Saturday, May 10, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்வினவு பொறுப்பாளர் தோழர் காளியப்பனுக்கு நிபந்தனை பிணை !

வினவு பொறுப்பாளர் தோழர் காளியப்பனுக்கு நிபந்தனை பிணை !

-

தோழர் காளியப்பன்
வினவு தளத்தின் பொறுப்பாளர் தோழர் காளியப்பன்

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலரும், வினவு தளத்தின் பொறுப்பாளருமான தோழர் காளியப்பனை (கன்னையன் ராமதாஸ்) 30-10-2015 அன்று கைது செய்ய சென்னை சி.பி.சி.ஐ.டி போலிசின் சைபர் பிரிவு  கொல்லைப்புறமாக சுவரேறிக் குதித்து வீட்டினுள்ளே நுழைந்தது. வீட்டில் இல்லாததால் காளியப்பனைக் கைதுசெய்ய தஞ்சையிலேயே முகாமிட்டது.

இதே நாளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த தோழர் கோவன், 30-10-2015 அன்று அதிகாலை 2.30 மணியளவில் திருச்சி, அரவானூரில் அவரது வீட்டிலிருந்து சென்னை குற்றப்பிரிவு உளவுத்துறை போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டார்.

“மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊருக்கூரு சாராயம், தள்ளாடுது தமிழகம்” என்ற இரண்டு பாடல்களும் வினவு தளம், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக பல இலட்சம் மக்களைச் சென்றடைந்துதான் இந்த நள்ளிரவுக் கைதுக்கு காரணம். இ.பி.கோ. 124ஏ தேசத்துரோகம், 153 இரு பிரிவினருக்கிடையில் மோதலைத் தூண்டுதல், 502/1 வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செயப்பட்டிருக்கிறது.

தோழர் காளியப்பனை கைது செய்ய நினைத்த போலிசு மற்றும் அரசின் முக்கிய நோக்கம் வினவு தளத்தினை முடக்க வேண்டும் என்பதே. இதையே தனி விருப்பமாக தந்தி டி.வி பாண்டே போன்றோர் முன்னெடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் (பா.ஜ.க. தவிர), தமிழக- தேசிய ஊடகங்களும், அறிவுத்துறையினரும், கட்ஜு, சந்துரு ஆகிய முன்னாள் நீதிபதிகளும், அம்னஸ்டி இன்டர்நேசனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் இக்கைதைக் கண்டித்து, கோவனை விடுதலை செய்யக் கோரின. ம.க.இ.க., மக்கள் அதிகாரம் அமைப்புகள் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பறை என்ற ஈழத்தமிழர் பண்பாட்டு அமைப்பு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பிரிட்டிஷ் ஆட்சி கூட மதுவிலக்கு கோரிக்கைக்குப் போராடியவர்கள் மீது ராஜத்துரோக வழக்கு போட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கொடிய அடக்குமுறை, பாசிச ஜெயாவின் வக்கிர கொடுங்கோல் ஆட்சியை உலகறியச் செய்துள்ளது. டாஸ்மாக் என்பது தமிழக மக்கள் மீது ஜெயா அரசு தொடுத்திருக்கும் யுத்தம். சசி பெருமாள் படுகொலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றின் வரிசையில் வருவதுதான் தோழர் கோவன் மற்றும்  வினவு தளத்தின் பொறுப்பாளர் காளியப்பன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள்.

செசன்ஸ் நீதிமன்றத்தில் தோழர் கோவனுக்கு பிணை பிடைத்ததும், அவரை போலீஸ் காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. அங்கேயும் மூக்குடைபட்டு வேறு வழியின்றி தோழர் கோவன் பிணையில் வெளியே வந்தார். இடையில் தோழர் காளியப்பனுக்கு முன் பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தோழர் காளியப்பனுக்கு கடந்த வாரம் நிபந்தனை பிணை அளித்திருக்கிறது. அதன் படி சென்னையில் தங்கி தினமும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறது நீதி மன்றம்.

தோழர் கோவன்
பாடகனைக் கைது செய்துவிட்டீர்கள், “வைரலாக”ப் பரவிய பாட்டை உங்களால் என்ன செய்ய முடியும்? விசாரணைக்கு இழுத்து வரப்படும் தோழர் கோவன்.

ஒரு அரசியல் விமரிசனத்துக்கான தேசத்துரோக வழக்கு என்றோ, ஒரு கலைஞனின் குரலை நசுக்குவதற்கான தேசத்துரோக வழக்கு என்றோ பார்ப்பதும், கருத்துரிமை என்ற அடிப்படையில் கண்டனம் தெரிவிப்பதும் பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை மட்டுமே பார்ப்பதாகும். இதன் மற்ற பரிமாணங்கள் மிகவும் முக்கியமானவை.

சாராய விற்பனை, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை, தாது மணல் கொள்ளை உள்ளிட்டு எல்லா வழிகளிலும் இயற்கை வளங்களை, மக்களின் பொதுச்சொத்தை கார்ப்பரேட் மஃபியா கும்பல்களுடன் சேர்ந்து கொண்டு அரசே சூறையாடுகிறது. இதில் அ.தி.மு.க. கட்சியினர் மட்டுமின்றி, போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் கணிசமான பிரிவினர் நேரடியாகவே ஈடுபட்டிருக்கின்றனர். இந்த கிரிமினல் மஃபியாவின் தலைமையாக ஜெயா-சசி கும்பல் இயங்குவதும், பல்லாயிரம் கோடிக்கு ஆங்காங்கே சொத்துக்களை வாங்கிக் குவிப்பதும் அடுக்கடுக்காக அம்பலமாகி வருகின்றன.

ம.க.இ.க.-வின் பாடல் இந்த மஃபியா கும்பலைக் குறிவைத்துத் தாக்குவதாலும், தோற்றுப்போன இந்த அரசமைப்பிடம் கெஞ்சிக் கொண்டிருக்காமல், மக்கள் தாமே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும் என்று அறைகூவல் விடுவதாலும்தான், இத்தனை மூர்க்கத்தனமாகப் பாய்ந்திருக்கிறது ஜெ அரசு. இந்த அரசியலை இலட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சென்றதற்காக வினவு தளத்தின் மீதும் அடக்குமுறை ஏவி ஒழிக்க நினைக்கிறார்கள்.

_________________________________