privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பார் கவுன்சில் மற்றும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு

பார் கவுன்சில் மற்றும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு

-

பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு

ரு அசாதாரணமான சூழல் தமிழக நீதித்துறையில் நிலவுகிறது. இதை பேசிச் சரி செய்யும் பொறுப்பில் உள்ள பார் கவுன்சில், அவ்வாறு செய்யாமல் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவது போல வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை என்று நீதிபதிகளின் ஆணையை அமல்படுத்தும் ஊழியர் போல நடந்து கொள்வது சரியா?

மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான ஒரு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பயங்கரவாதக் குற்றம் இழைத்த குற்றவாளியாக இருந்தாலும் சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றியே அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் மேற்கூறிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் அனைத்து நீதிபதிகளின் கூட்டம் (Full Court Meeting) நடத்தப்பட்டிருக்கிறது. அங்கே இந்த வழக்கு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? இதை விடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பு வேறு உள்ளதா? இந்த முறைகேட்டை பார் கவுன்சில் ஆதரிக்கிறதா?

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்தோடுதான் நீதி வழங்கிக் கொண்டிருப்பதாக தத்து, டெல்லியிலிருந்து திடீரென்று அறிவிக்கிறாரே, இப்படி ஒரு சூழல் இருப்பதாக தலைமை நீதிபதி கவுல், இதுநாள்வரை பார் கவுன்சிலுக்கு ஏன் புகார் அனுப்பவில்லை?

உயர் நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் காவல்துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராக வழங்கப்பட்டவை. அவற்றை விசாரிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கோ உயர்நீதிமன்றம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. போலீசும் அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதையும், அதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதையும் மிகவும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் நீதியரசர்கள், தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டவுடனே அவ்வாறு கூறியவர்களை தண்டிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கை உடனே எடுத்து விசாரிக்கிறார்கள். இது அப்பட்டமான முறைகேடு இல்லையா?

மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரையிலிருந்து வேண்டுமென்றே சென்னைக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு முதல்நாள் அது திரைமறைவு விசாரணை என்று திடீரென்று அறிவிக்கப்பட்டது. பிறகு திடீரென்று அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 16-ம் தேதியன்று சீருடை அணிந்த மற்றும் அணியாத போலீசார் நீதிமன்றத் தாழ்வாரத்தை மறித்துக் கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவருடைய வழக்குரைஞரான திரு.என்.ஜி.ஆர் பிரசாத் உள்ளிட்டோர் இதனைக் கடுமையாகச் சாடியிருக்கின்றனர். வழக்குரைஞரே அனுமதிக்கப்படாமல், குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடத்தப்பட்ட அந்த விசாரணை முறையான விசாரணைதான் என்று பார் கவுன்சில் கருதுகிறதா?

தலைக்கவசத் தீர்ப்பு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக அழைத்து, குற்றம் சாட்டப்பட்ட ஏ.கே.ராமசாமியிடம், 10-ம் தேதியன்று மதுரையில் நடந்த ஊழல் எதிர்ப்பு பேரணி பற்றி நீதிபதிகள் விசாரித்திருக்கிறார்கள். மற்றெல்லா வழக்குரைஞர்களும் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஒரு சில வழக்குரைஞர்கள் மட்டும் நீதிபதிகளால் உள்ளே அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த அவமதிப்பு வழக்கில் இம்பிளீட் செய்யவும், திரு.ஏ.கே.ராமசாமியை விசாரணை செய்யவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். 75 வயது முதியவரான திரு.ராமசாமியை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நிற்க வைத்தே விசாரித்திருக்கிறார்கள். வழக்குரைஞர்களை கிரிமினல்களை விடவும் கீழாக நடத்துகின்ற நீதிபதிகளின் இந்த நடவடிக்கைகள் குறித்து பார் கவுன்சில் ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன்?

நீதியரசர் கர்ணன், தலைமை நீதிபதிக்கு எதிராக தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையில் அதற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாமல் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தூற்றப்பட்டது ஏன்? உண்மையில் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்க வேண்டியது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தைதான். இது குறித்து பார் கவுன்சில் அக்கறை கொள்ளாதது ஏன்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்தோடுதான் நீதி வழங்கிக் கொண்டிருப்பதாக தத்து, டெல்லியிலிருந்து திடீரென்று அறிவிக்கிறாரே, இப்படி ஒரு சூழல் இருப்பதாக தலைமை நீதிபதி கவுல், இதுநாள்வரை பார் கவுன்சிலுக்கு ஏன் புகார் அனுப்பவில்லை? இந்த அபாண்டமான குற்றச்சாட்டு பற்றி பார் கவுன்சிலின் நிலை என்ன?

செப்டம்பர் 14-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு தானே முன்வந்து எடுத்துக்கொண்ட ரிட் மனுவில், ஒரு காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ள சில கருத்துகளையே, வழக்குரைஞர்கள் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகச் சித்தரித்துள்ளது. அம்பேத்கர் சிலையின் கீழ் அமர்ந்து அசைவ உணவு சாப்பிடுவது கூட வழக்குரைஞர்களின் குற்றமாக அதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு எதிரான சாதிய காழ்ப்புணர்ச்சியும், தீண்டாமை வெறியும் கொண்ட இக்கருத்தைக் கண்டித்து பார் கவுன்சில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மவுனம் காப்பது ஏன்?

தற்போது தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்காக தலைமை நீதிபதியின் அறைக்குள் போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதைப் போல, உதவி ஆணையர் பட்டியலிட்டுள்ள 14 குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குரைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்திருக்கலாமே! அவ்வாறின்றி, ஒரு காவல்துறை உதவி ஆணையரின் கருத்துகளை அவருடைய கீழ்நிலைக் காவலர் வழி மொழிவது போல, உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு வழிமொழிவதும், இதே கண்ணோட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் சென்னை வழக்குரைஞர்களுக்கு எதிராக கருத்துரைக்கப்படுவதும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக பார் கவுன்சிலுக்குத் தெரியவில்லையா?

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சாதி ரீதியாகச் செயல்படுவதாகவும், வளாகத்துக்குள் சாதி ஊர்வலம் போவதாகவும் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய் என்பது பார் கவுன்சிலுக்கு தெரியாதா? உண்மையில் நீதிமன்ற வளாகத்துக்குள் சாதி, மத சார்புகளைக் கொண்டு வருபவர்கள் நீதிபதிகள்தான். கடந்த 16-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் தூண்டுதலின் பேரில்தான் சில வழக்குரைஞர்கள் சாதி ரீதியாக வந்து கலகம் செய்து மோதலை உருவாக்க முயன்றனர். அவர்களில் சிலர் கத்தியும் வைத்திருந்தனர். சென்னை, மதுரை வழக்குரைஞர்கள் இந்த ஆத்திரமூட்டலுக்கு பலியாகாமல் அமைதி காத்தனர் என்பதே உண்மை.

நீதிபதிகளின் ஊழலை எதிர்த்துப் பேரணி நடத்தியதன் காரணமாக, மதுரை வழக்குரைஞர் சங்கத்தை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப் பட்டிருக்கிறது. தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு நடத்துவதுதான் இதற்கு காரணம் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதை எந்தவொரு வழக்குரைஞரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பார் கவுன்சில் இதனை ஏற்றுக் கொள்கிறதா?

நீதித்துறை ஊழல் என்ற பிரச்சினை பார் கவுன்சிலின் அக்கறைக்கு உரியது இல்லையா? கிரானைட், தாதுமணல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், எந்த நீதிபதி வழங்கிய எந்தத் தீர்ப்பு முறைகேடானது என்று வழக்குரைஞர்கள் குறிப்பாக குற்றம் சாட்டி ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட முன்னாள் நீதியரசர் சந்துரு, ஒரு நாளேட்டில் கட்டுரையே எழுதியிருக்கிறார். இருந்தும் இது குறித்து ஒரு உள்ளக விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிடவில்லை. இவை குறித்த பார் கவுன்சிலின் கருத்து என்ன?

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு அவர்கள், தற்போதைய தலைமை நீதிபதி தத்துவுக்கு எதிராக ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் நேர்மையோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாத அவர், தமிழக வழக்குரைஞர்களின் மாண்பு குறித்து பழித்துப் பேசுவதை பார் கவுன்சில் ஏற்றுக் கொள்கிறதா?

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும் அ.தி.மு.க வழக்குரைஞர்களும் நடத்திய அவமதிப்புகள் எழுதி மாளாதவை. இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை விமரிசிப்பவர்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதையும், தலைவர் பதவியைத் தனது தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்வதையும் கவுன்சில் ஆதரிக்கிறதா?

வழக்குரைஞர்களின் வாக்குகளைப் பெற்று பார் கவுன்சில் பதவியில் அமர்ந்திருக்கிறீர்கள். இதன் காரணமாக வழக்குரைஞர்களின் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறும் விசயங்களை அதிகபட்சம் போனால் தவறுகள் என்று மட்டுமே வரையறுக்க முடியும். ஆனால் நீதிபதிகள் செய்து கொண்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம். இன்று வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நீங்கள் கூடியிருக்கிறீர்கள். வழக்குரைஞர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க எப்போதாவது நீங்கள் வழக்குரைஞர்களைக் கூட்டியதுண்டா? பார் கவுன்சில் என்பது வழக்குரைஞர்களின் பிரதிநிதியா, நீதிபதிகளின் டவாலியா? சிந்திப்பீர்.

வழக்குரைஞர்கள்,
சென்னை உயர்நீதிமன்றம்.
கைபேசி எண் – 98428 12062

சென்னை,
காலை 9 மணி, 24-09-2015