privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் கோலத்தில் மோடி - அமிதாப் - விராத் - ஐஸ்வர்யா - ஷாரூக் ...

காஷ்மீர் கோலத்தில் மோடி – அமிதாப் – விராத் – ஐஸ்வர்யா – ஷாரூக் …

-

காஷ்மீரில் புர்ஹான் வானி கொலைக்கு பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயன்படுத்தும் பெல்லட் குண்டு தாக்குதல்களை அறிந்திருப்பீர்கள்.  இந்தியாவில் இந்த தாக்குத்தல் குறித்த விவாதங்கள் எல்லாம், பெல்லட் துப்பாக்கியை இராணுவம்  எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்தியதா, இல்லை கடைசி வழியாக பயன்படுத்துகிறதா என்று நடக்கின்றன. “ஒருபோதும் மறக்காதே பாகிஸ்தான்” எனும் பாகிஸ்தானி சிவில் குடியுரிமைக் குழுமம் ஒன்று ஓவியக் கலையின் துணை கொண்டு பெல்லட் குண்டு தாக்குதலை உணர்த்த முயற்சிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் #IndiaCan’tSee, (இந்தியா பார்க்க முடியாதது) என்ற ஹேஷ் டேக்குடன் அவர்கள் வெளியிட்ட படங்கள் வைரலாக பரவியது. இந்திய பிரபலங்களான மோடி, கிரிக்கெட்டின் விராத் கோலி, நடிகர் ஷாருக்கான் போன்றோர் பெல்லட் குண்டு தாக்குதலால் எப்படி இருப்பார்கள் என்பதை ஃபோட்டோஷாப் மூலம் அந்தப் படங்கள் சித்தரிக்கின்றது.  அந்த படங்களைப் பார்ப்போரிடம் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் என்று காஷ்மீர் மக்களின் துன்பத்தை எடுத்துரைக்க முயல்கிறது இந்த முயற்சி.

காஷ்மீரில் பால் வாங்கவோ, மருந்து வாங்கவோ, வீட்டில் விளையாடவோ, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டோ இருந்தாலும் மத்திய போலீசின் குண்டுகள் யாரையும் விட்டு வைக்கவில்லை. சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று முழு சமூகமே அங்கு கண்களை இழந்தோ காயம் பட்டோ, இல்லை காயமடைந்தவர்களை காப்பாற்ற முடியாமலோ அழுது கொண்டிருக்கிறது.

இருப்பினும் இந்த கொலைக் குற்றத்தை அதாவது 2,012 முறை பெல்லட் துப்பாக்கிகளால் சுட்ட ( கிட்டத்தட்ட 12 இலட்சம் சிறு குண்டுகள் ) மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவர் ஒரு வரியில் காயங்களுக்கு வருந்துகிறோம் என்று முடித்து விட்டார்.

கற்பனை செய்து பாருங்கள்! இந்தியாவின் பிரபலங்களுக்கு அந்த காயங்கள் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்?

அன்புள்ள ஐஸ்வர்யா,

aiswarya-rai

உங்கள் நான்கு வயது மகளான ஆராத்யாவை காப்பாற்றும் முயற்சியில் நீங்கள் மத்திய ரிசர்வ் படையால் தாக்கப்பட்டது எனக்குத் தெரியும். என் வாழ்வில் இதைப் போன்று காஷ்மீரில் நிறைய பார்த்து விட்டேன். இருப்பினும் இன்னும் எனது நான்கு வயது குழந்தையை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறேன். போலிசு பயன்படுத்திய ஏதோ பட்டாசுதான் தன்னைத் தாக்கியது என்றே எனது மகள் சுஹ்ரா நினைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த குண்டுகள், துப்பாக்கிகள், சாதாரண மக்கள் மீது ஏன் ஏவப்படுகின்றன என்று அவளால் புரிந்து கொள்ள முடியாது. ஒரு வேளை இந்தியாவில் உள்ள தாய்மார்கள் அப்படி குரல் எழுப்பியிருந்தால் காஷ்மீரில் உள்ள குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

–    நசிமா ஜான், காஷ்மீர்.

***

அன்புள்ள அலியா,

alia-bhatt

நீங்கள் எனது வார்டுக்கு அருகில் இருப்பதாக அறிந்தேன். நான் உங்களது தீவிர ரசிகர் என்பதால் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நன்கு ஓய்வு எடுங்கள், மன அழுத்தத்தை கை விடுங்கள். எந்த தவறுமே செய்யாமல் நாம் ஏன் தாக்கப்பட்டோம் என்று நீங்கள் பயந்து கொண்டே சிந்திப்பது தெரிகிறது.  நானும் அப்படித்தான் எனது வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தாக்கப்பட்டேன். எனது அப்பாவும் திகைத்துப் போனார்.

“எதற்காக எனது 11 வயது மகளை தாக்கினீர்கள், அவள் ஒரு பிரிவினை இயக்கத்திலும் இல்லையே” என்று அவர் கேட்டார். அந்த போலிசோ எதுவும் சொல்லவில்லை. உலகம் அமைதியாக இருந்தால் கொடூரம் தலைவிரித்தாடும் என்பதறிவேன். எனவே நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு பலமடைவோம். எது வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளுங்கள், நானும அருகில்தான் இருக்கிறேன்.

–    இன்ஷா முஸ்டாக், காஷ்மீர்.

***

அன்புள்ள மோடிஜி

modi

முதற்கட்ட அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக உங்கள் கண்களில் இருக்கும் பெல்லட் குண்டு துகள்களை முழுவதுமாக அகற்ற முடியவில்லை. மருத்துவமனையில் இருக்கும் போலிஸ் உடனே அறுவை சிகிச்சை செய்வதை தடுத்திருந்ததால் உங்களுக்கான காயம் மேலும் மோசமாகும் வாய்ப்பிருக்கிறது. போலீசார் மருத்துவமனைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வது அடிக்கடி நடப்பதால் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை உடனுக்குடன் அளிக்க முடியவில்லை. இங்கே ஒரு தலைமுறையே பார்வையற்றவர்களாக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கிறது. இப்படி நூற்றுக்கணக்கானோரை கடந்த ஐந்து வருடங்களாக பார்த்து வருகிறோம். உங்கள் காயம் குணமடைந்து இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.

–    டாக்டர் ஷாஜத் காந்தே,
ஸ்ரீநகர் எஸ்.எம்.ஹெச்.எஸ் மருத்துவமனை, கண் மருத்துவம் துறை.

***

அன்புள்ள அமிதாப்ஜி,

amitabh

நீங்கள் காயமடைந்தது குறித்து பெரிதும் வருந்துகிறேன். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நடவடிக்கைகளில் நீங்கள் நுழைந்திருக்ககூடாது. எனது மகன் கௌகர் நாசீரும் இதே தவறைச் செய்திருக்கிறான். பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறியவன், அங்கே நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி பையனை போலீஸ் அடிப்பதை பார்த்து தடுக்க முயற்சித்தான். உடனே போலிசார் அவனை துப்பாக்கியால் சுட்டனர். கௌகர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அதிர்ச்சியால் எனது தாய் இறந்த போனார்.

போகட்டும். அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இன்னமும் உங்களுக்கு காலமிருக்கிறது.

–    நசீர் அகமத் தார், காஷ்மீர்.

***

அன்புள்ள கஜ்ரோல்,

kajol

உங்களை சந்திக்க இயலாமைக்கு என்னை மன்னியுங்கள். எனது 9 வயது மகள் தமன்னாவை விட்டு நான் நீங்கினால் அவள் பதட்டமடைவாள். மருத்துவமனை படுக்கையில் இருந்தாலும் அவள் பயத்துடனே இருக்கிறாள். நான் அவளை எப்படி குற்றம் சொல்ல முடியும்? பெல்லட் குண்டு தாக்கும் போது அவள் சமையலறையில் இருந்தாள். ஒரு இலக்கை சுடுவதற்கு காஷ்மீர் போலிசாருக்கு எந்த காரணமும் தேவையில்லை. எனது வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை ஒரு தாயாக உறுதி கூறுகிறேன்.

–    ஷாமீமா, காஷ்மீர்.

***

அன்புள்ள சையஃப்,

saif-ali-khan

நீங்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை நம்பவே முடியவில்லை. எனது வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும், எனது வலது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருப்பதால் உங்களை உடன் வந்து சந்திக்க முடியவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதாக கூறும் இந்திய இராணுவம் என்னை ஏன் சுட்டது? நான் உயரமானவனோ அச்சுறுத்துபவனே கூட அல்ல. எனக்கு வயதே 11தான், அதுவும் வீட்டின் வெளியே சும்மா நின்றிருந்தேன். இந்திய இராணுவம் பயங்கரவாதிகளாக இல்லை என்றால் நான் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுகிறேன், ஏன்?

–    உமர் நாசீர், காஷ்மீர்

***

அன்புள்ள விராத்,

virat-kohli

கிரிக்கெட் பயிற்சி முடித்து விட்டு திரும்பும் போது நானும் இந்திய இராணுவத்தால் எனது இடக்கண்ணில் சுடப்பட்டேன். இருப்பினும் இதற்காக கவலை கொள்ள வேண்டாம், இது உயிரழக்கச் செய்யும் குண்டு அல்ல என்று இந்தியாவால் சொல்லப்பட்டேன். ஒரு காஷ்மீரியாக இருப்பதால் வரும் பொறுமைதான் எனக்கு சக்தி தருகிறதே அன்றி, எனக்காக குரல் கொடுக்க யாருமில்லை. நீங்களும் உறுதியாக இருந்து விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். நீங்களோ நானோ இனி கிரிக்கெட் பந்தை பார்த்து அடிக்க இயலாது. என்றாலும் நமக்கு உயிராவது கிடைத்திருக்கிறதே என்று இந்திய இராணுவம் கூறுகிறது.

–    ஷாகில் சாகூர், காஷ்மீர்.

***

அன்புள்ள ஷாருக்

sharukh-khan

இந்திய இராணுவம் உங்களுக்கு செய்திருப்பது ஒரு சோகமான நிகழ்வு. நீங்கள் அந்தப் போராட்டக்காரர்களோடு கூட இல்லை. இப்படித்தான் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டம், இராணுவத்திற்கு சந்தேகப்படும் யாரை வேண்டுமானலும் சுடுவதற்கு அதிகாரம் கொடுக்கிறது. எனது சகோதரன் ஹமீதுக்கும் இதே கொடூரம்தான் நடந்திருக்கிறது. நாள் முழுவதும் பள்ளியில் இருந்து விட்டு டியூஷனுக்கு திரும்பும் போதுதான் அவனும் பெல்லட் குண்டால் சுடப்பட்டான். இந்த அதிர்ச்சியிலிருந்து அவனை மீட்பதற்கு சிரமப்படுகிறோம். அடுத்த முறை காஷ்மீரில் ஒரு இராணுவ அதிகாரியின் பாத்திரம் குறித்து உங்களிடம் கேட்கும் போது காஷ்மீர் மக்களுக்காக பேசும் உறுதியை பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.

–    ஜுனாத் நாசீர்.

***

அன்புள்ள மெகபூபா முப்தி,

mehbooba-mufti

உங்கள் வலது கண் பார்வை பறிபோனதுக்கு மிகவும் வருந்துகிறோம். மருந்துக் கடையிலிருந்து திரும்பும் போது நானும் இராணுவத்தால் வலது கண்ணில் தாக்கப்பட்டேன். எனது பார்வை பறிபோயிருப்பதால் எதையும் பார்க்க முடியாது என்று உள்ளூர் மருத்துவர்கள் கூறி விட்டார்கள். நிர்ப்பந்தத்தால் உங்களை பங்களாவில்  எனது குடும்ப உறுப்பினர்கள் சந்தித்தார்களே அந்த படத்தை கூட நான் பார்க்க முடியாது. இந்த வயதில் அதுவும் பார்வை பறிபோய், காயமடைந்த உங்களால் எங்களது இல்லத்திற்கு வர இயலாது என்பதை புரிந்து கொள்கிறேன். இது போல இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் மக்களான எங்களுக்காக பேச யாருமில்லை. எங்களைக் கொல்லும் உங்களது நண்பர்களை நிறுத்துமாறு கோருவீர்கள் என்று நம்புகிறேன்.

–    ஐசியா

***

அன்புள்ள ஹிரித்திக்,

hrithik-roshan

நலமடைந்து வருவீர்கள் என நம்புகிறேன். உங்களது “மிஷன் காஷ்மீர்” படம் பார்த்திருப்பதால் நீங்களாவது காஷ்மீரில் நடக்கும் அராஜகங்களையும், எங்களது இன்னல்களையும் கொஞ்சமாவது அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன். சிகிச்சைக்கு பணமில்லாமல் எங்களது தந்தை இந்த உலகை விட்டே சென்றது போன்ற நிலைமை உங்களுக்கு இல்லை. இந்த வருட மே மாதத்தில் எனது உடலில் 40 பெல்லட் குண்டு துகள்கள் சுடப்பட்டு தங்கியிருக்கின்றன. இதுதான் உயிருக்கு இழப்பு ஏற்படுத்தாத ஆயுதமாம். எனது அண்ணனுடன் வீட்டை கவனிக்க நினைக்கும் எனக்கு வயது 13. ஆனால் தற்போது அவர்கள்தான் எனது சிகிச்சைக்காக என்ன செய்வதென்று கவலைப்படுகிறார்கள்.

–    இமாத் அகமத், காஷ்மீர்.

நன்றி : அவுட்லுக் வார இதழ்.