Friday, May 9, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமக்கள் அதிகாரம் வெற்றி – மேலப்பாளையூர் டாஸ்மாக் நிரந்தர அடைப்பு

மக்கள் அதிகாரம் வெற்றி – மேலப்பாளையூர் டாஸ்மாக் நிரந்தர அடைப்பு

-

melapalayam tasmac (11)டாஸ்மாக்கை மூடு! ஊரை விட்டு ஓடு! – என்று கடந்த 4-ம் தேதி விருத்தாசலம் அருகில் உள்ள மேலப்பாளையூர் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் சி.ராஜு மற்றும் பல வழக்கறிஞர்கள், கிராம நிர்வாகிகள் தலைமையில் மூட வைத்தனர் அந்த கிராம மக்கள். அதில் பெண்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு கிராம நிர்வாகிகள் என 25 பேர் கைதாகி கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். பெண்கள் மட்டும் சம்பவத்தன்று விடுவிக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை.

அதற்கு காரணம் கிராம மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வும், நம்பிக்கையும் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த போராட்டம். காவல்துறை அதிகாரிகள், தாசில்தார் என யார் வந்தாலும் இந்த கடையை திறக்க விட மாட்டோம் என கிராம மக்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள். மற்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்போடு கடை இயங்கி வந்தாலும், இந்தப் பகுதியில் மக்களின் உறுதியான போராட்டத்தால் இன்று வரை அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. இது நம்முடைய 3 மாத கால பிரச்சாரத்தின் மூலம் மக்கள், இந்த அரசை நம்பி பலனில்லை, நம்முடைய அதிகாரத்தை கையில் எடுத்ததன் வெற்றியாகத்தான் பார்க்க முடியும்.

melapalaiyur 11082015 (2)இது மட்டுமல்லாமல் இந்த காவல்துறை பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளைஞர், குடிபோதையில் உள்ளவர்களை எல்லாம் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடினாய் என்று பொய்வழக்குப் போட்டு முன்னெச்சரிக்கையாக கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இரட்டை இலை சின்னத்தை தன் கையிலே பச்சை குத்தி ஒருவர் நான் அம்மா கட்சி, நான் எப்படி டாஸ்மாக்கிற்கு எதிராக போராட முடியும்? என்று சொல்லியும் அதை கேட்காமல் அவரை கைது செய்து சிறையிலே அடைத்துள்ளது இந்த காவல்துறை. இறுதியில் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் காவல் துறையையும், தமிழக அரசையும் திகைக்க வைத்து விட்டது. கைது செய்யப்பட்டர்களது வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர்களை விடுவிக்கவும் நமது மக்கள் அதிகார வழக்கறிஞர்கள் முயன்று வருகிறார்கள்.

மேலும் விருத்தாசலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு மற்றும் வழக்கறிஞர் புஷ்பதேவன் மீது “டாஸ்மாக்கை மூடு!” போராட்டத்தில் கொலை செய்ய முயன்றதாக பொய்வழக்கு போட்டு, அதை பார்கவுன்சிலுக்கு புகார் மனு அனுப்ப முயன்றார்.

இதை கண்டித்து அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த நான்கு நாட்களாக பொய்வழக்கை திரும்ப பெறவும், காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று நீதிமன்ற புறக்கணிப்பும்,  சாலைமறியல் போராட்டமும் செய்தனர். தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கறிஞர்கள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. நேற்று மதியம் வழக்கறிஞர்கள் அனைவரும் நடுரோட்டில் அமர்ந்து சாப்பிட்டனர். இரவு வரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால், அடுத்தகட்டம் காவல்துறை ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வது என்று அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு மக்கள் அதிகாரத்தின் மூலம் நாம் எடுத்த முயற்சி வீண் போக வில்லை. இந்த மேலப்பாலையூர் டாஸ்மாக் போராட்டம் மிகப்பெரிய மாற்றத்தை அனைத்து தரப்பினரிடமும் ஏற்படுத்தி உள்ளது, இந்த போராட்டம் நூறு சதவிகித வெற்றியைப் பெற்றுள்ளது என்பதற்கு மேலப்பாளையூர் கிராம மக்களின் உறுதியான போராட்டம் போராடும் அனைவருக்கும் ஓர் முன்மாதிரி.

  • செய்தி: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
    தொடர்புக்கு: 99623 66321