privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகல்விக் கொள்ளைக்கு எதிராக உயிரைக் கொடுத்த ஆசிரியர்கள்

கல்விக் கொள்ளைக்கு எதிராக உயிரைக் கொடுத்த ஆசிரியர்கள்

-

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மெக்சிகோ ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடம்!

முன்னுரை: மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதிபத்தியக் கல்விக்கொள்கை

ந்தியாவைப் போன்று 90-களில் புகுத்தப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால் உழைக்கும் மக்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. வேலையில்லாத் திண்டாட்டம், பாரதூரமான ஏற்றத்தாழ்வு, தொழிலாளிகள் உதிரிகளாக்கப்பட்டது, போதை மருந்து சீரழிவு, விபச்சாரம் என மெக்சிகோவின் அவலநிலையை கேரி லீச், “முதலாளித்துவம்: ஒரு கட்டமைக்கப்பட்ட மக்கட்படுகொலை (Capitalism: A Structural Genocide)” எனும் புத்தகத்தில் விளக்குகிறார்.

mexico-teachers-protest-against-nep-14இன்றோ ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகநாடுகளில் அடுத்த கட்ட சீர்திருத்தம் எனும் பெயரில் கல்வி, பொதுசுகாதாரம், மின்சாரம், தண்ணீர், எரிசக்தி என சேவைத்துறைகளை சூறையாட தீவிரமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. சேவைத்துறை என்று சொல்கிற பொழுது முதலில் அடிபடுவது கல்வித் துறைதான். வளரும் நாடுகளில் புல்லுருவி அரசாங்கங்களை வைத்துக்கொண்டு, பொதுக்கல்விக்கான கட்டமைப்பைத் தகர்த்து, ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ஏற்ப கல்வியை வடிவமைக்கிற வேலையை ஏகாதிபத்திய கும்பல்கள், புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் செய்யத் துடிக்கின்றன. இதில் இந்தியா, மெக்சிகோ, சிலி என எந்த மூன்றாம் உலக நாடுகளும் இந்த தாக்குதல்களுக்கு தப்பவில்லை.

சான்றாக, இந்தியாவில் அமல்படுத்தப் போகும் புதிய கல்விக்கொள்கை நிரந்தக் கூலிகளை (Skilled Human Capital-பணித்திறன் மிக்க மனித மூலதனம்) பன்னாட்டு நிதிமூலதனக்கும்பல் சுரண்டுவதற்கு ஏதுவாக தயாரிக்க முனைகிறது. இதன் மூலம் சமூகத்திற்கு அறிவூட்டும் கடமையைப் புறக்கணித்து, சந்தைப் பொருளாதாரத்திற்கு தேவையான விலைமலிவான கூலிகளை உருவாக்க முனைகிறது. மேலும் பார்ப்பனிய இந்துத்துவ பாசிசத்தைப் புகுத்தும் வண்ணம் சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வி, இந்து-இந்தி-இந்தியா எனும் ஆர்.எஸ்.எஸ் அகண்ட பாரதக் கொள்கையையும் சேர்த்து திணிக்க முற்படுகிறது.நம் நாட்டு உழைக்கும் மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அறிவுத்துறையினர் மற்றும் ஆசிரியர்கள் புதியக் கல்விக்கொள்கையின் அபாயத்தை உணராத வண்ணம் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், மெக்சிகோ நாட்டில் ஆசிரியர்கள் தங்களை வலுவாகத் திரட்டிக் கொண்டு மாணவர்கள்-பெற்றோர்கள்-மருத்துவர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பேராதரவோடு அந்நாட்டில் புகுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக தீரமுடன் போராடி வருகின்றனர். போராடும் ஆசிரியர்கள் தங்களை கல்வித் தொழிலாளிகள் (Education Workers) என்று அந்நாட்டில் அழைத்துக் கொள்கின்றனர். ‘கல்வித் தொழிலாளிகளின் தேசிய கூட்டமைப்பு’ (National Coordination of Education Workers) எனும் பெயரில் செயல்படும் ஆசிரியர் சங்கமான CNTE, கடந்த மூன்று வருடங்களாக கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிராக போராடி வருகிறது. போராட்டத்தின் உச்சகட்டமாக 19-06-2016 அன்று மெக்சிகோவின் பெனா நியோட்டாவின் தலைமையிலான ஏகாதிபத்திய அடிவருடி அரசாங்கம் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நடுவீதியில் சுட்டுக்கொன்றது. தங்களின் உயிரையும் மாய்த்து மெக்சிகோ ஆசிரியர்கள் கட்டியமைத்த போராட்டம் இன்று மெக்சிகோ முழுவதிலும் வீச்சாக பரவி வருவதுடன் புதிய கல்விக் கொள்கை எனும் அபாயத்தை எதிர்நோக்கும் பல்வேறு வளரும் நாடுகளின் அறிவுத்துறையினரை தட்டியெழுப்பும் வண்ணம் அமைந்துள்ளது. அது பற்றிய போராட்ட செய்தி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கல்விச் சீர்திருத்தம்

mexico-teachers-protest-against-nep-06ஓ.ஈ.சி.டி (OECD – Organization for Economic Co operation and Development) எனும் ஏகாதிபத்திய அமைப்பு வட-தென் அமெரிக்க நாடுகளில் சேவைத்துறையை தனியார்மயமாக்கும் கொள்கையை வடிவமைத்து தருகிறது. ஓ.ஈ.சி.டி-ன் அங்கத்தினராக உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம் (ஐ.எம்.எஃப்), அமெரிக்க வங்கி (Inter American Development Bank) மற்றும் கார்ப்பரேட்டுகள் இருக்கின்றனர். ஓ.ஈ.சி.டி , மெக்சிகோ நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துகிறேன் என்று கல்விச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தது. இதே ஓ.ஈ.சி.டி தான் சிலி நாட்டிலும் புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து பொதுக்கல்வியைத் தகர்க்கும் வேலையைச் செய்திருக்கிறது.

மெக்சிகோ நாட்டில் புகுத்தப்பட்ட கல்விச்சீர்திருத்தம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கலைக்கச் சொல்கிறது. ஆசிரியர் பணியிடங்களை தேசிய அறிவுத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கச் சொல்கிறது. அரசுக் கல்வி நிறுவனங்களை தனியார் முதலீட்டாளர்களுக்கு திறந்து விடச் சொல்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அனுமதிக்கச் சொல்கிறது. இச்சீர்திருத்தத்தின் படி அரசுக் கல்விநிலையங்களின் சொத்துக்கள் ஊகபேர சந்தையில் சூதாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி முதல் கல்வித் துறை பாண்டுகள் பி.பி.வி.ஏ பேங்கோமர் & மெரில் லிஞ்ச் (BBVA Bancomer & Merril Lynch) கார்ப்பரேட் கம்பெனியால், மெக்சிகோ பங்குச் சந்தையில் 44 கோடி அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ 2,900 கோடி) வாங்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாவதாக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கலைப்பதன் மூலமாக பல்வேறு அடித்தட்டிலிருந்து இருக்கும் மக்கள், ஆசிரியர் ஆவதற்கான, கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் வாய்ப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக ஆசிரியரை உருவாக்குகிற வேலையை புறக்கணித்து விட்டு, தேசிய தேர்வு முறையை அறிமுகப்படுத்துவது என்பது ஆசிரியப் பணியிடங்களை வெகுவாக குறைத்து ஆசிரியர்களை கூண்டோடு வெளியேற்றுகிற செயலாக அமைந்திருக்கிறது. இப்படிச் செய்வதன் நோக்கம் சுரண்டும் நவதாராளமயக் கொள்கைக்கு பொதுக்கல்வி அமைப்பும் ஆசிரியர்களும் தேவையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதே.

mexico-teachers-protest-against-nep-03ஓ.ஈ.சி.டி-ன் இத்திட்டத்தை மெக்சிகானோ-பிரைமரோ எனும் முதலாளிகள் குழு ஆதரித்து லாபியிங் வேலை செய்தது. மெக்சிகோவின் அதிபராக பெனோ நியாட்டோ 2012இல் பதவியேற்ற வெகு சில மாதங்களில் ஓ.ஈ.சி.டி-ன் கல்விச் சீர்திருத்தம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

பெனோ நியாட்டோவின் அரசு, இக்கல்விச்சீர்திருத்தம் மட்டுமல்லாது பத்துக்கும் மேற்பட்ட நவதாராளமய சீர்திருத்தங்களை தொழிலாளர் நலச்சட்டம், கருவூலம், நிதித்துறை, எரிசக்தி, தேர்தல் வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு என அனைத்து துறைகளிலும் அமல்படுத்தியிருக்கிறது. இன்னும் 22-க்கும் மேற்பட்ட ஏகாதிபத்திய திட்டங்கள், சீர்திருத்தம் எனும் பெயரில் அமல்படுத்தப்பட உள்ளன.

மெக்சிகோ கல்வித் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் நிலை

2012-ல் பெனா நியோட்டோ புகுத்திய புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து மெக்சிகோ நாட்டின் ஆசிரியர் சங்கமான சி.என்.டி.ஈ (CNTE), கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலை முற்றுகை, கல்விச் செயலக முற்றுகை, ஆர்ப்பாட்டம், பேரணி, ஊர்வலம் என பல்வேறு போராட்டங்களை மக்கள் ஆதரவுடன் கட்டியமைத்திருக்கிறது. ஆசிரியர்களின் இச்சங்கம் 1970-ல் நிறுவப்பட்டதாகும். சி.என்.டி.ஈ ஆசிரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்பொழுதுவரை 2 இலட்சத்திற்கும் மேல் என்கிறார்கள்.

mexico-teachers-protest-against-nep-13மெக்சிகோவில் தொழிற்சங்கங்கள், புல்லுருவி அரசை எதிர்த்து இயங்குவது அத்துணை எளிதான காரியமல்ல. இதுவரை அதிபராக வந்தவர்கள் தனியார்மயத்தை ஆதரிக்கும் ஏகாதிபத்திய ஏவலாளிகளாகவே இருந்திருக்கின்றனர். இவர்கள் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது, வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமையைப் பறிப்பது போன்றவற்றிற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்துகின்றனர் (அரசு என்பதே அதற்குத்தானே?). தொழிற்சங்கத் தலைவர்களின் மீது பொய்கேசு போட்டு தொழிற்சங்கத்தை முடக்க நினைக்கின்றனர். அடிபணிய மறுக்கும் தொழிற்சங்கங்கள் போராளிக்குழுக்களாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது இராணுவ பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

சான்றுகள்:

2006-ல் கனீனா தாமிரச் சுரங்கத் தொழிற்சங்கத் தலைவரின் மீது பொய் கேசு போட்டு, குரூப்-மெக்சிகோ தனியார் முதலாளிக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தை முடக்கினர். இத்தாமிரச் சுரங்கம் மெக்சிகோ தொழிலாளர் இயக்க வரலாற்றின் முன்னோடியான களமாக இருந்திருக்கிறது.

2009-ல் மெக்சிகோ நாட்டில் மின்சக்தி துறை தனியார்மயமாக்கப்பட்டது. 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டதுடன் மெக்சிகன் மின் பணியாளர் சங்கம் கலைக்கப்பட்டது.

2012-ல் பெனா நியோட்டா அரசாங்கம் தொழிலாளர் சீர்திருத்தங்களை மக்கள் மீது ஏவியது. வேலைகளை அவுட்-சோர்ஸ் செய்வது, பகுதி நேர, ஒப்பந்த தொழிலாளிகளை அமர்த்திக்கொள்ள அனுமதி, வேலை நேர அதிகரிப்பு, மணி நேர அடிப்படையில் சம்பளம் என்று அடுக்கடுக்கான சுரண்டல்கள் தொழிலாளிகள் மீது ஏவப்பட்டன. இதை எதிர்த்த பாஜா-கலிபோர்னியா பண்ணைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டது.

மெக்சிகோவின் தொழிற்சங்க நிலைமை இது. சுருக்கமாக சொன்னால் கடந்த 25 வருடங்களில் தொழிலாளர் இயக்கங்கள் வரலாறு காணாத கடும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்நிலையில் தான் கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிரான சி.என்.டி.ஈ-யின் நாடு தழுவிய ஆசிரியர் போராட்டம் உலகத் தொழிலாளர் இயக்கங்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆசிரியர் போராட்டங்களை, மெக்சிகோ ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் விதம் அதன் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 2014 செப்டம்பர் மாதத்தில் புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக போராடிய 43 ஆசிரிய பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆளும் அரசால் கடத்தப்பட்டனர். எதிர்கேள்வி எழுந்தபொழுது மெக்சிகோ அரசாங்கம் போராடிய மாணவர்களை போதை மருந்துக்கும்பல் என்று அதிரகார வர்க்கத் திமிருடன் புளுகியது.

தேசிய பொது வேலை நிறுத்தம் மற்றும் ஜூன் 19 துப்பாக்கிச் சூடு

Protesters from the National Coordination of Education Workers (CNTE) teachers’ union clash with riot police officers during a protest against President Enrique Pena Nieto's education reform, in the town of Nochixtlan, northwest of the state capital, Oaxaca City, Mexico June 19, 2016. REUTERS/Jorge Luis Plataமே 16, 2016 அன்று சி.என்.டி.ஈ சங்கத்தினர் நவதாராளமயக் கல்விச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி தேசிய அளவில் பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர். தேசிய அளவிலான இப்போராட்டம், மெக்சிகோவின் தெற்குப் பகுதியான ஒசாசா, சியாபஸ், குயாரீரோ போன்ற மகாணங்களில் வலுத்தும் மெக்சிகோவின் பிற 24 மகாணங்களில் பரவாமலும் இருந்தது. இதில் போராட்டத்தின் மையமான ஒசாசா மெக்சிகோவின் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்று. இங்கு சி.என்.டி.ஈ ஆசிரியர் சங்கத்தின் 22 பிரிவு வலுவான நிலையில் இருக்கிறது. மே பதினாறு தொடர் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு, மெக்சிகோ அரசு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிலிருந்து தூக்கி எறிய உத்தரவிட்டிருக்கிறது. மேலும் ஜூன்-12-2016 அன்று போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முன்னணியாளர்கள் மீது நிதி மோசடி வழக்கு புனைந்து சி.என்.டி.ஈ ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களை கைது செய்தது.

போராட்டம் வலுவிழந்துவிடும் என்ற எதிர்பார்த்த அரசின் எண்ணத்தில் மண்விழுந்த கதையாக, ஜூன்-19 தேதி சி.என்.டி.ஈ ஆசிரியர் சங்கம் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தது. ஒசாசா மாகாணத்தின் கிறித்து தேவலாயங்களின் மணி பிராத்தனைக்காக அன்றி போராடும் குழுக்களை அறை கூவி அழைப்பதற்காகவும் ஒன்றிணைப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கல்வி சீர்திருத்தத்திற்கு எதிரான மூன்று வருட போராட்டத்தில் ஆசிரியர்கள், நெடுஞ்சாலை முற்றுகையை பிரதான போராட்ட வடிவமாக பயன்படுத்தி வருகின்றனர்.

வகுப்பறையில் கரும்பலகையுடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் நாட்டின் மீது இருள்குவியும் பொழுது வீதிக்கு வந்து போராடுகின்றனர். ஒயிட் ஸ்காலர்ஸ் என்று அழைக்கும் இத்தகைய மூளை உழைப்புத் தொழிலாளிகளின் சாலை மறியல் போராட்டம் மெக்சிகோ அரசை மரண பீதி அடையச் செய்திருக்கிறது. ஆகையால் தான் போராட்டத்தை நசுக்க காவல் துறையை வீதியில் இறக்கி, போராடும் ஆசிரியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.

பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஜூன் 19 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவோடு நடைபெற்ற இப்போராட்டத்தில் மக்களும் மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் ஆயுதம் பயன்படுத்தவில்லை என முதலில் பொய் புளுகிய பெனா நியாட்டோ அரசு முழுக்கவும் அம்பலப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டை ஒத்துக்கொண்டிருக்கிறது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை மெக்சிகோ அரசு திட்டமிட்டு மறுத்தத்தை உலகின் அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டித்துள்ளனர்.

mexico-teachers-protest-against-nep-08ஊடகங்களின் நிலைப்பாடு

2012-ல் மெக்சிகோவில் நவதாராளமய கல்விச் சீர்திருத்தம் புகுத்தப்பட்ட பொழுதிலிருந்தே ஆளும் வர்க்க ஊடக ஒட்டுண்ணிகளாக டெலிவிசா (Televisa) மற்றும் டி.வி ஆஸ்டெகா (TV Azteca), கல்விச் சீர்திருத்தம் என கருத்து விபச்சாரம் செய்துவந்தன. மேலும் மெக்சிகோவின் பக்கத்து நாடான அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களும் ஆசிரியர் படுகொலை குறித்து வாய்திறக்க மறுத்தன. ‘வெனிசுலாவாக இருந்தால் ஜனநாயகம் குறித்து படமெடுக்க அடித்துக்கொண்டு ஓடும் அமெரிக்க ஊடகங்கள், மெக்சிகோ ஆசிரியர் படுகொலையை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?’ என்று கேட்கிறார் ஜேம்ஸ் நார்த். மற்றபடி Avisp amidia போன்ற ஒசாசா மாகாண சுய ஊடகக் குழுக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றனர்.

மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு

ஜூன் 19 துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு தென்மாகாணங்களில் பரவியிருந்த ஆசிரியர் போராட்டம் மெக்சிகோ முழுவதும் விரிவாக பரவத் தொடங்கியிருக்கிறது. இம்முறை ஆசிரியர்கள் மட்டுமன்றி, மெக்சிகோவின் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும் நவதாரளமயக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் மெக்சிகோ கிராமங்களில் ஒவ்வொரு குடும்பமும் ஆசிரியருடன் முறையாக இணைக்கப்பட்டிருப்பதால், ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்திற்கு பொதுமக்கள் பங்கேற்பும் ஆதரவும் பெரும் அளவில் இருக்கிறது.

நம் நாட்டு ஆசிரியர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

தங்கள் நாட்டில் புகுத்தப்பட்ட நவதாராளமயக் கல்விக்கொள்கையை எதிர்த்து மெக்சிகோ நாட்டு ஆசிரியர்கள் உயிரைக் கொடுத்து சமசரமின்றி போராடிவருகின்றனர். பொதுமக்களும் அறிவுத்துறையினரும் ஆசிரியருடன் அணிவகுத்து நிற்கின்றனர். நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம் என்று மெக்சிகோ ஆசிரியர்கள் உறுதியுடன் களத்தில் நிற்கின்றனர். இந்தியாவிலும் புதிய கல்விக்கொள்கை ஏகாதிபத்தியம், பார்ப்பனியம் எனும் இரட்டை நுகத்தடியுடன் அமல்படுத்தப்பட காத்திருக்கிறது. நம் நாட்டு ஆசிரியர்கள் புதிய கல்விக்கொள்கையின் அபாயத்திலிருந்து தங்களையும் தன் நாட்டு மக்களையும் காப்பதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

– இளங்கோ

செய்தி மேற்கோள்கள்

  1. In Push for Education Reforms, Mexican Government Kills Teachers in the Street
  2. Neoliberal Teaching Reform Irrelevant to Mexico Needs: Analyst
  3. Rebellion Spreads in Mexico After a Police Massacre
  4. State Terrorism and Education, the New Speculative Sector in the Stock Market
  5. Mexico Spends Millions to Promote Neoliberal Education Reform
  6. Mexican Doctors Rally Against Privatization, Oaxaca Repression