மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது!
1. தருமபுரி
இன்று தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை/போலீசுக் காட்டாட்சி ஜெயலலிதா தலைமையில் நடக்கிறது.

மதுவிலக்கு கோரியும் சாராயக் கடைகளை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை, மனிதச் சங்கிலி வரை அமைதி வழியில் போராடும் பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் போலீசால் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கப்படுகின்றனர். போராடுபவர்கள் மீது கொலை முயற்சி போன்ற கடுமையான வழக்குகள் ஏவப்படுகின்றன.
டாஸ்மாக்கிற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மதுரை, ராஜபாளையம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உளவுத் துறையினர் மூலம் போட்டோ எடுத்து மிரட்டப்படுகின்றனர். திருச்சியில் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களை “மாவோயிஸ்டுகளைப் போல் என்கவுண்டரில் கொல்லப் போவதாக” மிரட்டுகிறது கியூ பிரிவு போலீசு. சட்டப் பேரவையில் கூட எதிர்க் கட்சிகள் மதுவிலக்கு தொடர்பாகப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
“மூடு டாஸ்மாக்கை, கெடுவிதிப்போம் ஆகஸ்டு 31” என மக்கள் அதிகாரம் அமைப்பு விடுத்த அறைகூவலை தமிழக மக்களும் மாணவர்களும் ஆகஸ்டு மூன்றாம் நாளே அமுல்படுத்தத் தொடங்கி விட்டனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ விருத்தாச்சலம், கோவை, விழுப்புரம் எனத் தமிழகம் முழுவதும் பற்றிப் படந்தது. டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக்கோரும் மக்கள் போராட்டம், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரையும் போராட்டக் களத்தில் கொண்டு வந்து நிறுத்தி ஒரே குரலில் பேச வைத்தது.
ஜெயலலிதா அரசோ ஒட்டு மொத்த தமிழகத்தின் டாஸ்மாக் எதிர்ப்பையும் துச்சமாகக் கருதி, போராடும் மக்கள் மீது கொடிய அடக்குமுறையை ஏவி விடுகிறது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போர்க்குணமான போராட்டத்தைக் கண்டு தனது மாமூல் வசூல் பறிபோய்விடும் என்று ஆத்திரமடைந்து, கல்லூரி மாணவர்களை போலீசு நிலையத்தில் தாக்கியதோடு, சிறையிலும் சித்திரவதை செய்தது. விசாரணை செய்த நீதிபதியும் போலீசின் சித்திரவதையை உறுதி செய்துள்ளார். அதோடு சட்ட விரோதமாக பெண்கள் சிறைக்குள் சென்று மாணவிகளை மிரட்டி, ஆபாசமாகவும் பேசியுள்ளது உளவுத்துறை போலீசு.
மதுவிலக்குக் கோரி அறவழியில் போராடிய சசிபெருமாளை ஜெயா அரசு தனது அலட்சியத்தால் கொலை செய்தது. அதையும் தாண்டி சசிபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் புளுகிக் கொச்சைப்படுத்தியது; டாஸ்மாக் எதிர்ப்பு மட்டுமல்ல, குடிநீர், சாலை, குடியிருப்பு என அடிப்படை உரிமைகளுக்கான எல்லாப் போராட்டங்களையும் போலீசை ஏவிக் கொலைவெறியோடு ஒடுக்குகிறது.

டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடியதால் சிறை வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்ட தோழர்களையும் பிணையில் விடக் கடுமையாக எதிர்த்து வருகிறது, ஜெயா அரசு. சட்ட விரோதமாகக் காவல் நீட்டிப்பு செய்கிறார்கள், நீதிபதிகள். வழக்கறிஞர்கள் “சட்டப்படி நடக்குமாறு” கேட்டால், “போலீசு சொல்வதைத்தான் கேட்பேன்” என்கிறார்கள், நீதிபதிகள். வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் முன்பே, பிணையில் விடுவதற்கே அழிக்கப்பட்ட சாராயத்துக்கு நட்ட ஈடாக முன்பணம் கட்டும்படி உத்தரவு போடுகிறார்கள். போலீசும் நீதித்துறையும் வேறு வேறல்ல ஒன்றுதான் என்பதோடு, இவை மக்களுக்கு எதிரானதாகவும் மாறிவிட்டதையே நடந்து வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
புரட்சிகர அமைப்புகள் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவிவிடும் ஜெயா அரசு, எதிர்க்கட்சிகளையும், போராடும் அமைப்புகளையும் கூட விட்டு வைப்பதில்லை. வைகோ, விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தி.மு.க-வினர், பத்திரிகையாளர்கள் என அனைவர் மீதும் தொடர்ந்து பல பொய்வழக்கு, அவதூறு வழக்குகளைப் போடுகிறது.
குறிப்பாக, காங்கிரசு தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறை, ஆளும் அ.தி.மு.க.வினரால் ஏவப்படுகிறது. அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன், அ.தி.மு.க எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், மேயர்கள் ஜெயலலிதாவின் ஆசியோடு நேரடியாக வன்முறையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது தடியடியோ, வழக்கோ, கைதோ – எந்த நடவடிக்கையுமே இல்லை என்பதுடன், ஆளுங்கட்சி நடத்தும் வன்முறைக்கு போலீசும் உளவுத்துறையும், பாதுகாப்புக் கொடுத்து வழி நடத்துகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக ஆளும் கட்சி – உளவுத்துறை – போலீசு ஆட்சிதான் நடைபெறுகிறது. இவ்வாறாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு, மத்தியில் உள்ள மோடி அரசும் துணை நிற்கிறது.
இன்னொருபுறம், தமிழகம் இன்று குற்றங்களின் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காத கொலை, கொள்ளை, பெண்கள் மீதான வன்முறை, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறியர்களின் தாக்குதல் முதலியவை அதிகரித்துக் கொண்டே போகின்றன. இவை எதையும் குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாத ஜெயலலிதா, டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடினால் மேலும் கடுமையாக ஒடுக்குவேன் என்று கொக்கரிக்கிறார்.
இந்தச் சம்பவங்கள் அரசுக் கட்டமைப்பு, மக்களை ஆளும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டதையும், பாசிசத்தை நோக்கிச் செல்வதையும், எதிர்ப்பே இல்லாத ஏகபோக ஆட்சியை நிறுவ எத்தனிப்பதையும் பளிச்செனக் காட்டுகின்றன. இத்தகைய அபாயகரமான அரசியல் சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டியது அவசியமானதும், அவசரமானதுமாகும்.
அ.தி.மு.க அரசின் அடக்குமுறை மற்றும் டாஸ்மாக்கிற்கு எதிரான போர்க்குரலாக, வரும் ஆகஸ்டு – 31 அன்று சென்னை, மதுரை, தருமபுரி, விழுப்புரம், திருச்சி ஆகிய 5 மையங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அனைத்துக் கட்சிகள், மக்கள் இயக்கங்களை இணைத்து, “மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!” என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.
இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைவரும் திரளாகப் பங்கேற்பதோடு, முழு மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பல்வேறு முறைகளில் போராட்டத்தைத் தொடர உங்களை அறைகூவி அழைக்கிறோம்.
- குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!
- தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!
- மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது!
- அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு! இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!!
- மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது!
ஆர்ப்பாட்டம்
31-08-2015 மாலை 4 மணி
BSNL தந்தி அலுவலகம் எதிரில், தருமபுரி.
தலைமை: தோழர் முத்துக்குமார், மக்கள் அதிகாரம்.
கண்டன உரையாற்றுவோர்:
தோழர் கிருஷ்ணன், முன்னாள் தருமபுரி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்.
திரு T.K.தேவேந்திரன், வழக்கறிஞர், பென்னாகரம் வழக்கறிஞர் சங்கப் பொருளாளர்.
தோழர் சிவாஜி, தலைவர், அனைத்து அருந்ததியினர் மக்கள் கூட்டமைப்பு.
திரு B.M.ரமேஷ், B.A., B.L., தருமபுரி நகரச் செயலாளர், தே.மு.தி.க.
திரு ஜெயபிரகாஷ், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர், ம.தி.மு.க.
தோழர் ராமன் என்கிற எழிலன், தருமபுரி மாவட்டச் செயலாளர், வி.சி.க.
திரு.நவநீதன், மதுவை ஒழிக்கப் போராடிய தியாகி சசிபெருமாளின் இளைய மகன்.
தோழர்.விளவை ராமசாமி, மக்கள் அதிகாரம்.
கலைநிகழ்ச்சி:
“மக்கள் அதிகாரமே தீர்வு”
நன்றியுரை : தோழர் அருண், மக்கள் அதிகாரம்.
தகவல்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
உள்ளூர் தொடர்புக்கு: 81485 73417
____________________________
2. மதுரை
தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை
______________________
3. சென்னை ஸ்ரீபெரும்புதூர்
குடிகெடுக்கும் டாஸ்மாக் வேண்டாம் என்று சொல்வதற்கு கூட தமிழகத்தில் கருத்துரிமை மறுக்கப்படுகின்றது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்களையும் மக்களையும் சிறைப்படுத்தியும் அவர்களை கிரிமினல்கள் போல சித்தரவதை செய்தும் தமிழக அரசு கடுமையாக ஒடுக்கி வருகின்றது. டாஸ்மாக் பிரச்சினை மட்டுமல்ல, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எதற்காகவும் கவலைப்படாத அரசு, மக்களின் போராட்டங்களை தீவிரமாக ஒடுக்கி வருகின்றது. இந்த சம்பவங்கள் அரசுக் கட்டமைப்பு, மக்களை ஆளும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டதையும், பாசிசத்தை நோக்கி செல்வதையும், எதிர்ப்பே இல்லாத ஏகபோக ஆட்சியை நிறுவ எத்தணிப்பதையுமே காட்டுகின்றன. இந்த அபாயகரமான அரசியல் சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும். இந்த அபாய அரசியல் சூழலை முறியடிக்கும் விதத்திலும் ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்கள், தொழிலாளார்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் வகையில் 31.08.2015 அன்று காலை 11 மணிக்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ஆர்ப்பாட்டம்.
மூடு டாஸ்மாக்கை !
மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையால் தடுக்க முடியாது !
ஆர்ப்பாட்டம்
ஸ்ரீபெரும்புதூர்
31.08.2015 – காலை 11 மணி
தலைமை :
தோழர் அமிர்தா,
தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்
கண்டன உரை
தோழர்.சுப்பிரமணியன்,
ஸ்ரீபெரும்புதூர் பகுதிச் செயலர், சி.பி.ஐ
தோழர்.ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார்,
மாநில மாணவரணி செயலர்,
திராவிடர் கழகம்
திரு.த.வெள்ளையன்
தலைவர், வணிகர் சங்கங்களின் பேரவை
தோழர்.இளஞ்சேகுவாரா
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தோழர்.த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தகவல்
மக்கள் அதிகாரம்
9962366321
_____________________________
4. விழுப்புரம்
_____________________________
5. திருச்சி
மக்கள் அதிகாரம்,
திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்