Saturday, January 28, 2023
முகப்புகட்சிகள்காங்கிரஸ்சதி... சதி....ஐ.எஸ்.ஐ சதி...

சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 22

பஞ்பாப், காசுமீர் பிரச்சினைகள் மூலம் பாரதத்தைத் துண்டாக்குவதற்கும், பம்பாய்கோவை தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் பாரதத்தைச் சீர்குலைப்பதற்கும், பாகிஸ்தான் இந்நாட்டு முசுலீம்களைப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தானின் சதி வேலை உளவுப் பிரிவான .எஸ்..இன் ஏஜெண்டுகளாக பல முசுலீம் அமைப்புகள் செயல்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்து வரும் அவதூறு.

.எஸ்.ஐ. எனப்படும் பாகிஸ்தானின் தேசிய உளவு நிறுவனமான ‘இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்’, ‘பாரத் மாதாகீ ஜெய்’ யைவிட அதிகமாக ஆர்.எஸ்.எஸ்.கும்பலால் ஜெபிக்கப்படும் மூன்றெழுத்து மந்திரமாகும். அவர்கள் மட்டுமல்ல செய்தி ஊடகம், ஓட்டுக் கட்சிகள், அரசு அனைவருமே தேசபக்தி சாமியாட்டத்திற்கு ஐ.எஸ்.ஐ பூச்சாண்டி காட்டுவது ஒரு கேலிக்கூத்தாகி வருகிறது. கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிடுவதைப்போல ‘ரேசன் தட்டுப்பாடு, சுகாதாரக் கேடுகள் போன்றவைக்கும் ஐ.எஸ்.ஐ. தான் காரணம் எனக் கூறும் நாள் தூரத்தில் இல்லை.’

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் முத்திரையாக அறியப்பட்ட ஐ.எஸ்.ஐ., இந்து மதவெறியர்களால் தேசத்துரோகிகளுக்கான முத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் 12 கோடி முசுலீம் மக்களையும் ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டுகளாகச் சித்தரித்துத் தனிமைப்படுத்துவதே அவர்களின் முதன்மையான நோக்கம்.

அடுத்து அரசின் உளவுத்துறை, பாதுகாப்பு படையினரின் முறைகேடுகளை வெளிச்சமாக்கி இந்திய அரசை எதிர்க்கும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளை தேசத்துரோக முத்திரை குத்துவது இரண்டாம் நோக்கமாகும். இப்படி ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டியை வைத்து பெரும்பான்மை மக்களது தேசபக்தி உளவியலை சதித்தனமாகத் திரட்டி வரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அவதூறை இடுப்பொடிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

காலிஸ்தான்: காங்கிரசின் சதி!

பசுமைப்புரட்சியின் மூலம் பணக்காரர்களான சீக்கிய விவசாயிகளுக்கும், ஏற்கனவே பணக்காரர்களாயிருந்த நகர்ப்புறத்து இந்து வியாபாரிகளுக்கும் தோன்றிய முரண்பாடே பஞ்சாப் பிரச்சினையின் அடிப்படையாகும். அந்த முரண்பாட்டைப் பயன்படுத்தி அகாலி தளத்தை வீழ்த்த நினைத்தவர் இந்திரா காந்தி. அதன்படி காங்கிரசு கும்பலால் அகாலிதளத்திற்கு எதிராக வளர்க்கப்பட்டவர் பிந்தரன் வாலே.

ஏற்கனவே பஞ்சாபி மொழி, நதிநீர் பிரச்சினை போன்ற கோரிக்கைகள் சீக்கியர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகச் சித்தரித்து, பஞ்சாபி மக்களை இந்து, சீக்கியர் என மதரீதியாகப் பிளப்பதில் காங்கிரசு, இந்துமத வெறி அமைப்புகள் வெற்றி பெற்றிருந்தன. இப்படி பஞ்சாப் பிரச்சினைக்கு அச்சாரம் போட்டு, எண்பதாம் ஆண்டுகள் முழுவதும் பஞ்சாபை இரத்தக் களறியில் மூழ்கடித்தவர்கள் யார்? நிச்சயமாக ஐ.எஸ்.ஐ. இல்லை.

அரசு பயங்கரவாதத்தால் பாதிப்படைந்த சீக்கிய இளைஞர்களைப் பயன்படுத்துவதற்கே ஐ.எஸ்.ஐ. மூக்கை நுழைத்தது. மேலும் பஞ்சாபில் ஐ.எஸ்.ஐ. நடத்திய சதிவேலைகளைவிடப் பல மடங்குக் கொடூரங்களை நடத்தியது இந்திய அரசுதான். கே.பி.எஸ்.கில் என்ற போலீசு பயங்கரவாதியினால் ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர்; காணாமலும் போயினர். இன்றைக்கும் பஞ்சாப் மக்களிடம் நீங்கள் யாரை வெறுக்கிறீர்கள் பாக்கிஸ்தான் உளவுப்படையையா, இந்தியப் பாதுகாப்பு படையினரையா என்று கேட்டுப் பாருங்கள். நூறுசதம் இந்திய படை என்றே பதில் வரும்.

காசுமீர் யாருடைய சதி?

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசுமீர் மக்களின் அவலநிலை ஐ.எஸ்.ஐ. பெயர் சொல்லியே நியாயப்படுத்தப்படுகிறது. ”காசுமீர் யாருடன் சேர்வது என்பதையோ, தனிநாடாக இருப்பதையோ நாங்களே முடிவு செய்கிறோம்” எனும் காசுமீர் மக்களின் கோரிக்கையை இந்தியா ஏற்பதில்லை. சிம்லா ஒப்பந்தப்படியும், ஐ.நா. உடன்படிக்கைப்படியும் பேச்சு வார்த்தை மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதை இந்திய அரசு மறுத்து வருகிறது. அதையே மூலதனமாக வைத்து பாகிஸ்தானும் காசுமீர் போராட்டத்தை தனது நலனுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இரு நாட்டு அரசுகளும் தமது மக்களின் சமூக பொருளாதார அவலங்களைத் தீர்க்க வக்கின்றி, தேசிய வெறியைக் கிளப்பி விடும் கருவியாக காசுமீரைப் பயன்படுத்துகின்றன. இதில் இந்தியாவின் பங்கே முதன்மையானது.

பாகிஸ்தானின் உள்ளார்ந்த நோக்கம் கேடானது என்றாலும், காசுமீர் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்றும், காசுமீர் புனிதப்போருக்குச் செல்லும் எந்தத்  தனி நபரையும் தடுக்க மாட்டோம் என்றும் வெளிப்படையாகப் பேசுகிறது. போராளிகளும் ஆசாத் காசுமீர் மற்றும் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் மக்களிடம் பிரச்சாரம் செய்தும், நிதி வசூலித்தும், போராளிகளைத் தெரிவு செய்தும் இயங்கி வருகின்றனர். இதில் ரகசியம் எதுவுமில்லை. ஆனால், காசுமீர் போராட்டத்தை ஐ.எஸ்.ஐ சதி என்று ஒடுக்கி வரும் இந்திய அரசின் நடவடிக்கைகள் முற்றிலும் சதித்தனமாக இருக்கின்றன. ‘தேசபக்தியும் ஜனநாயகமும்’ அப்படித்தான் இயங்க முடியுமோ?

இந்திய இராணுவம் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு

கிளிண்டன் வருகையின் போது காசுமீர் சித்சிங்கபுராவில் 35 அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் பாக்கிஸ்தான் ஆதரவுப் போராளிக் குழுக்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும் இன்றுவரை அதற்குச் சான்றாதாரம் எதுவுமில்லை. மாறாக இந்திய இராணுவம்தான் செய்தது என்ற விமர்சனத்தையும் ஒதுக்க முடியாது. சீக்கயர்களைக் கொன்ற ‘பயங்கரவாதிகள்’ ஐவரை பாத்ரிபால் கிராமத்தில் சுட்டுக் கொன்ற இந்திய இராணுவம், தினத்தந்தி ‘போஸில்’ மீசையை முறுக்கியது. ஆனால், கொல்லப்பட்டவர்கள் அப்பாவி முசுலீம் கிராம மக்கள் என்பது உடன் தெரிய வந்து, காசுமீர் மக்கள் வெகுண்டெழுந்தனர். அப்படி பிராக்போராவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களில் 11 பேர் மறுபடியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துடன் விசயம் முடிந்து விடவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் உ.பி.மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘மாலிக்’ என்ற லஷ்கர் – இ தோய்பா (பாகிஸ்தான் ஆதரவுக் குழு) உறுப்பினர் கைது செய்யப்பட்டார். ”எங்கள் குழுதான் சீக்கியர் கொலை உள்ளிட்ட மூன்று படுகொலைச் சம்பவங்களை நடத்தியது” என்று இவர் கொடுத்த வாக்கு மூலத்தைக் காட்டி இந்திய இராணுவம் மீண்டும் மீசை முறுக்கியது. முறுக்கிய வேகத்திலேயே மண்ணைத் தொட்டது.

அலிகார் முசுலீம் பல்கலைக்கழக விடுதியில் மாலிக் தங்கியிருந்தது, அவரது மாணவர் அடையாள அட்டை, வாக்குமூலம் அனைத்துமே இந்திய அரசு உளவுத் துறையினரால் ‘செட் அப்’ செய்யப்பட்டது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படுகொலைகளை விசாரிக்க காசுமீர் அரசு நியமித்திருக்கும் ‘பாண்டியன் கமிசனிடம்’ எப்படித் திறமையாக பொய் சொல்வது என்று இந்திய இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தற்போது மண்டை காய்ந்து வருகின்றன. இப்படி காசுமீரை குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றியது யார்? இந்திய அரசா, ஐ.எஸ்.ஐ.யா?

இந்திய அரசு போட்டுக் கொடுத்த இராஜபாட்டையில் ஐ.எஸ்.ஐ. கம்பீரமாக நுழைந்தது. மதச் சார்பற்ற காசுமீர் போராட்டத்தை இசுலாமியச் சார்பாக மாற்றியும், விடுதலைக் குழுக்களை உடைத்து பாகிஸ்தான் ஆதரவு குழுக்களாக மாற்றியும் ஐ.எஸ்.ஐ. செயல்படுவதற்கான முகாந்திரத்தை இந்தியாதான் ஏற்படுத்தியது. தற்போது அதிகாரத்திலிருக்கும் இந்து மதவெறியர்களோ பாகிஸ்தானுக்கு மேலும் உதவுகின்றனர்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது லஷ்கர்-இ-தொய்பா குழுவின் அப்துல்லா முன்டாசர், ”பா.ஜ.கட்சி அதிகாரத்திற்கு வரவேண்டுமென இறைவனைத் தொழுகிறோம். அப்போதுதான் நாங்கள் இன்னும் பலமான சக்தியாக உருவாக முடியும்,” என்று சொல்லியிருந்தார். ஐ.எஸ்.ஐயின் நண்பர்கள் இந்திய முசுலீம்களா, இந்து மதவெறியர்களா என்ற கேள்விக்கு இதைவிடத் திருத்தமான பதில் வேறு உண்டா?

வெள்ளை அறிக்கையும் வெளிறிப்போன அத்வானியும்

ஒருமுறை சென்னை வந்த இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், பா.ம.க. இராமதாசைச் சந்தித்தாராம். ராஜ்குமார் கடத்தலையொட்டி இரு மாநில மக்களிடமும் கலவரங்களைத் தூண்டிவிட ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருப்பதால் அதை விளக்கி வீரப்பனுக்கு ஒரு கடிதம் எழுதி நெடுமாறனிடம் கொடுத்தனுப்பும் படியும் அமைச்சர் கேட்டுக் கொண்டதாக ஜு.வியில் ஒரு செய்தி வந்திருந்தது. இந்து மதவெறியர்களுக்கு நிகராக இந்திய செய்தி நிறுவனங்களும் இத்தகைய ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டியைக் கேவலமாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்தக் கேவலத்தின் தமிழக உதாரணம் புளுகுணி தினமலர்.

எதிர்க்கட்சியாக இருந்த போதே ஐ.எஸ்.ஐ. குறித்த உண்மைகளை மைய அரசு வெளியிடுமாறு அத்வானி வகையறாக்கள் அடிக்கடி கேள்விக்கணைகள் விடுவது வழக்கம். இப்போது உள்நாட்டுப் பாதுகாப்பையே பொறுப்பேற்று நடத்தும் ‘தேசபக்தர்’ அத்வானி பதவி ஏற்ற புதிதில் ஐ.எஸ்.ஐ. குறித்த ‘வெள்ளை அறிக்கை’ விரைவில் வெளியிடப்படும் எனச் சபதம் எடுத்தார்.

மாதங்கள் பல கடந்தும் அறிக்கையை வெளியிடவில்லையே ஏன்? ”எங்கள் வண்டவாளங்களை வெளியிட்டால், உங்கள் உளவுத்துறையான ‘ரா’வின் (ரிசர்ச் அன்ட் அனலாசிஸ் விங்) தில்லுமுல்லுகளை வெளியிடுவோம்” என பாக்கிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்தது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகிவிடுமோ என்றஞ்சிய அத்வானி தற்போது வெள்ளை அறிக்கை குறித்து கேட்டால் நரசிம்மராவ் பாணியில் செத்த பிணம் போல முகத்தை வைத்துக்கொள்கிறார். இருநாட்டு உளவுத்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை ‘நாம் இருவரும் திருட்டுப் பேர்வழிகள்தான், சதி வேலை செய்வது – வெற்றி பெறுவது அவரவர் சாமர்த்தியம்’ என்ற இராஜதந்திர அறிவோடும், தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பும் வெள்ளை அறிக்கை வேண்டாம் என்ற பரஸ்பர புரிதலோடும் இருக்கின்றனர்.

இதுபோக வெளிவராத அந்த வெள்ளை அறிக்கையில் ‘தினமலர்’ பாணி புளுகுகளை அத்வானி புனைந்திருப்பது தற்போது அம்பலமாயிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் எட்வர்டோ பெலைரோ பேட்டி ஒன்றில் கீழ்க்கண்ட செய்தியைக் கூறியிருக்கிறார். ”குஜராத் – கட்ச் பகுதியில் உள்ள மதரஸா – மசூதிகளில் சமீபகாலமாக ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை அதிகரித்திருப்பதாக அத்வானி புனைந்திருக்கிறார். குஜராத் உளவுத்துறை ஐ.ஜி.யோ ‘அப்படி ஏதும் தகவல்கள் எங்களுக்கு வரவில்லையே’ என்று அத்வானியிடம் மறுத்திருக்கிறார். வெகுண்டெழுந்த அத்வானி, ‘அப்படியெல்லாம் மறுக்கக்கூடாது. செல்லுங்கள் தீர விசாரித்து தகவல்களை (நான் விரும்பியபடி) பெற்று வாருங்கள்” என்று ஆணையிட்டாராம்.

ஐ.எஸ்.ஐ.யின் சதி வேலைகளை இப்படிச் சதித்தனமாகப் புனைந்துரைக்கும் இந்த தேசபக்தத் திலகம் 27-4-2000 அன்று லோக்சபாவில் பேசும்போது, ”இந்தியாவைச் சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ. தொடுத்திருக்கும் ஜிகாத்திற்கு இந்திய முசுலீம்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறினார். அப்படித்தான் இந்திய முசுலீம்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

பாரதீய ஜனதா: ஐ.எஸ்.ஐ-யின் தலைமை ஏஜெண்டு!

முசுலீம் மக்களின் தலையை நசுக்கி இரத்த யாத்திரை நடத்திய அத்வானியும் அவரது வானரக் கூட்டமும் பாபர் மசூதியை இடித்து, நாடெங்கும் கலவரம் நடத்தி குறிப்பாக பம்பாயில் பல நூறு முசுலீம் மக்களின் உயிரைக் குடித்தனர். 12 கோடி முசுலீம் மக்களை எதிர்த்து பத்தாண்டு காலம் இவர்கள் நடத்திய வெறிக் கலவரங்கள் – கொலைகள் காரணமாகத்தான் இசுலாமியத் தீவிரவாதம் முளைவிட்டது.

‘நமது சிறுபான்மை மக்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டால், ஐ.எஸ்.ஐயின் இரையாக அவர்கள் சிக்குவது நடக்கும்’ என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவி ஐ.ஜி. விபூதி நாராயண்ராய். ஐ.எஸ்.ஐயின் வலைக்கு பற்றாக்குறை வராமல் இரை தேடிக் கொடுப்பது இந்துமத வெறியர்களே என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்துவதே இந்துமத வெறியர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.இன், ஒரே குறிக்கோளாகும். எனவே ஐ.எஸ்.ஐ-யின் மிகப் பெரிய, அதிகாரப்பூர்வமற்ற சம்பளம் வாங்காத ஏஜெண்டுகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் என்பதே உண்மை.

அடுத்து, கைது செய்யப்படும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளில் இந்து – சீக்கியர் – கிறிஸ்தவர் என அனைத்து மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். ஆனால், அதிலிருக்கும் முசுலீம்கள் மட்டும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படுகிறார்கள். 1999 பாராளுமன்றத் தேர்தலின் போது பாகிஸ்தானிற்கு உளவு சொன்னதாகக் கைது செய்யப்பட்ட உள்துறை அமைச்சக நபர்களில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. உ.பி., பா.ஜ.க. அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங், ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் என்றும், உள்ளூர் ரவுடி பிரதேஷ் சிங் கும்பலுக்கு கணிசமான ஆயுதங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

தாவுத் இப்ராஹிமின் டெல்லித் தளபதியாகச் செயல்பட்ட ரொமேஷ் சர்மா ஒரு இந்துதான். இவனது கட்டித்தில்தான் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சேஷனது ‘தேசபக்தி அமைப்பு’ அலுவலகம் செயல்பட்டது. டெல்லி வாழ் காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் பலர் இவனோடு தொடர்புள்ளவர்கள்தான். இவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை; ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக அடையாளமும் காணப்படவிலை. தாவுதின் தளபதியாகச் செயல்பட்டு பின் பங்காளிச் சண்டையால் பிரிந்து போனவன் சோட்டாராஜன். பின்னர் இந்து மத வெறியர்களால் ‘இந்து தாதா’வாகப் போற்றப்பட்டான். பாங்காக்கில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் இவனை தாவுத் கும்பல் சுட்டுக் காயப்படுத்தியது. இவனைக கைது செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முறையான தகவல் வேண்டும் என்கிறது தாய்லாந்து அரசு. தாவுத்துடன் சேர்ந்தும், பிரிந்தும் இவன் நடத்திய கொலைகள் ஏராளம். மேலும், ஐ.எஸ்.ஐ.யின் வேண்டுகோளுக்கேற்ப பல முறைகேடுகள் நடத்தியவன்.

இவனை இந்தியா கொண்டு வர பம்பாய் போலீசு முயன்றபோது, தேசபக்தர் அத்வானியின் அலுவலகத்திலிருந்து ‘வேண்டாம்’ என்று உத்திரவு வருகிறது. தாவுதை எதிர்த்துப் போர் நடத்தும் ‘இந்து வீரனை’, சிவசேனா ஆதரவு பெற்ற ரவுடித் தலைவனை பாசத்தோடு பராமரிக்கிறது பா.ஜ.க. அரசு. தற்போது தாய்லாந்து போலீசிடமிருந்து ராஜன் தப்பி இருக்கிறான். இதற்கு ஏற்பாடு செய்ததே பா.ஜ.க. அரசுதான் என்று குற்றம் சாட்டுகிறார் மராட்டிய காங்கிரசு அமைச்சர்.

உளவு வேலை: ‘மேல்சாதி’ மேட்டுக்குடியின் திறமை!

நாடறிந்த பிரபலமான இராணுவத் தளவாட தேசத் துரோக வழக்குகளான கூமர் நாராயணன் சதி வழக்கு, போபார்ஸ் பீரங்கி வழக்கு, ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல் பேர வழக்கு, தெகல்ஹா இராணுவ ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. மாறாக காங். – பா.ஜ.க.வைச் சேர்ந்த பலர் நேரடியாகவும், பினாமியாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். போபர்ஸ் பணத்தைச் சுருட்டிய தரகு முதலாளிக் கும்பலான லண்டன் வாழ் இந்துஜா சகோதரர்கள் இந்து மதவெறியாளர்களின் சர்வதேசப் புரவலர்களாவார்கள்.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, இராணுவத் தலைமையகம் பென்டகன், இவர்களுக்காக மென்பொருள் தயாரிக்கும் மைக்ரோ சாப்ட் ஆகிய நிறுவனங்களில் ஏராளனமான ‘இந்து’ இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்தியா உள்ளிட்டு முழு உலகையும் உளவு பார்க்கும் விண்கோள், மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடும் இவர்கள் சி.ஐ.ஏ. கைக்கூலிகள் என்று அழைக்கப்படுவதில்லை, இந்தியாவின் தேசத் துரோக பாரம்பரியத்தில் ‘இந்து’ ‘மேல்சாதி’ – மேட்டுக்குடியினரின் பங்குதான் பெரும்பான்மையானது என்பதை எவரும் மறுக்க இயலாது.

‘ரா’ சைவப்புலியா?

‘போதைப் பொருள் கடத்தல், வடகிழக்குப் போராட்டம், வங்க தேச – நேபாள – பாக். எல்லை மாவட்டங்களில் சதி’ என ஐ.எஸ்.ஐ. பற்றிய குற்றப்பட்டியலை இந்துமதவெறியர்கள் பாராயணம் செய்வது வழக்கம். ஆயினும் இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் தகிடுதத்தங்களைப் பார்க்கும்போது ஐ.எஸ்.ஐ. ஒரு கொசு என்பது புரியவரும். ”’ரா’ அமைப்பு இத்தகைய எதிர்ச் சதிவேலைகளில் ஈடுபடவில்லை என்று சொல்ல மாட்டேன். ‘ரா’வை விட ஐ.எஸ்.ஐ. கொடூரமானது, தொழில் முறையில் தீவிரமானது” என்கிறார் பி.எஸ்.எப்-இன் உளவுத் துறைத் தலைவர் விபூதி நாராயண்.

இந்தியத் தலைமைக் கணக்காளரின் சோதித்தலுக்கு உட்படத் தேவையில்லாத ‘ரா’வின் செலவுப் பட்டியல் இரகசியமானது. எத்தனைக் கோடி ரூபாய், எதற்காகச் செலவழிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. தகவல் தரும் தரகர்களுக்கு மது, மாது  சப்ளை செய்து குஷிப்படுத்த நாடெங்கும் ஆடம்பர மாளிகைகளை  ‘ரா’ நிறுவனம் வாடகைக்கு எடுத்திருக்கின்றது. மேற்கண்ட உளவுத் துறை அதிகாரியே ‘ரா’வை சைவப்புலி என்று ஒரு பேச்சுக்குச் சொல்லக்கூடத் தயங்குகிறார் என்றால் யதார்த்த நிலை எப்படியிருக்கும்?

காசுமீர் போராட்டத்திற்குப் பதிலடியாக பாகிஸ்தானில் நடக்கும் பஞ்சாப் – சிந்து தேசிய இனப் போராட்டங்கள், முஜாகீர் என்றழைக்கப்படும் இந்தியாவிலிருந்து சென்ற முசுலீம்களின் போராட்டம் ஆகியவற்றை சகல – சதி வேலைகளோடு ‘ரா’ ஆதரிக்கிறது. லாகூரிலும், கராச்சியிலும் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புகளை இந்தியா நடத்தியது என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

வடகிழக்கிலும், ஈழத்திலும் போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிடுவது, அப்பாவி மக்களைக கொலை செய்யத் தூண்டுவது, டம்மி குழுக்களை உருவாக்குவது என ‘ரா’வின் கொலைகார – சதிப் பட்டியல் நீளமானது. அதன்மூலம் இந்தப் போராட்டங்களை முட்டுச் சந்துக்குள் கொண்டு வந்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது என்ற தந்திரத்தில் ‘ரா’ கொட்டை போட்ட பெருச்சாளியாகும். ஒரு வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்கள் ஏராளம் எனும்போது அண்டை நாடுகளிலும், எல்லை மாநிலங்ளிலும் ‘ரா’ நடத்திய பயங்கரவாதங்கள் பற்றிச் சொல்லி மாளாது.

சி.ஐ.ஏ. தனது சதிப்பின்னலை உலகம் முழுவதும் நடத்த, ‘ரா’ தெற்காசியாவில் நடத்துகிறது. சென்ற ஆண்டு இஸ்ரேல் சென்று வந்த அத்வானி ‘மொசாத்தின்’ (இசுரேலின் உளவுப் பிரிவு) ஆசிகளையும், பயங்கரவாதத் தொழில்நுட்பத்தை அளிக்கும் ஒப்பந்தங்களையும் வாங்கி தந்தார். இந்தியாவிலும் எஃப். பி.ஐ., சி.ஐ.ஏ. கிளைகள் தற்போது வெளிப்படையாகத் துவக்கப்பட்டுள்ளன. இனி சி.ஐ.ஏ மேற்பார்வையில் ‘ரா’வின் வேலைகளில் அமெரிக்கத் திறமை பளிச்சிடும்.

எனவே இந்திய முசுலீம் மக்கள் ஐ.எஸ்.ஐ.இன் கைக்கூலிகள் எனச் சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் ‘தேசபக்த வேடத்தை’த் தோலுரிக்க வேண்டும். அடுத்து ஐ.எஸ்.ஐக்கு தியாக மனப்பான்மை கொண்ட முசுலீம் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டமே கையளிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக இந்த ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டி முசுலீம்களை மட்டுமல்ல புரட்சிகர –  மனித உரிமை அமைப்புக்களையும் துரோகிகளாகச் சித்தரிக்கிறது என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமெரிக்கக் கைக்கூலிகள்!

இரண்டாம் உலகப்போர் முடிவுற்று கம்யூனிசம் பரவி வந்த காலம். கம்யூனிசத்தை முறியடிக்க அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அப்போது இந்தியாவில் கம்யூனிச எதிர்ப்பில் தீவிரமாயிருந்த ஒரு இயக்கத்தைக் கேள்விப்பட்ட அமெரிக்கர்கள் முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியான ஜே.ஜே.குர்ரான் என்பவரை 1950-களில் அனுப்பி வைத்தனர்.

அவரும் நாகபுரி வந்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தங்கி இரண்டாண்டுகள் ஆய்வு செய்து தன் எஜமானர்களுக்குத் தெரிவித்தார். ‘மிலிடன்ட் இண்டுயிசம் இன் பொலிட்டிக்ஸ் – (இந்திய அரசியலில் இராணுவ இந்துத்துவம்) என்ற அவரது நூலில், கம்யூனிச எதிர்ப்பிற்காவே இந்திய முதலாளிகள், நிலப்பிரபுக்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பணஉதவி அளிப்பதாகவும், இந்தியாவில் கம்யூனிசத்தை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். மட்டுமே உள்ளது என பாராட்டும் தெரிவிக்கிறார்.

இப்படி ஆரம்பத்திலேயே ஆண்டையின் விசுவாத்தைப் பெற்றதனால் இன்றுவரை இவர்கள் அமெரிக்கச் சேவையை தொடருகின்றனர். அமெரிக்காவில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு அமெரிக்க தலைவர்கள் பலர் வருகின்றனர். அமெரிக்க அதிபருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர். பாபர் மசூதியை இடித்த கையோடு ராம ஜென்ம பூமி தலைவர், கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘நீங்கள்தான் பூவுலகின் தர்மம் காக்க அவதரித்த நவீன கிருஷ்ணர்’ என்று உருகுகிறார். இவர்களது அமெரிக்க அடிமைத்தனத்திற்கு ஒரு சான்று:

‘விஜயபாரதம்’ (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்) தீபாவளி மலர் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்.இன் அப்போதைய தென்னிந்திய கொ.ப. செயலரான சண்முகநாதன் என்ற பேர்வழி ‘அகண்ட பாரதம் விரைவில் மலரும்’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.

‘ஆசியா 2025’ என்ற எதிர்கால உலக அரசியல் நிலைமை பற்றிய ஜோசியம் ஒன்றை அமெரிக்கா வெளியிட்டிருக்கிறதாம். அதன்படி 2020 ஆண்டிற்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் சேர்ந்துவிடுமாம். பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டங்களை அமெரிக்கா அழிக்குமாம்.  பாகிஸ்தானுடன் சேரும் சீனாவை அமெரிக்கா மிரட்டி வைக்குமாம். அமெரிக்க இராணுவம் ஆசியாவில் தனது நம்பகமான கூட்டாளியாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்து சீனாவை ஒதுக்குமாம். இப்படி அமெரிக்கா இந்தியாவைக் கணித்திருப்பது பற்றி புல்லரிக்கிறார் சண்முகநாதன்.

இந்தியாவின் பல கட்சிகளில் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் இருந்ததுண்டு. ஒரு கட்சியே சி.ஐ.ஏ. ஏஜெண்டாக உள்ளது என்றால் அது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ. கும்பல்தான்.

– தொடரும்

__________இதுவரை____________

 1. எல்லாருக்கும் எல்லாமும் தெரியவரும் காலம் இவ்வளவுசீக்கிரமாக வந்ததற்க்கு மிகவும் நான் மகிழ்ச்சியடைகின்றேன் வினவிற்க்கு மிக்க நன்றி

  • சீக்கிரமாகத்தான் வந்திருக்கிறது.. 2008 மும்பாய்த் தாக்குதலுக்கு ISI திட்டமிடுவதற்கு முன்பே வந்த கட்டுரைத் தொடர்தான் இது…

 2. // இந்த தேசபக்தத் திலகம் 27-4-2000 அன்று லோக்சபாவில் பேசும்போது, ”இந்தியாவைச் சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ. தொடுத்திருக்கும் ஜிகாத்திற்கு இந்திய முசுலீம்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறினார். அப்படித்தான் இந்திய முசுலீம்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். //

  2002, செப்டெம்பரில் லஷ்கர் தீவிரவாதிகள் குஜராத்-காந்திநகர் அக்சர்தம் கோவிலில் நடத்திய தாக்குதலுக்கும், 2008 மும்பய் தாக்குதலுக்கும் இந்திய முஸ்லீம்கள் கடும் கண்டனம் தெரிவித்ததன் மூலம் // முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்துவதே இந்துமத வெறியர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.இன், ஒரே குறிக்கோளாகும்.// குறிக்கோளில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார்கள்..

 3. இக்கட்டுரை மூலம் ஐ.எஸ்.ஐ இந்தியாவிற்க்கு இம்மியள்வேனும் துரோகமோ, தீவிரவாதமோ செய்யாத ஒருநல்ல அமைப்பு என்பதும் தெரிந்து கொண்டேன்….னன்றி அய்யா…முடியலடா சாமி..

 4. அடங்கொய்யாலா ! அப்படின்னா ஐ.எஸ்.ஐ ஒரு காந்திய இயக்கம் அப்புடின்னு சொல்லுங்க. இத்தனை நாள் தெரியாம போச்சே இதெல்லாம். உங்கள மாதிரி அறிவு ஜீவிகள் எங்கள மாதிரி ஆளுங்களுக்கு கண்னை அடிக்கடி திறந்து வைங்யுங்கன்னே திறந்து வையுங்க !!!

 5. நீங்க்ள் ஐ.எஸ்.ஐ கு எப்ப்டிவேனா முஸ்லிம் ஆதரவு கொடுங்க! ஆனா உங்களால் இந்தமாதிரி வெளீபடையாக ஒரு எதிரி நாட்டு உளவு தீவிரவாத அமைப்புக்கு ஆதராவக பேச முடிவது இந்தியாவில் மட்டும்தான் முடியும் ! இந்தியா இதுபோல் எவ்வளவொ துரொகங்க்ளை பார்த்திருக்கிறது!

  உங்கள மாதிரி அறிவு ஜீவிகள் எங்கள மாதிரி ஆளுங்களுக்கு கண்னை அடிக்கடி திறந்து வைங்யுங்கன்னே திறந்து வையுங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க