privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாபொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!

பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!

-

ந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு கடந்த செப். 20-ம் தேதி முதலாக நடைமுறைக்கு வந்துள்ளது. 2006-ம் ஆண்டில் மன்னராட்சிக்கு எதிரான நேபாள மக்களின் பேரெழுச்சிக்குப் பின்னர், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு, மன்னராட்சி முறை 2008-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த புதிய அரசியலமைப்புச் சட்டம், தற்போது அரசியல் நிர்ணய சபையில் அறுதிப் பெரும்பான்மையுடன் இறுதியாக்கப்பட்டுள்ளது. நேபாள ஐக்கிய மா-லெ கட்சியின் தலைவரான பிரசாத் சர்மா ஒளி, நேபாளத்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

10-nepalவிகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் அரசியல் கட்சிகள் போட்டியிடும் தேர்தல் முறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள், குடிமக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுதல், மைய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி – என மூன்று மட்டங்களில் அரசாங்கம் இயங்குதல் முதலான அம்சங்களைக் கொண்டுள்ள இப்புதிய அரசியல் சட்டம், நேபாளத்தை மதச்சார்பற்றக் குடியரசாக அறிவித்துள்ளது.

இதுநாள்வரை, உலகின் ஒரே இந்து நாடு என்று நேபாளத்தைப் பெருமையுடன் குறிப்பிட்டு வந்த இந்துத்துவ சக்திகள், இப்போது அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் நேபாளத்தை மதச்சார்பற்ற குடியரசாகப் பிரகடனம் செய்துள்ளதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளன. கேவலம், பசுபதிநாதர் கோயில் பூசாரியை மாற்றியதற்கே நேபாளத்தில் தலையிட்ட இந்தியா, இப்போது தன்னை மதச்சார்பற்ற நாடாக நேபாளம் அறிவித்துள்ள நிலையில் சும்மா இருக்குமா?

இச்சட்டம் இறுதியாக்கப்பட்ட பிறகு, மோடி அரசு தனது வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரை நேபாளத்துக்கு அனுப்பி அரசியலமைப்புச் சட்டம் பிரகடனம் செய்யப்படுவதை நிறுத்தி வைக்க நிர்ப்பந்தித்தது. அது பலனளிக்காமல் போனதால், இந்திய எல்லையை ஒட்டிய நேபாளத்தின் தென்பகுதியில் வாழும் மாதேசியினரைக் கொண்டு கலகத்திலும் சீர்குலைவு நடவடிக்கைகளிலும் இந்திய அரசு இறங்கியது.

மாதேசிகள் எனப்படுவோர் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நேபாளத்தின் தென்பகுதி எல்லையில் குடியேறிய இந்திய வம்சாவளியினர். இவர்களில் பெரும்பான்மையோர் நிலப்பிரபுத்துவ ஆதிக்க சாதியினராவர். இன்றும் கூட உ.பி., பீகார் பகுதிகளில் இரத்தவழி உறவுகளையும் வர்த்தக உறவுகளையும் கொண்டுள்ளவர்கள். ஏற்கெனவே மாதேசிகளைக் கொண்டு நேபாள அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல வழிகளிலும் சீர்குலைத்து வந்த இந்திய அரசு, இப்போது அவர்களைக் கொண்டு நேபாள அரசியல் சட்டத்துக்கு எதிரான கலவரங்களைத் தூண்டிவிட்டு வருகிறது. மாதேசிகள் நடத்திவரும் கலவரங்களினால் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் மாண்டு போயுள்ளனர்.

மாதேசிகள் அடர்த்தியாக வாழ்ந்துவரும் பகுதிகள், நேபாளத்தின் புதிய மாகாணங்கள் பலவற்றிலும் பிரிக்கப்பட்டு, அவர்கள் நாடாளுமன்றத்திலும் அரசு அதிகாரத்திலும் முக்கிய பங்கு வகிக்க முடியாதவாறும், நேபாளிகளே அதிக அளவு பிரதிநிதித்துவம் பெறும் வகையிலும் புதிய அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதேசி மக்களைக் கொண்டு நேபாள அரசியலில் தலையிட்டுத் தனக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் இந்தியாவின் நோக்கமாக உள்ளது. இதன்படியே, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லை அகற்ற வேண்டுமெனவும், மாதேசிகளுக்கென தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டுமெனவும் கருப்புக் கொடியேற்றி அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை எரித்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் கலவரங்களை நடத்திய மாதேசிகள், இந்திய எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலைகளை மறித்து சரக்குப் போக்குவரத்தை முற்றாக முடக்கி வைத்துள்ளனர்.

நேபாள இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
“நேபாளத்தில் தலையிடாதே! பொருளாதாரத் தடை விதித்து அச்சுறுத்தாதே!” என்ற முழக்கத்துடன் இந்திய அரசுக்கு எதிராக நேபாள மாணவர்கள் – இளைஞர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

தமது நாட்டுக்குள் நுழையும் அனைத்து அந்நிய வாகனங்களுக்கும் முழுப் பாதுகாப்பு அளிப்பதாக நேபாள அரசு உறுதியளித்துள்ள போதிலும், மாதேசிகள் நடத்தும் போராட்டம் காரணமாக இந்தியாவிலிருந்து சரக்கு வாகனங்களை அனுப்ப முடியவில்லை என்று நியாயவாதம் பேசிக்கொண்டு சரக்கு போக்குவரத்தை இந்திய அரசு வேண்டுமென்றே முடக்கி வைத்துள்ளது. இதனால் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதலானவை கிடைக்காமல் நேபாள மக்கள் தத்தளிக்கின்றனர். அமெரிக்க மேலாதிக்க வல்லரசு கூட ஒரு நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை, தனது சூப்பர்-301 சட்டத்தைக் காட்டியோ அல்லது ஐ.நா. மன்றத்தின் மூலமோ அறிவித்து விட்டுத்தான் செகிறது. ஆனால், நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தை வரவேற்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் அந்நாட்டின் மீது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை விதித்து இந்தியா அச்சுறுத்தி வருகிறது.

இப்பொருளாதாரத் தடையை நீக்கக் கோரி நேபாள துணைப் பிரதமர் கமல் தாபா, டெல்லிக்கு வந்து 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும், நேபாளத்தின் மீதான இந்தியாவின் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடை இன்னமும் நீக்கப்படவில்லை.

தெற்காசிய மேலாதிக்க வல்லரசாக உள்ள இந்தியா, நேபாள விவகாரத்திலும், இலங்கை, மாலத்தீவுகள், பூடான் முதலான அண்டை நாடுகளின் உறவிலும் பெரிய அண்ணன் அணுகுமுறையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. அது இப்போது உச்சத்துக்குச் சென்றுள்ளது. தங்கள் நாட்டுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ள நேபாளத்துக்கு உள்ள சுயாதிபத்திய உரிமையை அலட்சியப்படுத்தி, தனது இந்துத்துவ மற்றும் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப நேபாளம் இருக்க வேண்டுமென நிர்பந்திக்கும் வகையில்தான் மோடி அரசின் அணுகுமுறை உள்ளது.

மாதேசி விவகாரத்தை வைத்து மோடி அரசு மூக்கை நுழைப்பதை, இந்தியா தேவையில்லாமல் தலையிடுவதாகவும், வரம்பு மீறுவதாகவும் நேபாள ஊடகங்கள் கடுமையாக எதிர்த்துச் சாடி வருகின்றன. நேபாளத்தில் ஒளிபரப்பாகும் இந்தியத் தொலைக்காட்சிகளை அந்நாட்டு ஆபரேட்டர்கள் நிறுத்தியுள்ளனர். இந்தியாவின் இப்பொருளாதார முற்றுகையானது, நேபாள சாமானிய மக்களிடம் ஆத்திரத்தைக் கிளறிவிட்டு, இந்தியாவின் தேசியக் கொடியும் மோடியின் உருவப் பொம்மைகளும் தீயிடப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. “சார்க்” நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியான வாகனப் போக்குவரத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கு நேர்மாறாக இந்தியாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று சாடுகிறார், வங்கதேச வர்த்தகத்துறை அமைச்சர். நேபாளத்தில் தலையீடு செயாதே என்று இந்தியாவின் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பிரபல கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவுத்துறையினரும் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டு இந்திய அரசின் இம்மேலாதிக்க நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர்.

ஆனாலும், நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டுக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருள் போக்குவரத்தை அண்டை நாடுகள் தடை செயக் கூடாது என்ற அனைத்து நாட்டு பொதுவிதிகளுக்கு எதிராகவே இந்தியா நடந்து கொள்கிறது. ஏற்கெனவே பின்தங்கிய நிலையிலுள்ள நேபாளத்தில் கடந்த ஏப்ரலில் நிலநடுக்கப் பேரழிவு ஏற்பட்டு அந்நாட்டின் மக்கள் இன்னமும் மறுவாழ்வின்றி தத்தளிக்கின்றனர். குளிர்காலம் நெருங்கும் சூழலில் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடை விதித்து, நேபாளத்தை இந்து நாடாக்கு, இல்லையேல் பட்டினியிலும் குளிரிலும் செத்துத் தொலை என்று எச்சரிக்கிறது இந்திய மேலாதிக்க அரசு. அநீதியான, மனிதநேயமற்ற இப்பொருளாதாரத் தடையையும் நேபாளத்தின் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தையும் எதிர்த்து இந்திய குடிமக்கள் அம்பலப்படுத்திப் போராடுவதுதான், இந்தியாவின் பொருளாதார முற்றுகையால் பரிதவிக்கும் நேபாள மக்களுக்கு உதவும் உண்மையான நிவாரணப் பணியாக இருக்க முடியும்.

– குமார்.

_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________