privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைஇலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !

இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !

-

சீனப் புரட்சியின் போது, கிழக்கு கடற்கரைத் தீவுகளின் பெண்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போராடுவதைக் கருவாகக் கொண்டது லி-பு-சிங் எழுதிய ‘தீவின் மகளிர் படை’ என்ற நாவல். மகளிர் படையின் தலைவி ஹாய்சியாவின் அனுபவங்களாகப் பதிவு செய்திருக்கும் நாவலில், ஒரு அப்பாவிப் பெண் தன் அச்சத்தை அகற்றுவது பற்றிய ஒரு அத்தியாயத்தை மொழி பெயர்த்து தருகிறோம். இந்த அத்தியாயம் ஒரு கவிதை அனுபவம். சோசலிச போராட்டத்தை பதிவு செய்திருக்கும், இது போன்ற இலக்கியங்களின் உயர்தரத்தை ஏனைய இலக்கியங்கள் எதுவும் இதுவரை எட்டியதில்லை.

ன்றைய கூட்டம் முடியும் போது இரவு ஒன்பது மணி. நிலவு உதிக்காத கும்மிருட்டு. வழக்கமாக நானும் யூசியுவும் சேர்ந்தே வீடு திரும்புவோம். அவளுக்குத்தான் இருட்டுப் பயம் இன்னும் தீரவில்லை.

“யூசியு நீ வீட்டுக்குப் போ, நான் காவல் பணிக்குப் போகிறேன்.”

“நான் நம்பமாட்டேன், கேலி செய்கிறாய்.”

comrade-1“எப்போதும் உன் கூட துணைக்கு வரமுடியாது. நீயும் காவல் படையின் உறுப்பினர்தான், மறக்காதே.”

“நான் பயந்தாங்கொள்ளி என்பது தானே உன் எண்ணம்” சொல்லிய வீம்புடன் புறப்பட்டவள், சில அடிகள் கூட சென்றிருக்கமாட்டாள், திரும்பி வந்த யூசியு கெஞ்சும் குரலில்,

“ஹாய்சியா இன்னைக்கு மட்டும் கூட வாயேன், இருட்டு அதிகமா இருக்கு.”

”சரி சரி இன்னைக்கு மட்டும் வரேன், இனிமேல் மாட்டேன்.”

அவளுடன் நடந்தவாறு கேட்டேன், “ஒரு சிறந்த படை உறுப்பினராக இருப்பது எப்படி யூசியு?”

“சரியான சித்தாந்தமும், அரசியல் விழிப்புணர்வும் கொண்டிருப்பது, திறம்படப் போரிடும் காவலனாய் செயல்படுவது.” பதிலளித்தாள்.

“அது மட்டுமல்ல, கஷ்டங்களைக் கண்டு கலங்காமல் இருப்பதும்” என்று முடித்துக் கொடுத்தேன்.

”கஷ்டங்களைக் கண்டு கலங்கக் கூடாது, ஆனால் நான் இருட்டில் நடப்பதற்கே பயப்படுகிறேனே.”

“யூசியு நீ எதைக் கண்டு பயப்படுகிறாய்.”

“ஆவிகள், நரிக்கதைகள், தற்கொலை மனிதர் கதைகள், இன்னும் ஸ்மெல்லி சொல்கிற விசயங்களுக்காகவும் பயப்படுகிறேன். அவள் கண்களால் அவற்றை பார்த்ததாகச் சொல்கிறாளே?”

red-youth3“இனிமேலும் அவள் சொல்லுக்கு காது கொடுக்காதே யூசியு” எச்சரித்தேன்.

மகளுக்காகக் காத்திருந்த யூசியுவின் தாய், எங்களைக் கண்டவுடன் கேலியோடு, ”யூசியுவைப் போல ஒரு வீராங்கனை கிடைக்கனுமே, ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு கூடவே வந்து விடுகிறீர்கள், அவள் ஒரு சுமையில்லையா?”

“அவள் தன் பயத்தை வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.”

எங்கள் பேச்சில் குறுக்கிட்ட யூசியு “ஹாய்சியா, நீ மட்டும் பயப்படுவதே இல்லை, என்னை விட ஒரு வயது தானே மூத்தவள்” என்றாள்.

“நான் ஒன்னும் பிறவி வீராங்கனை கிடையாது. சிறுமியாக இருந்த போது நானும் ராத்திரியில் வெளியே போக மாட்டேன். மக்கள் தங்களையே பயமுறுத்திக் கொள்கிறதைப் பத்தி என் மாமா லியு நிறைய கதை சொல்வார். அதுல ஒரு கதை சொல்லட்டுமா?”

***

“இந்தக் கதை பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்னது. மேற்கு மலைச்சரிவிலிருந்த டிராகன் அரசன் கோவிலில் ஒரு ஆவி இருந்ததாக பேசிக்குவாங்க. இரவில் கோயிலுக்கு யாரும் போக மாட்டாங்க. ஒரு நாள் மீன் வியாபாரத்திற்காக, வீர வாங்குவும், திட நெஞ்சு சாங்குவும் வட பகுதிக்கு போனாங்க. வியாபாரம் முடிய ராத்திரியைத் தாண்டியது. வீரன் வாங்கு மட்டும் வீடு திரும்ப முன்னதாகக் கிளம்பினான். அப்போ, பலத்த மழை பெய்ததால் டிராகன் கோவிலில் ஒதுங்க நினைத்தான்.

’மற்றவர்கள் பயப்படலாம், நான் வீரனல்லவா’. அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ஆனால் கோவிலுக்குள் நுழையும் போதே, படபடத்த இதயம் அவனது வாய் வரை வந்து விட்டது, மூச்சும் விட முடியவில்லை. ஆவி தன்னைக் கொல்லுமென, தன் கழியை இறுகப் பற்றிக் கொண்டான். இப்படி யோசித்தவன், புயல் சிறிது தணிந்ததால் கோவிலை விட்டகல எண்ணினான். வெளியே பார்த்தபோது பளிச்சென ஒரு மின்னல் பயங்கரமாகச் சீறியது. அந்த ஒளியில் மனிதனை விட உயரமான, பயங்கரமான ஒன்று கோவிலை நோக்கி வந்தது.

red-yout“வாங்குவின் மயிற்குத்திட்டது. அந்தப் பிராணி கோவிலின் ஒரே வழியை அடைத்தவாறு வந்தது. இனி தப்பிக்கவும் வழியில்லை, வைத்திருந்த கழியைத் தூக்கி, பலங்கொண்ட மட்டும் ஒரு அடி அடித்தான். அந்தப் பிராணியின் தலையிலிருந்த கருப்பான ஏதோ ஒன்று ஒடிந்து, வினோத கூச்சலுடன் விழுந்தது.

“அப்போது ஓட்டம் பிடித்த வாங்கு, வீடு வரை எங்கும் நிற்கவில்லை. மூச்சுவாங்கி, வந்து விழுந்தவன், தான் ஒரு ஆவியைக் கண்டதாகவும், இனி அதிக நாள் வாழப் போவதில்லை எனவும் ஜன்னி கண்டு புலம்ப ஆரம்பித்தான். அடுத்த நாள் வந்து பார்த்த மருத்துவர் நடந்த கதையைக் கேட்டு, வாங்கு எதனாலோ பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக எண்ணிணார்.

அப்போது அங்கு வந்த ஒருவர். திட நெஞ்சு சாங்குவும் ஜன்னி கண்டிருப்பதாகவும், அவனும் நேற்று டிராகன் கோவிலில் ஒரு ஆவியைப் பார்த்திருப்பதாகவும், கூறினார். உடனே சாங்கு வீட்டிற்குச் சென்ற மருத்துவர் நடந்ததைப் பற்றிக் கேட்டார்.

”மருத்துவரே, நேற்று நான் மீன் விற்று முடித்து, பெரிய பானை ஒன்றை வாங்கினேன். கடும் மழை பெய்ததால் பானையை தலையின் மீது கவிழ்த்து நடந்தேன். கோவிலை நெருங்கிய போது, மின்னல் சீறியது. அப்போது ஒரு ஆவி மிக வேகமாக வெளியேறி…

சாங்கு முடிப்பதற்குள் குறுக்கிட்ட மருத்துவர், ’கழியை வைத்து உன் தலையில் ஒரு போடு போட்டது’ என்று முடித்தார். ‘உங்களுக்கு எப்படி தெரியும்’ ஆச்சரியப்பட்ட சாங்கு ‘அதிர்ஷ்டவசமாக, தலை மேல பானை இருந்தது, இல்லையென்றால் தலையல்லவா சுக்கு நூறாக உடைந்திருக்கும்’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.

மருத்துவர் சொன்னார்: ”இதோ பார் சாங்கு, உனக்கு மருந்து எது தெரியுமா? உடனே போய் வாங்குவைப் பார். பேசு. அவன் உன்னை குணமாக்குவான், நீ அவனைக் குணமாக்குவாய்.”

***

red-youth2கதையைக் கேட்ட தாயும், மகளும் சத்தம் போட்டுச் சிரித்தனர். யூசியுவின் அம்மா டா-டெங்சு சிரித்தவாறே, ”அவர்களை உண்மையிலேயே கோழை வாங், பயந்தாங்கொள்ளி சாங் என்று தான் அழைக்கணும்” என்றாள்.

”அந்தக் கதையைக் கேட்ட பிறகே நீயும் இருட்டைக் கண்டு அஞ்சுவ தில்லை, சரியா? ஹாய்சியா” பொறுப்பாய் கேட்டாள் யூசியு.

”அப்படி ஒன்றுமில்லை. எனது பழைய குடும்ப வாழ்க்கையே அந்த அச்சங்களைப் போக்கியது. உன் அம்மாவும் அறிவாள். என் அப்பாவைக் கொன்ற சென்சானோ அம்மாவோடு என்னையும் வீட்டை விட்டு வெளியேற்றினான். ஆவி அலைந்த அதே டிராகன் கோவிலில் நாங்கள், வேறு வழியின்றி தங்கினோம். பீடத்தின் கீழேதான் உறங்குவோம். ஒவ்வொரு முறையும் கண் முழிக்கும் போது டிராகன் அரசன் என்னைப் பயங்கரமாக ஊடுருவி முறைப்பது போல உணர்வேன். அம்மாவைக் கட்டிப்பிடித்து, அசையாமல் கிடப்பதைத் தவிர வேறு கதியில்லை. தப்பிப்போக வேறு போக்கிடம் இல்லை என்பதால் பயமும் நாள்படப் போனது.

பின்னர், என் அம்மா நோய்வாய்ப் பட்ட போது, தனியே பிச்சை எடுக்கச் செல்வேன். இருட்டியதும், நேரமான பின்பே கோயிலுக்குத் திரும்புவேன். வரும்போது கலக்கமாக இருந்தாலும், துன்பப்படும் அம்மா எனக்காகக் காத்திருப்பதை எண்ணி பயத்தைக் களைவேன்.”

”அவை உனக்கு கொடுரமான நாட்களாயிற்றே” பழையதை நினைத்துக் கேட்டாள் டா-செங்.

“ஆமாம், அந்த நாட்கள் அப்படிப்பட்டவைதான். அதனால்தான் இன்றைய இரவு காவல், இன்னும் இது போன்ற எதற்கும் அச்சம் வருவதில்லை. அன்று என் அம்மா நிமித்தம் அஞ்சியதில்லை. இன்று என் தாய் நாட்டின் நிமித்தம் எதைக் கண்டும் பயப்படுவதில்லை. எதைக் கண்டும், ஏன் சாவைப் பற்றியும் கூட அஞ்சவில்லை…”

”இப்போதுதான் உன்னை அறிந்து கொண்டேன் ஹாய்சியா, இன்று இரவு காவல் பணியை நானே செய்கிறேன்” திடீரென முன் வந்தாள் யூசியு. குரலில் தெரிந்த உறுதியினால், அவளால் முடியும் என நம்பினேன்.

“ஆனாலும், இப்போது என்ன அவசரம்? இன்று ஒருவரை ஏற்கனவே அனுப்பி விட்டேன். நிலவு நன்கு ஒளிரும் ஓரிரவு வரட்டும், நாம் இருவரும் சேர்ந்து காவல் பணி செய்வோம்” என்றேன்.

அந்த ஒளிரும் இரவுகள் வந்த போது யூசியு காவல் பணி செய்தாள். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் கூடவே செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும் அதுவே பெரிய விசயம். “நீ இருக்கையில் எனக்கு எதைக் கண்டும் பயமில்லை” என்று மனம் திறப்பாள் யூசியு.

”நீ பணியில் உள்ளபோது, எதைப் பற்றி யோசிப்பாய்?”

“யாருமின்றி காவல் காப்பது எப்போது என யோசிப்பேன்”

”இது மட்டும் தானா?”

“எதிரியை ஒரு முறை கூட கண்டதில்லை, இப்படி வெறுமனே நிற்பது கால விரயமல்லவா, என்றும் யோசிப்பேன்.”

“அப்படி எல்லாம் கிடையாது. இரவு முழுக்க ஒளிந்திருந்து ஒரு திருடனைப் பிடி, என்ற பழமொழியைக் கேள்விப்பட்டதில்லையா? நம் நாட்டையும், இத்தீவினையும் பாதுகாக்க ஒரு நூறு இரவுகளென்ன, ஆயிரம் இரவுகள் கூட காவல் பணி செய்யலாம். அப்படி யோசித்துப்பாரேன். நம் தீவு, நாட்டின் நுழைவாயிலாக உள்ளது. இதைப் பாதுகாப்பதன் மூலம், அன்றாட வேலைகளில் ஈடுபடும் பல்லாயிரக் கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இப்படியிருக்கும் போது நமது காவல் பணி எப்படி வீணாகும்?” என்றேன்.

communist-womenஅன்றிரவு மேகம் கருத்திருந்தது. எக்கணமும் மழை பெய்வது போல அச்சுறுத்தியது. எங்களிடம் ஒரே ஒரு மழைக்கோட்டு தான் இருந்தது. நான் மென்மையாகக் கேட்டேன், ”நான் போய் இன்னொரு மழைக் கோட்டை எடுத்து வரும்வரை தனியாக தைரியமாக நின்று காவல் பார்ப்பாயா யூசியு?”

நீண்ட மெளனத்திற்குப் பின் ”சரி” என்றாள்.

கோட்டை அவளிடம் கொடுத்து விட்டு அகன்றேன். ஆனால் சிறிது நேரத்திலேயே, அவள் விசும்பும் சத்தம் கேட்டது. “ஹாய்சியா இந்த ஒரே கோட்டை பயன் படுத்தலாம். எனக்கு ரொம்ப பயமாயிருக்கிறது.”

உண்மையிலேயே வேறு கோட்டை எடுத்து வர தேவையில்லை தான். ஆனால் அவளைச் சோதித்தறிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பினேன்.

தனியே காவல் காக்குமாறு பல முறை வற்புறுத்தியும் அவள் அதில் வெற்றி பெறவில்லை. வேறு என்ன செய்ய முடியும். எப்பொழுதும் கூடவே கைப்பிடித்து நிற்க முடியாது. செயலர் ஃபேங் இத்தருணங்களில் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியும். தேவையான போது கண்டிப்பாகவும், மென்மையாகவும் நடந்து கொள்வார். யூசியுவைப் பொறுத்தவரை, பொறுமை இழக்கவும் கூடாது. அதே நேரம் இப்படியே விட்டு விடவும் கூடாது. எனவே கண்டிப்புடன் இருப்பது என முடிவு செய்தேன்.

“யூசியு நீ ஒன்றும் படையின் புதிய உறுப்பினர் அல்ல. நாம் ஏன் காவல் பணி செய்கிறோம் என்பதும் உனக்குத் தெரியும். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் பணி ஒரு கட்டளை. இம்மையத்தின் இன்றிரவுப் பாதுகாப்பு உன் கையில்தான். தீவைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் உன்னுடையதே. தீவையும், தாய்நாட்டையும் எப்போதும் பாதுகாப்பேன் என்று சொல்வாயே, அதை இப்போது நிரூபித்துக் காட்டு.”

என் வார்த்தைகளின் கனத்தை அவள் புரிந்து கொண்டாள். அதே சமயம் தன் மனதுக்குள்ளேயும் அவள் போராடியதை உணர்ந்தேன்.

“நல்லது. நான் செய்கிறேன்” கம்மிய குரலில் சொன்னாள். அழுத்தமான காலடிகளையெடுத்து நடந்து சென்றதன் மூலம், நான் சொன்னது உண்மைதான் என்பதை யூசியுவுக்கு உணர்த்தினேன். பின்பு அவளுக்குத் தெரியாமல் ஒரு பதுங்கு குழியில் இறங்கி, அவளையும் கடலையும் நோக்கி என் கண்களை நிலைக்க வைத்தேன்.

பின்னர், புயல் சீற்றம் கொண்டது. வானில் இடியும், மின்னலும் கிளர்ந்தெழுந்தன. ஆவேசமாகப் பொங்கிய கடல், பேரலைகளைக் கரையில் மோதியது. கடும் மழை கொட்ட ஆரம்பித்தது. கடல், காற்று, கரை மூன்றும் ஒரு சேர உறுமியது போலிருந்தது.

”ஹாய்சியா…” புயல் காற்றையும் மீறி அவள் கத்தியது எனக்குக் கேட்டது. பதிலளிக்காத நான் அவளையே கவனித்தேன். அவள் அஞ்சி நடுங்கியது தெரிந்தது. இறுகப் பற்றிய தன் துப்பாக்கியுடன், மையத்தை விட்டகல எத்தனித்தது போல் ஒரு அடியை எடுத்து வைத்தாள். ஐயோ தன் கடமையை உதறப் போகிறாளா? அவலமும், கோபமும் என்னிடம் உச்சித்திற்கு வந்தன.

comrade-2ஆனால் அவளோ, சில விநாடிகளுக்குள் நிதானப்படுத்திக் கொண்டு திரும்பினாள். ஏதோ ஒரு புதிய சக்தி அவளிடம் நுழைந்தது போன்று தைரியமாய் நிமிர்ந்து நின்றாள். தன் துப்பாக்கியினுள் ஒரு ரவையை திணிப்பதையும் கண்டேன். விரக்தி கலந்த மெதுவான குரலில் தனக்குத்தானே அவள் சொல்லிக் கொண்டாள், “நான் பயப்பட மாட்டேன், பயப்பட மாட்டேன்.”

அதைக் கேட்ட மாத்திரம், கோபமின்றி அவளை அன்புடன் கவனிக்க ஆரம்பித்தேன். அவள் தன் அச்சத்தை வென்று விட்டாள், ஆம் ஒரு வீராங்கனை பிறந்துவிட்டாள். வெற்றிப் பெருமிதம் பொங்கியது. மழையில் முழுதாய் நனைந்தாலும் நான் குளிரை உணரவில்லை. தாய் நாட்டின் கிழக்குக் கடற்கரையை தன்னந்தனியாகப் பாதுகாக்கும் அந்தப் பெண்ணின் வெற்றிப் பெருமிதத்தோடு, ஆவேசமாக அலையடிக்கும் கடலை கர்வத்துடன் நோக்கினேன்.

மழைக் காற்றின் ஓசையை மீறி ஒரு காலடிச் சத்தம் கேட்டது. ஓ, எங்களை விடுவித்து, பணிமாற்ற ஹாய்ஹூவா வந்து விட்டாள். ”என்ன யூசியு நீ மட்டும் நிற்கிறாய். ஹாய்சியா வரவில்லையா?”

“நான் தனியாகத்தான் இருக்கிறேன்.”

“ஏதேனும் நடந்ததா?”

”எதுவுமில்லை.”

“சரி, நீ போகலாம்.”

“நான் மாட்டேன். ஹாய்சியா வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு மழைக் கோட்டை எடுத்துவரச் சென்றவள் இன்னும் வரவில்லை.”

அவள் முடிப்பதற்குள், ”பரவாயில்லை யூசியு வா வீட்டுக்குப் போகலாம்” பதுங்கு குழியிலிருந்து வெளியேறி அழைத்தேன்.

நான் முழுவதும் நனைந்திருப்பதைக் கண்டு, ”என்ன நீ கடலுக்குள்ளிருந்தா வருகிறாய் கோட்டு எடுக்க வீட்டுக்குப் போகவில்லையா?” என்றாள்.

”இல்லை, இங்கிருந்தபடியே உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். யூசியு, இன்று நீ ஒரு வீராங்கனையாய் நடந்து கொண்டாய்.”

அவளோ வருத்தம் தோய்ந்த குரலில் ”என்னைக் கேலி செய்வதை நிறுத்து. நான் குற்ற உணர்வில் உழல்கிறேன்” என்றாள்.

china-women-army”ஏன் என்ன விசயம்?”

“நீ பார்க்கவில்லை, ஒரு சமயம் நான் மையத்தை விட்டகல எண்ணினேன்.”

“ஆனால் போய் விட வில்லையே, மீண்டும் வந்து உறுதியுடன் காவல் நின்றாயே.”

“ஆம் நின்றேன். ஆனால் நீ போனவுடன், மிகவும் பயமடைந்தேன். சுற்றியிருக்கும் மலைக்குன்றுகள் அக்கொடிய இருளில் பயங்கர உருவங்களாய் மாறி என்னை விழுங்கிவிடுமோ என அதிர்ச்சியுற்றேன். அச்சத்தை வெல்ல மறுத்த என் கால்கள் ஆட ஆரம்பித்தன. நீயும், படையைச் சேர்ந்த மற்ற பெண்களும் என்னுடன் கண்டிப்பாக நடந்து கொள்வதாய்த் தோன்றியது. உண்மையில் அது பயங்கரமான தருணம். ஓடிவிட்டால் நான் துரோகியாகத் தூற்றப்படுவேன். அப்போதுதான் உறுதியுடன் கடமையை மேற்கொள்வதை முடிவு செய்தேன். அச்சங்கள் அனைத்தையும் மறந்து போனேன். காற்று, மழை, இடி இவை பயம் கொள்ளத்தக்கவை அல்ல. ஆனால் விலகி ஓடும் கோழைத்தனம்தான் வெறுப்புக்குரியது.

யூசியுவின் மனந்திறந்த பேச்சு என்னை இளகச் செய்தது. “யூசியு, இன்று நீ செய்தது போற்றத்தக்க ஒன்று, பிற்காலத்தில் நீ படைத் தலைவியாகும் போது ஏனைய படைப் பெண்களுக்கு இந்தக் கதையைக் கண்டிப்பாகச்சொல்ல வேண்டும்…”

இடியும், மின்னலும், மழையும் தொடர்ந்த போதும் நாங்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. உண்மையில் எவ்வளவு அருமையான பொழுதுகள் அவை!

தமிழாக்கம்: கில்பர்ட்
புதிய கலாச்சாரம், மார்ச் 1999.