Thursday, May 8, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.க"மூடு டாஸ்மாக்கை" மாநாட்டுக்கு ஏன் வரவேண்டும் ? பத்திரிகைச் செய்தி

“மூடு டாஸ்மாக்கை” மாநாட்டுக்கு ஏன் வரவேண்டும் ? பத்திரிகைச் செய்தி

-

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

நெ.5, எLப். எம்.பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு, பாரி முனை,சென்னை- 01
தொடர்புக்கு 9443260164

————————

09.02.2016

சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்

பத்திரிக்கைச் செய்தி

அன்புடையீர் வணக்கம் !

shutdown-tasmac-trichy-pressmeet-1போதையிலிருந்து தமிழகத்தை மீட்க, சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட மூடு டாஸ்மாக்கை என்ற எதிர்ப்புக் குரல், அலையாக மீண்டும் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் பாகுபாடின்றி பாதிக்கும் மேலான தமிழக மக்கள் குடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான கட்சிகள், மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி வருகின்றன. ‘படிப்படியாக என்ற அளவிலாவது மதுவிலக்கை அமல்படுத்துங்கள்’ என்ற கோரிக்கையைக் கூடப் புறக்கணித்து டாஸ்மாக்கை மூட முடியாது என சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஜெயா அரசு அறிவித்துள்ளது.

சாராய ஆலை அதிபர்கள் பாதிக்கப்படக்கூடாது, பார் நடத்தி வரும் கட்சிக்காரர்களின் வருமானம் பாதிக்க கூடாது, எந்தப் பிரச்சினைக்கும் மக்கள் போராடக்கூடாது, சிந்தனையை மழுங்கடித்து தமிழ்ச்சமூகத்தை மாற்றியே தீர வேண்டும் என்பதில் ஜெயலலிதா அரசு விடாப்பிடியாக இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இல்லை. மது ஆலை முதலாளிகளின் லாபத்தை ஜெயா அரசு, உத்திரவாதப்படுத்துவதுதான் இதற்குக் காரணம். சாராய ஆலை அதிபர்கள் நலனுக்காக தற்போது கள்ளச்சாராயத்தை ஒழித்திருக்கும் அரசால் மக்கள் நலுனுக்காக டாஸ்மாக்கை மூடிவிட்டு, கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதா?.

குடி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. 1984 ஆம் ஆண்டு டாஸ்மாக் ஆரம்பிக்க பட்டபோது அதன் ஆண்டு வருவாய் 134 கோடி ரூபாய் மட்டுமே. இன்றோ சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 230 மடங்கு அதிகரித்துள்ளது. ஜெயா ஆட்சியில்தான் இலக்கு வைத்து பல மடங்கு விற்பனை அதிகரிக்கபட்டுள்ளது. ஒரு கோடி பேர் குடிப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் குடி நோயாளிகள். இக்குடி நோயாளிகளால் பாதிக்கப்படும் பெற்றோர், பிள்ளை, மனைவி என மூன்று கோடிப் பேர் குடும்ப நோயாளிகளாக உள்ளார்கள். டாஸ்மாக் பேரழிவை படித்து தொகுப்பாக பார்த்தால் நெஞ்சம் பதறாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

தற்போது தேர்தல் திருவிழா, கூட்டணி பேரம், சூட்கேஸ் பேரம் வேட்பாளர் தேர்வு, என களை கட்டியுள்ள நிலையில் அடுத்த எம்.எல்ஏ. யார்?. என்ன செய்தார் எம்.எல்.ஏ.? என ஊடகங்கள் விவாதங்கள் டாஸ்மாக் ஒழிப்பு பிரச்சினையிலிருந்து மாற்றப்படுகிறது. டாஸ்மாக்கை மூடுவது என்பது தேர்தல் கோரிக்கை அல்ல; அது தமிழ்ச்சமூகத்தின் தலைமுறைப் பிரச்சினை – பற்றி எரியும் பிரச்சினை; அதை மூடுவதுதான் அனைவரின் முதன்மையான கடமை என்பதை வலியுறுத்தி, டாஸ்மாக் சாராயப் பிரச்சினையை மீண்டும் அரசியல் அரங்கில் விவாத பொருளாக்கி தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படுவதுதான், திருச்சி பிப் 14 மூடு டாஸ்மாக்கை என்ற சிறப்பு மாநாடு.

சாராய சாம்ராஜ்ய அதிபர்களுடன் ஜெயலலிதாவின் உறவு பலமானது. ஜெயாவின் சொத்து ஏலத்துக்கு வந்தபோது மீட்டவர் சாராய உடையார்தான். ஐந்து தென் மாநிலங்களில் மேல் நாட்டு மதுவகைகளின் மொத்த விற்பனை முகவர் ஆந்திராவின் சுப்பிராமிரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டபோது ஜெயா, சசி ஆகிய இருவரும் தனி விமானத்தில் சென்று மரியாதை செலுத்தினர்.

டாஸ்மாக்கால் அரசுக்கு வருமானம் ரூ 30,000 கோடி என்றால் சாராய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வருமானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். டாஸ்மாக் சாராயத்தோடு ஆட்சியாளர்களின் வாழ்வும் இருப்பும் பின்னிப் பிணைந்துள்ளது. அனைத்து தேர்தல் கட்சிகளும் இதனால் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் அடைகின்றன. மாநாடு, கட்சிப் பிரச்சாரம் என அனைத்துக்கும், டாஸ்மாக் போதை எரிபொருளாக இருக்கிறது. எனவே சமரசமில்லாமல் மக்கள் போராடி மூடுவதுதான், நிரந்த, பூரண மதுவிலக்கு அமையும். கோடிக்கணக்கான கள்ளப் பணத்தில் வாக்குக்குப் பணத்தை வீசி எறிந்து போலீசை வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற முடிவால்தான் அனைவரும் எதிர்த்தாலும் டாஸ்மாக்கை மூட முடியாது என பிடிவாதமாக ஜெயா அரசு நிற்பதற்குக் காரணம். தமிழக மக்கள் இதை அனுமதிக்கக் கூடாது.

வட தமிழகத்தை உருக்குலைத்த வெள்ளப் பேரழிவில் பலர் உயிரையும், வீடுவாசல்களையும் இழந்தனர். உண்ணஉணவின்றித் தவித்தனர். செம்பரபாக்கம் ஏரியைத் திறந்த அரசு கைதூக்கி விடவில்லை.  அனைத்து மக்களும்தான் களத்தில் இறங்கி உதவினர். வெள்ளப் பேரழிவு நின்று போனது.  ஆனால் டாஸ்மாக் பேரழிவு தொடர்கிறது. அனைவரும் களத்தில் இறங்கிப் போராடினால் போதை சீரழிவில் இருந்து தமிழ்ச்சமூகத்தை மீட்க முடியும்

“மூடு டாஸ்மாக்கை!” என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கத்தினை, தமிழக மக்களின் குரலாக மாற்றியமைக்கும் திருப்பு முனையாக திருச்சி மாநாடு இருக்கும். தேர்தல் திருவிழாவில் பசியால் அழும் குழந்தைகளின் குரலாக, மக்களின் கவனத்தைக் கண்டிப்பாகத் திசை திருப்பும். டாஸ்மாக்கைப் பற்றி முடிவு எதுவும் எடுக்காமல் எந்த கட்சியும் மக்களிடம் வாக்கு கேட்க முடியாது என்ற நிலையை உருவாக்கவே இந்த மாநாடு.

மாநாட்டில் குடியால் குடும்பங்களை இழந்தவர்கள், தாலியறுந்த தாய்மார்கள் பேசுகிறார்கள். குடி போதைக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் ஆனந்தியம்மாள், மந்திரிகுமாரி. ஆகியோர் பேசுகிறார்கள். கோத்தகிரி பள்ளி மாணவி காவ்யாஸ்ரீ, டேவிட்ராஜ், நாகராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள. குடிநோய்க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பாலகுரு, குடியின் பாதிப்புகளை நேரில் கண்டுணர்ந்து எழுதிய பத்திரிகையாளர் சஞ்சீவி குமார், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் செயலாளர் தனசேகரன். ம.க.இ.க பொதுச் செயலாளர் தோழர் மருதையன், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, தோழர் காளியப்பன் ஆகியோர் பேசுகின்றனர். தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட பாடகர் கோவன், “ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்” என மீண்டும் பாட உள்ளார். மதுவிலக்கை அமுல்படுத்திய கேரளாவிலிருந்து கரநாதன் நாவேர் நாட்டுக்களரி கலைக்குழுவினர் பாட உள்ளனர். “தாலியறுப்பு” என்ற நாடகம் நடத்த உள்ளோம். டாஸ்மாக்கை மூட முடியும் என்ற நம்பிக்கையை இந்த மாநாட்டின் மூலம் தமிழக மக்களுக்கு ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.

டாஸ்மாக் வேண்டாம் என நிறைவேற்றப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் தீர்மானங்கள், மூடுவதற்கான நீதிமன்ற உத்தரவுகள், மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் என அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி பிடிவாதத்துடன் சாராயம் விற்கிறது அரசு. காந்தியவாதி சசிபெருமாளின் மரணம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம், அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் போலீசைக் கொண்டு ஒடுக்கியது அரசு. இவ்வாறு போராடியவர்களை சிறையில் அடைத்து, போலீஸ் காவலுடன் டாஸ்மாக் கடைகளைத் திறந்தது.

டாஸ்மாக் சாராய விற்பனை நடத்தும் தமிழக முதல்வரை கண்டித்துப் பாட்டு எழுதியதற்காக தோழர் கோவனை நள்ளிரவில் கைது செய்து தேசத் துரோக வழக்கில் சிறை வைத்தது. எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர் கொண்டு டாஸ்மாக்கை மூட முடியும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு. போதையிலிருந்து தெளிய வைத்து சிந்திக்கும் திறனுள்ள மனிதனாக மாற்றிய பிறகுதான் மக்களின் பிற எண்ணற்ற பிரச்சினைகளைப் பேச முடியும். அனைத்து பிரச்சினைகளிலும் முதன்மையானது டாஸ்மாக்கை மூடுவது.

மணற் கொள்ளை, டாஸ்மாக் போதை எல்லாம் அரசே முன்னின்று போலீசு பாதுகாப்போடு நடத்தகிறது. நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடினால்தான் தீர்வு கிடைக்கும். மனுக் கொடுப்பதாலோ, கெஞ்சுவதாலோ, புலம்புவதாலோ தீர்வு ஏற்படாது. மக்களின் அழிவில்தான், மது ஆலை முதலாளிகளின் லாபம் இருக்கிறது. அரசு அவர்களைப் பாதுகாக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் மாநாட்டிற்கு வரவேண்டும் என ஊடகத்தின் மூலமாகவும் அழைக்கிறோம். தொடர்ந்து நடைபெறும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும், தமிழக மக்களைப் போதையிலிருந்து மீட்க வேண்டும். சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது அனைவரின் பொறுப்பாகவும் கடமையாகவும் மாற வேண்டும்.

நன்றி!.

மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு.
9-2-16 திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க