Friday, May 2, 2025
முகப்புசெய்திசென்னையை சுத்தம் செய்யும் தொழிலாளிகளின் துயரம் !

சென்னையை சுத்தம் செய்யும் தொழிலாளிகளின் துயரம் !

-

soolaipallam-flood-damages-photo-1சென்னை மழை வெள்ளத்தின் நிவாரணப் பணிகளில் முக்கியமானது கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணி. அடையாறு, கூவம் ஆற்றின் பகுதிகளிலும் அவற்றின் உட்பகுதிகளிலும், இன்னபிற பகுதிகளிலும் குப்பைகள் மலையாய் தேங்கியிருக்கிறது. இவை திடக்கழிவாக மட்டும் இல்லாமல் மக்காகி சேறு கழிவாக மாறியிருக்கிறது. வீட்டில் இருந்த பொருட்கள், மளிகை பொருட்கள், வெள்ளம் அடித்து வந்த பிளாஸ்டிக், தெர்மோகோல் கழிவுகள், பாதாளச் சாக்கடை கழிவுகள் அனைத்தும் எங்கெங்கும் நீக்கமற நிறைந்து அச்சுறுத்துகின்றன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தலையாய பிரச்சனையே வெள்ள நீர் வடிவதும், வீட்டையும், தெருவையும் சுத்தம் செய்வதுதான். குடிநீருக்கும், பாலுக்கும் கூட குறைந்தபட்ச வசதிகளை செய்யத் திணறும் தமிழக அரசு குப்பையை மட்டும் எப்படி அகற்ற முடியும்? அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் அம்மா ஆணைக்கிணங்க புயல் வேகத்தில் பணிகள் நடப்பதாக உறுமினாலும், தொலைக்காட்சிகளில் மக்கள் பேசும் கோபமும், அவலமும் கலந்த வார்த்தைகள் உண்மையை எடுத்துரைக்கின்றன.

குப்பையை அகற்றவில்லை என்றால் தொற்றுநோய் அபாயம் அடுத்து காத்திருக்கிறது என்று ஊடகங்கள் அவ்வப்போது பேசி வந்தன. குப்பைகளை அகற்றுவதில் என்ன பிரச்சினை?

சென்னையை சுத்தப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள் கணிசமானோர் இந்த ஒருவாரத்தில் பணிக்கு வர இயலவில்லை. ஏன்?

அவர்கள் அனைவரும் அடுக்கு மாளிகை குடியிருப்பில் வசிப்பவர்களில்லை. குடிசைப் பகுதிகளிலும், குடிசை மாற்று வாரிய வீடுகளிலும் வசிக்கும் ஏழைகள் அவர்கள். அதிகமும் அருந்ததி மக்களான இவர்களையும் சில தமிழினவாதிகள் ‘வந்தேறிகள்’ என்று வன்மத்துடன் விளிக்கின்றனர். இந்த ‘வந்தேறிகள்’ இல்லை என்றால் வந்தவர்கள் குந்தியிருக்கும் சென்னை மாநகரம் நாறிப்போகும்.

டிசம்பர் மாத கன மழையில் இந்த மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் குடிசைகளிலும், வீடுகளிலும் புகுந்த நீர் மற்ற மக்களுக்கு ஏற்படுத்திய அழிவை இங்கும் உறுதிபடுத்தியிருக்கிறது. அவர்களுக்கும் தகவல் தொடர்பு இல்லை, போக்குவரத்து இல்லை. ஒரு வாரம் ஆகியும் இன்று வரையிலும் கூட அவர்கள் பணிக்கு இயல்பாக திரும்பும் நிலை இல்லை.

அடுத்து இந்த மக்கள் எவரும் பணிக்கு உடன் திரும்பும் வகையில் அருகாமை பகுதிகளில் குடியமர்த்தப்படவில்லை. ஏழை மக்களான அவர்கள் மற்ற ஏழைகளைப் போல வாடகை குறைந்த வீடுகளைக் கொண்ட பகுதிகளை நோக்கித்தான் போக வேண்டும். அதனால் பணிக்கு பேருந்திலும், ரயிலிலும் நெடுநேரம் கடந்தே வரவேண்டும்.

அடுத்து மக்களின் கோபத்திற்கு ஆளான ஜெயா அரசு உடனே தமிழகத்தில் பல்வேறு நகராட்சி லாரிகளில் சுமார் 2000 நகரசுத்தி தொழிலாளிகளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறது. கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் அந்தந்த மாநகராட்சியின் ஓட்டை வண்டிகளில் இடுப்பெலும்பு முறிய பயணம் செய்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த லாரிகளின் முகப்பில் ஜெயாவின் படம் தாங்கிய பிளக்ஸ் பேனர்களுக்கு குறைவில்லை.

chennai flood cleaning workers (5)அந்தத் தொழிலாளிகளிடம் பேசிப் பார்த்தோம் சென்னையில் இப்படி ஒரு மக்கள் அவலத்தைக் கேட்ட போது வந்து உதவ வேண்டும் என்று அவர்களே தன்னார்வத்துடன் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள். வந்தவர்கள் ஆங்காங்கே பள்ளிகளில் தங்கியிருக்கிறார்கள். காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் பணி இரவு ஏழு, ஏட்டு வரை நீடிக்கிறது. வேலையின் அளவோ பிரம்மாண்டம். கடும் உடலுழைப்பு தேவைப்படும் இப்பணியில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு ஏதோ மஞ்சள் நிறக் கஞ்சிகளை பொங்கல் என்ற பெயரில் உணவாக அளிக்கிறது மாநகராட்சி நிர்வாகம். முழுநாளும் அசுர உழைப்பு செலுத்துவதற்கு சத்தான உணவு வேண்டும் என்பதைக் கூட அந்த தொழிலாளிகள் தயக்கத்துடன் தெரிவிக்கிறார்கள்.

நிவாரண உதவிகளை அளித்து வரும் தனியார் ஆர்வலர்கள், பகுதி மக்கள் அளிக்கும் தேநீர் அவர்களுக்கு உளவியல் ரீதியான உற்சாகத்தை அளிக்கிறது. ஒரு வார்டில் இருக்கும் தெருக்குப்பைகளை அகற்ற சுமார் அறுபது பேர் வேண்டும். உள்ளூர் தொழிலாளிகள் மற்றும் மாநகராட்சி வழிகாட்டுதல், உதவி இல்லாமல் மேலோட்டமான உத்தரவுகளை ஏற்று அவர்களே வேலை செய்கிறார்கள். இருப்பினும் இவர்கள் மட்டும் இந்தக் கழிவுகளை எப்படி அகற்ற முடியும் என்பது கேள்விக்குறி.

பல வீடுகள் மற்றும் தெருக்களில் சகதிகள் மற்றும் ஓரிரண்டு அடிகள் தேங்கியிருக்கிறது. இதை வெட்டி எடுத்து வாரிக் கொண்டு போக சரியான திட்டமிடலும், ஆட்பலமும், திறமையான நிர்வாகமும் வேண்டும். ஆனால் இங்கே வசதிக் குறைவான வாழ்வாதாரத்தை வைத்துக் கொண்டு சென்னை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற சேவையுள்ளம் கொண்ட தொழிலாளிகள் மட்டும்தான் இருக்கிறார்கள்.

நிவாரணப் பணிகளில் உதவ விரும்பும் நண்பர்கள் இந்த தொழிலாளிகளுடன் சேர்ந்து கொள்ளுமாறு கோருகிறோம். உணவுப் பொருட்களை இவர்களுக்கும் கொடுத்து வேலையிலும் அணிசேரும் போது ஏதோ கொஞ்சமாவது கழிவுகளை அகற்ற முடியும். ஏற்கனவே பல அமைப்புகள் குப்பைகளை அகற்றும் பணியை ஓரளவு செய்து வருகின்றனர். எனினும் இதை துப்புறவு தொழிலாளிகளின் பங்களிப்பு இன்றி முழுமையாக நிறைவேற்ற முடியாது. சென்னையின் வெள்ளம் பாதிப்பு குறைவான பகுதிகளில் கூட குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல இருக்கின்றது.

வேலை முடித்து விட்டு தங்கியிருக்கும் இடத்தில் கொசுக்களுடனும், குளிருடனும், போர்வையில்லாமலும் தூக்கமின்றி படுக்கும் தொழிலாளிகள் அடுத்த நாள் காலையில் சுறுசுறுப்புடன் வேலைக்கு கிளம்புகிறார்கள்.

எப்படி முடிகிறது?

“இந்த அழிவையும், மக்களின் துயரத்தையும் பார்க்கும் போது எங்கள் கஷ்டமோ இல்லை வசதிக்குறைவோ பிரச்சினை இல்லை.” என்கிறார்கள் தொழிலாளிகள்.

– வினவு செய்தியாளர்கள்