Wednesday, January 26, 2022
முகப்பு பார்வை களக் கணிப்பு புதிய தலைமுறை தொலைக்காட்சி கட்சி சார்பற்றதா ? சர்வே முடிவுகள் !

புதிய தலைமுறை தொலைக்காட்சி கட்சி சார்பற்றதா ? சர்வே முடிவுகள் !

-

ஊடகங்களின் செல்வாக்கு என்ன ? கருத்துக் கணிப்பு பாகம் 2

எஸ்.ஆர்.எம் பல்கலை நிறுவனம் மாபெரும் வருமானத்தை தரும் பெரு உற்பத்தியாக மாறிய போது பாரிவேந்தர் பச்சமுத்து மகிழ்ச்சியடைந்தாலும் ஒரு வருத்தம் அவருக்கு இருக்கவே செய்தது. எவர் வீட்டு பணமோ இவ்வளவு இருக்கும் போது எங்களுக்கு எவ்வளவு என்று பெரும் கட்சிகள் மட்டுமல்ல, முகவரியே இல்லாத அனாமதேயக் கட்சிகள் கூட அன்னாரை சந்தித்து மாமுல் வாங்கி வந்தனர். தனது தொழிலுக்கு இது பாதுகாப்புதான் என்றாலும் இதற்கு முடிவே இல்லையா என்று யோசித்த வேந்தருக்கு உதித்த யோசனைதான் கட்சி ஆரம்பிப்பது!

அப்படி “இந்திய ஜனநாயகக் கட்சி” ஆரம்பித்து கூடவே புதிய தலைமுறை பத்திரிகை, தொலைக்காட்சி, புது யுகம் என்று அம்பானி போல ஆட்சியை விரிவுபடுத்தினார் பாரிவேந்தர். எழுத்தாளர்களுக்கு விருது, திரை நட்சத்திரங்களுக்கு பாராட்டு – கவனிப்பு என்று தொழில் சுத்தமாக போன பிறகு தனது கல்வித் தொழிலை இந்திய அளவில் கொண்டு போக பா.ஜ.கவுடன் நெருங்கினார். மோடி கூட்டத்திற்கு மட்டுமல்ல, தேர்தலுக்கே ஸ்பான்சர் அளித்தார். அதில் முக்கியமானது தொலைக்காட்சி மூலம் பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவாளர்களான அற்பங்கள் பலரை விவாத வித்வான்களாக்கி அரசியல் என்றாலே அது பா.ஜ.க பார்ப்பது போலத்தான் என்று மாற்றினார்கள்.

அதே போல அ.தி.மு.க – ஜெயலலிதாவை அண்டிப் பிழைக்கும் தமிழ் ஊடக வழக்கப்படி மழை வெள்ளத்தின் போது கூட அரசை கண்டிக்காமல் மயிலிறகு வருடலை வாசித்தார்கள். புதிய தலைமுறை மாலனோ ஜெயா கட்சி கூட்டத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் போல அம்மாவுக்கு தாளம் போட்டார். இருப்பினும் பொதுவில் புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றாலே நடுநிலைமை என்றொரு மூட நம்பிக்கை இங்கே நிலவுகிறது. அதன் செல்வாக்கு என்ன என்பதற்கு இந்தக் கேள்வியை முன்வைத்தோம்.

மொத்தம் 29 சதம் மக்கள் அதை ஏதோ ஒரு கட்சி சார்பு என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். 18 சதமானோர் எந்தக கட்சி சார்பு என்று தெரியாது என்றும், 52,8 % பேர்கள் கட்சி சார்பற்றது என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆக சரிபாதிப்பேர்கள் மட்டும் புதிய தலைமுறையை கட்சி சார்பற்றது என்று குறிப்பிடுவது அந்த தொலைக்காட்சியின் பெயர் பெரிதும் ரிப்பேராகி வருவதையே காட்டுகிறது. கட்சி சார்பு என்று குறிப்பிட்டவர்களில் கிட்டத்தட்ட 13 சதம் பேர்கள் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே என்றும், 8%பேர்கள் அ.தி.மு.க என்றும், 4.5 % பேர்கள் பா.ஜ.க என்றும் குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது. பார்வையாளர்கள் முட்டாள்கள் இல்லை என்பது இந்த கேள்வியில் தெரிய வருகிறது. இதே கேள்வி மட்டும் புதிய தலைமுறை ஆரம்பித்த முதல் வருடத்தில் கேட்டிருந்தால் கட்சி சார்பற்றது என்பதே அதிகம் வந்திருக்கும். தற்போது அது மாறி வருகிறது.

மெரினாவில் இரண்டு இளைஞர்கள் தங்களை எஸ்.ஆர்.எம் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தக் கேள்விக்கு எங்களிடமே கேட்கிறீர்களே என்று சிரித்தனர். எது சரி என்று கருதுகிறீர்களோ அதை டிக் செய்யுங்கள் என்றதும் சிரித்துக் கொண்டே ஐ.ஜே.கேவிற்கு போட்டனர். கடைசிக் கேள்விக்கும் நம்ப முடியாது என்ற பதிலை அளித்தனர். ஒருவர் தன்னை ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்திப் பிரிவில் பணியாற்றுபவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஏறக்குறைய இதே பதில்களை அளித்தார். ஆக அங்கே வேலைபார்ப்பவர்களுக்கே புதிய தலைமுறை நடுநிலைமையானதில்லை என்பதை பொதுவெளியில் ஒத்துக் கொள்ளுகிறார்கள்.

new_generation_party

 1. புதிய தலைமுறை தொலைக்காட்சி எந்தக் கட்சி சார்பானது?

அ.தி.மு.க 8.0%

பா.ஜ.க 4.6%

தி.மு.க 3.7%

பச்சமுத்துவின் ஐ.ஜே.கே 12.7%

கட்சி சார்பற்றது, 52.8%

தெரியாது 18.2%

_____________________________________

 தேர்தல்களில் வாக்களிப்பதை மக்கள் எப்படி தீர்மானிக்கிறார்கள் என்பது பொதுவில் தெரிந்த ஒன்றுதான். அந்தந்த காலப் பிரச்சினைகள், கட்சி சார்பு, தலைவர் மதிப்பு, ஊடகங்களின் கருத்துருவாக்கம் அனைத்தும் சேர்ந்தே தீர்மானிக்கின்றன. எனினும் அதைக் குறிப்பிட்டு கேட்கும் போது 80% பேர்கள் நானே தீர்மானிப்பான் என்றார்கள். பதில்களில்இதைத்தான் டிக் செய்வார்கள் என்றாலும் அதன் சதவீதம் எவ்வளவு இருக்கும் என்பதை அறிய விரும்பினோம். அதே நேரம் குடும்பம் தீர்மானிக்கும் என்பதை 6%பேர்களும் அதில் பெண்கள் கணிசமானோர், தலைவர்கள் என்று 6%பேர்களும் கூறியிருந்தனர். ஆக இந்த செல்வாக்கில் ஊடகங்களின் பங்கு வெறும் 1.7% என்பது முக்கியமானது. மக்கள் கருத்தை அவர்களே மட்டும் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையானாலும் ஊடகங்களை விட தலைவர்கள் மூன்று மடங்கு அதிகமாக மக்களை பாதித்திருக்கின்றனர் என்றால் ஊடகங்களின் செல்வாக்கு குறித்து ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம். எதுவுமில்லை என்று 5.8 சதமானோர் கூறியிருப்பது அவர்களுக்கு வாக்களிப்பில் ஆர்வமில்லை என்பதைக் காட்டுகிறது.

vote_party

 1. உங்கள் ஓட்டு எந்தக் கட்சிக்கு என்பதை யார் தீர்மானிப்பார்கள் ?

நான் 80.1 %

குடும்பம் 6%

தலைவர்கள் 6.3%

ஊடகங்கள் 1.7%

எதுவுமில்லை 5.8%

_____________________________________

 எந்த சர்வேயிலும் ஜால்ரா என்ற ‘பண்பாடற்ற’ வார்த்தை இடம் பெறவே பெறாது. ஆயினும் ஜால்ரா அடிப்பதில் தமிழக பத்திரிகைகள் சாதனை படைப்பதால் வேண்டுமென்றே இந்த வார்த்தையை வைத்தோம். மேலும் இதைப் பார்த்து யாராவது  கோபத்துடன் ஏன் ஜால்ரா என்று போட்டீர்கள், நீங்கள் தி.மு.கவா என்று கேட்பார்கள், அவர்கள் எத்தனை பேர் என்று பதியவும் விரும்பினோம். இறுதியல் இரண்டு அ.தி.மு.க பொறுப்பில் உள்ளவர்களைத் தாண்டி 1001 பேர்கள் ஏன் என்று கேட்கவில்ல மட்டுமல்ல, டக்கென்று டிக் செய்யவும்  செய்தார்கள்.

ஜால்ரா அடிப்பதில் பல பத்திரிகைகள் இருந்தாலும் தினமணி, தினத்தந்தி, குமுதம், தமிழ் இந்து போன்ற நான்கு ஜால்ராக்களைத்தான் குறிப்பிட்டிருந்தோம். 15% மக்கள் தெரியாது என்று கூறியதைப் பார்த்தால் அவர்கள் இந்த பத்திரிகைகளை படிப்பதில்லை, அறிவதில்லை என்றும் சொல்லலாம். 41% மக்கள் எதுவுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தினமலர், சோ, கல்கி வகையறாக்களை குறிப்பிட்டார்கள். எனினும் இந்த 42% போக பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஊடக ஜால்ராவை ஒரு உண்மையாக அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்குலேஷன் குறைவினால் குமுதம் 3%, தமிழ் இந்து 2.7% என்று இருந்தாலும் இவர்கள் மற்ற பத்திரிகைகளை விட ஜால்ராவில் குறையுள்ளவர்கள் என்பதல்ல. அதே நேரம் சர்குலேஷன் குறைவாக இருந்தாலும் தினமணி கிட்டத்தட்ட 12% பெற்றதைப் பார்த்தால் வைத்தி மாமவின் அம்மா சஷ்டிக் கவசப் புராணம் வீண் போகவில்லை எனலாம். ஒரு சதவீத மக்கள் அனைத்து பத்தரிகைகளும் ஜால்ராக்கள்தான் என்கின்றனர். இறுதியாக தினத்தந்தி மட்டும் 24% அதாவது கால்பங்கு பெற்று முதலிடத்தில் உயர்ந்து நிற்கிறது.

ஆக தமிழ் நாளிதழ்களில் மட்டுமல்ல அம்மா ஜால்ராவிலும் அதுவே நம்பர் ஒன்!

 

admk_support_media

 1. அ.தி.மு.க-விற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கை எது ?

தினமணி 11.9%

தினத்தந்தி 24.2%

குமுதம் 3.1%

தமிழ் இந்து 2.7%

எதுவுமில்லை 40.9%

தெரியாது 16.3%

அனைவரும் 0.9%

_____________________________________

 இந்தக் கேள்வி சர்வேயில் இடம்பெறவில்லை. மாறாக ஆனந்த விகடனில் எதைப் படிப்பீர்கள் என்ற அடுத்த கேள்வியை தவிர்த்தோர் மற்றும் பதிலளித்தோர் எவ்வளவு என்பதை அறியவே இதை தொகுத்திருக்கிறோம். தவிர்த்தவர்களை ஏன் என்று கேட்ட போது அவர்கள் ஒரு முறை கூட விகடனை வாங்கியவர்கள் இல்லை என்று தெரிந்தது. கிட்டத்தட்ட இவர்களுக்கு விகடன் என்ற பத்திரிகையே தெரியாது எனலாம். பதிலளித்தோர் பலரும் கூட ஏதோ ஒரு முறை அல்லது சில முறை படிப்பவர்களே அதிகம். இறுதியில் 60% பேர் விகடனை அறியாதவர்கள் என்றும், 40% பேர்கள் அறிந்தவர்கள் என்று வருகிறது. பாரம்பரிய பத்திரிகையின் வீச்சு கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு மட்டும் போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

 

anandavikaten_know

 1. ஆனந்த விகடன் குறித்த கேள்வியைத் தவிர்த்தோர், பதிலளித்தோர்

பதிலளித்தோர் 39.9%

தவிர்த்தோர் 60.1%

_____________________________________

 6% பேர்கள் விகடனில் படங்களை விரும்பி பார்க்கிறார்கள் என்பதோடு சினிமாவும், சாப்பாடு – மருத்துவ செய்திகளும் கிட்டத்தட்ட சம அளவில் 34%பேர்கள் விரும்புகிறார்கள். முந்தைய காலத்தில் இந்தப் படிப்பு விருப்பம் என்பது தீனி செய்திகளை விட சினிமா அதிகம் இருந்திருக்கும். தற்போதைய நுகர்வு கலாச்சார பரவலுக்கேற்ப தீனியும் சினிமாவோடு போட்டி போடுகிறது. மொத்தத்தில் அரசியல் செய்தி கால் பங்குதான் என்பதால் இனி விகடன் குழுமம் தனது மொத்த பத்திரிகைகளையும் டைம்பாஸ் போல மாற்றிவிட்டால் போதும்!

 

anandavikaten_interest

 1. விகடனில் விரும்பிப் படிப்பது

சினிமா 34.2%

படங்கள் 6%

உணவு / மருத்துவம் 33.9%

அரசியல் 25.9%

_____________________________________

 அடுத்தது முக்கியமான கேள்வி. தேர்தல் சூட்டில் முக்கிய இடத்தை வகிக்கும் ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளை கிட்டத்தட்ட 70% மக்கள் நம்பமாட்டேன் என்கிறார்கள். 30% பேர்கள் மட்டுமே நம்புகிறார்கள். இது உண்மையென்றால் கருத்துக் கணிப்புகளின் யோக்கியதையையும் நாம் அறியலாம். வினவு குழு கருத்துக் கணிப்பு எடுக்கும் போதே கணிசமானோர் நீங்கள் எந்த டி.வி, உங்கள் பொருளாதார நோக்கம் என்ன, நீங்களே டிக் செய்து கொண்டு பொய்யாகத்தானே போடுவீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.

பல மாணவர்கள், இளைஞர்கள் கனிவாக,”ஏண்ணா இப்படி வெயிலில் அலைகிறீர்கள்? நீங்களே டிக் செய்து கொடுக்கலாமல்லவா?” என்று அன்பாகவும் கேட்டார்கள். சர்வேக்களுக்கு தொண்டர்கள் சப்ளை செய்யும் ஒருவரோ நாம் பரஸ்பரம் தொடர்புபடுத்திக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தலாம் என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழக ஊடகங்கள் எடுக்கும் சர்வேக்களை அவர்களது செய்தியாளர்கள் எடுக்கும் பட்சத்தில் அது அவர்களே பாதிக்குமேல் டிக் அடிப்பதாக இருக்கும். இதை பல்வேறு ஊர்ப்பகுதிகளில் உள்ள செய்தியாளர்கள் கூறியிருக்கிறார்கள். அடுத்து தொழில்முறை கம்பெனிகள் என்னதான் தரத்தையும், சோதனையும் செய்தாலும் அங்கும் இந்த அவர்களே டிக் செய்வது கணிசமாக இருக்கும். இதற்கு மேல் எடிட்டரின் மேசையில் அந்த புள்ளிவிவரங்கள் வெட்டி  சேர்க்கப்பட்டு மாறும். இப்படித்தான் சென்ற பாராளுமன்ற தேர்தலில் வைகோ அவர்கள் விருதுநகரில் வெல்வார் என சர்வே ரிசல்ட் வந்தது. ஆகவே கருத்துக் கணிப்புகள் யார், எங்கே, எப்போது எடுக்கிறார்கள், ஈடுபடுபவர்கள் யார், அவர்களது ஊதியம் என்ன என்று பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளோடு தொடர்புடையது. இதைத்தாண்டி ஊடகங்களின் கட்சி சார்பு தனி.

 

media_survey_believe

 1. ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்பை நம்புவீர்களா?

நம்புவேன் 30.9%

நம்பமாட்டேன் 69.1%

_____________________________________

 முந்தைய கேள்வியோடு தொடர்புடைய கேள்வி இது. ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்பிற்கு காரணம் உண்மை நிலவரத்தை வாசகர்களுக்கு அறியத் தருவது என்பதை 28% பேர்கள் மட்டுமே நம்புகிறார்கள். இது கிட்டத்தட்ட மேற்கண்ட கேள்வியின் நம்புவேன் என்ற 31%-த்தோடு ஒத்துப் போகிறது. 18% பேர்கள் கட்சி சார்புதான் காரணம் என்று கூறியிருப்பது தமிழக ஊடகங்களை செருப்பால் அடித்ததற்கு சமம். 11%பேர்கள் அரசு விளம்பரம் என்றும் 43%பேர்கள் பரபரப்பு விற்பனைக்கு என்றும் கூறியிருக்கிறார்கள். பரபரப்பு விற்பனை கூட வாசகரை உணர்ச்சிகரமாக உசுப்பி விட்டு பணத்தை சுரண்டுவதுதான்.

 

reason_for_survey

 1. ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்பிற்கு காரணம்

கட்சி சார்பு 18.0%

அரசு விளம்பரம் 10.9%

பரபரப்பு விற்பனை 42.8%

உண்மை நிலவரம் 28.3%

_____________________________________

மது கருத்துக் கணிப்பில் இதுவும் ஒரு முக்கியமான கேள்வி. தமிழக ஊடகங்களில் கணிசமானவை இன்று முதலாளிகளுக்கு சொந்தம். விரைவில் அம்பானியின் தொலைக்காட்சி தமிழில் வர இருக்கும் நிலையில் மக்கள் என்ன கருதுகிறார்கள்?

முதலாளிகள் தொலைக்காட்சி நடத்தினால் நேர்மையாக இருக்காது என்று 84% மக்கள் உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள். 13%பேர்கள் நேர்மையாக இருக்கும் என்று தெரிவித்தார்கள். அவர்களிடம் கேட்ட போது, உழைப்பினால் உயர்ந்த அம்பானி போன்ற முதலாளிகள் டி.வி நடத்தினால் உண்மையாக இருக்கும் என்றார்கள். எனினும் ஊடகங்களின் சார்புத்தன்மை, நம்பகத்தன்மை போன்றவற்றை ஒரு முதலாளி எப்படி காலி செய்ய முடியும் என்பதை பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது. ஆக பச்சமுத்துவின் புதிய தலைமுறை, வைகுண்டராஜனின் நியூஸ் 7, அம்பானியின் புதிய டி.வி அனைத்தும் நேர்மையாக இருக்காது என்பதே தமிழக மக்களின் தீர்ப்பு!

owner_survey_correct

 1. அம்பானி, பச்சமுத்து, வைகுண்டராஜன் போன்ற முதலாளிகள் ஊடகங்களை நடத்தினால் நேர்மையாக இருக்குமா?

இருக்கும் 12.7%

இருக்காது 84.2%

தெரியாது 3.1%

_____________________________________

றுதியாக கேட்கப்பட்ட இந்தக் கேள்வியில் ஒரு விசயம் இருக்கிறது. வேண்டுமென்றே கட்சி சார்பான டி.விக்களை மட்டும் இதில் இடம் பெறவைத்தோம். அதில் மக்கள் எதை நம்புகிறார்கள், நம்பவில்லை என்பதை அறிவது நமது விருப்பம்.

45% மக்கள் எதையும் நம்பவில்லை என்றதோடு ஏன் மற்ற தொலைக்காட்சிகளை போடவில்லை என்று சிலர் கோபத்தோடு கேட்கவும் செய்தார்கள். சன் டிவி பொதுவாக இருந்தாலும் அது தி.மு.க சார்பாகவே இருப்பதும் மக்களுக்குத் தெரியும். இருப்பினும் தமிழ் மக்களை சன் தொலைக்காட்சி ஆரம்பத்திலிருந்தே மசாலா தொடர்கள் – நிகழ்ச்சிகள் மூலம் நெருக்கமாக வைத்திருப்பதால் கிட்டத்தட்ட 40% மக்கள் அதை நம்புவதாக தெரிவித்தார்கள். சன் மற்றும் கலைஞர் டிவியின் கூட்டுத்தொகையோடு ஒப்பிடும் போது ஜெயா டி.வி 7.5% பெற்றிருப்பது குறைவுதான். ஆனால் கேப்டன் டி.வி 4.7 பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சன், ஜெயா, கலைஞர் போன்ற தொலைக்காட்சிகள் வணிக நோக்கில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால் பொதுவான மக்களே அவற்றை பார்ப்பதுண்டு. அப்படி எதுவுமில்லாமலேயே ஐந்து சதவீதம் பேர் கேப்டன் டீ.வியை நம்புவது ஆச்சரியமானதுதான். ஒருவேளை சமீப காலமாக ஜெயா எதிர்ப்பு நிகழ்ச்சிகள், மக்கள் கருத்துக்களை மற்ற தொலைக்காட்சிகளை விட கேப்டன் டி.வி காட்டியது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

tv_trust

 1. கீழ்க்கண்ட தொலைக்காட்சிகளில் எதை ஓரளவு நம்பலாம்?

சன் டிவி 39.5%

கலைஞர் டிவி 2.9%

ஜெயா டிவி 7.5%

கேப்டன் டிவி 4.7%

எதுவுமில்லை 45.3%

_____________________________________

ருத்துக் கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்புகள்தான் என்றால் அது மிகையல்ல. அ.தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதை குறிப்பிடும் தி இந்து நாளிதழ் அதற்கான  இணைய சர்வே கேள்வி பதிலை எப்படி வைத்திருக்கிறது?

இது ஜெயலலிதாவின் அ) தன்னம்பிக்கை ஆ) சரியான வியூகம் இ) அதீத நம்பிக்கை.

கவனியுங்கள் மூன்று பதில்களுமே நேர்மறையான முடிவோடு தொடர்புடையவை. தன்னம்பிக்கை என்பது ஜெயாவின் உறுதியான பண்பையும், சரியான வியூகம் என்பது ஜெயாவின் சாணக்கிய அறிவையும், அதீத நம்பிக்கை என்பது ஒரு வீரனின் கடும் இலட்சிய உறுதியையும் குறிப்பதோடு தொடர்புடையவை.

அனைத்து தொகுதிகளிலும் ஜெயா போட்டியிடுவது அ) சர்வாதிகார போக்கு ஆ) தவறான வியூகம் இ) பணத்தின் மேல் நம்பிக்கை என்றும் இருக்கலாம் அல்லவா?

புதிய தலைமுறை எடுத்த சர்வேயில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். முதலில் சட்டம் ஒழுங்கு என்று மக்கள் எதைக் கருதுகிறார்கள்? தடியடி, துப்பாக்கி சூடு, போராட்டத்தை ஒடுக்குவது, சிறைக்கு அனுப்புவது இவற்றைக் கூட நடுத்தர வர்க்க மக்கள் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்குரிய சாட்சியாகவே கருதுகிறார்கள். ஜெயா ஆட்சியில் ஊர்வலங்களே நடக்காது, போராட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்று கருத வைப்பதின் மூலம் என்ன உண்மை தெரிய வரும்?

அல்லது அந்தக் கேள்வியையே மக்கள் போராட்டத்தை எந்தக் கட்சியின் ஆட்சி கடுமையாக ஒடுக்கும்? என்று கேட்கலாம் அல்லவா?

ஆகவே ஊடகங்கள் செய்திகளை தெரிவிப்பதிலிருந்து, கருத்து – கண்ணோட்டங்களை வெளியிடுவது வரை அவை யாருக்கு சார்பாக இருக்கும் என்பதை மறைக்க முடியாது. வினவு நடத்திய இந்த பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பும் அதைத்தான் நிறுவுகிறது.

ஊடகங்களின் செல்வாக்கு என்ன ? கருத்துக் கணிப்பு பாகம் 1

 1. Good journalism makes good business என்றார் பத்திரிகையாளர் மணி. புதிய தலைமுறை, நியூஸ் செவென் போன்ற ஊடகங்கள் இன்று முயற்சிப்பது இதை தான். ஜெயலலிதா ஆதரவையோ, பி.ஜெ.பி ஆதரவையோ வெளிப்படையாக எடுத்தால் அதனை விரும்பாத பார்வையாளர்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் அவற்றை ‘நேர்மையாக’ இருக்க வைக்கிறது. புரட்சிகர அரசியலை கொண்டிருப்பதால் தான் ஊடகங்கள் புறக்கணிக்கின்றன என்ற பார்வை கோவன் கைதில் அடிபட்டு போனது. அவர்களுக்கு தேவை ஒரு செய்தியின் சந்தை மதிப்பு. அது உத்தரவாதப்பட்டால் பயன்படுத்திக் கொள்வார்கள். பாண்டே மாதிரியான நெறியாளர்கள் சிலர் விவாதங்களில் முன்னரே ஒரு நிலை எடுப்பது உண்மை தான். ஆனால், அதையும் மீறி சற்று பயிற்சியும், கையாளும் திறனும் இருந்தால் சொல்ல வேண்டியதை பதிய வைக்க முடியும்.

  நியூஸ் செவெனில் வைகுண்ட ராஜனை விமர்சிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், அது மட்டும் தான் தமிழகத்தின் பிரச்சினையா? மற்ற பிரச்சினைகளை அழுத்தமாக அங்கு விவாதிக்க முடிகிறதே. அது போல புதிய தலைமுறையில் பச்சமுத்துவை விமர்சிக்க முடியாமல் போகலாம். ஆனால், பச்சமுத்து ஒன்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு இணையான பெரிய சக்தி இல்லையே. இவர்களை வேறொரு இடத்தில் விமர்சிக்க வேண்டியது தான். ஊடகங்கள் யாருக்கு ஆதரவு என்ற ஆராய்ச்சி அநாவசியம். அவற்றை எப்படி சமூக நோக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்வது என்று சிந்திக்கலாம்.

  Seeing is believing என்றாகி விட்டது. இந்த பிரச்சினையை ஒதுங்கி நின்று எதிர்கொள்ள முடியாது. வெறுமனே விமர்சித்துக் கொண்டிருப்பது குளத்துடன் சண்டை போட்டு கொண்டு குளிக்க மறுப்பதை போன்றது தான்.

  • சுகதேவ் ,கவனமாக மீண்டும் படியுங்கள். இது கட்டுரையல்ல, கருத்துக் கணிப்பு. மக்களின் கருத்து. உங்கள் விமரிசனம் மக்களைப் குறைசொல்வதாக இருக்கிறது. 80 சதவீத மக்கள் முதலாளிகள் நடத்தும் டி.வி-யை நம்ப முடியாது என்கிறார்கள். நீங்கள் நம்பித்தானே ஆக வேண்டும் என்கிறீர்கள். ஆகவே மீண்டும் பொறுமையாக படியுங்கள். நன்றி

 2. Don’t you see the paradox and irony???? Around 70% people don’t believe media surveys and that includes your own.. So is this data going to be rejected by 70% people who read this? If yes, it becomes false.. If it becomes false, 70% don’t reject it and it becomes true and goes into an infinite loop..

Leave a Reply to Manidhan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க