privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !

விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !

-

banana-distress-6“வாழை பயிரிட்டால் வாழ்க்கை சிறக்கும்”என்ற நம்பிக்கையோடு பயிரிட்ட தேனி மாவட்ட விவசாயிகள், நடவு செய்த தங்கள் கைகளாலேயே இன்று வாழைமரங்களை வெட்டி வீசுகிறார்கள்! பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விளைந்த வாழைகள் தாரிலேயே பழுத்து அழுகி வீணாகிக் கிடக்கிறது! சகிக்கமுடியாத ஒரு விவசாயி தானே அறுவடைசெய்து, வண்டியில் ஏற்றிச்சென்று பக்கத்து கிராம மக்களுக்கு பழங்களை இலவசமாக கொடுக்கிறார்! ஒரு வருடத்திற்கு முன்பு ஒருகிலோ 12-17 ரூபாய்க்கு விற்ற வாழையை, இன்று கிலோ 2 ரூபாய்க்கு வாங்க ஆளில்லை! “ஒரு ஏக்கருக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஒரு வாழை மரத்தை 11மாதம் வளர்ப்பதற்கு 150 ரூபாய்வரை செலவாகிறது. 3 ஏக்கரில் பயிரிட்டு 4.50 லட்சம் செலவு செய்துவிட்டு, 2 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன். மீதி 2.50 லட்சம் கடனை கூலிவேலை செய்து அடைத்து வருகிறேன்” என்று கதறுகிறார் குத்தகை விவசாயி மணிகண்டன்! இதே அவலக்குரல்தான் கம்பம், கூடலூர், கேகே.பட்டி உத்தமபாளையம், சின்னமனூர், உப்புக்கோட்டை என தேனிமாவட்டம் முழுக்க எதிரொலிக்கிறது! காரணம் என்ன? கடந்த ஒரு வருடமாகத் தொடரும் விலைவீழ்ச்சி!

ஏன் இந்த விலைவீழ்ச்சி?

banana-distress-2“அதிகமாக விற்பனையாகும் சென்னை, கடலூர்,பாண்டிச்சேரியில் ஏற்பட்ட கடுமையான மழைவெள்ளப் பாதிப்புதான் முக்கிய காரணம். மேலும், விவாசாயிகளின் பேராசையால் தேவைக்கு அதிகமாக பயிரிட்டு விட்டார்கள். இதனால் ஏற்பட்ட விளைச்சல் அதிகரிப்பும் காரணம்” என தோட்டக்கலை அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். பணக்கார விவசாயிகளும் இதே கருத்தை பரவலாக சொல்கிறார்கள்!

ஆனால், இவர்களின் பதிலை கே.கே.பட்டி கிராம சிறுவிவசாயிகள் மறுக்கின்றனர். ”மழைவெள்ளம் வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. விலைவீழ்ச்சி என்பது ஒரு வருடமாக தொடர்ந்து சரிந்து கொண்டுதான் இருக்கிறது. எக்ஸ்போர்ட் ஆர்டர் இல்லை என்று சொல்கிறார்கள்.அதுதான் உண்மையான காரணம்” என்கிறார்கள்! “ஏற்றுமதிக் கம்பெனிகள் ஏதாவது நேரடியாக கொள்முதல் செய்கிறதா?” என்று கேட்டதற்கு, அருகிலிருந்த கிருஷ்ணமூர்த்தி ”அப்படி யாரும் வருவதில்லை. பக்கத்து ஊரிலிருக்கும் பெரிய வியாபாரிகள்தான் கொள்முதல் செய்கின்றனர்” என்றார்.

தொடர் விசாரனையில், A.P.K- என்ற A.P.கருப்பையா மற்றும், பூமலைக்குண்டு பாண்டி ஆகிய இருவரும்தான் அந்த வியாபாரிகள் என்பது தெரிந்தது. இருவரும் சின்னமனூரில் குளிருட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு சொந்தமாக வைத்துள்ளனர்! இதில், A.P.கருப்பையா என்பவர் தமிழக வாழை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராகவும் உள்ளார்! மேலும் தமிழகத்தின் ‘முன்னோடி’ வாழை விவசாயி என்று A.P.கருப்பையாவின் வீடியோ பேட்டியை தேசிய தோட்டக்கலைத் துறையின் இணையத்தளம் பதிவிட்டுள்ளது!

மணிகண்டன் - கிருஷ்ணமூர்த்தி
மணிகண்டன் – கிருஷ்ணமூர்த்தி

உள்ளூர் வியாபாரிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் என்ன தொடர்பு? ஏற்றுமதிக் கம்பெனிகள் ஏன் நேரடிக் கொள்முதல் செய்யவில்லை? வாழை ஏற்றுமதிக்கும்,வாழை விவசாயிகளின் அழிவுக்கும் என்ன தொடர்பு? மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் வாழை விவசாயம் நசிந்துபோன பிறகும்கூட அரசும்-அரசு அதிகாரிகளும் வாய்மூடிக் கிடப்பதற்கு என்ன காரணம்? விவசாயிகள் பேராசை பிடித்தவர்கள் என்பது உண்மையா? விடை தெரிய வேண்டுமானால், சில விசயங்களை பின்னோக்கி பார்க்க வேண்டும்!

ஒற்றைப் பயிர் மண்டலங்கள் ( MONOCULTURE)!

பிராண்டட் வாழைப் பழம்
பிராண்டட் வாழைப் பழம்

கடந்த 2005-களில், மத்திய வேளாண்மை அமைச்சகம் வெளியிட்ட வேளாண்மை கொள்கையின் ஒரு பகுதியாக, ”நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழல்களுக்கு ஏற்ப, குறிப்பிட்ட ஓரிரு பயிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பயிரிடுவதன் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிப்பது” என்ற திட்டத்தை வலியுறுத்தியது! அதன்படி தமிழகத்தில், தஞ்சை திருவாரூர்—நெல் மண்டலம், கோவை,ஈரோடு—காய்கறி, தென்னை மண்டலம், தருமபுரி,ஓசூர்- மா, மலர்வகைகள் மண்டலம் என்றும், தேனியில் வாழைமண்டலம் என்றும் வகைப்படுத்தியது அரசு.

இம்மண்டலங்களில், நிர்ணயித்த பயிர்களுக்கு புதிய வீரியரக விதைகள்,மற்றும் நவீன வேளாண் தொழில்நுட்பங்களை புகுத்துவது, சிறப்பு மானியத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதோடு, தோட்டக்கலைத் துறை மூலம் தொடர் விளம்பரங்கள்-கருத்தரங்குகள்-நடத்தி விவசாயிகளிடம் விரிவான பிரச்சாரமும் செய்தது அரசு! (இந்த ஒற்றைப்பயிர் மண்டலம் என்பதே வேளாண் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்கு சாதகமானது என்பது தனிக் கதை!)

dole-banana
வீரிய ரக வாழை

கடந்த 2007 அக்டோபரில், திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்த, அன்றைய மத்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,“உலகின் மிகப்பெரிய வாழை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். ஆண்டிற்கு 2 கோடி டன் வாழை உற்பத்தி செய்யும் நாம், வெறும் 0.5 சதவீதம்தான் ஏற்றுமதி செய்கிறோம். அடுத்த 5 ஆண்டிற்குள் இதை 5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்று அறிவித்தார்!

அரசின் நோக்கத்தை அறிந்த தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (NBRC ), இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்யப்பட கிராண்ட்நைன் (GRANDNAINE-G9) என்ற வீரிய ரகவாழையை ஏற்றுமதிக்கு உகந்த ரகமாக பரிந்துரைத்தது. இதற்காகவே காத்திருந்தது போல ஜெயின், கோத்ரேஜ், ஸ்பிக், ரிலையன்ஸ், ஏஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் G-9 ரகத்தின் திசுவளர்ப்புக் கன்றுகளுடன் தேனிமாவட்டத்தை முற்றுகையிட்டு விட்டன!

விலை வீழ்ச்சியின் குற்றவாளிகள் யார்?

இதுவரை, நாட்டுபச்சை (ரோபஸ்டா), ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன், மொந்தன் ஆகிய உள்நாட்டு வாழைகளை மட்டுமே பயிரிட்டுவந்த விவசாயிகளிடம் கிரான்ட்நைன் வாழையை புகுத்தியது அரசும்-தோட்டக்கலைத் துறையும்! “ஒரு தாரில் 16 சீப்புகள், 250 வாழைக்காய்கள், ஏக்கருக்கு 45 டன் விளைச்சல், சொட்டுநீர் போட்டால் கூலியாள் செலவு மிச்சம், ஏற்றுமதிக்கு கிராக்கி இருப்பதால் கூடுதல் லாபம்” என்று சுரண்டல் லாட்டரிக்காரனைப் போல பிரச்சாரம் செய்து விவசாயிகளை சுண்டி இழுத்தது தோட்டக்கலைத் துறை!

மேலும், தங்களின் செல்லப்பிள்ளைகளான ஏ.பி.கருப்பையா மற்றும் பாண்டி போன்ற பணக்கார விவசாயிகள் சிலருக்கு அனைத்தையும் மானியமாகவும்-இலவசமாகவும் கொடுத்து G-9, ஐ பயிரிட வைத்து, “இதோ ஒரு ஏக்கரில் இரண்டு லட்சம் லாபம் பார்த்த விவசாயி! வீரியரகத்தின் அபார விளைச்சலைப் பாரீர்” எனப் பாராட்டி விருதுகள் கொடுத்து விளம்பரம் செய்தனர்! அடுத்து பல லட்சங்களை மானியமாகக் கொடுத்து இவர்களையே குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளையும் கட்டவைத்தனர்!

சந்தீப் சக்சேனா
அன்றைய வேளாண் உற்பத்தித் துறை கமிசனர் (இன்றைய தமிழக தேர்தல் கமிசனர்) சந்தீப் சக்சேனா

கடந்த 2013 டிசம்பரில் தேனி வந்த அன்றைய வேளாண் உற்பத்தித்துறை கமிசனர், (இன்றைய தமிழக தேர்தல் கமிசனர்) சந்தீப் சக்சேனா, ”தற்போது தேனி மாவட்டத்தில் திசுவளர்ப்புக் கன்றுகள் பயிரிட்டுள்ள 6,000 ஹெக்டேர் பரப்பளவை 10,000 ஹெக்டேர் அளவுக்கு உயர்த்தவேண்டும்” என வலியுறுத்தினார்! முன்பு, ”ஒரு கன்றின் விலை 12 ரூபாய்- ஒரு ஏக்கருக்கு 1.50 லட்சம் செலவு” என்பதால் தயங்கி நின்ற சிறுவிவசாயிகள், இதற்குப் பின்தான் நம்பிக்கையுடன் கடன்வாங்கி வாழையை நடவு செய்தனர்.

இவ்வாறு அனைத்து வகையிலும் விவசாயிகளை ஆசைகாட்டி G-9 வாழைக்கு தூண்டிவிட்ட அரசும் அதிகாரிகளும்தான் இன்று,”பேராசை பிடித்த விவசாயிகள்” என்றும், “விளைச்சல் அதிகரிப்புத்தான் விலைவீழ்ச்சிக்குக் காரணம்“ என்றும் விவசாயிகள் மீது பழிபோடுகிறார்கள்! தாங்கள் கூறிய அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைப்பிடித்து உற்பத்தி செய்த விளைச்சலை,வீணாகாமல் பாதுகாப்பதற்கும்,அதை விற்பதற்கான சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித்தர முடியாமல் திராணியற்று-தோற்றுப்போய்- விவசாயிகளுக்கே எமனாக நிற்கும் இந்த அரசும்-தோட்டக்கலை அதிகாரிகளும்தான் உண்மையான குற்றவாளிகள்!

G-9 வாழையின் பலன் யாருக்கு?

சிக்யுட்டா வாழை
சிக்யுட்டா வாழை

சர்வதேச சந்தையில் கிரான்ட்நைன் வாழை ‘சிக்யுட்டா வாழை’ என்று பிரலமாக அழைக்கப்படுகிறது. சிக்யுட்டா (CHIQUITA) என்பது உலக வாழைப்பழ வர்த்தகத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க நிறுவனம்! 70 நாடுகளில், 20,000 ஊழியர்கள், 20 சொந்த சரக்குக் கப்பல்களுடன் இயங்கும் இந்நிறுவனம் உலகின் 50 சதவீத வாழை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகிறது! இதன் ஒருவருட லாபம் 15,000 கோடி ரூபாய்!

கவர்ச்சிகரமான பொன்மஞ்சள் நிறம், அமெரிக்க-ஐரோப்பியர்களின் விருப்பத்திற்கேற்ற இனிப்பு, நறுமணம், துணைத் தொழில்களான ஜாம், ஜூஸ், ஒயின், பிராந்தி, சாலட், ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு ஏற்ற இறுக்கமான மாவுசத்து ஆகிய, சர்வதேச சந்தை நலனுக்குப் பொருத்தமாக இருப்பதால்தான் G-9 ரக வாழைக்கு முக்கியத்துவம் கொடுத்து சந்தைப்படுத்துகிறது சிக்யுட்டா நிறுவனம்! இதனாலேயே “சிக்யுட்டா வாழை” என்ற பெயர் பிரபலமானது!

சிக்யுட்டா நிறுவனத்தின் கப்பல்
சிக்யுட்டா நிறுவனத்தின் கப்பல்

திருச்சியிலுள்ள நம் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் G-9 வாழையை பரிந்துரைப்பதும் ஏற்றுமதி நோக்கத்தில்தான்! ஆனால், விவசாயிகளுக்கு லாபம் பெற்றுத்தந்து அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காகவே இதைப் பரிந்துரைப்பது போல அரசும் அதிகாரிகளும், விவசாயிகளை மோசடி செய்து வருகின்றனர்!

சர்வதேச சந்தையின் நிலவரம் என்ன?

டெல் மொன்டி வாழை
டெல் மொன்டி வாழை

உலகில் 120 நாடுகளிலிருந்து சுமார் 9 கோடிடன் வாழை உற்பத்தியாகிறது! இதன் வர்த்தமதிப்பு 7 பில்லியன் டாலர்! இந்திய மதிப்பில் சுமார் 45,000 கோடி ரூபாய்! மதிப்புக் கூட்டிய பொருள்களையும் உள்ளடக்கிய இதன் சில்லறை வர்த்தக மதிப்போ 1.25 லட்சம் கோடி என்கிறது புள்ளிவிவரம்!

இம்மாபெரும் உலகச்சந்தையின் 80 சதவீதத்தை சிக்யுட்டா, டோலே (DOLE), டெல்மொன்டி(DEL-DMONT), ஃபெபீஷ்(FEFFES) நோபா(NOBOA) ஆகிய ஐந்தே பன்னாட்டுக் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன! இந்நிறுவனங்கள் தாங்கள் செயல்படும், நிகாரகுவா, கொலம்பியா, ஹோண்டுராஸ், கோஸ்ட்டரிகா, காமரூன், பெரு முதலிய நாடுகளில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் நேரடியாக G-9 வாழையை பயிரிட்டுள்ளன. உதாரணமாக நோபா நிறுவனம் ஈகுவடாரில் மட்டும் 18,000 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளது!

இறக்குமதி நாடுகள்
இந்தியா வாழைப்பழத்தை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகள்

மேலும், இங்கு விளைவதை சந்தை நாடுகளுக்கு கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட சரக்குக்கப்பல், மற்றும் வாகனங்கள், பதப்படுத்தும் கிடங்குகள், சங்கிலித்தொடர் விற்பனை நிலையங்களையும் சொந்தமாகக் கொண்டவை இப்பகாசுரக் கம்பெனிகள்! உள்ளூர் வெள்ளை வேட்டி வியாபாரிகளையே சமாளிக்க முடியாத விவசாயிகளை, இந்தப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் போய் வியாபாரம் செய்து சம்பாதிக்கச் சொல்கிறது அரசு!

உலக வாழைச் சந்தையின் நெருக்கடி!

கடந்த சில வருடங்களாக உலக வாழைச்சந்தையில் கடும் நெருக்கடி நிலவுகிறது.

1) பன்னாட்டுக் கம்பெனிகள் நேரடியாக விவசாயம் செய்துவரும் நாடுகளில், தொழிற்சங்கங்கள் வலுப்பெற்று சம்பள உயர்வு மற்றும் பணிப்பாதுகாப்பு கோரி போராடி வருகின்றன. இதனால் பெருநிறுவனங்கள் தொழிலாளிகளுக்கு அதிக சம்பளம் சலுகை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.

ஒற்றைப் பயிர் வாழை நோய்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

2) ஒற்றைப்பயிர் மண்டலங்களில் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதால் பனாமா வைரஸ் (TR4) மற்றும் கரும்புள்ளி நோய் (BLACK SIGATOKA) ஆகியவற்றின் தீவிரத் தாக்குதலால் உலகச்சந்தையின் தேவையை ஈடுகட்ட முடியாத அளவுக்கு G-9 வாழை உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது! ஒழிக்கவே முடியாத இந்நோய்களை “வாழையின் எய்ட்ஸ்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்!

3) வால்மார்ட் போன்ற சங்கிலித்தொடர் விற்பனை நிலையங்களின் விற்பனைப் போட்டியால், தங்களின் கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பன்னாட்டு வாழைக் கம்பெனிகள் தள்ளப்பட்டுள்ளன.

பன்னாட்டு பிராண்டுகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இக்காரணங்களால், தங்களின் நேரடி விவசாய முறைகளை கைவிட்டுவிட்ட நிறுவனங்கள், உள்ளூர் இடைத்தரகர்கள் மூலமே அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்வதன் மூலம், தங்களின் நெருக்கடியை தீர்த்துக்கொண்டு வருகின்றன. மேலும் நோய் தாக்குதல் குறைவான புதிய விளைச்சல் பரப்பைத் தேடியலைந்து வரும் இந்நிறுவனங்களுக்கு, இந்தியாவும், இலங்கையும் பொருத்தமாக இருக்கும் என்று 2013 ஆண்டின் ஒரு சந்தை ஆய்வு கூறுகிறது.

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் இந்தியாவின் வாழை ஏற்றுமதிக் கனவு… !

இந்தியாவின் வாழை ஏற்றுமதிக்கு முக்கிய சந்தை ஈரான், ஓமன், துருக்கி, அரபு நாடுகள் மட்டும்தான். பெரிய சந்தையான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடியாக இன்றுவரை ஏற்றுமதி செய்யவில்லை! தகுதியுள்ள பெரிய நிறுவனங்களும் கூட அத்தகைய முயற்சிக்கு தயாராக இல்லை. ஏன் ரிலையன்ஸ் நிறுவனம் வாழை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபவில்லை? என்ற கேள்விக்கு,“நம் நாட்டில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு விவசாயிகள்தான் அதிகம். சந்தையில் உள்ளூர் வியாபாரிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. இதனால்தான் பன்னாட்டுக் கம்பெனிகளே இந்தியாவில் வர்த்தகம் செய்யத் தயங்குகின்றன” என்கிறார் ரிலையன்சின் வாழை வர்த்தகப்பிரிவின் தலைமை அதிகாரி M.ராம்சுவாமி! (அதனால்தான் தனது ரிலையன்ஸ் ஃபிரஷ்-க்காக 2000 வாழை விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்!)

டெல் மாண்ட் - பார்தி என்டர்பிரைசஸ் கூட்டு நிறுவனம்
டெல் மொன்டி – பார்தி என்டர்பிரைசஸ் கூட்டு

அதாவது, இந்தியாவில் பன்னாட்டுக் கம்பெனிகள் செயல்பாட்டுக்கும், ஏற்றுமதிக்கும் தடையாக உள்ள சிறு விவசாயிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்! பன்னாட்டுக் கம்பெனிகள் சிரமமே இல்லாமல் இங்குவந்து வர்த்தகச் சூதாட்டத்தைத் தொடர களம் அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை! இதற்காக அரசு கண்டுபிடித்த புதிய வழிமுறைதான் ‘விவசாயிகள் கூட்டமைப்பு’!

கம்பம் பகுதியில் 256 விவசாயிகளை இணைத்து ஜான் பென்னிகுயிக் விவசாயிகள் டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கி, இவர்களிடம் உள்ள 1,500 ஏக்கரில் வாழையை பயிரிட்டு ஏற்றுமதி செய்வதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் வழிகாட்டி இயக்கி வருகிறது! இதுபோன்ற கூட்டமைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், பன்னாட்டுக்கம்பனிகள் எளிதாக இவர்களை அணுகி மொத்தமாக கொள்முதல் செய்யமுடியும் என்பதுதான் அரசின் திட்டம்!

ஏற்கனவே, அமெரிக்க நிறுவனமான டோலே (dole), மகராஷ்டிராவில் உள்ள வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்போடு வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது!

உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவே இந்திய அரசின் வேளாண் கொள்கை!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“உள்நாட்டு உற்பத்திக்கு அரசு தரும் மானியம்-சலுகைகளை ரத்துசெய்! ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடு! அரசு தலையிடு இல்லாமல், சந்தையை சுதந்திரமாக இயங்க விடவேண்டும்!” என்கிறது ‘காட்’ ஒப்பந்தவிதி! இதற்கேற்ப உள்நாட்டுச் சட்டங்களை மாறியமைக்க உத்தரவிடுகிறது உலகவர்த்தகக் கழகம்! எஜமானர்களின் விருப்பத்தையே தனது கொள்கையாக அறிவித்து அமுல்படுத்துகிறது இந்திய அரசு! இதனால்தான், நம் விவசாயிகள் கண்முன்னே அழிவதைக்கூட கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறார்கள்! காட்டாமணக்கு, கொக்கோ, எண்ணெய் பனை என புதுப்புது ஏற்றுமதி விவசாயங்களை கொண்டுவந்து நம்மீது திணிக்கிறார்கள்! நாம் ஒவ்வொரு முறையும் நட்டப்பட்டு வீதியில் நிற்கும்போது, நம்மீதே குற்றம் சுமத்திவிட்டு ஓடிஒளிந்து கொள்கிறார்கள்! எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இதே நிலைமைதான் தொடர்கிறது!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

banastat-fairtrade-bananas-ukஎனவே,

  • ஏற்றுமதி விவசாயம் என்பதே விவசாயிகளை விவசாயத்தைவிட்டு, நிலத்தைவிட்டு விரட்டியடிக்கும் மாபெரும்சதி!
  • பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்கு நம்மை பலிகடாவாக்கும் ஏற்றுமதி விவசாயத்தைப் புறக்கணிப்போம்!
  • உள்நாட்டு சந்தைக்கான உணவுப்பொருள் உற்பத்திக்கு மாறுவோம்!
  • நமது உற்பத்திப் பொருளுக்கான விலையை நாமே தீர்மானிக்கும் உரிமையைப் பெறுவதற்கு, மக்கள் அதிகாரம் நிறுவப் போராடுவோம்!

மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்து, கூடலூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி.