privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மல்லையாவின் வங்கியோடு மக்கள் அதிகாரம் நேருக்கு நேர் - அதிரடி நடவடிக்கை

மல்லையாவின் வங்கியோடு மக்கள் அதிகாரம் நேருக்கு நேர் – அதிரடி நடவடிக்கை

-

கிருஷ்ணகிரி அருகில் உள்ள பெரியமுத்தூர் சிண்டிகேட் வங்கிக் கிளை (கிருஷ்ணகிரி அணை சாலையில் உள்ள) ஜூன் 8–ம் தேதி நகைக்கடன் வாங்கிய விவசாயிகள் கடனைத் திருப்பி செலுத்தாததால் அந்த நகைகளை ஏலம் விடுவதாக தினத்தந்தி நாளிதழின் சேலம் பதிப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. “தங்க நகை ஏல அறிவிப்பு” என்று வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “நகைக்கடன் மற்றும் வேறு கடன்களுடன் நகைக் கடனும் பெற்று நீண்ட நாட்களாகியும், தவணை தவறியும், பலமுறை நோட்டீசு அனுப்பியும், ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தும், நேரில் தெரிவித்தும் கடன் தொகையை முழுவதும் திருப்பி செலுத்தாததால் கீழ்க்கண்ட கணக்கில் உள்ள தங்க நகைகள் வரும் 16.06.2016 (வியாழக் கிழமை) பகல் 11 மணி அளவில் எங்களது வங்கிக் கிளையில் வைத்து கிளை மேலாளர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் விடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

syndicate-bank-periya-muththur-branch-1
வங்கியின் முகப்பு

கடன்தாரர்கள் பெயர் மற்றும் முகவரி என இந்த அறிவிப்பில் 247 பேருடைய ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தக் கடன்தார்கள் சுமார் ரூ.18,000 முதல் 4 இலட்சம் வரை கடன் பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலட்சத்திற்கு குறைவாக கடன் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழக் கிழமை நகை ஏலம் விடப்பட்டது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடர்பு கொண்டனர். மக்கள் அதிகாரத்தின் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர்.முருகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை வங்கியின் மேலாளர் கிஷோர் குமாரை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது நகை ஏலம் எடுக்க வந்த சில நகைக்கடை வியாபாரிகள், விவசாயிகள் மேலாளரிடம் ஏலம் விடுவதைப் பற்றி விவாதிப்பதைப் பார்த்தவுடன் அந்த இடத்தை காலி செய்துவிட்டு சென்று விட்டனர்.

syndicate-bank-periya-muththur-branch-2“நகை ஏலம் விடுவதை முறையாக அறிவித்துதான் செய்கிறேன்” என்று முதலில் வாதாடினார் மேலாளர். “தமிழக அரசு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், முழுமையான அரசாணை வருவதற்கு முன்னதாக நகை ஏலம் விடவேண்டிய அவசியமென்ன? விவசாயிகளுக்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்” என்று தோழர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதிகாத்தார் வங்கி மேலாளர். தான் நிறுவன விதிகளின் பிரகாரம் நடந்து கொள்வதாக மீண்டும் தெரிவித்தார்.

“உங்களில் யாருக்கு இந்த வங்கியில் கணக்கு இருக்கிறது” என்று கேட்டு தோழர்களை பிரிக்க முயன்றார். முதலாளிகள். “வங்கிக் கடன் கட்டவில்லை என்றாலும் அவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கிறீர்கள், போலீசு பாதுகாப்பு கொடுக்கிறீர்கள், மல்லையாவுக்காக அவனது வக்கீல்தான் வாதாடுகிறான், அமைச்சர் அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல வருகிறார், இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா? அப்பாவி விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வந்தால், உனக்கு அக்கவுண்ட் இருக்கா என கேட்பீர்களா” என்று தோழர்கள் கேள்வி எழுப்பிய பின்னர் மேலாளர் அமைதியானார்.

வங்கி வெளியிட்ட நகை ஏல அறிவிப்பு செய்தித்தாள் விளம்பரம்

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]

bank-loan-aunction-petition-2
மனுவை வங்கி மேலாளரிடம் கொடுத்தல்

“ஏலமெல்லாம் நேத்தே முடிஞ்சிடுச்சி, நீங்க வேணும்னா மேலிடத்துக்கு மனு கொடுங்க, அனுப்பி வைக்கிறோம்” என்றார்.

“உங்களோட மேலிடத்தோட பேருதான் நாறுதே, நாங்க ஏன் அவங்கக்கிட்ட மனு கொடுக்கனும்“ என்று தோழர்கள் திருப்பிக்கேட்டனர்.

“என்ன இவ்வளவு இன்டீசண்டா பேசுறீங்க, என்ன தெரியும் எங்க பேங்கப்பத்தி” என்றார் மேலாளர்.

“உங்களது மேலதிகாரி எஸ்.கே.ஜெயின், கார்ப்பரேட் முதலாளிகளோட கடன் உச்சவரம்பை சட்ட விரோதமா உயர்த்துனாரு, அதுக்காக அந்த முதலாளிகள் கிட்ட இலஞ்சம் வாங்கினாரு, இதுக்காக போலி கணக்கு தயார் செய்தாரு, இதுல ஹவாலா பாணியில இலஞ்சம் வாங்கினாரு, இதுக்காக அவர் கைது செய்யப்பட்டாரு, இது நாட்டுக்கே தெரியும், உங்களுக்குத் தெரியாதா?” என்று வினவு இணையதளத்தில் வந்த கட்டுரையின் செய்திகளை அள்ளி வீசிய பின்னர் அவர் வாயடைத்து நின்றார்.

“எனக்கு எஸ்.கே.ஜெயின் எல்லாம் யாருன்னு தெரியாது” என்று மழுப்பினார்.

bank-loan-auction-argument-with-officials
நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி, மக்கள் அதிகாரம் தோழர்கள் வங்கியின் மண்டல மேலாளர் சிவகுருவிடம் விவாதம் செய்கின்றனர்

நாம் அங்கு வருவதற்கு முன்னதாக, சில விவசாயிகள் தனிப்பட்ட முறையில் இந்த மேலாளரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். தோழர்கள் மேலாளரை கிடுக்குப்பிடி போட்டுக் கேட்பதைப் பார்த்தவுடன், தோழர்களுடன் அவர்களும் இணைந்து கொண்டனர்.

“ஏலத்தை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், அதனை விடுத்து, ஏலத்தை விட்டே தீருவேன் என்று அடம் பிடிக்காதீர்கள், ஏன் எங்கள் வயிற்றில் அடிக்கிறீர்கள்” என்று வந்திருந்த விவசாயிகளும் மேலாளரிடம்ஆதங்கத்துடன் கேட்டனர்.

“அது சரிங்க, ஏலம் எடுக்க டெபாசிட் தொகை அஞ்சி இலட்ச ரூபாய்னு போட்டிருக்கீங்க, யாரோட நகைய யாரு ஏலம் எடுக்கிறதுக்கு இப்படி அறிவிச்சிருக்கீங்க” என்று தோழர்கள் கேட்டதும் திகைத்துப் போனார்.

இதன் பின்னர் நீண்ட விவாதத்தின் இறுதியாக உடன்பாட்டுக்கு வந்தவர் போல, “ஒரு மனு கொடுங்கள் நான் ஏலத்தை நிறுத்தி வைக்கிறேன்” என்றார். தோழர்களும் விவசாயிகளும் மனுவைத் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர் டேம் போலீஸ் ஸ்டேசன் சென்று சப்–இன்ஸ்பெக்ட்ரை அழைத்து வந்தார்.

bank-loan-aunction-petition-3
தோழர்.முருகேசன் வங்கி மேலாளருக்கு நன்றி தெரிவித்தல்

எஸ்.ஐ.யை பார்த்தவுடன் அங்கு வந்த விவசாயிகள் சிலர் சற்று தொலைவில் ஒதுங்கி நின்று கொண்டனர். “உங்களுக்கெல்லாம் இந்த பேங்குல அக்கவுண்ட் இருக்கா” என்று மொத்தமாக அதட்டலாகக் கேட்டார் எஸ்.ஐ. மீண்டும் அவருக்கு விளக்கப்பட்டது.

“இந்த வங்கியில அக்கவுண்ட் இருக்கா என்று நாங்கள் கேட்கவில்லை, நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம், எங்களது கருத்து தமிழக அரசின் விவசாயக் கடன் தொடர்பான முழு அறிவிப்பு வரும் வரை ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இதில் அவசரம் காட்டுவதை ஏற்க முடியாது” என்று விளக்கப்பட்டது.

இதனால், எஸ்.ஐ.யும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். முறைப்படி மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவித்து, போலீசு பாதுகாப்பு பெற்றுதான் ஏலம் விடப்பட வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை பின்பற்றாமல் ஏலம் விடுவதாக தெரிவித்தார் எஸ்.ஐ. மேலும், அவர் மேலாளரிடம் தனியாக சென்று பேசினார். இருவரும் விவாதித்த பின்னர், ஏலத்தை நிறுத்தி வைப்பதாக உடன்பாட்டுக்கு வந்தனர். அந்தவகையில், விவசாயிகள் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்டார். நகை ஏலம் நிறுத்தி வைப்பதாக உடனடியாக அறிவிப்புப் பலகையை மாட்டினார். இதனால், விவசாயிகளும் சற்று ஆறுதலடைந்தனர்.

bank-loan-auction-stopped-2
ஏலத்தை தடுத்து நிறுத்திய பின்னர் தோழர்கள் மற்றும் விவசாயிகள்

ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட விவசாயி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவருக்கு கால அவகாசம் வழங்கும் நடைமுறை இருப்பதாகவும், அதனை பின்பற்றாமல் ஏமாற்றியிருப்பதாகவும் ஒரு மூத்த விவசாயி அப்போது தெரிவித்தார். மேலும், நகைக்கடை வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஏலம் விடுவதாகவும், அதனால்தான் அவசரம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்தை சுற்றியுள்ள விவசாயிகளும் தெரிவித்தனர். இவற்றையெல்லாம் முறையாக ஆய்வு செய்தால் பல மோசடிகள் வெளிவரக்கூடும்.

வங்கிக் கிளை மேலாளர் ஏலத்தை நிறுத்தியிருந்தாலும், விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்யவும், விவசாயிகள் அடகு வைத்த நகைகளை திருப்பி ஒப்படைக்கவும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமையன்று (20-06-2016) மனு கொடுத்தனர். ஆட்சியர் வளாகத்திலோ குறை தூர்க்கும் நாளில் மனு கொடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் மீட்டிங்கில் இருப்பதாகவும் சொல்லி 11.30 மணிவரை காக்க வைத்தனர் அதிகாரிகள். அதன் பின்னர், மொத்தமாக எல்லோரையும் அழைத்து, திருப்பதி கோவிலில் தட்சணை வாங்கிக்கொண்டு ஜருகண்டி, ஜருகண்டி என்று விரட்டுவதைப் போல மக்களை விரட்டினர். மனுவை டி.ஆர்.ஓ.–விடம் கூட கொடுக்கவிடாமல் பணியாளர்கள் வாங்கி சீல்வைத்து சம்பந்தப்பட்ட துறைக்கு தள்ளிவிடுவதிலேயே குறியாக இருந்தனர். இதனைப் பார்த்த விவசாயிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தின் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கேள்விக்குள்ளானது.

போலீசு, வங்கி அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட மனுக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆனால், அன்றைய தினமே, செவ்வாய்க் கிழமை நகை ஏலம் விடப்படும் என்றும் டெபாசிட் தொகை ரூ 50,000 என்றும் வங்கியின் வாயிலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டது. இது குறித்து வங்கிக் கிளை மேலாளரிடம் கேட்டபோது, “எனக்கு தெரியாது, என்னை ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளனர்” என்றும், சேலம் மண்டல மேலாளர் நேரடியாக ஏலம் விட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. போலீசோ, விண்ணப்பத்தை வாங்க மறுத்தது. இருப்பினும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதைத் தெரிவித்துவிட்டு வந்தனர் விவசாயிகள்.

இப்படி வங்கி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், போலீசு என ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே பல வகையான நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குதான் இந்தனை படைகளும் பரிவாரங்களும் இருப்பது போல காட்டிக்கொண்டு ஏதோ தீவிரமாக வேலை செய்வது போலவும் நடித்துக் கொண்டுள்ளனர். இந்தக் கட்டமைப்பு கொடுத்த மாயையெல்லாம் நாளும் விவசாயிகளுக்கு விளங்கத் தொடங்கியது. எப்படியும் ஏலத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும் என மேலும் தீவிரம் காட்டினர்.

19-06-2016 அன்று ஒரு நாளில் மட்டும் வெளியான ஏல அறிவிப்பு விளம்பரங்கள் – இந்த விளம்பரங்களை வெளியிட்ட வங்கிகள் அனைத்தும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிராமப்புற வங்கிகள் என்பதை கவனிக்கத்தக்கவை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செவ்வாய்க் கிழமை (21-06-2016) காலை கூடுதலான விவசாயிகள், தோழர்கள் வங்கியின் முன்னே குவிந்தனர். அங்கு வந்திருந்த சேலம் மண்டல மேலாளர் சிவகுருவைச் சந்தித்தனர். அவரும் தன் பங்குக்கு ஆரம்பத்தில் இருந்து தொடங்கினார்.

“உங்களில் யாருக்கு இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது” என்று கேட்டார். “கடன் வாங்குனா கட்டனும், மூனு வருசமாச்சி, ஒரு பைசா கூட கட்டல, எல்லா வழிமுறைகளிலும் கேட்டுப்பார்த்து விட்டோம்” என்று அவர் முன்வைத்த அனைத்து வழக்கமான வாதங்களுக்கெல்லாம், அடிப்படையான கேள்விகளுக்கெல்லாம் தோழர்களும் விவசாயிகளும் விளக்கமளித்தனர். இந்த முறை விவசாயிகள் மேலாளரிடம் கூடுதலாக கேள்விகளை எழுப்பினர். அவர்கள் தங்களது பிரச்சனைகளை முன்வைத்தனர்.

bank-loan-auction-stopped-1
ஏலம் நிறுத்தப்பட்டதாக வங்கி முன்பு தொடங்கவிடப்பட்ட பலகை

எஸ்.கே.ஜெயின், மல்லையா, வாராக்கடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் நோக்கம் போன்ற விசயங்களை மண்டல மேலாளருக்கு விவாதத்தின் ஊடாக தோழர்கள் வகுப்பெடுத்த பின்னர், நகைகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைப்பதாக ஏற்றுக்கொண்டார்.

தற்காலிகமாக நகை ஏலம் விடுவது நிறுத்தப்பட்ட செய்தியைக் கேட்ட அங்குள்ள விவசாயிகள், பெண்கள் எல்லோரும் கைதட்டி ஆராவாரம் செய்தனர். எல்லோருடைய முகத்திலும் மலர்ச்சி தென்பட்டது. இதனை தங்களது ஃபோன் மூலம் எல்லா நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

bank-loan-auction-banner-removal
ஏல அறிவிப்பு பேனரை வங்கியின் செக்யூரிட்டி அகற்றுதல்

நகை ஏலம் விடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இன்றைய சூழ்நிலையில், குறிப்பாக, இந்தப் பகுதியில், விவசாயிகள் பெற்ற கடனை வங்கிகள் திருப்பி செலுத்துவது என்பது நியாயமாகத் தோன்றினாலும், எப்படி கட்டுவார்கள் என்ற கேள்விதான் முன்னிற்கிறது!

3 ஏக்கர் நிலம் வைத்துள்ள அனுமுத்து என்ற விவசாயி நெல் பயிரிட்டு வருகிறார். ஒரு ஏக்கருக்கு 20 மூட்டைகள் (ஒரு மூட்டைக்கு 75 கிலோ) விளைச்சல் என்று கணக்கிட்டால், ஆண்டுக்கு 60 மூட்டைகள், மூன்றாண்டுகளுக்கு 180 மூட்டைகள். மூட்டை ரூ 1000 – 1100 கொடுத்து கொள்முதல் செய்கின்றன ஏஜென்டுகள். அதாவது மூன்றாண்டுகளில் அந்த விவசாயியின் மொத்த வருவாய் சுமார் 2 இலட்சம். இவர் அடகுவைத்த நகை 11 பவுன். வாங்கிய கடன் சுமார் ரூ.1,35,000. கட்டவேண்டிய தொகை வட்டியுடன் சேர்த்து சுமார் இரண்டு இலட்சம். குடும்பச் செலவு சராசரியாக மாதம் ஒன்றுக்கு மிகக் குறைவாக ரூ 5000 எனக் கொண்டால் கூட மொத்த செலவு ரூ 1,80,000. இது தவிர அவசர அவசிய செலவுகள் தனி. இவர் வாங்கியக் கடனை திருப்பிக் கட்ட வேண்டும் என்பது சரி என்றாலும் எப்படி கட்டுவார் என்ற கேள்விக்கு இந்த அரசும், சமூகமும் பதிலளிப்பதில்லை. அனுமுத்தனைப் போன்றுதான் பிற விவசாயிகள் வாழ்கின்றனர்.

இந்த நிலையில், விவசாயி தவணைத் தொகையைக் கட்ட வேண்டும் என்றால், அவரது குடும்பத்தை அவர் எப்படி பராமரிப்பார்? மேலும், இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்றவை கானல் நீராகிவிட்ட இன்றைய சூழலில் விவசாயி எப்படி வாழ்கிறார் என்பதே கேள்விக்குரியதாக உள்ளது.

sundakuppam-villages-2
சுண்டப்பட்டி

ஆகையால், விவசாயிகளுக்கு முன் ஒரு தீர்வுதான் உள்ளது. விவசாயக் கமிட்டிகள்தான் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு சுதந்திரம், விவசாயிகளுக்கான அதிகாரம். அது தான் தீர்வு!

விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோருவது; விவசாயக் கொள்முதல் நிலையங்களை அமைப்பது; நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது போன்ற விவசாயிகளின் தேவைகள், உரிமைகள் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான கோரிக்கைகளாகவே உள்ளன. இவற்றில் சில அரைகுறையாக அமுல்படுத்தப்பட்டும் செயல்படாமல் உள்ளன. ஆனால், இன்று இந்தக் கோரிக்கைகளின் மீதே ஆர்வமற்ற ஒரு மனநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், விவசாயம் என்பது தற்கொலைக்கு நிகரானதாக உள்ளது. அதாவது, விவசாயம் வாழ்வளிக்கும் ஒரு தொழிலாக இல்லாமல் போனது மட்டுமின்றி, எதிர்நிலைக்கு சென்றுவிட்டது.

sundakuppam-villages-1
சுண்டப்பட்டி

விவசாயம் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து துறைகளும் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஒட்டுமொத்த அரசு மற்றும் சமூகக் கட்டமைப்பே நெருக்கடியில் சிக்கியுள்ளது. சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து உரிமைகளையும் நியாயங்களையும் நிறைவேற்றும் நடுநிலையாளன் போல தன்னைக் காட்டிக்கொண்ட இந்த அரசுக் கட்டமைப்பு, கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடியாகவும் உழைக்கும் மக்களுக்கு எதிர் நிலை சக்தியாகவும் மாறிவிட்டது. அதனால், தனித்தனியான கோரிக்கைகளுக்கான போராட்டங்களின் மூலம் எந்த உரிமையை பெற முடியாது. ஆகையால், உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியும். அந்த வகையிலான போராட்டத்திற்கு அணிதிரள்வோம்!

***

bank-loan-auction-next
மீண்டும் ஏல அறிவிப்பு படம்

சிண்டிகேட் வங்கிக் கிளை போன்று மற்ற வங்கிகளிலும் இதுபோன்ற ஏல அறிவிப்புகள் நாள் தோறும் பத்திரிகைகளில் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த விளம்பரங்களை வெளியிடும் வங்கிக் கிளைகளின் பட்டியலில் கடன் தொகையை மட்டும் குறிப்பிடுவது, கடன் தொகையை குறிப்பிட்டு + வட்டி என்று குறிப்பிடுவது, மேலும் சில வங்கிக்கிளைகள் கடன் பெற்றுள்ள காலத்தையும் குறிப்பிடுவது, எவ்வளவு நகை (கிராம் கணக்கில்) என்பதைக் குறிப்பிடுவது, என்ன நகை என்றும் குறிப்பிடுவது என்று பல வகைகளில் வெளியிடுகின்றன. இந்த விளம்பரங்களைப் பார்க்கும் பொதுமக்களில் பெரும்பாலானோர் “கடன் கட்டவில்லை என்றால் ஏலம் விடத்தானே செய்வார்கள்” என்று கருதிக் கொள்கின்றனர். சிலர், “ஐயோ, பாவம்” என்று கடன் தாரர்ளுக்காக வருத்தப்பட்டாலும், “கடனைத் திருப்பிக் கட்டவில்லை என்றால் வங்கிகள்தான் என்ன செய்ய முடியும்” என்று கருதிக் கொள்கின்றனர்.

இந்த ஏல அறிவிப்புகளில் தெரிவித்துள்ள கூற்றுகள் உண்மையா, கடன் கட்டத் தவறியவர்கள் யார்? எதற்காக கடனை வாங்கினார்கள்? ஏன் திருப்பிக் கட்டவில்லை? கடன் கட்டாமல் போனால், அதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் வங்கிக் கிளைகளின் கருத்து உண்மையா? வங்கிக் கிளை ஏலத்தை அறிவித்த பின்னர் ஏலத்தை தடுக்க முடியாதா? தடுப்பதற்கான வழிவகைகள் உள்ளனவா? இதற்கு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பொறுப்புள்ளதா? அரசியல் பின்னணி உள்ளதா? நிறுவன விதி முறைகள்–சட்ட முறையிலான குற்றச் செயல்கள், விதிமீறல்கள் நடந்துள்ளனவா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதுமட்டுமல்ல, கடன் கட்டியவர்கள் யார்? அவர்கள் எப்படி கடனைக் கட்டினார்கள்? போன்ற பிரச்சனைகளையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. வெறுமனே ஒரு அறிவிப்பாக சுருக்கிப் பார்த்து இந்தப் பிரச்சனையில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடியாது. பெரியமுத்தூர் சிண்டிகேட் வங்கிக் கிளையின் ஏல அறிவிப்பையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியுள்ளது என்பதைத்தான் இந்த போராட்டம் நமக்கு உணர்த்துகிறது.

reservoir-of-krishnagiri-and-fields
கிருஷ்ணகிரி டேம், சார்ந்த வயல்கள்

இப்பகுதியில் விவசாயிகளில் கடன் வாங்கியுள்ளவர்கள் கணிசமானவர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக தான் கடன்வாங்கியுள்ளனர். பல பெண்களின் காது, மூக்கு, கழுத்தில் இருப்பதெல்லாம் கவரிங் நகைகள் அல்லது வெறுமனே நகையணியாமல் உள்ளனர். பிள்ளைகளை அள்ளிச்சென்று கொள்ளையடிக்க ஊருக்கு நான்கு முதல் ஐந்து தனியார் பள்ளி வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக, கல்வி தனியார்மயமான பின்னர்தான் நகை கடன் எடுப்பது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

***

இதனிடையே வெள்ளிக் கிழமை (17-06-2016) மாலை ஏலம் நிறுத்திவைக்கப்பட்டதாக வங்கியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட பின்னர், இதனை அறிந்த பலரும் தோழர்களிடம் புலம்பினர். சில பெண்கள், தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணத்திற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து நகையை மீட்டதாக தெரிவித்தனர். ஒரு நாள் முன்னமே நீங்கள் வந்திருக்கக் கூடாதா என்று தோழர்களை பார்த்து மனம் வெதும்பினர். ஏலம் அறிவித்த பின்னர் பல விவசாயிகள், 10 முதல் 15 நாட்களுக்கு 7% முதல் 10% வரை கந்துவட்டிக்கு கடன் வாங்கி வந்து நகையை மீட்டதாகத் தெரிவித்தனர். மேலாளரிடம் மனு கொடுத்துவிட்டு வரும் போது, ஒரு விவசாயி “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருக்கக் கூடாதா, இப்பதான் கந்துவட்டிக்கு பணத்தை வாங்கி கடனக் கட்டுனேன்” கதறினார்.

periyamuththur-fields
பெரிய முத்தூர்

ஏலம் மீண்டும் விடப்படும் என்று வங்கியில் அறிவிப்புப் பலகை வைத்த பின்னர், பல விவசாயிகள் நம்மை பார்த்து விசாரித்தனர். மக்கள் அதிகாரம் தோழர்களை நாடி வந்த விவசாயிகளிடம் எப்படி ஏலத்தைத் தடுத்து நிறுத்தினீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டனர். தொடர்ந்து போராடி வருவதைக் கேட்டு உற்சாகமடைந்தனர். இதனை விடக்கூடாது என்று ஆவேசமாகப் பேசினர். ஆனால், மறு நாள் செவ்வாய்க் கிழமை வங்கியில் ஓரிரு விவசாயிகள் மட்டுமே கூடுதலாக வந்தனர். தங்களது உணர்வை பகிர்ந்து கொண்ட பலரும் வரவில்லை. ஏன் வரவில்லை?

நகை ஏலம் விடப்படுவது என்ற பிரச்சனையை விவசாயிகளில் அனைத்து பிரிவினரும் தன்மான பிரச்சனையாக பார்க்கின்றனர். நகை ஏலத்திற்கு விடப்படுவது தங்களது மானத்தை இழந்ததற்கு சமம் என்று பார்க்கின்றனர். இதனால், பலரும் கந்துவட்டிக்கு பணம் வாங்கி கடனை அடைத்துள்ளனர். கந்துவட்டிக்கு கடன் வாங்கி நகையை மீட்க முடியாத சிலர், வங்கியின் பக்கமே செல்லாமல் வேறு வழிகளில் செல்கின்றனர். இது, விவசாயிகள் தாங்கள் கொடுத்த வாக்கிற்கு நேர்மையாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தப்படும் அவர்களது நேர்மையைக் காட்டுகிறது. மற்றொருபுறம், பரம்பரை நகை பறி போகிறதே என்ற துக்கமும் அவர்களை வாட்டுகிறது.

செய்தித்தாளில் வெளிவந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல் பற்றிய செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவ்வாறு கூனிகுறுகி வாழ்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது, இந்த வங்கியின் மூலம் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட ‘நெருக்கடிகள்’தான். இந்த வங்கியின் ஏல அறிவிப்பில் தெரிவித்துள்ள, தவணைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகளைத் தாண்டி பல ‘திருட்டு’ வழிமுறைகளை இந்த வங்கி கையாண்டுள்ளது. இதனை அங்குள்ள விவசாயிகளின் வீட்டுப் பெண்கள் நமது தோழர்களிடம் தெரிவித்தனர். “இந்த மேனேஜரு ரொம்ப மோசம். தவணை கட்டவில்லைங்கிறதுக்காக, நூறுநாள் வேலையில எங்களுக்கு வந்த பணத்தை எல்லாம் இந்த ஆளு எடுத்துக்கிட்டாரு. சுய உதவிக் குழுவில இருக்கிற சேமிப்பைக் கூட விட்டுவைக்கிறதில்லை” என்று புலம்பினர். “வெளியூர்ல படிக்கிற புள்ளைக்கு அக்கவுண்டுல பணத்தை போட்டாக்கூட அதையும் எடுத்துக்கிறாரு” என்று வருத்தப்பட்டார் ஒரு பெண்.

இதனை அந்தப் பெண்கள் சொல்லும் போது இதனைக் கேட்ட தோழர்களுக்கு கோபம் பீறிட்டு வந்தது. முகத்தில் பளார் பளார் என்று நாலு அறைவிட்டு, பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துச் செல்லும் கந்துவட்டிக்காரனையும், பணத்தையும் பறிகொடுத்துவிட்டு, தான் திட்டமிட்டிருந்த அவசரமான தனது குடும்பத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாமல், கன்னத்தில் அறைந்து–பாக்கெட்டில் கையைவிட்டு வன்முறையாக பணத்தைப் பிடுங்குபவனை எதிர்த்துக் கேட்கவும் முடியாத அவமானத்தாலும் தவிக்கும் ஒரு விவசாயியையும் கண்முன்னே காட்டியது.

நூறுநாள் வேலைக்கு செல்லும் இந்தப் பெண்கள் யார்…? எங்கேயும் வேலை கிடைக்காமல், உழைக்காமல் சும்மா இருக்கவும் முடியாமல், குடும்ப செலவுக்கு வழி தெரியாமல், கூலி வேலை எதுவும் கிடைக்காமல் இருக்கும், விவசாயி என்ற ‘கௌரவ’த்தை விட்டுவிட்டு வேலைக்கு சென்று தங்களது குடும்ப சுமையைக் குறைக்க நினைக்கும் விவசாயிகளின் வீட்டுப் பெண்கள்!

அந்த வகையில் விவசாயிகளின் வீட்டில் உள்ள பணத்தைத் திருடி, அவர்கள் கணக்கில் வரவு வைக்கும் ஒரு திருட்டை, வங்கிகள் தவணைப் பணம் வசூலிக்கும் வழிமுறையாக, மதுரை உயர் ‘நீதி’மன்றக் கிளை சில நாட்களுக்கு முன்னதாக ஒரு வழக்கில் தீர்ப்பாக அங்கீகரித்துள்ளது. மொத்தத்தில், வங்கித்துறை கந்துவட்டிக் கொள்ளைக் கூடங்களாகவும் நீதிமன்றம் கட்டப்பஞ்சாயத்து மன்றங்களாகவும் மாறிவிட்டன.

bank-loan-pp-protest-poster

***

ஏலத்தை நிறுத்தி வைத்ததற்கு மக்கள் அதிகாரம் தோழர்களின் விடா முயற்சியே காரணம். ஆனால், இதற்காக பெருமைப்படவோ அல்லது மகிழ்ச்சிக் கொள்ளவோ முடியவில்லை. மீளமுடியாத அவலத்திலும் அழிந்துவருகின்ற மக்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கும் போது, அதில் அவர்கள் சந்தித்த ஒரு நெருக்கடியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் அவ்வளவே. மறுகாலனியாக்க நச்சுச் சுழலின் பிடியில் இடிந்துவிழும் இந்த சமூகக் கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி, ஒரு பெரும் அழிவு என்ற புதைகுழியில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகள், அதிலிருந்து தங்களது பிற்போக்கு பண்பாடு, பழக்க வழக்கங்களால் மீளமுடியாமல் தவிக்கும் நிலையில், ஏலத்தை தடுத்து நிறுத்திய இந்தப் போராட்டம் என்பது ஒரு தொடக்கமாக அமையட்டும்! விவசாயிகள் நிரந்தர ஆறுதல் அடைவதற்கு அவர்களை அமைப்பாக திரட்டி அடுத்தக் கட்டமாக மாபெரும் போராட்டமாக முன்னேறி செல்லட்டும்!

***

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டிணம் என்பது தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிறு தொழில் நகரம். இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு காலத்தில் செங்கொடி இயக்கம் வலுவாக இருந்தது; பின்னர் நக்சல்பாரி இயக்கம் செல்வாக்காக இருந்தது.

periyamuththur-fieldsஇந்த கிராமங்கள் தென்பெண்ணை ஆற்றின் மூலமும் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணையின் மூலமும் நீர்பாசன வசதி பெறுகின்றன. இதனால், இப்பகுதியில் உள்ள மலைக்குன்றுகளின் அடிவாரத்தில் உள்ள சந்துப் பொந்துகளைக் கூட பண்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர் இங்குள்ள விவசாயிகள். பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு பயிரிடுகின்றனர். சிலர் அண்மை காலமாக மல்லி, சாமந்தி போன்ற பூ உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். கால்நடைத் தொழிலும் முக்கியமான தொழில். பல கிராமங்களில் பால்கோவா உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அந்த அளவிற்கு பால் உற்பத்தி இங்கு நடக்கிறது.

ஆம், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருகின்ற பகுதியென்றால், அது தென்பெண்ணையாற்றின் கரைகளை ஒட்டிய இந்தப் பகுதிதான். எங்கும் பச்சை பசேலென காட்சியிளிக்கும் நெல்வயல்கள், தென்னந்தோப்புகள்; வயல்களில் சுற்றிவரும் வெள்ளைநிறக் கொக்குகள், குருவிகள், காக்கைகள்; கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள், பெண்கள்; சற்றுத் தொலைவில் இருக்கும் மலைக்குன்றுகள், ஆங்காங்கே நீரோடைகள், நாணல்கள்… என அந்த காட்சிகள் மனதிற்கு இதமாக இருக்கும்.

கண்களுக்குத் தெரியும் இந்தக் காட்சியும் கண்களுக்குத் தெரியாத விவசாயிகளின் வாழ்க்கையும் முரண்பட்ட அம்சங்களாக ஒரே இடத்தில்தான் உள்ளன! இதனை நாம் உணரும் போது, இங்கே மறைந்துள்ள மற்றொரு காட்சியும் நமது கண்களுக்குத் தெரியத் தொடங்கிவிடும். அது தான் போராட்டம்! அந்தக் காட்சி வேகமாக வளரும், பற்றிப் படரும், வானும் மண்ணும் செவ்வண்ணமாக சிவக்கும்…!

விவசாயிகளின் போராட்டத்தால் நகை ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டது!

  • கிருஷ்ணகிரி டேம் சிண்டிகேட் வங்கியில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுவதைப் போராடி தடுத்து நிறுத்தப்பட்டது!
  • விவசாயிகளிடம் தவணை வசூலிக்க அவர்களது கணக்கில் உள்ள சேமிப்புகளை வங்கிகள் திருடிக் கொள்ள நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது – மல்லையாவுக்கு சுதந்திரம், விவசாயிகள் மீது அடக்குமுறை – இதுதான் சர்வாதிகாரம்!
  • கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை அனைத்தையும் ரத்து செய்யப் போராடுவோம்! விவசாயிகளின் அடமானப் பொருட்கள் அனைத்தையும் மீட்டெடுப்போம்!
  • விவசாய உள்ளீடு பொருட்கள், விளைப் பொருட்களில் கார்ப்பரேட் முதலாளிகள், ஆன்லைன் வர்த்தகத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்போம்!
  • மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலம் விளைப் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தைப் பெறுவோம்!

மக்கள் அதிகாரம்
கிருஷ்ணகிரி பகுதி
தொடர்புக்கு: 80152 69381