Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மங்காத்தா மல்லையாவும், ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும் - குறுஞ்செய்திகள்

மங்காத்தா மல்லையாவும், ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும் – குறுஞ்செய்திகள்

-

மங்காத்தா மல்லையா

vijay mallaya vinavu .comச்சரிக்கை: தேடப்படும் குற்றவாளி BIG பாக்கெட் விஜய் மல்லையாவைக் கண்டால் அருகாமை அரசு வங்கிகளுக்கு தகவல் கொடுங்கள்!

கிங்ஃபிஷர் சீமைச்சரக்கு பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விமானக் கம்பெனிக்காக கடனை வாங்கி பட்டை நாமம் போட்ட விஜய் மல்லையாவின் யுனைட்டட் ப்ரூவரீஸ்-ஸை மோசடியாளர் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மோசடியாளர் சிறப்பை யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவும், ஸ்டேட் வங்கியும் அறிவித்திருந்தன. சார்வாள் ஆட்டையைப் போட்ட அரசு வங்கிகளின் மொத்த பணம் வட்டியுடன் சேர்த்து ஏழாயிரம் கோடி ரூபாய்.

உலகெங்கிலும் மாளிகைகள், தனித்தீவுகள், ஏராளமான கார்கள், முக்கால் அம்மண மாடல்களின காலண்டருக்காக பல கோடி செலவு என உலகமே பார்த்திராத இந்த ஊதாரி இன்னும் வெளியே நடமாடக் காரணம் என்ன? கிங்ஃபிஷர் கம்பெனியின் பெருமை மிகு தூதர்களில் பா.ஜ.க, காங்கிரசு, அ.தி.மு.க அனைவரும் இருக்கும் போது அய்யாவுக்கு என்ன குறைச்சல்?

சீமைச் சரக்கெடு! பேங்குக்கு பட்டை நாமம் போடு!!

____________

பாக்கிஸ்தான் ISI-ன் தலைமை ஏஜெண்டு பாரதீய ஜனதா! – ஆதாரங்கள்!!

முசுலீம் மக்களின் தலையை நசுக்கி இரத்த யாத்திரை நடத்திய அத்வானியும் அவரது வானரக் கூட்டமும் பாபர் மசூதியை இடித்து, நாடெங்கும் கலவரம் நடத்தி, குறிப்பாக பம்பாயில் பல நூறு முசுலீம் மக்களின் உயிரைக் குடித்தனர். 12 கோடி முசுலீம் மக்களை எதிர்த்து பத்தாண்டு காலம் இவர்கள் நடத்திய வெறிக் கலவரங்கள் – கொலைகள் காரணமாகத்தான் இசுலாமியத் தீவிரவாதம் முளைவிட்டது.

‘நமது சிறுபான்மை மக்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டால், ஐ.எஸ்.ஐயின் இரையாக அவர்கள் சிக்குவது நடக்கும்’ என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவின் ஐ.ஜி. விபூதி நாராயண்ராய். ஐ.எஸ்.ஐ-யின் வலைக்கு பற்றாக்குறை வராமல் இரை தேடிக் கொடுப்பது இந்துமத வெறியர்களே என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்துவதே இந்துமத வெறியர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.இன், ஒரே குறிக்கோளாகும். எனவே ஐ.எஸ்.ஐ-யின் மிகப் பெரிய, அதிகாரப்பூர்வமற்ற சம்பளம் வாங்காத ஏஜெண்டுகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் என்பதே உண்மை.

அடுத்து, கைது செய்யப்படும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளில் இந்து – சீக்கியர் – கிறிஸ்தவர் என அனைத்து மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். ஆனால், அதிலிருக்கும் முசுலீம்கள் மட்டும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படுகிறார்கள். 1999 பாராளுமன்றத் தேர்தலின் போது பாகிஸ்தானிற்கு உளவு சொன்னதாகக் கைது செய்யப்பட்ட உள்துறை அமைச்சக நபர்களில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. உ.பி., பா.ஜ.க. அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங், ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் என்றும், உள்ளூர் ரவுடி பிரதேஷ் சிங் கும்பலுக்கு கணிசமான ஆயுதங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

rss isi a love storyதாவுத் இப்ராஹிமின் டெல்லித் தளபதியாகச் செயல்பட்ட ரொமேஷ் சர்மா ஒரு இந்துதான். இவனது கட்டித்தில்தான் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சேஷனது ‘தேசபக்தி அமைப்பு’ அலுவலகம் செயல்பட்டது. டெல்லி வாழ் காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் பலர் இவனோடு தொடர்புள்ளவர்கள்தான். இவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை; ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக அடையாளமும் காணப்படவிலை. தாவுதின் தளபதியாகச் செயல்பட்டு பின் பங்காளிச் சண்டையால் பிரிந்து போனவன் சோட்டாராஜன். பின்னர் இந்து மத வெறியர்களால் ‘இந்து தாதா’வாகப் போற்றப்பட்டான். பாங்காக்கில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் இவனை தாவுத் கும்பல் சுட்டுக் காயப்படுத்தியது. இவனைக கைது செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முறையான தகவல் வேண்டும் என்கிறது தாய்லாந்து அரசு. தாவுத்துடன் சேர்ந்தும், பிரிந்தும் இவன் நடத்திய கொலைகள் ஏராளம். மேலும், ஐ.எஸ்.ஐ.யின் வேண்டுகோளுக்கேற்ப பல முறைகேடுகள் நடத்தியவன்.

இவனை இந்தியா கொண்டு வர பம்பாய் போலீசு முயன்றபோது, தேசபக்தர் அத்வானியின் அலுவலகத்திலிருந்து ‘வேண்டாம்’ என்று உத்திரவு வருகிறது. தாவுதை எதிர்த்துப் போர் நடத்தும் ‘இந்து வீரனை’, சிவசேனா ஆதரவு பெற்ற ரவுடித் தலைவனை பாசத்தோடு பராமரிக்கிறது பா.ஜ.க. அரசு. தற்போது தாய்லாந்து போலீசிடமிருந்து ராஜன் தப்பி இருக்கிறான். இதற்கு ஏற்பாடு செய்ததே பா.ஜ.க. அரசுதான் என்று குற்றம் சாட்டுகிறார் மராட்டிய காங்கிரசு அமைச்சர்.

(1999 – 2001-ம் ஆண்டுகளில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த “கண்ணை மறைக்கும் காவிப்புழுதி”யில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை ஒன்றின் பகுதி இது. இன்று ஜனநாயக சக்திகளை கருவறுக்க அனைவரையும் தேச விரோதிகள் என்று சித்தரிக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் யோக்கியதையை சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பே திரை கிழித்த நூல் இது!)

https://www.vinavu.com/2012/10/30/conversion-22/

___________________________

அவர்கள் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்!

ஜூனியர் விகடன் 21 பிப், 2016 இதழில் ராகுல் காந்தியின் நேர்காணலில் இடம் பெற்ற கேள்வி இது:

“பல மாநிலங்களுக்குச் சென்று வருகிறீர்கள். அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?”

ராகுலின் பதில்:

“சமீபத்தில் இந்தியத் தொழில் கூட்டமைப்பினரைச் சந்தித்தேன். பி.ஜே.பி அரசிடமிருந்தும் மோடியிடமிருந்தும் தொழிலதிபர்கள் நிறைய எதிர்பார்த்தார்கள். இப்போது அவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த ஆட்சி மீது யார் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்களே ஏமாற்றம் கொண்டுள்ளனர். அவர்களின் எதிர்பார்பை ஏன் பூர்த்திச் செய்ய முடியவில்லை?”

rahul with modi cartoonமோடியை பல்வேறு தரகு முதலாளிகள்தான் ஸ்பான்சர் செய்தனர். இதன் பொருள் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசை அதே முதலாளிகள் கடந்த தேர்தலில் கைவிட்டனர் என்பதே. தற்போது பா.ஜ.க அரசின் மதவெறி தாக்குதல், மாணவர்கள் மீது தாக்குதல், பொருளாதார தாக்குதல் என பல்வேறு அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. அங்கெல்லாம் ராகுல் காந்தி செல்லாமல் இல்லை. எனினும் மோடி ஆட்சி மீது யாருக்கு அதிருப்தி என்று நினைக்கும் போது அவருக்கு முதலிடத்தில் முதலாளிகளே நினைவுக்கு வருகின்றனர்.

காங்கிரசும், பா.ஜ.கவும் முதலாளிகளுக்கான கட்சி மட்டுமல்ல, தங்களுக்குள் இருக்கும் போட்டியைக்கூட யார் முதலாளிகளின் சிறந்த சேவகன் என்பதை வைத்தே மதிப்பிடுகின்றனர்.

அரசியல், தேர்தல், கருத்துக் கணிப்புகள் என்று நீங்கள் நினைப்பது, விரும்புவது, பேசிக் கொள்வது எப்படி இருந்தாலும் கட்சிகளைப் பொறுத்த வரை அவர்கள் முதலாளிகளின் குட்புக்கில் எப்படி இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதே!

____________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்திகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க