2015 ஜூன் மாதம் முதல் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராடி வருகின்றனர். விழுப்புரத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சில முறை கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல தலைப்புகளில் காவல்துறையுடன் விவாதங்கள் பல நிகழ்த்தியுள்ளனர். காவல்துறையில் பணிபுரிபவர்கள் பலர் அரசாங்க அடிமைகளாக செயல்பட்டலும் சிலராவது மதுவிலக்கு போராட்டத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதில் விழுப்புரம் கியூ பிரிவு காவலர்களான தங்கதுரையும், சுந்தர்நாத்தும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சட்டவிரோத, ஜனநாயக விரோத தன்மையுடன் வெளிப்படுகின்றன. எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரை மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள் என்று அவதூறு செய்வது, அதிகபட்சமாக என்கவுண்டரில் போட்டுவிடுவோம் என்று பயமுறுத்துவது என சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் பொய், அவதூறுகளுக்கு அஞ்சாமல் உங்களைப் பற்றி உயரதிகாரிகளிடம் புகார் செய்வோம் என்று தோழர்கள் கூறினால், “காவல்துறையில் நாங்கள் வைத்தது தான் சட்டம். எங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. யாரை வேண்டுமானாலும் நாங்கள் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்வோம்” என்று அதிகாரத் திமிரில் மிரட்டுகிறார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
எந்த சட்டத்திற்கும் நாங்கள் கட்டுப்படாதவர்கள் என்று இவர்கள் சொல்வது உண்மையா? எது சட்டபூர்வம் என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
குறிப்பாக, புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி அமைப்பின் தோழர்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று, தோழர்கள் குறித்து அவதூறு செய்வது. மேலும், ‘அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இந்த அமைப்புகளில் சேரக்கூடாது. அப்படி சேர்ந்தால் உங்களை ஏதேனும் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம். அதன் பிறகு உங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது’ என்றும் மிரட்டி வருகிறார்கள்.
மேலும், அமைப்பு தோழர்களின் புகைப்படங்களை அவர்களின் பெற்றோரிடமே காண்பித்து தெரியாதவர்களை போல் கேட்பது. இவர்கள் தீவிரவாத அமைப்பில் உள்ளார்கள் என்று பெற்றோர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இவர்களின் வரம்பு மீறல் அதிகபட்ச எல்லையை தொட்டுள்ளது. 10-05-2016 செவ்வாய் இரவு 9.00 மணி அளவில் V.மருதூர், பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் எங்கள் அமைப்பின் ஆதரவாளர் சதிஷ்குமாரின் மனைவி பிரேமாவிடம் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தியுள்ளனர். மாலை 6.00 மணிக்கு மேல் பெண்களை விசாரிக்க பெண் காவலர்கள் வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை துச்சமென மதித்து “யூனிபார்ம்” இல்லாமல் சட்ட விரோதமாக நடந்து கொண்டுள்ளார்கள்.
தோழர் பிரேமா 05-05-2016 அன்று அயினம்பாளையத்தில் நடந்த “மூடு டாஸ்மாக்கை” போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் அவரிடம் “ பணம் வாங்கி கொண்டு தானே நீ டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் கலந்து கொண்டாய்? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று கேட்டு மிரட்டியுள்ளார்கள். மதுவிலக்கு போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளனர். வீட்டில் கணவர் இல்லை என்று சொல்லியும் உங்களிடம் “தனியாக அரைமணி நேரம் பேச வேண்டும்” என்று கட்டாயப்படுத்தியுள்ளார். தோழர் பிரேமா செய்வதறியாது திகைக்கவே இவர்கள் அவரை மிரட்டியுள்ளனர். வீட்டின் அருகருகே இருந்த மக்கள் ஒன்று கூடவே “போலீசு பொறுக்கிகள்” இருவரும் ஓடிவிட்டனர்.
இப்படியாக, தொடர்ந்து தங்கதுரையும், சுந்தர் நாத்தும் சட்டவிரோதமாக நடந்து கொள்கிறார்கள். எனவே, இவர்கள் மீது விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்து, தக்க நடவடிக்கை வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்:
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.