privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியின் இரண்டாண்டு சாதனை - விவசாயிகள் தற்கொலை

மோடியின் இரண்டாண்டு சாதனை – விவசாயிகள் தற்கொலை

-

காராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் 2016-ன் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் தற்கொலைக்கு தண்ணீர் பற்றாக்குறை தான் காரணம் என்பதே ஒரு  மோசடி.
விவசாயிகள் தற்கொலைக்கு தண்ணீர் பற்றாக்குறை தான் காரணம் என்பதே ஒரு மோசடி.

2015-ம் ஆண்டு இப்பகுதியில் மட்டும் சுமார் 1130 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு மூன்று விவசாயிகள். இது இவ்வாண்டில் இன்னும் அதிகரித்திருக்கிறது. 2015 ஆரம்ப மாதங்களை விட தற்போது 92 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக அம்மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ‘செல்பி புகழ்’ பங்கஜா முண்டேவின் சொந்த மாவட்டமான பீட் பகுதியில், கடந்த ஆண்டு 300 விவசாயிகளும் ; இவ்வாண்டின் துவக்க மாதங்களில் 75 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை அடுத்து அவுரங்கபாத் பகுதியில் 64 விவசாயிகளும், நந்ததில் 62, லத்தூர் 55, ஆஸ்மனாபாத் 54, ஜல்னா 43, பர்பானி 39, ஹிங்கோலி 26 என தற்கொலை பட்டியல் நீளுகிறது. மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அரசின் அதிகாரபூர்வமான புள்ளிவிவரம் எனும் போது உண்மையான நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இதில் ஆஸ்மனாபாத் மாவட்டத்தை சிறப்பு கவனம் கொடுக்கப்படும் “தற்கொலை இல்லா மாவட்டமாக”(Zero suicide District) மாற்றப்போவதாக முன்னர் அறிவித்திருந்தது ஆளும் பா.ஜ.க அரசு. சிறப்பு கவனம் கொடுக்கும் மாவட்டத்திற்கே இந்த நிலைமை என்றால் மற்ற மாவட்டங்களின் நிலைமையை எப்படி இருக்கும் ? இந்த புள்ளிவிவரங்கள் மத்திய மாநில அரசுகளின் பாராமுகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

கிஷோர் திவாரி - தன்னுடைய இளம் வயதில் ABVP இணைந்து செயல்ப்பட்டவர்
கிஷோர் திவாரி – தன்னுடைய இளம் வயதில் ABVP ல்  செயல்பட்டவர்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு அதிகாரிகள் அரசின் நடவடிக்கைகள் பலனளிக்க இன்னும் காலமாகும் எனபதை தான் இது காட்டுகிறது என்கிறார்கள். “தற்கொலைகளை தடுக்க பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். உணவு பாதுகாப்பு சட்டம், விவசாயிகளுக்கு கவுன்சலிங், கட்டண குறைப்பு, பயிர் காப்பீடுகள் முதலியவற்றை செய்துள்ளோம். ஆயினும் தற்கொலைகள் அதிகரிப்பது எங்கள் முயற்சிகள் பலனளிக்க காலம் எடுத்துக்கொள்ளும் என்பதை தெளிவாக காட்டுகிறது” என்கிறார் அரசால் இப்பிரச்சனைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரி கிசோர் திவாரி.

அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ளும் கரும்பை பயிரிடுவதற்கு பதிலாக பருப்புவகைகள் பயிரட விவசாயிகளை தாங்கள் கேட்டுகொள்வதாக கூறும் திவாரி அடுத்த நொடியே தாங்கள் கரும்பு உற்பத்திக்கு எதிரானவர்கள் இல்லை என்று வேடத்தை கலைக்கிறார். மேலும் சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு அரசு நஷ்டஈடு வழங்க தாங்கள் பரிந்துரை செய்வதாகவும் அறிவித்துள்ளார். மஹாராஷ்டிரா தண்ணீர் பஞ்சத்திற்கு காரணமான சர்க்கரை ஆலை முதலாளிகளின் செல்வாக்கை இது காட்டுகிறது.

விவசாயிகள் தற்கொலைக்கு தண்ணீர் பற்றாக்குறை தான் காரணம் என்பதே ஒரு மோசடி. மறுகாலனியாக்க கொள்கைகளின் படி திட்டமிட்டே விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் விதைகள், பூச்சிமருந்துகள், இடுபொருட்கள் விவசாயிகளை மீளாக்கடனில் தள்ளுகின்றன. பி.டி காட்டன் ஆயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது. விவசாயிகளை வெளியேற்றி அதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதும், அவர்களை நகர்புற கூலிகளாக மாற்றுவதும் தான் இவர்களின் திட்டம். அதைதான் நிறைவேற்றி வருகிறார்கள்.

மராத்வாடா
விவசாய துறை அமைச்சர்: விவசாயிகள் தற்கொலை சாவுகள், மோடி ஆட்சிக்கு வந்தபின் குறைந்துள்ளன.
கடைசியா மிச்சமிருந்தது இவரு மட்டும்தான் இனிமே மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலையே இருக்காதுன்னு சொல்லுங்க … ஓய் ….

விவசாயிகளின் தற்கொலைகளை புள்ளிவிவரங்களாக மட்டும் பார்க்கும் அவல நிலையில் நாம் இருக்கிறோம். ஊடகங்களிலும் பொது சமூகத்திலும் பங்கு சந்தையின் குறியீட்டு எண்கள் ஏற்படுத்தும் முக்கியத்துவத்தை தற்கொலை புள்ளிவிவரங்கள் ஏற்படுத்துவதில்லை. பங்குசந்தை சரிந்தால் மொத்த நாட்டையே கவலை கொள்ள வைக்கிறார்கள் முதலாளிகள். நாளிதழ்களின் முதல் பக்கம் முதல் தலையங்கம் வரை கண்ணீர் வடிக்கின்றன. தன்னுடைய இழப்பை நாட்டிற்கு இழப்பு என்று அனைவரையும் நம்பவைக்கிறார்கள். நிதி அமைச்சர்கள் முதலாளிகளுக்கு சமாதானம் சொல்ல தலால் வீதிகளுக்கு படையெடுக்கிறார்கள். மறுபுறத்தில் அதே முதலாளிகளை செழிப்பாக்கும் மறுகாலனியாக்க கொள்கைகளினால் ஆண்டு தோறும் பல ஆயிரங்களில் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.மற்றுமொரு செய்தியாக இது கடந்துபோகப்படுகிறது.

இந்த படுகொலைகளுக்கு நடுவே நின்று கொண்டு மறுகாலனியாக்க கொள்கைகள் நாட்டை உய்விக்க வந்தது எனவும், வறுமையை ஒழித்துவிட்டது எனவும் முதலாளித்துவ ஆதரவாளர்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இவர்கள் கூற்றுப்படி வறுமையை ஒழிப்பது என்பது விவசாயிகளை ஒழிப்பது போலும்.

விவசாயிகளின் உயிர் மீது அரசு காட்டும் அலட்சியமும், முதலாளியின் ஒரு ரூபாய் நஷ்டத்திற்கு அரசு காட்டும் பதற்றமும் இந்த அரசு யாருக்கானது என்பதை முன்னைவிட தெளிவாக காட்டுகிறது.

– ரவி

தொடர்புடைய பதிவுகள்:
Farmer suicides in Marathwada cross 400 mark in 4 months; toll reaches 1,548