Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்தேர்தல் என்பது பணநாயகமே – ரிசர்வ் வங்கி ஒப்புதல் !

தேர்தல் என்பது பணநாயகமே – ரிசர்வ் வங்கி ஒப்புதல் !

-

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

மும்பையில் 2016-17-ம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையை வெளியிட்டு பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், வட்டி குறைப்பு, பணவீக்கம் போன்ற வழமையான நடவடிக்கைகளை விவரித்து விட்டு அந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திரை மறைவு வேலைகள் குறித்தும் வேறு வழியின்றி விளக்கினார்.

பனாமா பேப்பர்ஸ் ஊழலில் மாட்டிய 500 இந்தியர்கள் குறித்து மத்திய அரசு அமைத்திருக்கும் விசாரணைக் குழுவில் ரிசர்வ் வங்கியும் உண்டு. அந்த விசாரணை எதற்கு?

வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாகவே வங்கிக் கணக்குகள் தொடங்க முடியும். வருடத்திற்கு 2,50,000 டாலர் பணத்தை நடப்பு அல்லது மூலதனக் கணக்கு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதை சட்டப்படியே செய்ய முடியும். எனவே பனாமாவில் கணக்கு வைத்திருப்பதே குற்றமல்ல, அது சட்டப்படியா இல்லையா என்பதே விசாரணையின் மையம் என்று விவரிக்கிறார் ரகுராம் ராஜன். பனாமாவிற்கு போன இந்திய முதலைகள் இதை கணக்கில் கொண்டு தங்களது சொத்துக்கள் மற்றும் பணத்தை சட்டப்படியே மாற்றுவதைக் கூட செய்ய முடியும். அல்லது இந்த சட்டமாற்றத்தை தேவையானல் பின்தேதியிட்டு செய்து தருவதை மொசாக் பொன்செகாவே கூட செய்து தரும்.

அடுத்ததாக தேர்தல் நேரத்தில் மக்களிடம் அதிகரிக்கும் பணப்புழக்கத்தை விவரிக்கிறார் ரகுராம் ராஜன். தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்து வருகின்றது.

இந்த ஐந்து மாநிலங்களில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழங்குகிறது, இது சாதாரணமான ஒன்றல்ல என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர். இதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும் என்கிறார். அவை என்ன, ஏன் என்று அவர் விவரிக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரப்படி பணப்புழக்கம் 48 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

தேர்தல் நேரத்தில் கட்சிகள் வாக்குகளுக்கு பணம் கொடுப்பது துவங்கி பல்வேறு முறைகளில் செலவழிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம்தான். அதே நேரம் இது ஏதோ ஐந்து பத்து ஆயிரம் லட்சம் கூட அல்ல. ரிசர்வ் வங்கி கணிப்பின் படி 60,000 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய பணத்தை எங்கிருந்து வந்தது என்று மறைத்து விட்டு மக்களிடம் இறக்க முடியுமென்றால் இது பணநாயகமா, ஜனநாயகமா?

தமிழகத்தில் கோட்டும் சூட்டும் போட்டு டிப் டாப்பாக காட்சியளிக்கும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது பறக்கும் படை மூலம் பிடித்த தொகை இது வரை 20 கோடி ரூபாய். அதிலும் வணிகர்கள், சிறு முதலாளிகள் பணமே அதிகம். இது போக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க வைத்து விட்டு, 28,000 லிட்டர் மதுவையும் கைப்பற்றியிருக்கிறார் திருவாளர் லக்கானி!

அந்த அறுபதாயிரம் கோடி ஐந்து மாநிலங்களுக்கு என்றால் அதில் தமிழகத்தின் பங்கு சுமாராக 15,000 கோடியாக வைப்போம். அதில் அதிகபட்சம் இன்னும் தேர்தல் முடிவதற்குள் ஒரு நூறு கோடி பிடிப்பதாக வைத்துக் கொண்டாலும் மீதியை ஒன்றும் செய்ய முடியாது.

இங்கே பகிரங்கமாக 60,000 கோடி ரூபாய் பணம் சுற்றுகிறதே இதையே பிடிக்க முடியாத ரிசர்வ் வங்கி பனாமா கணக்குகளை விசாரிப்பதோ, சுவிச்சர்லாந்து கருப்பு பணத்தை மீட்பதோ நடக்க கூடியதா என்ன? தேர்தல் கமிஷனின் நடுநிலைமையை வியந்தோதும் அப்துல் கலாம் கருத்தாளர்களும், இந்திய ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்து மாற்று என்ற பெயரில் அற்பங்களை முன்னிறுத்தும் அப்பாவிகளும் கொஞ்சமேனும குற்ற உணர்வு இருந்தால் மன்னிப்பு கேட்பார்களா?