Saturday, January 16, 2021
முகப்பு பார்வை களக் கணிப்பு ஊடகங்களின் செல்வாக்கு என்ன ? கருத்துக் கணிப்பு பாகம் 1

ஊடகங்களின் செல்வாக்கு என்ன ? கருத்துக் கணிப்பு பாகம் 1

-

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பிற்காக தயாரிக்கப்பட்ட கேள்வித் தாட்கள், அட்டைகள், பேனாக்கள்……

தேர்தல் பரபரப்பை அறுவடை செய்யும் ஊடகங்கள் அடிக்கடி கருத்துக் கணிப்புகள் நடத்துகின்றன. அவற்றின் நம்பகத்தன்மை என்ன? பொதுவில் ஊடகங்கள் உருவாக்கும் அல்லது ஆதரிக்கும் கருத்துக்களை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? பொதுவான சமூக அரசியல் நடைமுறைகளில் இவற்றுக்கான பதில்களை தேட முடியுமென்றாலும் நேரடியாக மக்கள் சொல்வதிலிருந்தே அதே மக்கள் ஊடகங்கள் குறித்து அறிவதோடு ஏற்கவும் செய்வார்கள்.

ஆகவே ஒரு கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். குறைந்தது ஆயிரம் பேர் என்ற இலக்குடன். கேள்விகள் எளிமையாகவும் குறைவாகவும் இருப்பின் மக்களை அதிகம் சந்திக்கலாம் என்றாலும் கேள்விகள் பதினைந்தைத் தொட்டது.

பொதுவில் கருத்து தெரிவிப்பது என்றாலே செயற்கையாக, பொதுப்புத்திக்கு ஏற்ப பேசுவதை ஊடகங்களோ, டி.வி நிலைய விவாத வித்வான்களோ மட்டுமல்ல மக்களையும் அப்படி பயிற்றுவித்திருக்கிறார்கள். எனினும் ஒரு கேள்வியில் அப்படி பதிலளித்தாலும் மறுகேள்வியில் அவர்களை உண்மையில் பதிலளிக்க வைக்க வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் இக்கேள்விகள் தயார் செய்யப்பட்டன. இதில் வரும் சில கேள்விகள் – அவற்றில் இடம் பெறும் வார்த்தைகள் எந்த கணிப்பிலும் இருக்காது. ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட கேள்விகளில் விளக்கமளித்திருக்கிறோம்.

இறுதியில் இரண்டு நாட்கள் கேள்விகளுக்கான ஆய்வு, இரண்டு நாட்கள் மக்களிடம் சென்று கணிப்பு நடத்தியது, அனுபவத்தை தொகுக்க ஒரு நாள், விவரங்களை கணினியில் உள்ளீடு செய்ய ஒரு வாரம், அலசலுக்கு சில நாள் என கிட்டத்தட்ட இரு வாரம் எடுத்துக் கொண்டோம்.

மக்கள் குவிந்திருக்கும் சென்னை மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையிலும் கணிப்புகள் எடுக்கப்பட்டன. மெரினாவில் அண்ணா சமாதி முதல் காந்தி சிலை வரை கிட்டத்தட்ட 800 பேர்களிடமும், எலியட்ஸில் சுமார் 200 பேர்களிடமும் இந்த கணிப்புகள் திரட்டப்பட்டன.

மக்களே டிக் செய்யும் வண்ணம் கட்டங்களுடன் இருந்த கேள்வித்தாளை யாரெல்லாம் சுயமாக செய்கிறார்களோ அவர்களிடம் கொடுத்து விட்டு இயலாதவர்களுக்கு உதவினோம். அந்த வகையில் முக்கால் பங்கு மக்களே டிக் செய்தார்கள். சர்வேயை எடுக்கும் நிறுவனம் ஏதோ ஒரு மீடியா ரிசர்ச் கம்பெனி என்ற பெயரில் தோழர்கள் பங்கேற்றார்கள்.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு
சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை

இந்த கணிப்பில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் – மாணவர்களே கிட்டத்தட்ட 37 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக நடுத்தர வயதினர் 33 சதவீதம் பேர். ஆண், பெண் பாலினப் பிரிவினையை பொறுத்த வரை 70, 30 என்று இருக்கிறது. மொத்த கணிப்பில் ஒரு திருநங்கையும் பங்கேற்றார். கருத்துக் கணிப்பு என்றதும் மக்களுக்கு தயக்கம் இருந்தது. மாணவர்கள் அனைவரும் எந்த தயக்கமின்றி உடனே படிவத்தை படித்து நிரப்பி அளித்தனர். நடுத்தர வயதினர் பல்வேறு கேள்விகளைக் கேட்டு – எதற்கு கணிப்பு? உங்களுக்கு என்ன இலாபம், எந்த டி.விக்கு எடுக்கிறீர்கள், மறைமுகமாக எந்த கட்சிக்கு ஆதரவு என்று கண்டுபிடிக்கிறீர்களா? – என்ற விசாரணைக்கு பிறகு ஒத்துக் கொண்டனர்.

மக்கள் தொடர்பில் அனுபவம் உள்ள தோழர்கள் இந்தப் பிரச்சினைகளை திறம்பட கையாண்டு மறுத்தவர்களையும் பங்கேற்க வைத்தனர். இல்லையேல் இலக்கினை அடைந்திருக்க முடியாது. கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்களும், ஒரு சில முஸ்லீம்களும் பயத்துடன் மறுத்தனர். நாங்கள் அணுகிய பெண்களில் கணிசமானோர் தயங்கினர். மொத்த சர்வேயில் 40க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்றனர். அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உண்டு. சிலர் குடும்பத்துடன் வந்திருந்தாலும் தயக்கமின்றி பங்கேற்றனர். ஒரு பெண் மட்டும் கணவன் வருவதற்குள் படிவத்தை நிரப்ப வேண்டும் என்று அவசரப்படுத்தினார்.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்புகருத்துக் கணிப்பு எடுக்கப்பட்ட மக்கள் – 1003 பேர்.

ஆண்கள் 697 – 69.5% , பெண்கள் 305 – 30.4%, மூன்றாம் பாலினம் 1 – 0.1%

_____________________

வயது – விவரம்

18 முதல் 25 வரை ஆண் 233 – 23.2% பெண் 135 – 13.5% மொத்தம் 36.7%

26 முதல் 35 வரை ஆண் 233 – 23.2% பெண் 95 – 9.5% மொத்தம் 32.7%

36 முதல் 45 வரை ஆண் 117 – 11.6% பெண் 46 – 4.6% மொத்தம் 16.2

46க்கு மேல் ஆண் 114 – 11.4% பெண் 29 – 2.9% மொத்தம் 14.3%

மொத்தம் 1003

________________________________

பங்கேற்ற மக்களிடம் வேலை விவரத்தை சரியாக விசாரித்து வாங்கினாலும் அவர்களது சொந்த ஊர், மாவட்டத்தை துல்லியமாக பதிவு செய்ய முடியவில்லை. வேலையைத் பொறுத்த வரை மாணவர்கள் 19 சதவீதமாகவும், மாத ஊதிய வேலை செய்வோர் 41%மாவகும், சிறு தொழில் செய்வோர் 21%மாகவும், இல்லத்தரசிகள் 12 சதவீதமாகவும் இருக்கின்றனர். இதன்றி கூலி வேலை செய்வோம், உதிரித் தொழில் செய்வோர், வியாபாரம் செய்வோர் குறைவாக 4% பேர்கள் இருந்தனர். இந்தப் பிரிவினர் கடற்கரைக்கு வரும் வாய்ப்பே குறைவு என்பதால் இவர்கள் இங்கே அதிகமில்லை.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு
3.3% பேர் விவரங்கள் தெரிவிக்கவில்லை.

வேலைப்பிரிவினை விவரம்

மாணவர்கள் ஆண் 122 – 12.2% பெண் 65 – 6.5% மொத்தம் 18.7%

மாத ஊதிய வேலை செய்வோர் ஆண் 329 – 32.8% பெண் 83 – 8.3% மொத்தம் 41.1%

சிறு தொழில் ஆண் 187 – 18.6% பெண் 27 – 2.7% மொத்தம் 21.3%

இல்லத்தரசி பெண் 115 – 11.5%

இதர பிரிவுகள் ஆண் 37 – 3.7% பெண் 4 – 0.4% மொத்தம் 4.1%

3.3% பேர் தெரிவிக்கவில்லை.

_____________________________________

தொலைக்காட்சியில் மக்கள் விரும்பிப் பார்ப்பது பொழுது போக்கு நிகழ்ச்சிகள்தான். அவற்றையும் கிரமமாக பார்க்குமளவு மக்களை வாழ்க்கையும் வேலை நேரமும் அனுமதிப்பதில்லை. ஆகவே அவர்கள் கிடைக்கும் நேரத்தில் எதை பார்க்கிறார்கள் என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் செய்திகளைப் பார்ப்போர் 41% என்று வந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதில்லை. சாப்பிடும் போது சன் டி.வியின் பிரைம் செய்தி போன்ற முக்கியமான செய்தித் தொகுப்புகளை பார்ப்பதையே அப்படி குறிப்பிடுகிறார்கள். மற்றபடி ஏதாவது பரபரப்பு செய்திகள் வந்தால் செய்தி சேனல்களை என்ன ஏதுவென்று பார்ப்பதுண்டு. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் திரைப்படம் முதலிலும், ரியாலிட்டி ஷோக்கள் இரண்டாவது இடத்திலும் சீரியல்கள் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன. அதன்படி அழுகை தொடர்கள் முன்பிருந்தது போல சிகரத்தில் இல்லை.

ரியாலிட்டி ஷோக்களைப் பொறுத்த வரை அமெரிக்க வார்ப்படங்களை தமிழில் அறிமுகம் செய்த விஜய் டி.வியையே எல்லா சானல்களும் பின்தொடர்கின்றன. சிறிது காலத்தில் இவையும் மக்களுக்கு அலுக்கும் போது ரியாலிட்டி ஷோக்களில் கொஞ்சம் ஆக்சன் சேர்த்து அடிதடி என்று காட்டுவார்களா தெரியவில்லை.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு1) தொலைக்காட்சியில் நீங்கள் விரும்பிப் பார்ப்பது எந்த நிகழ்ச்சி?

சீரியல் 14.3%

திரைப்படம் 22.3%

ரியாலிட்டி ஷோ 19.1%

செய்தி நிகழ்ச்சிகள் 41.1%

தொலைக்காட்சி பார்க்காதோர் 3.2%

தொகுப்பாக: பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்போர் 55.7%

செய்திகளைப் பார்ப்போர் 41.1%

நாளிதழ்களில் பல்வேறு பிரிவுகளில் – முதன்மைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வணிகச் செய்திகள், இலவச இணைப்புகள் – தலைப்புகள் வருகின்றன. ஒரு சிலரே அரசியல், முதன்மைச் செய்தி, விளையாட்டு பிரிவுகள் ஏன் இல்லை என்று கேட்டனர். தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் செய்யும் ஒரு தொழிலாளி விளையாட்டு செய்திகள் மட்டும் விரும்பிப் படிப்பேன் என்றார். ஓட்டுக் கட்சிகளின் சவடால் மற்றும் ஊடகங்களின் ஜால்ரா காரணமாக அப்படி மாறியதாக அவர் தெரிவித்தார். இங்கே நாளிதழ்களில் எதை விரும்பிப் படிப்பார்கள் என்பதைத் தாண்டி அவர்கள் அத்தனை பேரும் தினமும் தினசரி வாங்குபவர்கள் இல்லை.

அவர்கள் ஏப்போதாவது அல்லது ஓரளவுக்கு செய்தித்தாட்கள் படிக்கும் போது இந்த வாசிப்பு விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை நாம் அறியலாம். வழக்கம் போல சினிமா முதன்மையாக இருக்கிறது. நடுப்பக்க கட்டுரைகள் என்று கட்டம் போட்டிருந்தாலும் மக்களைப் பொறுத்த வரை அரசியல் செய்திகள், முதன்மைச் செய்திகள், அலசல்கள் அனைத்திற்கும் அதை டிக் செய்தனர். நாங்கள் கேட்டுப் பார்த்த வரை நடுப்பக்க கட்டுரைகளை படிப்போரும், தொடர்ந்து படிப்போரும் மிகக் குறைவு. குற்றச் செய்திகள் குறித்த கட்டத்தில் “கொலை, கற்பழிப்பு செய்திகள்” என்றே போட்டிருந்தோம். பலரும் அதை ஆர்வத்துடன் டிக் செய்தார்கள். ராசிபலனையும் அப்படி டிக் செய்வதிலிருந்து நமது தினசரிகள் என்ன விதமான விழிப்புணர்வுப் பங்கை ஆற்றுகின்றன என்பதை நினைத்து ‘பெருமைப்’ படலாம்.

news_interest_read2. நாளிதழ்களில் விரும்பிப் படிப்பது எது?

ராசிபலன் 13.5%
சினிமா 24.6%
குற்றச் செய்திகள் 12.8%
நடுப்பக்க கட்டுரைகள் 24.6%
இதரவை 5.5%

நாளிதழ் படிக்க மாட்டேன் 18.8%

___________

ஆன்மீகச் செய்திகளுக்கு ஒரு நாளிதழ் புகழ் பெற்றது என்பது பொதுவான வரையறையின் படியே நல்ல அங்கீகாரமில்லை. நமது நாளிதழ்களின் ஆன்மீகச் செய்திகளில் திருத்தல வரலாறு, நேர்த்திக் கடன், அறியாத அம்மன்கள், அற்புதக் கதைகள் போன்றவற்றையே சுற்று முறையில் திரும்பத் திரும்ப அச்சிட்டு இம்சிக்கிறார்கள். தமிழகத்தில் உலா வரும் சமையல் குறிப்புகளுக்கும் இதுதான் விதி என்றால் ஆன்மீகத்திற்கு இது இன்னும் கூடுதலாக பொருந்துகிறது. நாட்டில் என்ன நடக்கிறது, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை விட ஆன்மீக ஃபேன்டசியில் இன்புறுவது உலகில் எங்கும் இல்லாத ஒன்று. இந்த இழி புகழில் தினத்தந்தி முதலிடத்திலும், தினமலர் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. தி இந்து, தினமணி மூன்றாம், நாலாம் இடங்களில் இருப்பதற்கு காரணம் மொத்த சர்குலேஷனில் அவர்களின் இடத்தை ஆன்மீகத்திலும் பிரதிபலிக்கிறார்கள். ஆனாலும் வைத்தியின் தினமணியை விட மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஆன்மீகத்தில் முந்துகிறார் என்பதால் தி இந்துவின் ஆன்மீக இலவச இணைப்பு ஆசிரியர் பெருமைப்படலாம்.

தமிழகத்தைப் பொறுத்த வரை அரசியும், அரசியைப் போற்றிப் பிழைக்கும் புலவர்களும் (மீடியா) எவ்வழியோ அவ்வழிதான் குடிமக்களும் என்பதற்கிணங்க ஆன்மீகம் கொடிகட்டிப் பறக்கிறது. ஜெயா-சசி கும்பல் பிரபலப்படுத்திய யாகங்கள், யாருமறியாத கோவில்கள், நேர்த்திக் கடன்கள், கஜமுக யாகங்கள் என்பதிலிருந்து அம்மாவைப் பார்க்க, மனு கொடுக்க, வேட்பாளர் தெரிவுக்கு என அ.தி.மு.க கூடராமே நல்ல நாள், முகூர்த்தம், எம கண்டம் பார்த்து தனது அடிமைத்தனத்தை காட்ட வேண்டியிருக்கும் போது தினசரிகளும் இந்த அசட்டுத்தனத்தை கடைவிரிப்பது கல்லா கட்டுவதற்கு உதவுகிறது. அதே நேரம் ஆன்மீகத்தை படிப்பதில்லை என்று ஐந்தில் ஒரு பங்கினர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு3. ஆன்மீக செய்திகளுக்கு எந்த நாளிதழ் புகழ் பெற்றது?

தினமலர் 18.8%
தி இந்து 7.2%
தினமணி 2.2%
தினத்தந்தி 38.5%
இதர 13.4%
ஆன்மீகம் படிக்காதவர்கள் 19.9%

__________________

நாட்டு நடப்புகளை மக்கள் முதன் முறையாக எந்த வழியாக அறிகிறார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஆனாலும் அன்றாடம் செய்திகளை அறிந்து கொள்வோர்கள் கால் பங்கினர் கூட இருக்கமாட்டார்கள். காரணம் செய்திகளை வாசிக்குமளவு நேரமும், சமூக சூழலும் மக்களுக்கில்லை. எனினும் அவர்கள் தெரிவித்த பதிலின் படி புதிய ஊடகமான வாட்ஸ் அப் முப்பது சதவீதமும், தொலைக்காட்சி 40% இருக்கும் போது நாளிதழ்கள் 12.3% மட்டுமே செய்திகளை அறிவிப்பதில் பங்களிக்கிறது. நாளிதழ்கள் வாங்கினாலும் அதில் செய்திகளை படிப்போர் முந்தைய கேள்வியின்படி கால்பங்கினர் எனும் போது இந்த கேள்வியைச் சேர்த்து பார்த்தால் மூன்று சதவீதம் பேரே செய்திகளை தினசரிகளில் படிக்கிறார்கள் என்றாகிறது. அதே போல தொலைக்காட்சிகளில் 40 சதவீதம் பேர் செய்திகளை பார்க்கிறார்கள் என்ற முந்தைய கேள்வியை இதில் பொருத்தினால் 15 சதவீதம் பேரே மொத்த எண்ணிக்கையில் தொலைக்காட்சி செய்திகளை படிக்கிறார்கள் என்றாகிறது. தமிழகத்தின் அச்சு ஊடகம் மற்றும் சானல்களின் டி.ஆர்.பி மகிமை வலிமை எல்லாம் இந்த கால்பங்கினைத் தாண்டாது என்பதே உண்மை.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு4. செய்திகளை நீங்கள் முதன்மையாக தெரிந்து கொள்வது எதில்?

வாட்ஸ் அப் / பேஸ் புக்: 31.7%

நாளிதழ்கள்: 12.3%

தொலைக்காட்சி: 39.3%

நண்பர்கள்: 6.7%

செய்திகளில் ஆர்வமில்லை: 10%

___

செல்பேசிகளில் வாட்ஸ் அப் பயன்பாடு 30% பேர்களிடம் இல்லை என்பதோடு, வாட்ஸ் அப்பில் அதிகம் பார்க்கப் படுவது நொறுக்குத் தீனி வகையறாக்கள்தான். செய்திகளை 39%-ம் பேர் பார்க்கிறார்கள் என்பது அதிகமும் பரபரப்பு செய்தி, காமடி செய்தி வகைகளைச் சார்ந்தே இருக்கின்றன. ஆக இங்கும் செய்திகளை பார்ப்போர் உண்மையில் கால் பங்கினராகவே இருக்கின்றார்கள். இறுதியில் நாளிதழ், தொலைக்காட்சி, வாட்ஸ் அப் அனைத்திலும் முக்கால் பங்கு மொக்கைகளாகவும், கால் பங்கு பயனுள்ளவைகளாகவும்தான் நுகரப்படுகின்றன. தொழில் நுட்பம் மாறினாலும் தினத்தந்தியின் ஆண்டியார் பாடுகிறார் வாட்ஸ் அப்பில் கவுண்டமணி, வடிவேலு மீம்ஸ்ஸாக அவதாரம் எடுக்கின்றன அவ்வளவே!

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு5. வாட்ஸ் அப் பயன்பாடு

பயன்படுத்துபவர்கள்: 69.3%

பயன்படுத்துவதில்லை: 30.7%

___

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு6. வாட்ஸ் அப்பில் நீங்கள் விரும்பி பார்ப்பது?

ஜாலி வீடியோ: 33.6%

மீம்ஸ்: 11.5%

கவர்ச்சி: 1.6%

செய்திகள்: 39.2%

இதர: 14.1%

_______________________________

செய்தி ஊடகங்களில் செல்வாக்கு இதுதான் என்றால் அதில் அட்வைசாலேயே சித்திரவதை செய்யும் பிரபல செய்தியாளர்களின் செல்வாக்கு என்ன? தி இந்து நாளிதழின் நடுப்பக்க கருத்து கந்தசாமிகளில் சமஸே அதிகம் கருத்துரைக்கிறார், காரணம் அவர் தானே ஆசிரியர் என்ற முறையில் முடிவு செய்கிறார்! ராகுல் காந்தி முதல், ஒபாமா வரை சகலருக்கும் ஆலோசனைகளை அள்ளி விடும் இவர், கொலைகாரர்கள் நினைத்தால்தான் சமாதானத்தை கொண்டு வர முடியும் என்று கொலைகாரர்களுக்கும் அட்வைசு சொல்பவர். ஏதோ சில கட்டுரைகளுக்கு தனது மின்னஞ்சல் ஆயிரக்கணக்கான மடல்களால் நிரம்பி வழிகிறது என்று சமஸ் சொல்வது உண்மை என்றாலும் தமிழக மக்களிடம் இவரது அறிமுகம் என்ன?

பலர் சமஸ் என்றால் என்ன என்றார்கள். சிலர் கோன்பனேகா குரோர் பதி பாணியில் ஏதோ ஒன்றை டிக் செய்வோம் என்று அடித்தார்கள். சில மாணவர்களோ சமஸ் என்பவர் யார் என்பதை படிவத்தை நிரப்பி கொடுக்கும் போதாவது சொல்லுங்கள் என்று வற்புறுத்தினார்கள். காரணம் இந்தப் பேரே அவர்களுக்கு அன்னியமாக இருக்கிறது, நமக்கு சமஸின் கொள்கை போல. பத்திரிகையாளர் என்று எட்டு சதமானோர் கூறியிருப்பதே பெரிய விசயம்தான்.

samas_know7. சமஸ் என்பவர் யார்?

இயக்குனர் : 2.4%

ஜோசியர் : 1.2%

தொழிலதிபர் : 3.2%

பத்திரிக்கையாளர் : 8.4%

தெரியாது : 84.8%

__________________________

தொலைக்காட்சியின் வீச்சுக்கேற்ப பாண்டேவை சுமார் 33%பேர்களுக்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் மற்ற பிரபல நிகழ்ச்சிகளை இவர்தான் நடத்துகிறார் என்று கூட்டுத் தொகையில் சுமார் 11 சதவீதம் பேர் தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போதும், பாண்டே யார் என்று தெரியாது என 55% தெரிவித்திருப்பதாலும் தந்தி டி.வியின் தலைமை செய்தியாசிரியர் ரொம்பவும் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. மேலும் இந்த படிவத்தில் மற்ற பிரபலமான நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை கணிசமானோர் கண்டுபிடித்துவிட்டு, சந்தேகத்தின் பலனை ஆயுத எழுத்திற்கு வழங்கியிருப்பதையும் கூற வேண்டும். இறுதியாக பாண்டே பெயர் பார்த்து ஆயுத எழுத்தை டிக் செய்த சிலர் பாண்டேவைத் திட்டவும் செய்தனர்.

கணிப்பில் பங்கேற்ற ஒரே திருநங்கை, பாண்டேவை அவர் மொழியில் திட்டினார். மத்தவங்க மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரிக்கும் போது இவர் வெளிப்படையாக கொ.ப.சேவாக முதுகு சொறிகிறார் என்றார் அவர். ஈரோட்டிலிருந்து வந்த ஒரு விவசாயி “தந்தி டி.வி.யை சென்னையின் குப்பைக் கிடங்கு” என்றார். மற்றுமொருவர் தான் போகோ சானல் கூட பார்ப்பேன், ஆனால் விவாதங்களை பார்க்க மாட்டேன் என்றார்.

rengarajpondey_program8. ரங்கராஜ் பாண்டே நடத்தும் நிகழ்ச்சி?

கொஞ்சம் நடிங்க பாஸ் : 3.6%

சொல்லுங்கண்ணே சொல்லுங்க: 2.3%

நீயா நானா? : 5.3%

ஆயுத எழுத்து: 33.4%

தெரியாது: 55.4%

_________________________

தொடரும்..

அடுத்த பாகத்தில் இடம்பெறும் கேள்விகள்:

புதிய தலைமுறை தொலைக்காட்சி எந்தக் கட்சி சார்பானது?

உங்கள் ஓட்டு எந்தக் கட்சிக்கு என்பதை யார் தீர்மானிப்பார்கள் ?

அ.தி.மு.க-விற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கை எது ?

ஆனந்த விகடனைத் தெரியுமா?

விகடனில் விரும்பிப் படிப்பது

ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்பை நம்புவீர்களா?

கருத்துக் கணிப்பிற்கு காரணம்

அம்பானி, பச்சமுத்து, வைகுண்டராஜன் போன்ற முதலாளிகள் ஊடகங்களை நடத்தினால் நேர்மையாக இருக்குமா?

__________________________

  1. “தந்தி டி.வி.யை சென்னையின் குப்பைக் கிடங்கு”
    என்றால், வினவு கும்பலை சமூக விரோத கும்பல்களின் கழிப்பறை என சொல்லலாமோ.

    • அது சொல்பவர்களைப் பொறுத்து மாரிமுத்து நான் ஜெயேந்திரனை காமவெறிபிடித்த கிரிமினல் சாமியார் என்று சொல்வட்கற்காக நீங்கள் பதிலுக்கு நீயும் அப்படித்தான் என்பதால் ஒன்றும் ஆகிவிடாது…..யார் சமூக விரோதிகள் யார் கழிப்பறை என்பது மக்களின் வரலாறு சொல்லும். காத்திருக்கலாம்…..உங்கள் ‘பேராசை’ என்னவாகும் என்பதைப் பார்க்க……

  2. எனக்கு தெரிந்த இருபது வருட சமூக /அரசியல் வாழ்க்கையில்….புத்தி உள்ளவர்கள் மற்றவர்களுக்கு ஏதேனும் புது புது சுவராசிய மனநிலையை கொடுத்து அவர்கள் எப்படி வாழ்தால் நன்றாக இருக்கும் என்பதை இவர்களே மறைமுகமாக திணிக்கிறார்கள். வினவு ( போன்றோர்)அவர்களுக்கு தெரிந்ததை செய்கிறார்கள். அவ்வளவுதான்.! யோசிக்க மட்டும் கற்றுகொடுக்கும் மகுத்துவத்தை கற்றுகொடுங்கள்….எதை யோசிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். ( எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதால்தான் புத்தியுள்ளவன் பிழைக்கிறான் . survival of the fittest !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க