Saturday, May 10, 2025
முகப்புசெய்திஅமைச்சர் மோகன் பொய்யை திரைகிழிக்கும் பு.ஜ.தொ.மு

அமைச்சர் மோகன் பொய்யை திரைகிழிக்கும் பு.ஜ.தொ.மு

-

டெல்லி விக்யான் பவனில் 45-வது இந்தியத் தொழிலாளர் மாநாடு நடக்கிறது. மாநாட்டின் 2-ம் நாளான 22-07-2015 அன்று தமிழகம் சார்பில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பி.மோகன் பங்கேற்று பேசியுள்ளார்.

“தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களும் பரஸ்பர ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் நன்மதிப்பின் மூலமே முன்னேற முடியும். உரிய நேரத்தில் சமரச அலுவலர்கள் தலையீட்டால் தமிழகத்தின் வேலை நிறுத்தம், கதவடைப்பு ஆகியவை தற்போது இல்லை” எனக் கூறியுள்ளார்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
சட்டவிரோத கதவடைப்பை எதிர்த்து ஜூலை 20-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த சி.ஆர்.ஐ தொழிலாளர்கள்

அமைச்சரின் இக்கூற்று மிகவும் தவறானதாகும். கோவை சின்னவேடம்பட்டியில் இயங்கி வரும் பம்புசெட் நிறுவனமான சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தில் சட்டவிரோத கதவடைப்பு கடந்த மார்ச் 26 முதல் நடந்து வருகிறது. சட்டவிரோத கதவடைப்பு செய்ததை ஒட்டி எமது தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதை கோவையில் உள்ள அனைவரும் அறிவர்.

இக்கதவடைப்பினால் 25 ஆண்டு காலம் பணிபுரிந்த 100 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிலாளர்கள் சி‌.ஆர்‌.ஐ நிறுவனம் முன்பு பந்தல் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டமானது 120 நாட்களாக நடக்கிறது.

போராடும் தோழர்களை கோவை மாநகர காவல்துறை பல்வேறு பொய் வழக்குகளில் ஜூன் மாதம் 12-ம் தேதி முதல் கைது செய்துள்ளது. போராடிய தோழர்கள் தோழர் விளவை இராமசாமி மற்றும் தோழர் குமாரவேல் உட்பட பல பேர் நிபந்தனை பிணையில் சிறை மீண்டு  போராடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், தொழிலாளர் அலுவலர் பாலசுப்பிர மணியன் உட்பட பலர் தலையிட்டும் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை.

சி‌.ஆர்‌.ஐ நிர்வாகம் கதவடைப்பு செய்வதற்கு அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. சட்டவிரோத கதவடைப்பு செய்த சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்தின் மீது எந்த விட நடவடிக்கையும் எடுக்காமல் தொழிலாளர் துறை முதலாளிக்கு துணை போய்க் கொண்டு உள்ளது. சட்ட விரோத கதவடைப்பைக் கண்டித்து துடியலூர் பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

தொழிற்சங்க போராட்ட வரலாற்றிலேயே இதுவரை இல்லாத முறையில் பொய் வழக்கு போட்ட சாய்பாபா காலனி, பீளமேடு மற்றும் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்கள் முறையே மணிவர்மன், கோபி மற்றும் சோதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளோம். வழக்கும் தொடரவும் உள்ளோம்.

கோவை தொழிலாளர் போராட்டம்
சி.ஆர்.ஐ, பெஸ்ட் தொழிலாளர்கள்

அதுபோல் கோவைத் தடாகம் ரோட்டில் அமைந்துள்ள பெஸ்ட் கம்பெனியில் 50 தொழிலாளர்கள் குடும்பத்துடன் கடந்த மூன்று மாதங்களாக எமது அமைப்பின் தலைமையில் போராடி வருகின்றனர். இவர்கள் மீது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 33 தொழிலாளர்கள் சிறைப்படுத்தப்பட்டு பிணையில் வந்து போராடி வருகின்றனர்.

இரண்டு கம்பெனி தொழிலாளர்களும் கடந்த மூன்று மாதமாக போராடி வரும் நிலையில் மேற்படி தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் உண்மைக்கு மாறாக டெல்லியில் பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசு தலையிட்டு சட்டவிரோத கதவடைப்பு செய்த நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவண்

விளவை இராமசாமி
மாநில துணைத் தலைவர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க