privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்மணப்பாறையில் தலித் - வன்னியர் மணவிழா !

மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா !

-

புரட்சிகர மணவிழா – சமூக மாற்றத்தின் அழகு!

ரு திருமணத்தின் அழகு அது வெளிக்காட்டும் பொருட்களில் இல்லை, சிந்தனையில் இருக்கிறது. அப்படி ஒரு அழகிய திருமணம் (20-03-2016) மணப்பாறையில் நடந்தது.

revolutionary-wedding-invitation-1மனம் பாறையாகிப் போன சாதிய சமூகத்தின் இறுக்கத்தை தகர்க்கும் விதமாக சாதி ஒழிப்பின் பண்பாட்டுப் பொலிவாக புரட்சிகர மணவிழா அங்கே பூத்தது. மணமகள் ச.ஆரோக்கிய செல்வி வன்னிய சாதி, மணமகன் ச. லாரன்ஸ் தலித் சாதி.

“ஆரோக்கியத்தை” கெடுத்ததற்காக கோபத்தில் மணமகளின் பெற்றோர் புறக்கணிக்க, மணப்பாறையின் பல்வேறு பகுதி உழைக்கும் மக்கள் வர்க்கமாய் புடைசூழ மணவிழா களைகட்டியது.

மாரி மேரி ஆனாலும் இந்துத்துவ சாதி விடுவதில்லை. கிறிஸ்துவையே ஒரு தச்சனின் மகன் என்று சொல்வது தமிழக சாதியச் சூழலுக்கு மதத்தைப் பரப்ப பாதிப்பாகும் என அய்ரோப்பிய பாதிரியார்களையே ஆட்டம் காண வைத்த பார்ப்பனிய பைந்தமிழ் நாடல்லவா இது. விவிலியத்தின் “ஊதாரி மைந்தன்” கதையைக் கூட உள்ளது உளபடி ஆபிரகாம் ‘கொழுத்த கன்றை’ அடித்து விருந்து வைத்தான் என்று சொன்னால் கிறிஸ்துவத்தை தலித் மதம் என்று பலரும் ஏற்க மறுப்பர் என்று கன்றுகுட்டிக்குப் பதிலாக ஆட்டுக்குட்டி எனக் கதையை மாற்றிச் சொன்ன இந்துத்துவச் சூழலில், சாதி ஒழிப்பு என்பது சகல அரங்கிலும் ஒரு நெடிய போராட்டத்தைக் கோருகிறது. அதில் உறுதியாக நின்று சமூகப் பொறுப்புடன் வாழ்க்கையைத் தொடங்கும் நிகழ்வாக இம்மணவிழா இருந்தது.

பார்ப்பன பண்பாட்டுக்கு எதிரான போராட்டத்தை சொந்த வாழ்க்கையிலும் உயர்த்திப் பிடித்ததனால்தான் மணமக்களின் அவர்கள் சார்ந்த புரட்சிகர அமைப்புகளின் சமூகப் போராட்டத்துக்கு மதிப்பளித்து ரத்த உறவுகளைக் கடந்து வர்க்க உறவுகளாய் ஊரே திரண்டு வந்திருந்தது மணப்பாறை பகுதியிலுள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் மணமக்களை வாழ்த்திப் பேச, கூடியிருந்த மக்களுக்கு வாழும் வழி சொல்லும் அரசியல் துணையாகவும் அது அமைந்தது.

revolutionary-wedding-invitation-2எட்டுல குரு, நெட்டுல ஸ்க்ரூ, ஏழு பொருத்தம், எட்டு பொருத்தம் என்று இழுத்துக் கொண்டு நிற்காமல், “சாதி, சடங்கு, ஆடம்பரம் தேவையில்லை. இரண்டு பேரும் சமுதாய லட்சியத்துக்காக இணைந்து வாழ்வோம்” என பட்டென எளிமையாக முடிவானது புரட்சிகர மணவிழா.

பத்து பொருத்தம் பயன் தராது, சமூகப் பொருத்தமே நலம் தரும் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக நிலவும் சமூக அமைப்பின் பிற்போக்கு, வர்க்க பேதங்களை தகர்ப்பவையாக அமைந்தம மணவிழா நிகழ்வுகள்.

காசுக்காக லட்சுமிக் களை, கல்விக்காக சரஸ்வதி களை என்ற பம்மாத்துக்களைக் கடந்து சமூகத்துக்கான புரட்சிக் களையோடு மணமகனின் முகமும், மணமகளின் முகமும் மலர்ந்திருந்தது.

இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்ற மதப் பிரிவினை கடந்து ஏன்? எந்த சாதிக்கு ஒத்துக்காது என்று கூறுவார்களோ அந்த சாதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் எனப் பலரும் முகமலர்ச்சியோடு வந்து மணமக்களை வாழ்த்தியது வெறும் திருமணக் காட்சி மட்டுமல்ல. வர்க்க அரசியலின் சாட்சியாகவும் இருந்து.

சாதி, சடங்கு, தாலி ஆகிய பிற்போக்கு ஒடுக்குமுறை அம்சங்களை நிராகரித்ததோடு மட்டுமன்றி, உழைக்கும் மக்களின் வாழ்வை முன்னேற்றும் வர்க்கப் போராட்டங்களில் இணைந்து பங்கேற்போம் என்ற சமூகக் கடமையை ஏற்பதாக மணமக்களின் உறுதிமொழி அமைந்தது. இது பார்ப்பவர்களுக்கும் புதிய வாழ்க்கைக் கண்ணோட்டத்தை வழங்கியது.

ஆம். வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம்தான் ஒரு மனிதனுக்கு மிகச்சிறந்த துணை!

உங்கள் பகுதியில் நிகழும் புரட்சிகர மணவிழாவில் கலந்து கொள்ளுங்கள். அங்கே நடைபெறும் நிகழ்வு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்குத் தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக இல்லாமல் அது வர்க்கத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சமூக நிகழ்வாகவும் உங்களை இணைக்கும். அங்கே புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள் மணமக்களாக மட்டும் இருக்க மாட்டார்கள். கலந்து கொண்ட நீங்களாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

– துரை சண்முகம்

புரட்சிகர மணவிழா

20-03-2016 மாலை 3.30 மணிக்கு மணப்பாறை விராலிமலைச்சாலை காமராசர் சிலை அருகில் மகாலெட்சுமி திருமண மண்டபம்

மணமக்கள் : தோழர் ச. ஆரோக்கிய செல்வி தோழர் ச. லாரன்ஸ்

வரவேற்புரை : திரு செ. மணி, தலைமை ஆசிரியர் (ஓய்வு)
தலைமை : தோழர் துரை சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை

வாழ்த்துரை
தோழர் த. இந்திரஜித், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தோழர் சூர்யா சுப்பிரமணியன், சேர்மன், சூர்யா நர்சிங் கல்லூரி, ஆதவன் கற்றூரி, வையம்பட்டி
தோழர் சுடரொளியோன், தமிழாசிரியர் (ஓய்வு), திராவிடர் கழகம்
தோழர் துரை காசிநாதன், தலைமைக் கழக பேச்சாளர், தி.மு.க
தோழர் ஆதி.பெரு.பழனியப்பன், ஆதிதிராவிடர் நலப்பேரவை
தோழர் ந மதனகோபால், மாவட்டப் பொருளாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தோழர் M.P.ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர், ஆதித்தமிழர் பேரவை
தோழர் நிர்மலா, தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

சாதி எனும் சாக்கடை இல்லை
மதம் எனும் போதையுமில்லை
சடங்குகள் எனும் மடமையுமில்லை
அடிமைச் சின்னம் தாலியுமில்லை
மாமனார் வீட்டையே ஆட்டையை போடும்
வரதட்சணை எனும் கொடுமையுமில்லை
கையை பிசையும் மொய்யுமில்லை
ஆடம்பரமில்லை, ஆர்ப்பாட்டமில்லை
எளிமையும், இனிமையும், புதுமையும், புரட்சியும்
அன்பும், அறிவும் கொண்டு இணையும்
புரட்சிகர மணம் புரிவோம்

____________________________________________