
தமிழ் நாடு ஜெயலலிதா அரசு போலிசால் நள்ளிரவில் கடத்திச் செல்லப்பட்டு தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்குழு பாடகர் தோழர் கோவனை விடுதலை செய்யக் கோரி லண்டன் இந்தியத் தூதரகம் முன்பாகப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
09-11-2015 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற இப் போராட்டத்தைப் பறை விடுதலைக்கான குரல் என்ற குழு ஏற்பாடு செய்திருந்தது.
கோவனை விடுதலை செய்யக் கோரியும், இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாடு அரசுகளைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்தி பறை இசை முழக்கத்துடன் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளக்கத்தைக் கோரினர். கோவன் கைது தொடர்பாகக் கூறியதும், ‘இந்தியாவில் எந்த இடத்திலும் காரணமின்றிக் கைதுசெய்யப்படுவதில்லை’ எனக் கூறிவிட்டு உள்ளே சென்று கதவுகளை மூடிக்கொண்டனர்.
பறை விடுதலைக்கான குரல் அமைபினர் கோவனை விடுதலை செய்யுமாறு கோரும் அறிக்கை ஒன்றை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க முற்பட்ட போது, அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
நாகரீகமற்ற வார்த்தைகளால் திட்டிய தூதரகப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை தாக்க முற்பட்டு, பின்னர் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார்.
இந்தியத் தூதரக அதிகாரிகளின் நடவடிக்கைகளை அவதானித்த பாதுகாப்பிற்கு நின்ற பிரித்தானியப் போலிஸ் அதிகாரிகள் போராட்டத்திற்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
அதன் பின்னர் பாதுகாப்பு நுழைவாசல் ஊடாக உள்ளே சென்ற போலிஸ் அதிகாரி ஒருவரிடம் அறிக்கையை ஏற்றுக்கொள்ள அதிகாரி ஒருவரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தூதரகப் பாதுகாப்பு அதிகாரிகளால் மூவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நிழல் படம் எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
போலிஸ் அதிகாரியும் அறிக்கை சமர்ப்பிக்கும் போது அருகில் நின்றிருந்தார்.
போராட்ட முடிவில் அறிக்கை சமர்ப்பிததற்கு தன்னைச் சாட்சியாக கருதிக் கொள்ளலாம் என்றும் பதில் தராவிட்டால் தன்னைச் சாட்சியாக அழைக்கலாம் என்றும் போராட்டக்காரர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
தகவல்
பறை – விடுதலைக்கான குரல்,
லண்டன்