privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீங்களும் வாங்க.. இந்தச் சனியனை ஒழிக்க ! விருதையைக் கலக்கிய பொதுக்கூட்டம்

நீங்களும் வாங்க.. இந்தச் சனியனை ஒழிக்க ! விருதையைக் கலக்கிய பொதுக்கூட்டம்

-

நீங்களும் வாங்க… இந்தச் சனியனை ஒழிக்க !
மூடு டாஸ்மாக்கை ! பொதுக்கூட்டம்

shutdown-tasmac-virudhai-meeting-poster-1

விருத்தாசலம் வானொலி திடலில் 27-3-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் க. இளமங்களம் தப்பாட்ட குழுவினரின் இசை முழக்கத்துடன் பொதுக்கூட்டம் துவங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

shutdown-tasmac-virudhai-meeting-02தோழர் முருகானந்தம், விருத்தாசலம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தனது தலைமை உரையில் “மக்கள் அதிகாரம் துவங்கிய நோக்கம் இந்த அரசு கட்டமைப்பு தோற்றுவிட்டது. நம்மை ஆளும் அருகதை இழந்துவிட்டது. கல்வி, மருத்துவம் முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக சொல்லும் காவல்துறை, நீதித்துறை வரை அனைத்தும் யோக்கியதை அற்று போய்விட்டது என்பது.

அனைத்து ஓட்டுக் கட்சிகளும் சி.எம். ஆனதும் டாஸ்மாக்கை மூடுவதாக சொல்கிறார்கள். அவர்கள் யாரும் தங்களை டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அவர்களால் டாஸ்மாக் போராட்டத்தில் எத்தனை வழக்கை சந்தித்தார்கள், எத்தனை முறை சிறை சென்றார்கள் என கூற முடியாது.

ஆனால் மக்கள் அதிகாரம் தொடங்கிய நாள் முதல் போராடி வருகிறது. பல ஊர்களில் டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி எமது தோழர்கள் சிறையிலிருந்தனர். இன்று தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் போராட்டம் என செய்து வருகிறது. பல வழக்குகளை சந்தித்து வருகிறது.

இன்று மக்களை நேர்மையாக ஓட்டு போட சொல்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள். இதுநாள் வரையில் கிரானைட், மணல்கொள்ளையில் கூட்டாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் நேர்மையை பற்றி பேசுவது கேவலம். இவர்கள் எப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள்” என்கிற கேள்வியுடன் கூட்டத்தை துவங்கி வைத்தார்.

பஞ்சமூர்த்தி, வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்

shutdown-tasmac-virudhai-meeting-04“கார்மாங்குடி, காவலக்குடி, மணல் குவாரியை மக்கள் அதிகாரத்தின் மூலம்தான் மூடினோம். அதாவது தினமும் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்தவர்களை தடுத்து நிறுத்தினோம். தினமும் 1 லட்சம் ரூபாய் மக்கள் பணத்தை திருடும் மேலப்பாளையூர் டாஸ்மாக்கை மூடிக் காட்டினோம். அந்த ஊரில் இன்று பலர் குடியை நிறுத்தி விட்டதாக சொல்கிறார்கள்.

இதெல்லாம் ஓட்டு கட்சிகள் மூலம் சாத்தியமில்லை, மக்கள் அதிகாரத்தை எடுப்பதன் மூலம் தான் சாத்தியம்.

தோழர் தனசேகரன் , மக்கள் அதிகாரம் உறுப்பினர்

“நான் விஜயமாநகரத்தில் கோழி கறிக்கடை வைத்துள்ளேன். எனக்கு டாஸ்மாக்கால் தினமும் 500 ரூபாய் வருமானம் வருகிறது.

கடந்த வருடம் ஸ்கூல் பையன் ஒருவன் முதல் மதிப்பெண் பெற்றதற்கு பார்ட்டி வைத்து குடிக்கிறான். முன்பெல்லாம் சாக்லெட் தான் தருவார்கள். இந்த சம்பவம் என்னை பெரிதும் பாதித்தது. என் வருமானம் போவது பற்றி எனக்கு கவலையில்லை டாஸ்மாக்கை மூடியை தீர வேண்டும்.

நான் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரத்திற்கு போன போது நீயே குடிகாரன் என ஒருவன் சொன்னான். ஆம் நான் குடித்தேன், அது பிப்ரவரி 14 சிறப்பு மாநாடு வரை இப்போது குடிப்பதில்லை சிறந்த மனிதனாக இருப்பதாக உணர்கிறேன். ஆகையால் கூட்டத்திற்கு வருவது மட்டுமல்ல மூடவும் வருவேன்.

இந்த இழிவான டாஸ்மாக் நடத்தும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நெய்வேலி அனல் மின்நிலையம் கட்ட எங்களை 50 வருடம் முன் வெளியேற்றி இங்கு (விஜயமாநகரம், புதுகூரைப்பேட்டையில்) குடியேற்றினார்கள். இப்போது வரை பட்டா இல்லை. இவர்கள் எப்படி ஓட்டு கேட்டு வருகிறார்கள் என்பது தான் தெரியவில்லை. நல்ல ரத்தம் ஓடுபவர்கள் ஓட்டு ஏன் போட வேண்டும் என கேளுங்கள். அது உங்கள் சொந்தக்காரனாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும்.”.

புலவர் சிவராமசேது 

shutdown-tasmac-virudhai-meeting-09“திருக்குறளில் வள்ளுவன் அரசு என்பது எப்படி இருக்க வேண்டு்ம் என சொல்லியிருக்கிறார். அதில் அரசன் குற்றம் செய்யாதவனாகவும் மக்களை குற்றத்திற்கு தள்ளாதவனாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். இந்த அரசு மக்களை போதையில் மூழ்க செய்கிறது இது அரசாக இருக்க தகுதியற்றது.

இந்த போதை முன்பு கள்ளு, இன்று பிராந்தி, விஸ்கி. இதில் மூழ்குபவர்களை அவர்கள் தாய் கூட மதிக்க மாட்டார்கள். மது போதை எல்லா குற்றங்களையும் தன்னுடன் அழைத்து வருவதால் இது மிகப்பெரிய குற்றம் என்கிறார் திருவள்ளுவர். குடித்தவன் பொய் சொல்கிறான், திருடுகிறான், கொலை செய்கிறான், பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறான். இப்படி வள்ளுவர் சொன்ன பல்வேறு உதாரணங்கள் இன்று மெய்யாகி வருகின்றன.

அரசால் செய்யப்படும் எந்த திட்டங்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதற்கு மாறாக இந்த அரசு தனக்கு தகுதியற்ற குடிபோதையை உருவாக்கி மக்களை நோயாளிகளாக்கி மோசமான நிலைக்கு தள்ளுகிறது. அறிஞர் அண்ணா மது போதையில் வரும் வருமானத்தை குஷ்டம் வந்தவன் கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது என்றார். அவர் பெயரில் ஆளும் அரசு இந்த வெண்ணெயை நக்குகின்றது. இந்த நிலையை மாற்ற, குடிபோதை இல்லாத ஊராக உருவாக்க மக்கள் அதிகாரம் களமிறங்கியுள்ளது. அதற்கு என் வாழ்த்துக்கள்.”

இதற்கிடையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 50 பேர் பூவனூர் கிராமத்தில் இருந்து 10 கி.மி பேரணியாக பொதுக்கூட்ட தி்டல் நோக்கி வந்து சேர்ந்தனர். அவர்களை கூட்டம் கைத்தட்டலுடன் வரவேற்றது.

ஆனந்தியம்மாள், சென்னை

நீங்களும் வாங்க இந்த சனியனை ஒழிக்க இந்த முழக்கமே அருமையாக உள்ளது. மக்கள் அதிகாரம் என்பது மற்ற கட்சிகள் போல அல்ல, நாட்டுக்காக போராடக் கூடியவர்கள். இந்த அமைப்பில் அனைவரும் சமமாக நடத்தப்படுவது என்னை பெரிதும் ஈர்க்கிறது.

நான் ஒரு தப்பும் செய்யவில்லை. என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். இதற்கு நான் அஞ்சவில்லை.

திருச்சி மாநாட்டில் இரண்டு லட்சம் பெண்கள் தாலியறுத்து இருக்கிறார்கள் என்று சொன்னேன் இது பொய்யா?

நான் நடைப்பயணம் செய்த போது என்னிடம் புலம்பிய குரல்களை பதிவு செய்தேன். மிக்சி கிரைண்டர், பேன் விலை சில ஆயிரங்கள் கூட கிடையாது. ஆனால் ஐந்தாண்டுகளாக எங்க வீட்டு ஆம்பள டாஸ்மாக்கில் குடித்து அழித்து பல லட்சங்கள் என்ற விபரத்தை சொன்னேன்.

வேறு என்ன செய்து விட்டேன். மாணவர்களை குடிக்க வைக்க அரசா? படிக்க வைக்க அரசா? என கேட்டேன்.

உங்கள் குடுமி எங்கள் கையில், ஓட்டு கேட்டு வரும்போது பார்த்துக் கொள்கிறொம். 1947-க்கு முன்பு வெள்ளைகாரர்கள் விடுதலைக்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்று என் மீதும் பாய்ந்தது.

இந்த வழக்கிற்காக பெருமைப்படுகிறேன். இந்த மதுவை ஒழிக்க மக்கள் அதிகாரத்தால் தான் முடியும். மதுவை ஒழிப்போம் என்ற எங்கள் குரல் மது ஒழியும் வரை ஓயாது”

அருள், மக்கள் அதிகாரம் உறுப்பினர்

“மக்கள் அதிகாரத்தை கிராமங்கள் தோறும் சென்று பலப்படுத்த வேண்டும். இந்த அரசை தூக்கியெறிய வேண்டும்.”

சிறு தொண்ட நாயனார், ஓய்வு, தலைமை ஆசிரியர்

shutdown-tasmac-virudhai-meeting-13“எவன் ஒருவன் மற்றவர்களை கெடுக்கிறனோ அவன் தானாகவே அழிந்துவிடுவான். இது திருவள்ளுவர் சொன்னது. இந்த அரசு அப்படிதான் அழிந்து வருகிறது. இந்த அரசு நிதானத்தோடு இல்லை, உச்சாங்கிளையில் நின்று கொண்டு இன்னும் மேலே ஏறப் பார்க்கிறது விழுந்து சாக போகிறது.

மனிதனிடமிருந்து பிரியக் கூடிய கார் பங்களா உடமை அல்ல. வள்ளுவர் சொன்ன உடைமை என்பது பண்புடமை, அறிவுடமை, அடக்கமுடமை, அது இன்று நம்மிடம் இல்லை. அதற்கு நம் அரசு காரணமாக உள்ளது. நாம் பலியாகக் கூடாது நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

எனக்கு 77 வயதாகிறது கார் மோட்டர் சைக்கிள் இல்லை. தினம் தோறும் பேருந்தில்தான் பவழங்குடியிலிருந்து விருத்தாசலம் வருகிறேன.குடித்து விட்டு என் பக்கத்தில் உட்கார்ந்தால் குடலை பிரட்டுகிறது. குடித்தவன் போதையில் கிடக்கும் போது செத்தானா தூங்குறானா தெரியல, ஈ மொய்க்கிறது. வாயில் வாந்தியோடு கிடக்கிறான். இதை பார்த்தவன் டாஸ்மாக் கடைக்கு போகாமல் இருப்பானா?

திருக்குறளை படிங்க முடியலன்னா வாங்கி தலையில் வைத்து தூங்குங்க. என்றைக்காவது படிப்போம் என ஆதங்கத்தோடு இந்த சமுதாயத்தை பழாக்கும் டாஸ்மாக்கை முடிவு கட்ட வேண்டும்”.

தெய்வக்கண்ணு, உழவர் மன்றத் தலைவர்

shutdown-tasmac-virudhai-meeting-15“இப்ப இருக்குற முதலமைச்சர் சாராயம் விக்குறாங்க. இன்று நிறைய பேர் குடிக்காக வேலை செய்கிறார்கள், சொத்தை விற்று குடிக்கிறார்கள். எங்க ஊர்ல ஒருத்தன் நான் இரண்டு ஏக்கர வித்து குடிப்பேன் என சவால் விடுகிறான். அவனா சம்பாதித்தான். ஒரு சென்டு நிலம் அவனால வாங்க முடியுமா? குடி எங்க கொண்டு போய் விடுது.

வண்டி ஆக்சிடெண்ட் ஆயிட்டுது, உள்ள இருக்கிறவன் புழைச்சானான்னு பார்க்கல, வாங்கிட்டு வந்த சாராய பாட்டில் உடைஞ்சிதான் செக் பண்றான்.

வயல்ல அறுப்பு அறுத்தா உள்ள வெறும் பாட்டிலா கிடக்குது. காலை கிழிச்சிட்டு 300 செலவு பண்ணி வைத்தியம் பார்ததேன். மூணு நாள வெளிய எங்கேயும் போகல.

இந்த நாடு எப்படி முன்னேறும். உன்னை இந்த உயரத்தில் வைத்த மக்களுக்கு இதுதான் நீ செய்வதா? இது பற்றி நாங்க எதுவும் பேசக்கூடாதா? கேட்கக்கூடாதா? என்ன சட்டம் இங்க இருக்குது.

இது மட்டுமா குடிக்க தண்ணி இல்லய்யா, பச்ச தண்ணிய காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு.  உன்னை காவிரிதாய் என்கிறார்கள். காவிரியை கொண்டு வந்தாயோ இல்லையோ எங்க ஊரில் கடல் நீரை பூமிக்கடியில் கொண்டு வந்துவிட்டாய். தண்ணி கேன் கூட நீ வாங்கிட்ட இனிமேல் அதுவும் கிடையாது என மறுக்கும் காலம் வரப்போவது. அப்புறம் மூத்திரத்தை புடிச்சுதான் குடிக்கணும்.

அரசாங்கம் நீர்நிலைகள பாதுகாக்கணும். டாஸ்மாக்கை மூடியே தீரனும்.

நாங்க மேலப் பாளையூர் கடையை மூடி கடலூர் சிறையில் ஒரு மாதம் இருந்தோம். தினமும் உள்ளேயே வக்கீல் அய்யாவோட கூட்டம் நடத்துவோம். பாட்டு பாடுவோம். பேசறதுக்கு எங்களுக்கு எந்த பயமும் இல்ல. எத்தனை வழக்கு போட்டாலும் பரவாயில்ல. ஓட்டு போட்டு உன்ன தேர்ந்தெடுத்ததுக்கு எங்கள் விவசாயம் தான் அழிந்தது”

(தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,வழக்கறிஞர். சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் – உரைகள் அடுத்த பதிவில் இடம்பெறுகின்றன)

இறுதியாக, மக்கள் கலை இலக்கியக் கழகம் மையக் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்