வழக்கறிஞர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்…. தீர்வு காண தஞ்சை வாரீர்!
மதிப்பிற்குரிய வழக்கறிஞர்களே!
வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எல்லை மீறி போய்க்கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். “மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர், செயலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” என்றுதான் இப்பிரச்சனை சென்ற மாதத்தில் தொடங்கியது. பிறகு, “சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டுவரலாம்” என்று தலைமை நீதிபதி தெரிவிக்க, மாநில அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி தடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து, ‘சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரங்கெட்டுப் போனதாக’ உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தொடர்பேயில்லாத ஒரு வழக்கில் பேச, அது நாளேடுகளில் தலைப்புச் செய்தியானது. மறுகணமே, தமிழக பார் கவுன்சிலைப் புறக்கணித்துவிட்டு, அனைத்திந்திய பார் கவுன்சில் 14 மதுரை வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து அறிவித்தது. “மதுரை வழக்கறிஞர் சங்கத்தை காலி செய்யவேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் போன்ற பல ஊர்களின் சங்கங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதங்கள் அனைத்தும் வழக்கறிஞர் சமூகத்தையே கிரிமினல்கள் போலச் சித்தரித்தன. “வழக்கறிஞர்கள் நீதிபதிகளையோ போலீசையோ விமர்சித்து எந்த ஊடகத்தில் பேட்டி கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம் தொலைக்காட்சியிலேயே அறிவித்தார்.
“நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே மாலை 7 மணிக்கு மேல் இருக்கக்கூடாது” என்றும், “வளாகத்துக்கு உள்ளேயோ வெளியேயோ துண்டறிக்கை, சுவரொட்டி, கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது” என்றும் கருத்துரிமையை முற்றிலுமாகப் பறித்து உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார்.
இந்த நிலைமைகள் குறித்து விவாதிக்க திருச்சி வாசவி மகாலில் செப்டம்பர் 27 அன்று கூட்டம் நடத்தினோம். அதற்கு ஏற்பாடு செய்த திருச்சி பார் அசோசியேசன் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு பார் கவுன்சில் விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பியிருக்கிறது. அதில் கலந்து கொண்ட பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது, தமிழகத்துக்கும் தமிழக வழக்கறிஞர்களுக்கும் எதிராக ஒரு மிகப்பெரிய சதித்திட்டம் தில்லியில் தீட்டப்பட்டு அமுல்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
”நீதித்துறை ஊழலைப் பற்றி பேசக்கூடாது!
நீதிபதிகளின் நியமனத்தைப் பற்றி பேசக்கூடாது!
முறைகேடான தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது!
கை கட்டி வாய் பொத்தி அடிமைகளாய் நடந்துகொள்ள வேண்டும்”
என தில்லியிலிருந்து நம்மை அச்சுறுத்துகிறார்கள்.
இதற்கு நாம் பணிந்துவிட்டால் பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் முந்தைய காலத்துக்கு நாம் தள்ளப்படுவோம். அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, சங்கம் சேரும் உரிமை போன்ற உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை பெற்றுத்தரும் வழக்கறிஞர்களாகிய நாம், இன்று அந்த உரிமைகளை பறிகொடுத்திருக்கிறோம். நாம் அன்றாடம் புழங்குகின்ற நீதிமன்ற வளாகத்தில் நமது பிரச்சனைகளுக்கான துண்டறிக்கை கூட விநியோகிக்க கூடாதாம். இதைவிட பெரிய அவமதிப்பு வெறென்ன இருக்கிறது?
“மேலும் 2000 வழக்கறிஞர்களைக் கூட நீக்குவோம்” என தமிழக வழக்கறிஞர் சமூகத்தையே அடக்கி ஆள நினைக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.
இது சுயமரியாதை மண் என்பதைக் காட்டுவோம். தவறாமல் தஞ்சைக்கு வாருங்கள்!
நாள் : 11-10-2015 ஞாயிறு நேரம்: காலை 10 மணியளவில்
இடம் : ஆர்.எம்.வி இராஜசேகர் திருமண மண்டபம், வ.உ.சி நகர், தஞ்சாவூர்

தகவல்,
வழக்கறிஞர்கள், கீழமை நீதி மன்றங்கள் – தமிழ்நாடு
தொடர்புக்கு : 98945 68144