Saturday, May 10, 2025
முகப்புசெய்திநவம்பர் புரட்சி தினம் - நம்மை உறங்க விடாது !

நவம்பர் புரட்சி தினம் – நம்மை உறங்க விடாது !

-

நவம்பர் புரட்சி நாள் கொண்டாட்டங்கள் – 1

1. திருவள்ளூர் (கிழக்கு)

நவம்பர் 7 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக நவம்பர் 7 புரட்சி தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில இணைச் செயலர் தோழர் சுதேஷ்குமார் எழுச்சியுரையாற்றினார்.

SRF தொழிலாளர் சங்கத்தின் இணைச்செயலர் தோழர் பாலகிருஷ்ணன், அதே சங்கத்தில் துணைத்தலைவரும், தி.மு.க.வின் கொடுங்கையூர் வட்டச் செயலாளருமான தோழர் துரைசாமி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கவிஞர் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

நவம்பர் 7 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய விழாவில் தோழர் விகந்தர் தலைமையுரையாற்றினார். தனது தலைமையுரையில் ரஷ்யப் புரட்சியின் மகத்துவம் குறித்தும், இன்று நமது நாட்டில் உழைக்கும் மக்களின் மீது ஏவப்பட்டு வரும் கடும் அடக்குமுறை, சுரண்டல் குறித்தும் விளக்கி, “இந்த இழிநிலையை மாற்றிட இந்திய நாட்டில் புரட்சியை நடத்தி முடிப்பதுதான் ஒரே தீர்வு. இதற்கு தொழிலாளி வர்க்கம் ஓரணியில் திரள வேண்டும்” என்ற அறைகூவல் விடுத்தார்.

தலைமையுரையைத் தொடர்ந்து நவம்பர் புரட்சி பாடல் பாடப்பட்டது. பு.ஜ.தொ.மு.-வின் SRF மணலி கிளையின் இணைச்செயலாளர் தோழர் மெய்யழகன் மற்றும் அச்சங்கத்தின் உறுப்பினர் தோழர் ராஜா முறையே டாஸ்மாக் குறித்தும், விவசாயிகள் கொல்லப்படுவதைக் குறித்தும் கவிதை வாசித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

குழலிசை, யாழிசையைக் காட்டிலும் இனிமையானது மழலை மொழி என்ற குறளுக்கேற்ப தனது மழலை மொழியினால் திருக்குறளை வாசித்துக் காட்டினாள் மழலை மொழியினாள் யுவராணி.

மறுகாலனியாக்க சீரழிவுக் கலாச்சாரத்தின் விளைவாக தானுண்டு, தன் வேலையுண்டு, தன் குடும்பமுண்டு என்ற சுயநல வாழ்க்கையை தேட அலைபவர்கள்நவம்பர் 7 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் உணரும்படி, “தொழிலாளி வர்க்கமே விழித்தெழு, உனக்கான விடிவு புரட்சியில் மட்டுமே” என்ற தலைப்பில் லைட்விண்ட் ஸ்ரீராம் கிளை உறுப்பினர் தோழர் முனுசாமி உரையாற்றினார்.

தொடர்ந்து, “நீதி அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் சிறுவர் நாடகம் நடத்தப்பட்டது. அநீதியான தீர்ப்புக்கு எதிராக கண்ணகி சாபமிடுவதும், தன் தவறை உணர்ந்து அரசன் மாண்டு போவதும் காட்சியாக நடத்தப்பட்டது. சிலப்பதிகார காவியம் பிற்போக்குத்தனமானதாக இருப்பினும், அன்று தனது தவறை உணர்ந்து அரசன் மாண்டு போவதையும், இன்று மக்களை அடிமைகளாகவும் தங்களை மன்னர்களாகவும் நீதிபதிகள் கருதி சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதையும், ஒப்பிட்டு பேசினர். அச்சு பிறழாமல் வசனம் பேசி அனைவரையும் கவர்ந்தனர் சிறுவர்கள்.

நவம்பர் 7 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்திருவிளையாடல் வசனத்தை தற்போதைய சூழலில் பொருத்தி கட்சிகளையும், பகுதி ஆலைகளையும் அம்பலப்படுத்தி பேசினர் இரு தோழர்கள். தொடர்ந்து பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடுங்கையூர் வட்டச் செயலாளர் துரைசாமி தோழர் கோவன் கைதைக் கண்டித்தும், ஜெயாவின் பாசிசத்தை அம்பலப்படுத்தியும் பேசினார். ஒவ்வொரு குடும்பமும் டாஸ்மாக் சாராயத்தினால் சீரழிக்கப்படும் காட்சியை கண்முன் நிறுத்தும் வகையில் நாடகத்தை நடித்துக் காட்டினர் மாவட்டப் பிரச்சாரக் குழுவினர்.

தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவிஞர் சுரேஷ், நவம்பர் புரட்சியின் மகத்துவத்தையும், ஆசான் லெனினின் தனித்துவத்தையும் தனக்கை உரித்தான கவித்துவமான மொழியில் விளக்கி உரையாற்றினார்.

நவம்பர் 7 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் தேர்தலையொட்டி ஒவ்வொரு ஓட்டுப்பொறுகிக் கட்சியும் கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து மக்களை ஏய்த்து வரும் வேளையில் நாம் “புரட்சி, புதிய ஜனநாயகம், கம்யூனிசம்” என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டிய அவசியமென்ன என தோழர் ம.சி.சுதேஷ்குமார் துவங்கினார்.

அரசின் பாசிச நடவடிக்கைகளையும், கோவன் கைதையும் அம்பலப்படுத்தி தோழர் கோவன் கைது என்பது ஊடகங்கள் பேசுவதைப் போல வெறும் கருத்துரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல, புரட்சிகர அமைப்புகளையும், அது சார்ந்துள்ள இணையதளத்தையும் முடக்கும் முயற்சியின் நடவடிக்கை என்பதை விளக்கினார். பற்றி படர்ந்து வரும் இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் திரண்டு, சுரண்டலற்ற ஒரு சமுதாயத்தை படைக்க வேண்டும். இதற்கு புரட்சிதான் தீர்வு என உரையாற்றினார்.

nov7-ndlf-tvlr-coll-16

இந்துமதவெறியை அம்பலப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்து மாவட்ட பிரச்சாரக் குழுவின் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசு பொருட்களை தோழர் துரைசாமி மற்றும் பாலகிருஷ்ணன் வழங்கினர்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஆனந்த்பாபு நன்றியுரையைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் விழா நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விழாவில் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கி)மாவட்டம்
9445389536

2. தேனி

தேனிமாவட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் சுவரொட்டிகள் தயாரித்து மாவட்டம் முழுக்க ஒட்டப்பட்டது. பகுதித் தோழர்கள் ஒருங்கிணைந்து போடி, தேவாரம், கூடலூர், லோயர்கேம்ப் மற்றும் என்.டி.பட்டி ஆகிய கிளைகளில் மொத்தம் 7 இடங்களில் கொடியேற்றப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் அழையா விருந்தாளியாக போலிசும்-உளவுப்பிரிவும் திரண்டு வந்தனர். இறுதியில் அறைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தோழர் கோவன் கைது மற்றும் கைதைக் கண்டித்து தோழர் மருதையனின் வீடியோ உரையும் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.

இறுதியில் பேசிய தோழர்.மோகன், “புரட்சி என்பது பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பின் மூலம் நடத்தப்படுவது. ஆனாலும் மக்களின் புரட்சிகர நடவடிக்கைக்கு சித்தாந்த ரீதியில் தலைமை தாங்கி வழி நடத்த புரட்சிகர கட்சி இல்லாமல் புரட்சி முழுமைபெறாது. ரஷ்யாவிலும்,சீனாவிலும் அப்படியொரு கட்சி இருந்ததால்தான் புரட்சி சாத்தியமானது. அத்தகைய புரட்சிகர நேர்மை-கட்டுப்பாடு-ஒழுக்கம்-சித்தாந்த தெளிவுள்ள புரட்சிகர கம்யூனிஸ்டுக் கட்சியின் ஊக்கமுள்ள தோழர்களாக, முன்னணிப் படையாக நாம் வளரவேண்டும். நம்மை வளர்த்துக்கொள்ளவும் மறுவார்ப்பு செய்துகொள்ளவும் இப்புரட்சிதினத்தில் உறுதி ஏற்றுக்கொள்வோம்” என்று பல்வேறு பகுதிப்போராட்டத்தின் அனுபவம் வாயிலாக விளக்கிப் பேசினார்.

சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி

3. கோவை

தொழில் நகரமான கோவையில் தொழிலாளி வர்க்க விடுதலை நாளான நவம்பர் புரட்சி தின விழா கொண்டாட பல மண்டபங்களை அணுகியும் கிடைக்கவில்லை. முதலாளிக்கு முதுகு சொரிய முன்னங்கால் இரண்டையும் தூக்கிய நிலையில் ஆல் டைம் அலர்ட்டாக இருக்கும் கோவை காவல் துறை தொழிலாளிகளின் செயல்பாடுகளை முடக்குவதிலும் அலர்ட்டாகத்தான் இருக்கிறது என்று தெரிந்தது.

இருப்பினும், மாவட்ட சங்க அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின விழா மாட்டுக்கறி பிரியாணியுடன் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இணைந்து நடத்திய விழாவிற்கு ம.க.இ.க மாவட்டச் செயலர் தோழர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார்.

தோழர் சித்தார்த்தன் தனது தலைமையுரையில் நவம்பர் புரட்சியின் சிறப்புகளை எடுத்துரைத்தார். புரட்சியை நடத்துவதற்கு ஒவ்வொரு தோழரும் அடைய வேண்டிய அகநிலை புறநிலை மாற்றங்களை வலியுறுத்திப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பு.மா.இ.மு தோழர் உமா தனது உரையில், நவம்பர் புரட்சி என்பது தொழிலாளர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்றும் இந்தியாவில் பார்ப்பன பாசிசத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும் கூறினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலர் தோழர் நித்தியானந்தன் தனது உரையில் ரசியாவில் நடந்த நவம்பர் புரட்சியை இங்கும் நடத்த வேண்டும் என சூளுரைத்தார்.

தோழர் ஜெகநாதன்
தோழர் ஜெகநாதன்

மண்டல சங்க தோழர் ஜெகநாதன் மக்கள் மொழியில் ஆளும் வர்க்கத்தை நையாண்டி செய்தார். ‘வேத காலத்தில் மாட்டை வெட்டி நெய்யில் வறுத்து சாப்பிட்டால் நேராக மோட்சத்திற்கு போவார்கள். ஆனால் உழைக்கும் மக்கள் தங்கள் வயிற்றுக்கு சாப்பிட்டால் நரகத்துக்குதான் போவார்கள்’ என்று வேதத்தில் சொல்லப்பட்டதை எடுத்துரைத்து, “இது குறித்து தந்தை பெரியாரிடம் கேட்டதற்கு பார்ப்பான் சொர்க்கத்துக்கு போவது குறித்தும் எனக்கு தெரியாது. நம்ம ஆள் நரகத்துக்கு போவது குறித்தும் எனக்கு தெரியாது. ஆனால் இருவரும் அடுத்த நாள் கழிப்பறை போவது உறுதி” என்று கூறியதை பகிர்ந்து கொண்டு தனது மொழியில் கலகலப்பூட்டினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில், “நவம்பர் புரட்சியை கொண்டாடுவதன் மூலம்தான் ஒரு கம்யூனிஸ்டு தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியும், ஊக்கம் பெற முடியும். ஓட்டுச் சீட்டு போலிக் கம்யூனிஸ்டுகள் பெறுவதற்கு நவம்பர் புரட்சியில் எதுவுமில்லை. அவர்கள் நவம்பர் புரட்சி கொண்டாடுவது அதனை கேவலப்படுத்துவது ஆகும். அதனை நீர்த்துப் போகச் செய்வது ஆகும்.

தோழர் விளவை ராமசாமி
தோழர் விளவை ராமசாமி

நாம் இப்போது எட்டு மணி நேர வேலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு ரசியத் தொழிலாளர்களும் நமது முந்திய தலைமுறையும் போராடி எட்டுமணி நேர வேலையை பெற்றுக் கொடுத்தார்கள். நாம் போராடாமல் அனுபவித்த காரணத்தால் இப்போதைய தலைமுறை எட்டு மணி நேர வேலையை இழந்து கூடுதல் நேரம் பணிபுரிகிறார்கள். நாம் நன்றியுடையவர்கள் என்றால் நவம்பர் புரட்சியின் நாயகர்கள் வழியில் போராட வேண்டும். கருங்காலிகள் தான் நன்றி கொன்றவர்களாக இருப்பார்கள்.

இப்போது கட்டமைப்பு நெருக்கடி கால கட்டத்தில் உள்ளோம். தலைமைச் செயலர் தொடங்கி கீழே மணியக்காரன் என்கிற கிராம அதிகாரி வரை அனைவரும் லஞ்சம் வாங்குகிறார்கள். லஞ்சம் இல்லாமல் அரசின் ஆளும் நிறுவனங்கள் இயங்குவதில்லை. இனிமேலும் இப்படித்தான் இருக்கும் இதனை அகற்றி நமக்கான மக்கள் அதிகாரத்தை நிறுவும் வரை இந்தக் கொடுமையிலிருந்து நாம் தப்ப முடியாது.

இந்த மக்கள் அதிகாரத்தை நிறுவ என்ன செய்தாய் என நவம்பர் புரட்சி நம்மை கேட்கிறது. இதற்கு நம் செயல்பாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும். வெறும் பேச்சு தேவையில்லை.

பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம்
பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம்

ஆமாம் எனக்கு அனைத்தும் தெரியும். உங்களை விட கூடுதலாகவே தெரியும் படித்திருக்கிறேன் என்று சிலர் கூறுவார்கள். அது உண்மைதான். இத்தனையும் தெரிந்த பிறகு இதை மாற்ற என்ன செய்தாய் ? அமைப்புக்கு என்ன செய்தாய் என்பதுதான் கேள்வி. அமைப்பு இல்லாவிட்டால் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒன்றுமே இல்லை. அமைப்பு இல்லாவிட்டால் நாம் பூஜ்யம்தான். எனவே, அமைப்புக்கு வேலை செய்யாத ஒருவர் நடைமுறையில் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்பவர்தான். இதுவே நாம் சுயபரிசீலனை செய்து நமது வேலை முறையை மாற்ற வேண்டும்.

சிவகங்கை சிறுமி தாத்தா, தந்தை, தனயன் எனத் தொடங்கி ஐ‌ஏ‌எஸ், ஐ‌பி‌எஸ் வரை வரை எல்லோரும் கற்பழித்து நாசம் பண்ணியுள்ளார்கள். ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு பாடல் பாடியதற்காக கைது செய்யும் காவல்துறை கற்பழிப்பு நடந்தும் கம்முன்னு இருக்கிறது. இது நடந்த பிறகும் நாம் அமைதியாக இருந்தால் என்ன பொருள். இந்தக் கொடுமைகளுக்கு துணை போவதாகத்தானே அர்த்தம்.

nov7-kovai-poster

சிவகங்கை சிறுமி விவகாரம் கட்டமைப்பு நெருக்கடியின் எடுப்பான வடிவம். இப்போது பின்நவீனத்துவம் பேசியவர்கள், தலித்தியம் பேசியவர்கள், பெருங்கதையாடல் என கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போய்விட்டார்கள். இந்த செயலாற்ற நிலையைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். இந்த செயலற்ற தமிழ் சூழலில் கட்டமைப்பு நெருக்கடி எனும் வாளேந்தி களத்தில் ஊக்கத்துடன் நிற்பவர்கள் நாம் தான். இதற்கு காரணம் நாம் நவம்பர் புரட்சியின் நாயகர்களின் வாரிசுகள்.

புரட்சிகர பாடல்கள்புரட்சிகர பாடல்கள்
புரட்சிகர பாடல்கள்

நாம் ஒரு தடவைதான் வாழ்கிறோம் எனவே முடிந்த வரை அதிக இன்பமாக வாழ வேண்டும் என்பதன் பொருள் என்ன ? ஒருவன் குடிப்பதன் மூலம் அதிக இன்பம் அடைய முடியாது. குவார்ட்டரில் ஆரம்பித்து ஆஃப், புல் என்று போனால் இன்பம் அடைய முடியாது. மட்டைதான் ஆக முடியும். விதவிதமான சாப்பாட்டில் இன்பம் காண முடியாது. ஒருவன் எத்தனை ஜிலேபி சாப்பிட முடியும். இது மட்டித்தனம். மனிதனுக்கு இது அழகல்ல. மனிதன் எப்போது இன்பமாக இருக்கிறான் ஒரு குறிக்கோளை அடைய மனிதன் ஆர்வத்துடன் விரும்ப வேண்டும். இந்த விருப்பம் அமைதியாக இருக்க விடாவிட்டால், இந்த ஆர்வம் காரணமாக அவன் அநேகமாக உறங்க முடியாமல் தவித்தால் அப்போது இந்த விருப்பத்தின் நிறைவேற்றத்தால் அவனுக்கு உண்டாகும் இன்பத்தில் உலகம் அனைத்துமே ஒலி வீசுவதாக அவனுக்கு தோன்றுகிறது. அவன் காலடியில் நிலம் பாட்டு இசைக்கிறது.

இந்த இன்பத்தை நாம் அடைய வேண்டுமானால் நமது நாட்டிலும் நவம்பர் புரட்சி நடத்த வேண்டும் எனும் விருப்பம் கொள்ள வேண்டும். இந்த விருப்பம் நம்மை அமைதியாக இருக்க விடாது. நம்மை தூங்க விடாது. கூட இருக்கும் தோழர்களை தூங்க விடாமல் தொல்லைபடுத்தும். இந்த விருப்பத்தின் நிறைவேற்றத்தால் நமக்கு உண்டாகும் மகிழ்ச்சியை எந்த நுகர்பொருட்களாலும் தர முடியாது. இந்த இன்பத்தில் நமக்கும் உலகம் ஒலி வீசுவதாக மாறும். நமது காலடியில் பூமி ஒரு பாட்டை நமக்காக இசைக்கும். இதை அனுபவிக்க இந்த நவம்பர் புரட்சி நாளில் சபதமேற்போம்” எனக் கூறி முடித்தார்.

இடையில் பகுதிக் குழுவினரின் புரட்சிகரப் பாடல்களும், தோழர் மே தினன்-ன் பறையிசையும் தோழர் கன்னிகாபாரதியின் கவிதை மொழிதலும் கூட்டத்தினரை மேலும் உற்சாகமூட்டியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாவட்ட செயலர் தோழர் திலீப் நன்றி கூற விழா நிறைவடைந்தது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

புதுச்சேரி

நவம்பர் 07 ரசியப் புரட்சி நாள்! புரட்சி! புதிய ஜனநாயகம்! கம்யூனிசம்!

புதுவை நவம்பர் 7 நிகழ்ச்சிவம்பர் 7 – 1917, ரசியாவில் சோசலிசப் புரட்சியின் மூலம், பரந்து பட்ட உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டி மண்ணில் ஒரு சொர்க்கத்தைக் காட்டிய நாள். அழுக்குச் சட்டைக்காரர்கள் ஆட்சி செய்வார்களா என்ற முதலாளித்துவ ஏளனத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த நாள். 300 ஆண்டுகள் முதலாளித்துவ சுரண்டலால் நடக்காத சாதனையை 30 ஆண்டுகளில் சோசலிச உணர்வால் செய்து காட்டிய நாள்! மொத்தத்தில் உலகின் ஒவ்வொரு மனிதனும் பேசி, உணர்ந்து, மகிழ்ந்து, ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டிய உன்னதத் திருநாள். அத்திருநாளின் மேன்மையையும், இன்று நாடே கார்ப்பரேட் பயங்கரவாதத்திலும், காவி பயங்கரவாதத்திலும் சிக்குண்டு சின்னா பின்னமாவதைத் தடுக்கவும், மாற்று சோசலிச சமுதாயம் தான் என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்தும் நோக்கத்திலும், புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இணைப்பு சங்கங்கள் செயல்படும் வில்லியனூர் பகுதியில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்திற்கு புதுச்சேரி பு.ஜ.தொ.முவின் மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பு.ஜ.தொ.மு.வின் மாநில இணை செயலாளர் தோழர். லோகநாதன் விளக்கவுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர் சரவணன் தனது தலைமையுரையில், ரசியப் புரட்சியில் உன்னதங்களை விளக்கியதோடு, “அதை ஒரு கம்யூனிஸ்டு என்ற வகையில் தற்பெருமையாக மட்டும் சொல்லவில்லை என்பதையும், சோசலிச ரசியாவைப் பற்றி, தந்தை பெரியார், நேரு, காமராசர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் சென்று அதன் பெருமைகளை சொல்லியுள்ளனர்” என்பதையும் விளக்கினார்.

விளக்கவுரையாற்றிய தோழர் லோகநாதன் தமது உரையில், “இன்று உலகமே பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமையாகி உள்ளது. இவர்களுக்கு அடிமை சேவகம் செய்வதைத்தான் வளர்ச்சி, வல்லரசு என வாய்ச்சவடால் அடிக்கின்றனர் ஓட்டுக்கட்சிகள். மறுபுறம் மதவெறியைத் தூண்டி மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து வைத்துள்ளனர். மேலும், இன்று நாடே பாசிசமயமாகி வருகிறது. விரும்பியதை உண்ண முடியவில்லை. தேவையானதைப் பேசமுடியவில்லை, நல்லதைப் பாட முடியவில்லை என்றொரு அச்சத்தில் மக்கள் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஓட்டுக் கட்சிகளோ, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் வகையில் சட்டங்களைத் திருத்துவதும், திட்டங்களைப் போடுவதும் தான் தனது வேலையாகக் கொண்டுள்ளனர். அதற்கு சாதி மதப் பிரிவினைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மேலும், நாடு சோசலிசமான பிறகு எதற்கு தேவாலயங்கள், மத பீடங்கள் என்று கேட்ட கட்சித் தோழர்களிடம், மனிதன் தனக்குத் தேவையானவற்றைப் பெறமுடியாத போது, மன்றாட கடவுள் தேவைப்படுகிறார். அவருக்குத் தேவையான அனைத்தையும் அரசு செய்யும் போது, கடவுள் வேண்டாத பொருளாகி விடுவார். அப்போது இந்த கட்டிடங்கள் எதற்கு என்று, மக்களே அகற்றிவிடுவார்கள் என்று லெனின் சொன்னார். ரசியாவில் சோசலிசத்திற்கு முன்னர் இருந்த இனவெறிப் படுகொலைகள், சோசலிச காலகட்டத்தில் நிகழவில்லை. மாறாக, ஒவ்வொரு மனிதனின் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையிலே ஆட்சி நடந்தது. அப்படிப்பட்ட சோசலிச சமுதாயத்தை உருவாக்க எஃகுறுதி கொண்ட அமைப்பு வேண்டும்” என்பதை ஆணித்தரமாக உணரும் படி பேசினார்.

இறுதியில், உழைக்கும் மக்களின் பண்பாட்டு உணவான மாட்டுக்கறி விருந்து பரிமாறப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 9597789801.

4. தஞ்சாவூர்

தஞ்சையில் நவம்பர் புரட்சி நாள்க்கள் கலை இலைக்கியக் கழகம் தஞ்சை கிளை சார்பில் 98வது நவம்பர் புரட்சிநாள் கொண்டாடப்பட்டது. தஞ்சை மானாேஜீப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் ம.க.இ.க தாேழர்.காந்தி தலைமையில் செயலர் தாேழர் இராவணன் கொடி ஏற்றி உரையாற்றினார். மக்கள் அதிகாரம் தோழர் தேவா வாழ்த்துரை வழங்கினார். தோழர் கோவன் கைது, தோழர் காளியப்பன் கைதுக்காக தேடுதல் நடவடிக்கை, காவல்துறை நெருக்கடி, அனுமதி மறுப்பு இந்த சூழ்நிலையில் நவம்பர் புரட்சி நாள் நிகழ்சிகளில் தோழர்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகத்துடன் கலந்துகொண்டு நவம்பர் புரட்சி நாள் சபதம் ஏற்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை கிளை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க