Saturday, May 10, 2025
முகப்புசெய்திகரசேவை செய்ய கருப்புத் துண்டு எதற்கு வைகோ ?

கரசேவை செய்ய கருப்புத் துண்டு எதற்கு வைகோ ?

-

பா.ஜ.க: நாங்களும் திருடங்கதான், ஒத்துக்குறோம்!

thief torch 700 pixஐ.பி.எல் மோசடி மன்னன் லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வசுந்தரா ராஜி, வியாபம் ஊழல் தொடர் கொலை புகழ் சௌகான் ஆகியோர் பதவி விலக வேண்டுமென்று காங்கிரசும், இதர கட்சிகளும் பாராளுமன்றத்தில் கோரி வருகின்றன. மடியில் எடை அதிகம் இருந்தால் பயமும் அதிகம் இருக்கும் என்றாலும் இப்போது மடியில் எடை இல்லாதவர் எவர் என்று மடை மாற்றினால் தன் எடை பற்றி எவன் கேட்பான் என்று தொழில்முறை திருடர்கள் யோசிக்கிறார்கள்.

அப்படித்தான் தன்னிடம் நிலக்கரி ஊழலில் பிடிபட்ட சந்தோஷ் பாக்ரோடியாவுக்கு பாஸ்போர்ட் கேட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சரின் பெயரை வெளியிடுவேன் என்று சுஷ்மா டிவிட்டரில் மிரட்டுகிறார். அதே போன்று உத்தரகாண்ட் முதலமைச்சரின் சாராய ஊழல் மற்றும் இமாச்சால் பிரதேசம், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா முதலமைச்சர்கள் குறித்த ஊழல் புகார்களையும் எழுப்புவதாக பா.ஜ.க மிரட்டுகிறது.

மேலும் போபால் படுகொலை ஆண்டர்சன், போபார்ஸ் ஊழல் குவாட்ரச்சி, தாவுத் இப்ராஹிம் ஆகியோரை தப்பவிட்டது யார் என்றும் கேள்வி எழுப்புகிறது பா.ஜ.க. இடையில் வாஜ்பாய் ஆண்ட போதும் கூட இந்த பெருந்தலைவர்களை ஏன் அண்ட முடியவில்லை என்பது பிரம்ம ரகசியமல்ல, பாமரனுக்கும் புரியும் உண்மை.

நீ திருடன் என்று ஆதாரத்துடன் புகார் வரும் போது, உங்களில் எவன் திருடவில்லையோ அவன் என் மீது கல்லெறியுங்கள் என்று கேட்டால் கல்லோசை வராது என்று பா.ஜ.க நம்புகிறது.

காங்கிரசு யோக்கியர்களின் கட்சி என்று எவரும் நம்பவில்லை, சொல்லப் போனால் காங்கிரசுக்காரர்களே ஏற்கமாட்டார்கள். ஆனால் நாங்கள் மட்டுமா திருடர்கள் என்று வாலன்டியராக ஒத்துக் கொண்டு மற்ற திருடர்களின் ஆடியோ, வீடியோவை எடுத்து விடும் பா.ஜ.க உண்மையில் ஒரு வித்தியாசமான கட்சிதான்.

_____________

கரசேவை செய்ய எதற்கு கருப்புத் துண்டு வைகோ அவர்களே?

VAIKO-cartoon -700 pixஎதுகை மோனை என்சைக்ளோபீடியாவா இல்லை சந்தர்ப்பவாதமா இரண்டில் வைகோவிடம் விஞ்சுவது எது என்றால் சாலமன் பாப்பையாவே திணறுவார். 22.07.2015 அன்று மோடியை சந்தித்த வைகோ அருளியிருக்கும் பொன்மொழிகளைப் பாருங்கள். 12.30க்கு நேரம் ஒதுக்கிய மோடி 12.00 மணிக்கே அழைத்தாராம். அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியதே சாதனை மேல் சாதனையாக காட்ட வேண்டுமென்றால் அந்த இதயம்தான் எத்தனை பெரிய வேதனையில் வாடிக் கொண்டிருக்கும்?

“தினமும் உங்களை விமரிசித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் எனது நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடன் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி” என்று நெஞ்சம் கலங்க மோடியிடம் நெகிழ்ந்திருக்கிறார் வைகோ. போகிற போக்கைப் பார்த்தால் தினமும் விமரிசக்கப்படும் ராஜபக்சேவுக்கும் இந்த நண்பர் பாக்கியம் கிடைத்துவிடும் போல!

மேற்கண்ட சாஷ்டாங்க நமஸ்காரத்திற்கு பதிலளித்த மோடி, “ நீங்கள் உணர்ச்சிமயமானவர். அதனால்தான் ஈழப் பிரச்சினையை அப்படி அணுகுகிறீர்கள்” என்றாராம். ஆக மொத்தம் புரட்சிப் புயல் தினமும் மோடியை பிச்சு உதறுவதை மோடி வாள் காமடியாக அல்ல அதற்கும் கீழாகவே எடுத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. தான் திட்டும் மனிதனே அதை திட்டாக நினையாமல் திட்டியவனை தட்டிக் கொடுக்கிறார் என்றால் திட்டுபவரின் நிலையை யோசித்துப் பாருங்கள்! இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு நீங்களும் வைகோவாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

பிறகு 2000 முசுலீம்களின் கொலைக்கு காரணமான நபரிடம் 20 தமிழ் தொழிலாளிகளின் கொலைக்கு நியாயம் கேட்டாராம். இறுதியில் மோடி,”இது உங்கள் வீடு, நீங்கள் எப்போது வேண்டுமானலும் சந்திக்கலாம்” என்றாராம். அதற்கு“ பெரியார் பிறந்த நாளில் மோடி பிறந்ததை நினைவுபடுத்திவிட்டு அவரிடம் இருந்து விடை பெற்றேன்” என்கிறார் வைகோ.

எதை எதையோ இணைத்து பார்க்கும் இது என்சைக்ளோபீடியா நோயின் வெளிப்பாடு என்றாலும், போராடுவது வேண்டாமென எதிரியின் காலடியில் விழுந்து சாதிக்கலாம் என்று நினைக்கிறாரே வைகோ, இதுதான் வரலாறு அவருக்கு தீர்மானித்திருக்கும் இடம்.

____________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்