அடக்குமுறையால் தடுக்க முடியாது…மூடு டாஸ்மாக்கை!!
மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
மக்கள் அதிகாரம் தலைமைக்குழுவின் சார்பில் 26-08-2015 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் தலைமைக்குழு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தோழர் காளியப்பன், தோழர் அமிர்தா ஆகியோர் கலந்து கொண்டு, “மூடு டாஸ்மாக்” இயக்கத்தின் மீது காவல்துறையும் உளவுத்துறையும் மேற்கொண்டுவரும் கடுமையான அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவித்தும், ஆகஸ்ட் 31-ல் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினர். அந்த சந்திப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி :

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மதுவிலக்கு தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகம் முழுக்க டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் அரசு மற்றும் காவல்துறையால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டு, ஒரு அசாதாரண சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. மனித சங்கிலி போராட்டம் நடத்திய தே.மு.தி.க-வினர் காவல்துறையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். மாற்றுத் திறனாளிகள் ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்படுகின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பினர் பேருந்தில் பிரச்சாரம் செய்ததற்காகக் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மதுரை, ராஜபாளையம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உளவுத்துறையின் மூலம் மிரட்டப்படுகின்றனர்.
- திருச்சியில் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களை மாவோயிஸ்டுகளைப் போல் என்கவுண்டரில் கொல்லப்போவதாக மிரட்டுகிறது கியூ பிரிவு போலீசு.
- மதுரையில் லயனல் அந்தோணிராஜ், வழக்கறிஞர் நடராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் வீட்டிற்குச் சென்ற உளவுப் பிரிவு போலீசார் அவர்களை போட்டோ எடுத்து மிரட்டியுள்ளனர்.
- ராஜபாளையத்தில் வீட்டில் இருந்த பெண்களிடம் ரேசன் கார்டை வாங்கி போட்டு எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆகஸ்டு – 31-ல் எந்தப் போராட்டமும் நடத்தக் கூடாது மீறினால் பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைப்போம் என பல்வேறு இடங்களில் உளவுப் பிரிவு போலீசார் மிரட்டி வருகின்றனர்.
ஏற்கனவே டாஸ்மாக்குக்கு எதிராக போராடி சிறையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பு.மா.இ.மு உறுப்பினர்களை காவல்நிலையம் மற்றும் சிறையில் போலீசு, சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியது உண்மைதான் என மாவட்ட நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளில் இன்று வரை பிணை மறுக்கப்படுகிறது.சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான காவல் நீட்டிப்பு அப்பட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செய்யப்படுகிறது. அரசின் இச்சட்டவிரோத செயல்களுக்கு நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன.
சிறையில் உள்ள மாணவிகளை விபச்சார வழக்கில் அடைத்துவிடுவதாக பெண்கள் சிறைக்கு சட்டவிரோதமாக சென்று மிரட்டுகிறார் உமாசங்கர் என்ற உளவுத்துறை அலுவலர்.
இவ்வாறு டாஸ்மாக்குக்கு எதிராக போராடுவோர், பிரச்சாரம் செய்வோர் மீது கொலைமுயற்சி (307 IPC), இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் (குடிப்போர் – குடிக்காதோர் ! ) என மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்துகிறது. வன்முறையாளர்கள் எனவும் முத்திரை குத்துகிறது அரசு.
ஆனால், காங்கிரசு தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறை ஆளும் அ.தி.மு.க-வினரால் ஏவப்படுகிறது. அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன் அ.தி.மு.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதா- வின் ஆசியோடு நேரடியாக வன்முறையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது தடியடி, வழக்கு, கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுடன் ஆளுங்கட்சி நடத்தும் வன்முறைக்கு பாதுகாப்பு கொடுத்து வழி நடத்துகிறது போலீசும் உளவுத்துறையும்.
சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக ஆளும்கட்சி- உளவுத்துறை – போலீசு ஆட்சிதான் நடைபெறுகிறது. இவ்வாறாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மத்தியில் உள்ள மோடி அரசும் துணை நிற்கிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இப்போக்கு மிகவும் அபாயகரமானது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் கூட காவல்துறை, தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு மோடி அரசின் ஆதரவோடு வன்முறை அராஜகம் நடப்பது உறுதி.
ஆகவே, தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் மக்கள் இயக்கங்கள் மீது மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் பொய் வழக்கு, அவதூறு வழக்கு, கருத்துரிமை பறிப்பு என அடக்குமுறை அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இத்தகைய அபாயகரமான சூழலில் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இந்த அ.தி.மு.க அரசின் காட்டாட்சிக்கு எதிராகவும், டாஸ்மாக்கை ஒழிக்கவும் ஓரணியில் திரண்டு போராட அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம். அ.தி.மு.க அரசின் அடக்குமுறை மற்றும் டாஸ்மாக்குக்கு எதிரான போர்க்குரலாக வரும் ஆகஸ்டு – 31 அன்று சென்னை, மதுரை, தர்மபுரி, கடலூர், திருச்சி ஆகிய 5 மையங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மக்கள் இயக்கங்களை இணைத்து “மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!” என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த இருகின்றோம்.
ஆகவே, இப்போராட்டத்தில் அனைத்துக்கட்சிகள் அமைப்புகள், மாணவர்கள் வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகிய அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
முழு மதுவிலக்கை அமல்படுத்தும் வரை எமது டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
தோழர் காளியப்பன்
தோழர் அமிர்தா
தலைமைக்குழு உறுப்பினர்கள்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.