Saturday, May 10, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபென்னாகரம் டாஸ்மாக்கில் சாணி முட்டை தக்காளி அபிஷேகம் !

பென்னாகரம் டாஸ்மாக்கில் சாணி முட்டை தக்காளி அபிஷேகம் !

-

pennagaram tasmac protest (1)ருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகரத்தில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவகத்தை விட அதன் அருகாமையில் இருக்கும் டாஸ்மாக்கின் வளர்ச்சி அபாராமானது. என்ன இருந்தாலும் ஏழை மக்களின் காசை பிடுங்கிக் கொண்டு துருத்தி நிற்கும் வளர்ச்சி அல்லவா? இந்த டாஸ்மாக் கடையின் அருகாமையில்தான் நூலகமும் உள்ளது. படிக்கவா, குடிக்கவா என்றால் அரசு குடியின் பக்கமே இருப்பதற்கு இந்த டாஸ்மாக் பார் ஒரு சாட்சி.

நகரின் மையத்தில் மக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் இருக்கும் இந்த கடையை மாற்றச் சொல்லி இதற்கு முன்னரே மக்கள் மனு கொடுத்து பல்வேறு வழிகளில் போராடியிருக்கின்றனர். மக்களுக்கு அசைந்து கொடுக்குமா இந்த அரசு? ஆனால் அது போன வருசத்து கதை.

இப்போது “மக்கள் அதிகாரம்” அமைப்பு வந்து விட்டது. இனி டாஸ்மாக்கை மாற்றுவது அல்ல, நிரந்தரமாக மூடுவது ஒன்றே தீர்வு என்று மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. அப்படித்தான் இங்கும் நாள் குறிக்கப்பட்டது.

பச்சையப்பா மாணவர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், ஆகஸ்டு 31-க்குள் தமிழக டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறும் பென்னாகரத்தில் இன்று 11.08.2015 அன்று காலையில் “மக்கள் அதிகாரம்” அமைப்பு சார்பில் மக்கள் கூடினர். 75 பெண்களும் நூற்றுக்கணக்கான ஆண்களும் அங்கே குழுமினர்.

முதலில் டாஸ்மாக் கடையில் இருக்கும் ஊழியரை வெளியேறுமாறு மக்கள் கேட்டுக் கொண்டனர். அந்த ஊழியரோ கடமை உணர்விலோ இல்லை அரசின் மிரட்டலுக்கு பயந்தோ உள்ளேயே பதுங்கிக் கொண்டார், பாவம்!

பிறகு தயாராக இருந்த சாணி, முட்டை, தக்களிகளால் டாஸ்மாக் கடை தாக்கப்பட்டது. உடன் ஓடி வந்த நான்கு போலிசார் இந்தக் கறைகளில் இருந்து டாஸ்மாக் கடையை காப்பாற்ற மிகுந்த பாடுபட்டனர். பதிலுக்கு கறைகளை அவர்களது காக்கிச் சட்டை ஏற்றுக் கொண்டது. உள்ளே இருந்த ஊழியர் இப்போதுதான் வெளியே ஓடி வந்தார். “ஏதோ மஞ்சளா அடிச்சுட்டாங்க” என்று பதறியாவறு போலிசிடம் தெரிவித்தார். சைடு டிஷ்ஷான முட்டையின் மஞ்சள் கருவை அவர் இந்த தாக்குதல் கோலத்தில் பார்த்ததில்லை போலும். இத்தோடு முடிந்தால் பரவாயில்லை. அடுத்துதான் போராட்டக்காரர்கள் அந்த ‘பொருளை’ எடுத்துக் கொண்டு வந்தனர். வேறு ஒன்றுமில்லை, அது “மலம்”!

மலத்தை வீசப் போகிறார்கள் என்று தெரிந்தும் போலிசின் கடமை உணர்வு குன்றவில்லை. ஏற்றுக் கொண்டார்கள். போலிசின் உயர் பொறுப்பில் இருக்கும் போலிசு தாழ் போலிசை கூப்பிட்டு தண்ணீர் கொண்டு வந்து கழுவிக் கொண்டது. தாழ் போலிசுக்கு வழியில்லை போலும்.

இங்கே சிலருக்கு, “மலத்தையா கொண்டு போய் எறிவார்கள்? என்ன அநாகரிகமான நடவடிக்கை இது” என்று தோன்றலாம். கல்லை விட்டறிந்தால் வன்முறை, வழிப்பறி என்று அவதூறு செய்யும் அரசு தோழர்களை தாக்கி சிறைபடுத்தி கொடுமைப்படுத்துகிறது. அதன்படி பார்த்தால் மலமொன்றும் அபாயகரமான பொருளில்லையே? மேலும் தமிழக மக்களை குற்றுயிரும் கொலையுயிருமாய் அழிக்கும் டாஸ்மாக் என்னும் இழிவை உணர்த்தவே இந்த மலம்.

இப்படி கருப்பிலும், வெள்ளையிலும், காக்கி நிறத்திலும் அபிஷேகம் முடிந்த பிறகு பென்னாகரம் – தருமபுரி சாலையில் மக்கள் மறியல் செய்தனர். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்தை நாளென்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த போராட்டக் காட்சிகளை நேரடி அலைவரிசையில் கண்டு களித்தனர்.

பிறகு போராட்டம் முடிந்து மக்கள் திரும்ப ஆரம்பித்தனர். உடனே போலிசு ஓடி வந்து “உங்களை கைது செய்கிறோம், நில்லுங்கள்” என்று மன்றாடியது. 13 தோழர்கள் போலிசின் கோரிக்கையை ஏற்று கைதுக்காக காத்து நின்றார்கள். அது வரை ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று மிச்சமிருந்த சாணியை எடுத்து டாஸ்மாக் கடை அபிஷேகத்தை தொடர்ந்தனர். பிறகு அதிரடிப்படை வந்து தோழர்களை கைது செய்து கொண்டு போனது.

மூன்று பெண்கள் உட்பட 13 தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பெண்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். மிச்சமிருக்கும் 10 தோழர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

ஆனாலும் பென்னாகரத்தில் துவங்கிய இந்த போராட்டம் விரைவிலேயே மாவட்டம் முழுவதும் பரவும். டாஸ்மாக் கடைகளை மூடாமல் முடியாது இந்த போராட்டம்!

  • தகவல்: புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க