privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅடக்குமுறை காரணமாகத்தான் ஆதரவை தேடுகிறீர்களா ?

அடக்குமுறை காரணமாகத்தான் ஆதரவை தேடுகிறீர்களா ?

-

ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ?
இறுதி பாகம் ( வீடியோ மற்றும் கட்டுரை)

கூட்டுநடவடிக்கை பற்றி விமர்சனங்கள் சொல்பவர்கள், ‘இந்த அடக்குமுறை வந்ததனால் கட்சிகாரங்களை போய் பார்க்கிறீர்கள். மற்றபடி பிரச்சினைகளுக்கான கூட்டுநடவடிக்கைகளில் நீங்க எந்த காலத்திலும் ஈடுபட்டதில்லை’ என்று சொல்கிறார்கள்.

இப்படிச் சொல்வது, ஒரு வகையில் கொச்சைப்படுத்துவது. முதன்மையாக, உண்மைக்கு மாறானது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீசு தாக்குதல் நடந்தது. அதை எதிர்த்து கட்சிகளுடைய கண்டனம் வந்தது. தி.மு.க முதல் எல்லா கட்சிகளும் கண்டித்தார்கள். அது தேடிப் பெற்ற ஆதரவு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

kovan-kalaignar-meet-2கோவன் கைதுக்கு கண்டனம் எழுந்தது, எப்படி நடந்தது? கைதிற்கு தி.மு.க. தலைவர் முதலில் கண்டனம் தெரிவிக்கிறார். ஆங்கில ஊடகங்களில் தேசிய அளவில் மோடியின் சகிப்பின்மைக்கு எதிராக, கருத்துருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு சூழலில், “இங்கே ஒரு பாடலுக்காக ராஜதுரோகக் குற்றமா?” என்று சொல்லி ஆங்கில ஊடகங்களில் செய்தி வருகிறது. எல்லா கட்சிகளும் கண்டிக்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் செய்தி வருகிறது. இந்தக் கண்டனங்கள் எதுவும் ம.க.இ.க. தேடி வரவழைத்த கண்டனங்கள் அல்ல. அப்படி சொல்வது நேர்மையான முறையில் ஒரு அரசியல் கண்ணோட்டத்தோடு கண்டனம் தெரிவித்தவர்களையும் அசிங்கப்படுத்துவதாகும். இந்த கண்டனங்கள் எல்லாம் ‘டாஸ்மாக் என்ற கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பது., அதன்பால் இந்த அரசு கொண்டிருக்கிற அணுகுமுறை’ இதன் காரணமாக எழுந்ததே தவிர, அது ம.க.இ.க.விற்குக் காட்டப்பட்ட சலுகையுமல்ல.

அதோடு, கோவன் ராஜத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை சந்தித்திராத அடக்குமுறையும் அல்ல. சொல்லப்போனால், 1991-96 காலத்தில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட ராஜத்துரோக வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டிருக்கின்றன. 1987-90 வரையிலான காலகட்டத்தில் பல பொய்யான வெடிகுண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. வெறும் சுவரெழுத்துக்காக 9 மாதம் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில தோழர் காளியப்பன் உள்ளிட்ட 5 தோழர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். ராஜிவ் கொலைவழக்கு பிரச்சினையில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தடாவில் பல தோழர்கள் சிறையிலிருந்திருக்கிறார்கள். ஈழ அகதிகளை வெளியேற்றக் கூடாது என்பதற்காக அந்த காலகட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான தோழர்கள் மாதக்கணக்கில் சிறையில் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டங்களிலெல்லாம் விடுதலைக்காக நாங்கள் யாருடைய ஆதரவையும் கோரிப் பெற்றதில்லை. ஒருவேளை அவ்வாறு கோரியிருந்தால் அதில் தவறும் இல்லை. பெற்றதில்லை என்பது ஒரு உண்மை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

ஆனால், இதே காலகட்டத்தில் இங்கே ஜெயலலிதா ஆட்சி, அங்கே பாபர் மசூதி இடிப்பு – பார்ப்பன பாசிசத்தின் எழுச்சி என்ற காலகட்டத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் தொடங்கி, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். அந்தப் போராட்டங்களிலெல்லாம் தலித் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கூட்டு நடவடிக்கையாக எங்களோடு கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ஈடுபடுத்தியிருக்கிறோம். இது ஒரு உண்மை. இதே கருவறை நுழைவுப் போராட்டத்தை ஆதரித்து முரசொலி பல தலையங்கங்களை எழுதியிருக்கிறது. விடுதலை எழுதியிருக்கிறது. வேறு சில பத்திரிகைகள் எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் கோரிப்பெற்றவையல்ல. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் எழுதியவை. ஆகவே,இந்த உண்மைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு எந்த காலத்திலும் இவர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்று சொல்வது, மக்கள் கலை இலக்கியக் கழகத்துக்கு எதிரான ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடு. தமிழ் மக்கள் இசைவிழாவை விட கூட்டுநடவடிக்கைக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு தேவையில்லை. அது பல ஆண்டுகள் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்னாலே தில்லையில் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டம். அதிலே விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினர், திராவிடர் கழகம், குறிப்பிட்ட காலத்திற்கு மார்க்சிஸ்டு கட்சி உள்ளிட்டு பலர் அதிலே பங்கேற்றிருக்கிறார்கள் அவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது ஆகஸ்டு-31 அன்று எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இப்போது நாங்கள் பார்த்து சென்றுவிட்டு வந்த கட்சித் தலைவர்கள், மக்கள் நலக்கூட்டியக்கம், தே.மு.தி.க, தி.மு.க ஆகிய எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் அங்கே கலந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கோவன் கைதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் அவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

எங்கள் மீது அடக்குமுறை வந்ததினாலதான் போகிறோம் என்று சொல்வது உண்மையல்ல. உண்மை என்னவென்றால், யாரோடு கூட்டு நடவடிக்கைக்குப் போகலாம், போகக்கூடாது என்பதில் விமர்சனம் செய்பவர்களுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. தேர்தல் அரசியல் கட்சிகள் யாரோடும் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக்குப் போகக்கூடாது என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. அவ்வாறு கூறுவது உண்மைக்கு மாறானது. மாறாக, அந்நிய நிதியுதவி பெறுகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்பே இல்லாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக தனிநபர்கள் வைத்திருக்கின்ற பெயர்ப்பலகை அமைப்புகள் இவர்களோடு கூட்டு நடவடிக்கைக்குப் போவதில்லை. அப்படி ஒரு மக்கள் அடித்தளமோ, அல்லது நேர்மையான செயல்பாடோ இல்லாதவர்களுடன் ஒரு 50 பேர், 60 பேரை சேர்த்துக்கொண்டு கூட்டு நடவடிக்கை என்று ஈடுபடுவது கோரிக்கையையும் நிறைவேற்றாது. மக்களை ஏமாற்றுவதாகும். என்பதன் காரணமாக அதனை நாங்கள் செய்வதில்லை.

வேண்டுமானால், அவர்களோடெல்லாம் சேர்ந்து செய்ய வேண்டும் என்று கருத்துக் கொண்டவர்கள் அது சரியென்று வாதாடட்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்வோம்.

சிலர், ‘சிறிய அமைப்பு, அடக்குமுறை வந்திருக்கிறது. போய் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது’ என்ற கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒன்றும் தப்பில்லைதான். ஆனால், இது அப்படி கேட்கப்பட்ட ஆதரவு அல்ல. இது செயலுக்கான ஒரு அறைகூவல். அதற்காக அழைத்திருக்கிறோம். அடக்குமுறைக்கு அஞ்சி ஆதரவு தேடுகிறார்கள் என்று சொல்வது, ம.க.இ.க. வை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டுமென்று போராடுபவர்கள் மீது ஜெ. அரசு இப்படிப்பட்ட ஒரு அடக்குமுறையை செலுத்துகிறதே, அந்த உண்மையின் பால் கடுகளவும் அக்கறை இல்லாத அவர்களுடைய மனோபாவத்தைத்தான் காட்டுகிறது.

மேலோட்டமாக பார்க்கும்போது தேர்தல் புறக்கணிப்பு முழக்கத்தை வைத்திருக்கின்ற மக்கள் அதிகாரம், அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கோரிக்கைக்காக தேர்தல் கட்சிகளிடம் போய் ஆதரவு கேட்பது ஒரு முரண்பாடு போல தோன்றலாம். ஆனால், தேர்தல் புறக்கணிப்பு என்ற முழக்கத்தில்தான் மக்கள் கலை இலக்கியக் கழகமும் தோழமை அமைப்புகளும் இருக்கின்றன. டாஸ்மாக்கை மூடுவது என்ற ஒரு கோரிக்கையின் மீதான கூட்டு நடவடிக்கைக்காகத்தான் தேர்தல் அரசியல் கட்சிகளை அணுகியிருக்கிறோம்.

மற்றபடி அவர்கள் வந்தால் டாஸ்மாக்கை மூடுவார்கள், அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று யார் ஒருவருக்காகவும் ஓட்டு கேட்கப்போவதில்லை. நாங்கள் தேர்தல் புறக்கணிப்பைத்தான் பேசப் போகிறோம், பேசுவோம். இது யாரிடம் ஆதரவு கேட்கிறோமோ அந்தக் கட்சிகளுக்குத் தெரியும். ஆர்ப்பாட்டத்தில் இதுவரை கலந்து கொண்ட அந்தக் கட்சிகள் அனைவருக்கும் தெரியும்.

இது போலி ஜனநாயகம் என்பது மட்டுமல்ல, சொல்லிக்கொள்கிற ஜனநாயகம், ஜனநாயகம் என்கிற அமைப்பில் உள்ள நிறுவனங்கள், அவர்களே சொல்கிற சட்டங்கள், மரபுகள், விதிமுறைகள், நெறிகள் இவை எதையும் கடைப்பிடிக்காமல் தோற்று விட்டன, திவாலாகி விட்டன, காலாவதியாகி விட்டன என்பதைத்தான் மக்கள் அதிகாரம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அதற்கு ஆயிரம் சான்றுகள் இருக்கின்றன. சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்கள்தான் எல்லா குற்றங்களிலும் முன்வரிசையில் இருக்கிறார்கள். ஆர்.கே நகர் தேர்தலையோ, ஸ்ரீரங்கம் தேர்தலையோ எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாக் கட்சிகளையும் தேர்தல் புறக்கணிப்பை நோக்கித் தள்ளியது யார், ம.க.இ.க-வா தள்ளியது? புரட்சித் தலைவிதான் தள்ளினார். அப்படி ஒரு “புரட்சி” நடந்து கொண்டிருக்கிறது.

“ஜனநாயகம் என்ற இந்த போலி ஜனநாயகம் அதன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் நிற்கிறது. இற்று வீழ்ந்து விட்டது. இங்கே மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும், அது உடனடி கோரிக்கையாக இருக்கிறது” என்பதுதான் மக்கள் அதிகாரம் அமைப்பினுடைய நோக்கம்.

டாஸ்மாக்கை மூடுவது கூட கீழிருந்து மக்கள் அதிகாரத்தின் துணை கொண்டு, வலிமை கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரம் கூறுவது. அதற்குத் துணையாகத்தான் இந்தத் தேர்தல் கட்சிகள் இங்கே அழைக்கப்படுகிறார்களே அன்றி, அதற்கு மாற்றாக அல்ல. மக்கள் அதிகாரத்துக்கு அவர்களை உட்படுத்துவது என்பதுதான் இந்த கூட்டு நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் மேற்கொள்ளும் முயற்சி.

இப்போது கேள்வி கேட்பவர்கள் மீது ஒரு கேள்வி. இதை எதிர் விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்தக் கட்சித் திருடன். இந்தக் கட்சி திருடன். அவன் சரியில்லை. இவன் சரியில்லை. என்று தீர்ப்பளிப்பதற்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போது இந்த டாஸ்மாக் விசயத்தையே எடுத்துக் கொள்வோமே. இப்படித் தீர்ப்புகள் வழங்குபவர்கள் அதற்கு மேல் செயல்பூர்வமாக செய்தது என்ன?

யாரை நம்பத்தகாதவர்கள், நம்பத்தகாத கட்சிகள் என்று தீர்ப்பு வழங்குகிறார்களோ? அந்தக் கட்சியைச் சேர்ந்த கீழ்மட்டத் தொண்டர்கள் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள், அ.தி.மு.க. தொண்டன் உள்ளிட்டு. ஆற்றுமணல் கொள்ளைக்கெதிரான போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். எங்களோடு சிறைக்கு வந்திருக்கிறார்கள், அந்தத் தொண்டனை நம்புவதா, அல்லது எதையும் செய்யாமல் எதற்கும் வராமல், எல்லோர் மீதும் தீர்ப்பளிப்பவர்கள் மீது நம்பிக்கை வைப்பதா? யார் தன்னை செயலில் ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சமூக மாற்றத்தை சாதிப்பார்கள். தங்களையும் மாற்றிக் கொள்வார்கள். எந்த சமூக மாற்றமும் வேண்டாம். கூடாது, இருப்பதே நன்றாக இருக்கிறது. இந்த வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று கருதுகின்ற பிரிவினர்தான் “எல்லோரும் திருடன் சார் யாரும் நம்பாதீங்க” என்று பேசுபவர்கள். இந்த கூட்டு நடவடிக்கைக்கு போனோம் என்பதனால் அல்ல, பொதுவிலேயே அரசியல் விமர்சனங்களை ம.க.இ.க. எழுதும் போது, பல பேர் சொல்வதுண்டு, “ ஆமா, இப்போ இப்படி பேசுவீங்க. நாளைக்கு அதிகாரத்துக்கு நீங்க வந்தபிறகு இல்ல தெரியும்” என்பார்கள்.

சென்னை மாநகரத்தில் இருப்பவர்கள். பீச் தாம்பரம் மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது பேச்சு கொடுத்துப் பாருங்கள். “இவ்ளோ வெள்ளம் வந்திருக்குதே, அம்மா கவனிக்கலையே, கொடநாட்டுல போயி உட்கார்ந்துகிட்டாங்க” அப்படினு பேச்சை ஆரம்பிங்க. “என்ன சார் செய்ய முடியும்? மூனு மாசத்துல பெய்ய வேண்டிய மழை மூணு நாள்ல பெஞ்சிருச்சே” என்று ஜெயலலிதாவின் வசனத்தைப் பேசுவார்கள். அதை மறுத்து உரிய ஆதாரங்களை அடுக்கத் தொடங்கினால், ஒரு ஸ்டெப் தாண்டுவார்கள். “ஆமாமா ஒண்ணும் சரியில்லை சார். தி.மு.க.காரன் காலத்திலேயே இது ஆரம்பமாயிடுச்சி” என்று தி.மு.க ஆட்சிகால முறைகேடுகள் சிலவற்றை சொல்வார்கள். “நீங்கள் சொல்வது போல் அல்ல” என்று வாதாடினால், “எவன் சார் யோக்கியன்? இந்த காலத்தில யாரை நம்ப முடியுது? எல்லாம் திருட்டுப்பயலுக” என்று சொல்லி தங்களது உரையை முடித்துக் கொள்வார்கள்.

இப்படி எல்லோரும் திருடர்கள் என்று தீர்ப்பளிப்பவர்கள் மிகப்பெரிய ஒழுக்கவாதிகளைப் போல தோற்றமளித்தாலும், அந்தத் தீர்ப்பே மிகவும் ஒழுக்கக் கேடானத் தீர்ப்பு. எல்லோரும் சமம். எல்லோரும் திருடன் என்று கூறுவதும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் அது ஒரு மிகப் பெரிய தந்திரம் – நரித்தனம்.

தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வேறுபாடு இல்லையா? இல்லையென்றுதான் பலரும் பேசுகிறார்கள். இப்போ தாத்ரி கொலை நடந்திருக்கிறது. கல்புர்கி கொலை நடந்திருக்கிறது. பன்சாரே கொலை நடந்திருக்கிறது. அடுக்கடுக்காக, அறிவுத்துறையினர் மீது தாக்குதல் நடக்கிறது. இதை பற்றிய அ.தி.மு.க.வின் கருத்தென்ன என்று யாராவது கேட்டதுண்டா? எந்த ஊடகமாவது ஏன் கருத்து சொல்லவில்லை என்று அவர்களை மடக்கியதுண்டா? அப்படி கருத்து சொல்லாமலிருப்பதே பி.ஜே.பி. ஆதரவு நிலைப்பாடென்று என்று யாருக்கும் புரிவதில்லையா? நிதிஷ்குமார் வெற்றிப்பெற்றதற்கு அம்மா வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஏன் தெரிவிக்கவில்லை? அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த அர்த்தத்தை யாரும் கேள்விக்குள்ளாக்காமலேயே

தி.மு.க.வும்., அ.தி.மு.க.வும் சமம் என்று பேசுகிறார்கள்.

பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. கருவறை நுழைவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கை இருக்கிறது. தமிழ்பாடும் கோரிக்கை இருக்கிறது. சுயமரியாதைத் திருமணம் தொடர்பான கோரிக்கை இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு நான் கோபாலபுரம் போகட்டுமா? போயஸ் தோட்டம் போகட்டுமா?

போயஸ் தோட்டம் என்ன செய்தது? தில்லைக்கோயிலை தீட்சிதர் வசம் திரும்ப பிடுங்கி ஒப்படைத்தது. தி.மு.க. எவ்வளவு ஊசலாடும் கட்சியாக இருந்தாலும் தமிழ்பாடும் போராட்டம் நடத்தி ஒரு எல்லைக்கு வந்தபிறகு, தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்டுகின்ற ஒரு ஆணையைப் பிறப்பிக்கிறது. அந்தக்கோயிலை மேற்கொள்கிற நடவடிக்கையை அது மேற்கொள்கிறது. ஜெயலலிதா அரசு அதைப் பிடுங்கி தீட்சிதர்கள் வசம் வழங்கியது. இதில் வேறுபாடே இல்லையா? பார்ப்பன பாசிசத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் எதிராக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் – பேசுகின்ற கட்சிக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லையென்று சொல்பவர்கள் யாராக இருக்க முடியும்? யார் கலப்பு மணத்தை எதிர்க்கிறார்களோ, யார் தமிழை எதிர்க்கிறார்களோ, யார் சாதிப் பாகுபாட்டை பராமரிக்க விரும்புகிறார்களோ அவர்கள்தான் வேறுபாடு இல்லையென்று சொல்ல முடியும். அவர்கள் நிச்சயமாக முகமூடியணிந்த அ.தி.மு.க. ஆதரவாளர்கள். முகமூடி அணிந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள்.

பா.ம.க. கட்சி இருக்கிறது. எல்லாக் கட்சியும் பெரும்பான்மை சாதி யாரோ அவர்களை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள். இது தெரிந்த விசயம்தான். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ, ஒரு கொங்கு கட்சியோ, என்ன செய்கிறார்கள்? சாதிவெறியை அடித்தளமாகக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வெறியைத் தூண்டி அதன் அடிப்படையிலே அந்தக் கட்சியைக் கட்டுகிறார்கள். இதுவும் சாதியை தேர்தல் அரசியலுக்கு ஆதாயமாகப் பயன்படுத்துகின்ற தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளும் சமமாகிவிடுமா?

தவ்ஹீத் ஜமாஅத் எங்களை விட தீவிரமாக மதுவிலக்கு பற்றிப் பேசும். அதன்காரணமாக அந்த மதவெறிக் கட்சியோட சேர்ந்துகொள்ள முடியுமா? மதவெறி என்பது மதுவெறியை விடக் கொடியது இல்லையா? பா.ஜ.க. மதுவிலக்குனு பேசுகிறது. அது எத்தகைய கொடூரமான பாசிசக்கட்சி. பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒண்ணுதான் என்று பேச முடியுமா? இந்த வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் எல்லோர் மீதும் சேற்றை வாரி இரைப்பதும் அ.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு. அல்லது பா.ஜ.க.வுக்கு வழங்கப்படும் ஆதரவு ஆகும்.

இந்த சாராய சாம்ராஜ்யத்தை அ.தி.மு.க. கட்டிக் காப்பாற்றுகிறது. தமிழ்ச்சமூகத்தை நாசமாக்கி சீரழிக்கின்ற ஒரு சதிவேலை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. டாஸ்மாக்கை மூடுவதற்காக நிற்பவர்கள் அரசியல் கட்சியாக இருக்கட்டும். அரசியல் கட்சி சாராத சமூக இயக்கங்களாக இருக்கட்டும். அவர்கள் எத்தனை பலவீனமானவர்களாக இருந்தாலும், எத்தனை உறுதியற்றவர்களாக இருந்தாலும் அவர்களோடு ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் போக வேண்டும். டாஸ்மாக்கை மூடுவது என்ற இந்த இலக்கை எப்பாடுபட்டேனும் அடைய வேண்டுமென்பதற்காகத்தான் இவர்களையெல்லாம் அணுகியிருக்கிறோம்.

ஆகவே, தேர்தல் அரசியல் கட்சிகளை தேர்தலைப் புறக்கணிக்கும் நீங்கள் அணுகலாமா என்ற கேள்வியை எழுப்புகின்றவர்கள் டாஸ்மாக் என்ற இந்த பேரபாயம் தமிழகத்தை எப்படி சூழ்ந்திருக்கிறது என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்த்து, அதை மூடுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றனவா, இதைவிடச் சிறந்த இதைவிட விரைவான, இதைவிட சாத்தியமான வேறு வழிகள் இருக்கின்றனவா என்பதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு, உங்கள் கருத்தை உங்கள் தீர்ப்பை அதன் மீது வழங்குங்கள்.

நன்றி.

– முற்றும்.