Friday, May 9, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஓசூர் டாஸ்மாக்கில் சாணியடி – லாக்கப் சித்திரவதையில் தோழர்கள் !

ஓசூர் டாஸ்மாக்கில் சாணியடி – லாக்கப் சித்திரவதையில் தோழர்கள் !

-

Hosur tasmac protest (1)“டாஸ்மாக்கை மூடு, குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சிய போதும்! கெடுவிதிப்போம் ஆகஸ்டு 31” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த இரண்டு மாத காலமாக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனையடுத்து மக்களைத் திரட்டி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பல போராட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்த அரசு ஆளத் தகுதியிழந்துவிட்டது! குவாட்டரை அரசு சொத்து எனவும் குடிப்பவர் தான் குடிமகன் என்றும் கூறி, டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுபவர்களை தாக்கியும் ஒடுக்கியும், நூற்றுக்கணக்கானோர் மீது பொய்வழக்கு போட்டு கைதும் செய்துள்ளது, ஜெயா அரசு.

ஆளத் தகுதியிழந்துவிட்ட இந்த அரசிடம் கெஞ்சுவதன் மூலம் டாஸ்மாக்கை மூடமுடியாது. ஆனால், அரசியல் கட்சிகள் எல்லாம் உண்ணாவிரதம், சட்டத்திற்கு உட்பட்டு போராட்டம் என்ற பெயரில் பாசிச ஜெயா அரசிடம் மக்களை மண்டியிட வைக்கின்றனர். மக்களின் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். ஆனால், சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தங்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை வாபஸ் பெற கோரியும் பிணை எடுக்க மாட்டோம் என்று உறுதியுடன் போராடி வருகின்றனர். ஆனால், தேர்தல் கட்சிகளோ, ஓட்டுக்காக போராடுகின்றனர். டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர்.

இந்த வகையில் ஆகஸ்டு 31 கெடுவிதித்து மக்களைத் திரட்டி போராடி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று 11.08.2015 ஒசூர் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியருகில் கூடி முழக்கமிட்ட படியே, எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அந்த கடையின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைப்பின் நிர்வாகிகளான முனியப்பன், முருகேசன், தீபன், மணி ஆகியோரும் மற்றும் பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நடக்கும் போது, டாஸ்மாக் கடையின் மீது மாட்டுச் சாணத்தை வீசப்பட்டது. இது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பானது. ராயக்கோட்டை சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

ஆனால், ஒசூர் போலீசு போராட்டத்தை முடித்துக் கொண்டு அமைதியாக திரும்பிக் கொண்டிருந்த தோழர்களை பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்தது. ஒரு பெண் தோழர் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தது. டாஸ்மாக் பாட்டிலை உடைத்தனர் என பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளது.

வண்டியில் ஏற்றும் போதே முனியப்பன், முருகேசன் ஆகியோரை பூட்ஸ் காலல் உதைத்தும் அடித்தும் இழுத்து வந்தனர். அதன் பின்னர், போலீசு லாக்கப்பில் வைத்து தோழர்.முருகேசனை கடுமையாக தாக்கியுள்ளனர். மற்ற நான்கு தோழர்களையும் வேறு ஒரு மறைவிடத்தில் வைத்து தாக்கியுள்ளது போலீசு.

எனினும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராட்டம் தொடரும்…

தகவல்: புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க