்தப் பிரச்சனைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது மாணவர்கள் மத்தியில் கோபத்தீயாக இருந்து வந்தது.

சமீபத்தில் கல்லூரிக்கு வெளியே தங்கள் சொந்த பிரச்சனைக்காக இரு மாணவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக அம் மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் கல்லூரிக்கு சேர்த்து கொள்ள வேண்டுமென்றால் (ரூ 5000) கட்ட வேண்டும் என்றார்.

இது போன்ற பிரின்சினுடைய அடாவடி, முறைகேடு, பண வேட்டைக்கு எதிராக மாணவர்கள் (09-07-2015) அன்று காலை 9 மணி அளவில் கல்லூரிக்கு முன்பாக அணி திரண்டனர். இதற்கு ஆதரவாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

பதறி போன பிரின்சிபால், எச்.ஒ.டிக்களை அழைத்து “மார்க்கை குறைப்பேன்” என மிரட்டி மாணவர்களை கலைந்து போகச் செய்ய உத்தரவிட்டு கலைத்தார்.

“யார் போனாலும் பரவாயில்லை, நாங்கள் உறுதியாக இருப்போம்” என்று கூறி, தங்களுடைய உரிமைகளுக்காக முழக்கமிட்டனர், 5 மாணவர்கள். இந்த 5 மாணவர்களின் உறுதியை கலைக்க முடியாத பிரின்சி அடுத்த கட்டமாக, “உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமானாலும் என் கிட்ட சொல்லுங்க நான் செய்து தரேன்” என்று சமரசமாக பேசி உள்ளே அழைத்து சென்றார்.

உள்ளே சென்ற உடன், “எனக்கு எதிராகவே இப்படி பண்றீங்களா, மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களை கூப்பிட்டு வந்தா பிரச்சனை தீர்ந்திருமா” என்று 5 மாணவர்களையும், “இனிமே காலேஜ் பக்கம் வராதிங்க” என சொல்லி டிஸ்மிஸ் செய்து வெளியே அனுப்பினார்.

பிறகு, பு.மா.இ.மு தோழர்களை கூப்பிட்டு, “நீங்க ஒரு மனு எழுதி கொடுங்க நான் நடவடிக்கை எடுக்கிறேன்” என்று அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார் பிரின்சி.

சற்று நேரத்தில் பிரின்சியினுடைய தகவலின் பேரில் வந்த காக்கிச் சட்டைகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். என்ன நடந்தது என்று கூட விசாரிக்காத போலீசு எஸ்.பி.யினுடைய உத்தரவு என்று கூறி மனு எழுதி கொண்டியிருந்த பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் ராஜா வையும், மாரியாத்தாவையும் தர தர வென இழுத்து வந்து காக்கிகளுக்கே உரிய பாணியில் வேனில் ஏற்றினர்.

பிறகு கல்லூரிக்குள் அத்து மீறி நுழைந்ததாக கூறியும் பிரின்சிபாலை பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறியும் பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தது.

கல்லூரி வகுப்பறையில் கல்லூரி பாடத்தை விட்டு விட்டு, “இந்த மாணவர் அமைப்பெல்லாம் நக்சலைட்டுகள் உங்களை தவறான வழியில் கொண்டு போவார்கள். வாழ்க்கையே அவ்வளவுதான்” என்று சொல்லி பீதி ஊட்டி பாடம் எடுத்துள்ளார் பிரின்சி.

“மாணவர்களின் ஜனநாயக உரிமைக்களுக்காகதான் அவர்கள் வந்தார்கள், என்ன துப்பாக்கி எடுத்து சுடவா வந்தார்கள்” என்பதை உணர்ந்து கொண்ட மாணவர்கள் பிரின்சினுடைய அட்வைசை வகுப்பறையிலே பூட்டி விட்டனர்.

பிரின்சிபாலின் இந்த அடாவடித் தனத்திற்கு எதிராகவும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவர்களை நிபந்தனையின்றி சேர்த்துக் கொள்ளவும், பொய் வழக்கு பதியப்பட்டு சிறையில் உள்ள பு.மா.இ.மு தோழர்களை விடுதலை செய்யக் கோரியும், மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டவும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தருமபுரி பு.மா.இ.மு தயாராகி வருகிறது.

பென்னாகரம் அரசுக் கல்லூரி பிரின்சிபால் செல்வவிநாயகத்தின் முறைகேடுகள், பணவேட்டை, அதிகாரத் திமிரைத் தட்டிக் கேட்ட பு.மா.இ.மு தோழர்கள் இருவர் மீது பொய்வழக்கு! சிறை!

தமிழக அரசே!

  • கிராமப்புற மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்குக் குரல் கொடுத்த பு.மா.இ.மு தோழர்கள் இராஜா, மாரியாத்தா மீது போடப்பட்ட பொய்வழக்கை ரத்து செய்! உடனே விடுதலை செய்!
  • ஏழை மாணவர்களிடம் தண்டம் வசூலித்தல், மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரின்சிபல் செல்வவிநாயகத்தை இடைநீக்கம் செய்!
  • 5 மாணவர்களின் இடைநீக்கத்தை உடனே ரத்து செய்!

மாணவர்களே! பெற்றோர்களே! ஆசிரியர்களே!

  • மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்!
  • தனியார்மயத்தை ஊக்குவிக்கும் கருங்காலிகளை விரட்டியடிப்போம்!

pennagaram-college-rsyf-poster

தகவல்:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி
81480 55539.