
மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கும் அரசிடமே கெஞ்சிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பது இன்றைக்கு துலக்கமான உண்மையாக வந்து நிற்கிறது. கனிமவளக் கொள்ளையாக இருந்தாலும் சரி கார்ப்பரேட் பகற் கொள்ளையாக இருந்தாலும் சரி அரசு நிர்வாக உறுப்புகள் மக்களின் எதிர்நிலை சக்திகளாக தன்னை அறிவித்துக் கொண்டு நிற்கின்றன.
ஆளும் வர்க்கத்தின் கடைநிலை ஊழியரான தலையாரி கூட, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கட்டளையை நிறைவேற்ற முடியாதென இந்த அரசமைப்பின் முற்றிய இறுதி நிலையை எடுத்துக்காட்டிவிட்டார்.
நியாயம் வழங்க வேண்டிய நீதிமன்றங்களோ ஊழல் புழுக்களால் புழுத்து நெளிகின்றன. இந்தியா முழுமையும் நீதிபதிகள் விலைபோனவர்களாக இருக்கின்றனர். நாட்டின் காவல் துறை இந்த ஆளும் வர்க்கத்தின் ஏவல் விலங்காக தன்னை அறிவித்துக்கொண்டு ஊழிக்கூத்து புரிகின்றன.
மத்தியில் ஆளும் மோடியின் பாசிசக் கும்பல் ஏகாதிபத்தியத்திற்கும் மறுகாலனியத்திற்கும் நாட்டை அடகு வைப்பது என்ற நிலையிலிருந்து நேரடியாக விற்றுத்தீர்க்கும் விபச்சாரக்கும்பலாக நிற்பதுமட்டுமல்ல தனக்கே உரித்தான இந்துத்துவ பார்ப்பனியத்தின் கோரப்பற்களால் மனிதக் கறியைச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் நாட்டின் சனநாயக சக்திகள், உழைக்கும் மக்களோடு சேர்ந்து நிற்கிற வரலாற்றுக் கடமை எதைவிடவும் முதன்மையாக இருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் நம் நாட்டின் மாணவ சமுதாயம், தம்மை மக்கள் போராட்டங்களோடு இணைத்துக்கொண்டு சமரசமற்ற போராட்டங்களை நாடெங்கிலும் தொடுத்து வருகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மக்கள் போராட்டங்களில் மாணவர்களின் பங்கு நேரிடையானதாகவும் அரசை அம்பலப்படுத்துவதிலும் முன்னணியில் வந்து நிற்கிறது.
இது எதைவிடவும் ஆபத்து என்பதை ஏகாதிபத்திய-மோடி பாசிசக் கும்பல் நன்கு உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் இயக்கம், சக்தியாக மாறுவதைத் தடுப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் இதுவரை இல்லாத ஒடுக்குமுறைகளை ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ (giude lines) என்பதன் பெயரில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் அமல்படுத்திக்கொண்டிருக்கிறது.
இதன் ஒரு தொடர்ச்சியாக மிகச் சமீபத்தில் பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி), “உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் உள்ளேயும் வெளியேயும் மாணவர்களின் பாதுகாப்பு” எனும் தலைப்பில் சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இச்சுற்றறிக்கையின் பல்வேறு அம்சங்களான “கல்வி நிறுவனங்களின் சுற்றுச் சுவர்களுக்கு முள்வேலி கம்பியிடுவது, மூலை முடுக்கெங்கும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவுவது, பயோமெட்ரிக் வருகைப்பதிவு, காவல் சாவடிகளை வளாகங்களுக்குள் அமைப்பது, தொடர்ச்சியான பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு” என மாணவச்சமூகம் இதுவரை பெற்றுவந்த உரிமைகளையும் உயர்கல்வி நிறுவனங்களில் சனநாயகத்தையும் சகோதரத்துவத்தையும் தட்டிப்பறிப்பதாக அமைந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக யு.ஜி.சி, சென்ற மாதம் அனுப்பிய மற்றொரு சுற்றறிக்கை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் லிங்தோ கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறது.
லிங்தோ கமிட்டியின் பரிந்துரைகள் எப்படி இந்திய கல்வித்துறையை ஏகாதிபத்திய கண்பார்வையின் கீழ் கொண்டுவருகிறது என்பதையும் எப்படி மாணவர்கள் அரசியலற்ற தக்கைகளாக மாற்றப்படுகின்றனர் என்பதையும் சென்ற கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம்.
இது ஒருபுறமிருக்க, யு.ஜி.சியின் இந்த இரு சுற்றறிக்கைகளுக்கு முன்னும் பின்னும் சரி, கடந்த மேமாதம் முதல் தற்பொழுது வரை நாட்டின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இன்றைய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கொந்தளிப்பான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இப்போராட்டங்களுக்குப் பிற்பாடு பல்வேறு பல்கலைக்கழகங்கள், குறிப்பாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை மற்றும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி நிறுவனங்கள் அடுக்கடுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுவருகின்றன.
ஏற்கனவே இந்நாட்டின் பொதுப்புத்தியில் மாணவர்களின் நிலைப்பாடு, ஊடகங்களால் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின் ஒருபகுதி இன்றைக்கும் முனைப்பாக நடந்துவந்தாலும் கூட தன் கையை மீறிப் போய்க்கொண்டிருக்கும் மாணவ இயக்கங்களின் போராட்டக்குணத்தை ஒடுக்க வேண்டிய மரணபீதியில் இருக்கிறது ஆளும் வர்க்கம். இதன் பின்னணியில் மாணவர் போராட்டங்களை நசுக்கும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் வழிகாட்டு நெறிமுறைகள் எப்படி ஒன்றை ஒன்று தொடர்புபடுத்தி நிற்கின்றன? அரசியல், பொருளாதார அரங்கில் இது முன்வைக்கும் அபாயம் என்ன? என்பது குறித்து அறிய வேண்டியது அவசியமாகும்.
**********************
27-06-2015 முதல் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை ஓர் இயக்கமாக திரட்டிக்கொண்டு (PUSM) துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் ஊழல் மற்றும் அராஜகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தனர். பல்கலைக்கழக வளாகங்களில் மனித உரிமை அத்துமீறல், அதிகார துஷ்பிரோயோகம், போலி பயோ-டேட்டா, பிற ஆய்வுத்தரவுகளை காப்பியடித்தல் என்று சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் ஊழல்கள் விவரிக்க இயலாதவை. குறிப்பாக, பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்தியிருக்கும் துணைவேந்தருக்கான தகுதியே (பத்து ஆண்டுகள் பேராசிரியராக இருத்தல் அவசியம்) சந்திரா கிருஷ்ணா மூர்த்திக்கு கிடையாது. விதிகளை புறக்கணிக்கும் அளவிற்கு பல்கலைக்கழகத்திலும் இன்றுவரை பார்ப்பனியமே கோலோச்சி வருகிறது. இதற்கெதிராக ஒன்று திரண்ட மாணவர்களுடன் பாண்டிச்சேரி பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பும் (PUTA) சேர்ந்து கொண்டது.

மாணவர்கள், தாங்கள் வாங்கப்போகும் பட்டம் அதற்குத் துளியும் தகுதியே இல்லாத மோசடியாளரின் கையொப்பத்துடன் வருவதை ஏற்க இயலாது என்பதில் உறுதியுடன் நின்று போராடினர். இந்நிலையில் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் பொருட்டு மாணவர்கள் போராடுவது பல்கலைக்கழக ஒழுங்கு நெறிகளுக்கு எதிரானது என்றும் அப்படிப்போராடுகிற மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என 24-07-2015 அன்று சுற்றறிக்கை வெளியிட்டது பல்கலைகழக நிர்வாகம்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் “துணைவேந்தரின் போலி பயோடேட்டாவோ அல்லது அவர் ஆய்வுத்தரவுகளைக் காப்பிடியடித்தார் என்பதோ மாணவர்களின் பட்டங்களையோ படிப்பையோ பாதிக்காது” என திமிராக அறிவித்து உலக அரங்கில் பார்ப்பனியத்தை நிலைநாட்டி இந்தியக் கல்வித்துறையை அசிங்கப்படுத்தியது. அதாவது, இது மேல்மட்டத்தில் நடக்கும் விவகாரம் இதில் மாணவர்கள் தலையிட வேண்டியதில்லை. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல் தொனியே ஸ்மிரிதி ராணியிடம் இருந்து வெளிப்பட்டது..
********************

செக்ஸ் நடிகரும் ஆர்.எஸ்.எஸ் வெறியருமான கஜேந்திர சவுகானை புனே திரைப்படக் கல்லூரியின் இயக்குநராக மோடி கும்பல் நியமித்திற்கு எதிரான அக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் நூறு நாட்களையும் தாண்டிவிட்டது. இம்மாணவர்களுக்கு ஆதரவாக கலைத்துறையினரும் இதர மாணவர் அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் போராடிவருகின்றனர். ஆனால் பெருந்திரளான இப் போராட்டங்களைக் கண்டுகொள்ளாத மோடி அரசு போராடிய மாணவர்களை மூர்க்கமாக ஒடுக்கியது. சங்கப்பரிவாரங்களால் மாணவர்கள் நேரிடையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகினர். கல்லூரி நிர்வாகம் போராடிய மாணவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் விடுதி வளாகத்திலேயே நடுநிசியில் முன்னணியாளர்களைக் கைது செய்தும் மூன்று மாணவிகள் உட்பட முப்பது மாணவர்களுக்கு பிடிவாரண்டு கொடுத்தும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் புனே திரைப்படக்கல்லூரியை காவிமயமாக்குவது மட்டும் நின்றுவிடவில்லை. ஏகாதிபத்திய அடியொற்றி கீதா-கிருஷ்ணன் கமிட்டி அறிக்கையின் படி இக்கல்லூரியை தனியார்மயமாக்கும் பாலிவுட் வணிகமயமாக்கும் திட்டத்தையும் முன்னெடுக்கிறது.
********************

மூன்றாவதாக ஊத்திக் கொடுக்கும் அம்மாடாஸ்மாக்கிற்கு எதிராக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தமிழ்நாடெங்கிலும் அடுக்கடுக்கான போராட்டங்களைத் தோற்றுவித்தது. மக்கள்திரள் முன் அரசை முழுவதும் அம்மணமாக்கினர் மாணவர்கள். இப்போராட்டங்களின் தொடர்ச்சியின் ஒருபகுதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது மேலாண்மைத் துறை மாணவர்கள் தமிழ்நாட்டில் மதுஒழிப்பைக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். இப்போராட்டத்திற்கு அம்மாணவர்களின் துறைத்தலைவர் பேராசிரியர் மணிவண்ணனும் ஆதரவு தெரிவித்திருந்தார் மேலும் பல்கலைகழகத்தில் நடைபெறுகிற ஊழல்களுக்கெதிராக மாணவர்கள் போராடியிருந்தனர். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற 90 ஆசிரியர்கள் நியமனத்தில் ஒரு ஆசிரியருக்கு 20 லட்சம் வீதம் பணம் வாங்கிகொண்டு பணிநியமனம் நியமனம் செய்யப்பட்டதாக போராசிரியர் மணிவண்ணன் அம்பலப்படுத்தியிருந்தார். இவற்றின் விளைவாக பல்கலைக்கழக நிர்வாகக்குழு, பேராசிரியர் மணிவண்ணனை துறைத்தலைவர் பதியிலிருந்து நீக்கியதோடு அல்லாமல் போராடிய மாணவர்களை இடைநீக்கவும் செய்தது. இதற்குப் பிற்பாடு, மேற்கொண்டு மாணவர்கள் போராடாமல் இருக்கவும் அரசியல் போர்க்குணத்தைக் காயடிக்கும் விதத்திலும் 10-08-2015 அன்று புதியவழிகாட்டு நெறிமுறைகள் என்பதன் பெயரில் பல்கலைக்கழக வளாகத்தில் எல்லாவிதமான அரசியல் செயற்பாடுகளும் தண்டனைக்குரியது என்றும் மாணவர்கள் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொள்ளக்கூடாது என்றும் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
**************************
பார்ப்பனியத்தின் கோட்டையான சென்னை ஐஐடியில், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் (அ.பெ.ப.வ) தடைசெய்தததிற்க்கு எதிராக நாடெங்கிலும் நடைபெற்ற போராட்டங்கள் பெரும் கிளர்ச்சியாக மாறி ஆளும் வர்க்கத்தைக் கிலிபிடிக்க வைத்தது. மக்கள் திரளின் பருண்மையான போராட்டத்தின் காரணமாக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான தடையை நீக்கம் செய்த ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம், தற்பொழுது அடுக்கடுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்பதன் பெயரில் மாணவர்களின் போராட்டக் குரல்வளையை நெரித்துக்கொண்டு நிற்கிறது.
அ.பெ.ப.வ தடைநீக்கம் செய்யப்பட்ட பிற்பாடான காலத்தில் தன்னிச்சையான மாணவர் குழுக்கள் உருவாவதற்கும் இயங்குவதற்கும் சாத்தியமேயில்லாத ஒழுங்குமுறைவிதிகளை விதித்திருக்கிறது அவாள் நிர்வாகம். குறிப்பாக, முக்கியமான விதிகளுள் ஒன்று “புதிய மாணவர் கூட்டமைப்பு இயங்குவதை ஐ.ஐ.டி டீன் எதிர்த்தால், டீனின் முடிவை மாணவர் விவகாரக்குழுவில் (SAC) 75% ஓட்டுக்களைப் பெற்றிருப்பதன் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.” என்கிறது. ஆனால் நடைமுறை யதார்த்தத்தில் எந்த ஒரு தன்னிச்சையான மாணவர் குழுவும் 75% ஓட்டுக்களைப் பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. அதே சமயம் இந்துத்துவ நடவடிக்கைகள் மட்டும் தன்னிச்சையான மாணவர் குழுக்களின் தேவையே இல்லாமல் அவாள் நிர்வாகத்தின் துணையுடன் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.
சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மற்றொரு ஒழுங்குவிதி, மாணவர் குழு நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் டீன் அலுவலகத்திற்கு குறைந்தது பதினான்கு நாட்களுக்கு முன்னமே அக்குழுவிற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல் ஆசிரியர் மூலமாக தெரியப்படுத்தவேண்டும் என்பதோடு எந்தவொரு நிகழ்வும் விதிகள் மற்றும் அரசியல் சாசனத்தை மீறக்கூடாது என்று சொல்கிறது. இந்த விதி அப்பட்டமாக மாணவர்களின் கருத்துரிமையை நசுக்கும் பாசிசமாகும். சான்றாக மாட்டுக்கறி புரளிக்காக இந்துத்துவக் காலிகள் இந்நாட்டின் சாமானியனைக் கொன்றதை எதிர்க்க வேண்டுமென்றால் ஒன்று அவர் படுகொலை செய்யப்படுவது தீர்க்கதரிசனமாக 14 நாட்களுக்கு முன்னமே நமக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லது இந்நாட்டின் பார்ப்பனியம் விதித்திருக்கும் பதினாறாம் காரியநாளில் கருத்து தெரிவிக்கலாம். இச்சமூகத்தைப் பீடித்திருக்கும் பாசிச நெருக்கடி இதைவிட வேறு என்னவாக இருக்கமுடியும்?
இதில் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது மேற்கண்ட நான்கு துலக்கமான எடுத்துக்காட்டுகளிலும் மாணவர்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள மட்டும் போராடவில்லை. மாறாக, இந்நாடு எதிர்கொள்ளும் அரசபயங்கரவாதத்திற்கும் ஏகாதியபத்தியத்திற்கும் எதிராக மக்கள் சார்பாக தங்கள் குரலை உரத்து பதிவு செய்கின்றனர். திரைப்படக்கல்லூரி மாணவர்கள் காவிமயமாக்கல் மற்றும் தனியார்மயத்திற்கு எதிராகவும், அ.பெ.ப.வ மாணவர்கள் பார்ப்பனியம் மற்றும் மறுகாலனியக் கொடுமைகளை எதிர்த்தும் சென்னை பச்சையப்பா மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அம்மா டாஸ்மாக்கிற்கு எதிராகவும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தரின் அராஜகத்திற்கு எதிராகவும் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் கொண்டுவரப்படும் ஒழுங்குமுறை விதிகளின் அடுத்தகட்ட விளைவுகள் என்னவாக இருக்கும்? இந்த இடத்தில் சமூகத்தின் பொதுப்புத்தியில் இருத்தப்படும் சில நச்சு வாதங்களைக் கவனிப்போம்.
காலேஜ்க்கு ஸ்டூடண்ட் எதுக்குப் போறான்? படிக்கத்தானே போறான்? அங்கே அரசியலுக்கு இடமுண்டா? என்று கேட்பவர்கள் இருவகையினர். முதல்வகையில் வருபவர்கள் இந்துத்துவக் காலிகள். லிங்தோ கமிட்டியின் பரிந்துரைகளைக் காட்டியே கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் போராட்டம் கூடாது என்று சொல்பவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக அரசியல் செய்து இந்துத்துவத்தை பல்கலைக் கழகங்களில் திணிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான்.
சான்றாக அ.பெ.ப.வ தடைசெய்யப்பட்ட பொழுது ஆர்.எஸ்.எஸ் மற்றும் வலதுசாரி பாசிஸ்டுகள் லிங்தோ கமிட்டி பரிந்துரைகளை முன்வைத்தே மாணவர்கள் அரசியல்மயமாக்கப்படக்கூடாது என்று கொக்கரித்தனர் (எ.கா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஆதித்யா ரெட்டி, ஆர்கனைசரில் அம்பா சரண் வைசிஷ்த் போன்ற கைக்கூலிகள்). இந்தவகையில் ஏகாதிபத்திய விசுவாசியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஏகாதிபத்தியத்தோடு ஈயும் பீயுமாக இருந்து தன் வாலை ஆட்டுவதோடு நில்லாமல் தனக்கான இந்துத்துவ நிகழ்ச்சி நிரலில் வாய்நீரை ஒழுகவிட்டு நிற்கின்றன.
இரண்டாவது வகையில் வருபவர்கள் மாணவர் போராட்டங்களை கொச்சைப்படுத்துகிற மேட்டிமைவாத நடுத்தரவர்க்கம். இவர்கள் தான் டிசிபிளின் இஸ் மஸ்ட், தி சோ கால்டு ஸ்டூடன்ஸ் பூயுச்சர் வில் பி ஸ்பாயில்டு என்கிறார்கள். ஆனால் யதார்தத்தில் இன்றைக்கு பல்கலைக்கழகங்கள் கொண்டுவந்திருக்கிற வழிகாட்டுநெறிமுறைகள் மற்றொரு சங்கதியையும் நமக்கு புட்டு வைத்துவிடுகின்றன.
இன்றைய நிலையில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் கல்வியே கேள்விக்குள்ளாகும் வகையில் வகைதொகையின்றி கல்வி நிறுவனங்களின் அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டுவருகின்றன. சென்னை ஐ.ஐ.டி உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடோட்கர் கமிட்டியின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு கல்விக்கட்டணம் பெற்றோர்களின் சக்தி மீறி போய்விட்டது. என்.ஐ.டி யில் பி.டெக் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் 2.15 லட்சம் ரூபாயாக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. ஐ.ஐ.டி யிலும் இதே தொகையை அமல்படுத்த பேச்சுவத்தைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் சமஸ்கிருதம், பசு புனிதம், என மதவாத அரசியல் செய்கிற ஆர்.எஸ்.எஸ் கும்பலோ, பெரும்பான்மையான “இந்துகளை” பாதிக்கின்ற கல்விகட்டண உயர்வை குறித்து வாய்திறப்பதில்லை. அதற்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.
சேவைத்துறைகளில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்க வகை செய்யும் WTO-GATS ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட உள்ளது. அதில் கல்வித்துறையும் அடக்கம். இனிமேல் காசு உள்ளவன் மட்டுமே படிக்க முடியும். அதே நேரத்தில் கல்வியை ‘இந்தியமயமாக்குதல்’ என்ற பெயரில் பார்பனியமயமாக்குவதை RSS ன் வழிகாட்டுதலின் படி தீவிரமாக செய்துவருகிறது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். அதாவது பார்பனீயமும் மறுகாலனியாக்கமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே செயல்படுகிறது. அந்தளவிற்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-பார்ப்பன கும்பலும் ஏகாதிபத்திய முகமைகளும் கூட்டுக்களவாணிகளாக, துரோகிகளாக நிற்கின்றனர்.
கல்விக்கட்டணம் மட்டுமின்றி மாணவர்கள் பயன்படுத்துகிற விடுதிகளிலிருந்து(2020 க்குள் ஐ.ஐ.டி சென்னை உள்ள மாணவர் விடுதிகளை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஐ.ஐ.டி நிவாகம் முடிவுசெய்துள்ளது) கழிவறை (சென்னை ஐ.ஐ.டியில் துப்புரவுப் பணிக்கு வழங்கப்பட்ட தனியார் ஒப்பந்தம் ஸ்மிருதி இராணியின் உறவினர் வகையிறா) வரை தனியார்மயத்தின் கோரமுகத்தை மாணவர்கள் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் போராட முனைகிற மாணவர்களை எதிர்கொள்ள இன்றைக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு, மூலைமுடுக்கெங்கும் கேமிரா கண்காணிப்பு கல்லூரிக்குள் போலீஸ் ஸ்டேசன் என்று போராடுகிற மாணவர்களை சட்டபடி ஒடுக்கவும், மாணவர்களின் சமூக அரசியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அவர்களை அரசியலறிவற்ற தக்கைமனிதர்களாக ஆக்குவதற்கும், முதலாளித்துவ இயந்திரத்தின் நட், போல்ட் ஆக, guide lineச், lyndoh recommendation ஆகியவற்றை நடமுறைப்படுத்துகிறது ஆளும் வர்க்கம். இதன் பின்புலத்திலிருந்தே மேற்சொன்ன மாணவர்களின் போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதற்கு மேலும் ஸ்டூடன்ஸ் ப்யூச்சர் வில் பி ஸ்பாயில்டு என்று பேசிக்கொண்டிருப்பவர்களின் முகாந்திரம் கைக்கூலித்தனமின்றி வேறு என்னவாக இருக்க முடியும்? நிதர்சனத்தில் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த நினைக்கிற இத்தகைய கூட்டத்திற்கு இருக்கிற பணபலம், புதுவசதிகள் கல்வி எனும் உரிமை தனியார்மயக்கொள்ளையால் பறிபோகிறதே என பார்க்கமாட்டார்கள். ஆனால் இத்தகையவர்களைக் கொண்டுதான் இன்றைக்கு டிவி விவாதங்கள், பத்திரிக்கை செய்திகள் என்று போய்க்கொண்டிருக்கின்றன.
மறுபுறத்திலோ மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இன்றைக்கு எதிர்கொள்ளும் நிச்சயமின்மை என்பது அவ்வளவு நிச்சயமான ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு பல்கலைக்கழக உறுப்புகளும் மாணவர்களும் இணக்கம் காணமுடியாதவர்களாக இருக்கின்றனர். மாணவர்களின் சொந்த அனுபவங்களும் படிப்பினைகளும் ஆளும் வர்க்க கட்டமைப்பு நெருக்கடியை தெளிவாக எடுத்துக்காட்டிவிட்டன. இதன் தொடர்ச்சியாகவே, மாணவர்களால் உழைக்கும் மக்களின் போராட்டங்களோடு தங்களை எளிதில் இணைத்துக்கொள்ளவும் முடிகிறது.
இதற்கு எதிரான ஆளும் வர்க்க மரணபீதியே வழிகாட்டுநெறிமுறைகள். இந்தவகையில் மாணவச் சமுதாயம் ஆள அருகதையற்ற அரசுகட்டமைப்பு நெருக்கடியை முச்சந்திக்கு கொண்டு வந்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?
– இளங்கோ