Friday, May 2, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாவரலாறு : ஆப்பிரிக்க இனப் படுகொலைகளுக்கு காரணம் யார் ?

வரலாறு : ஆப்பிரிக்க இனப் படுகொலைகளுக்கு காரணம் யார் ?

-

மத்திய ஆப்பிரிக்க நாடான ருவான்டாவில், 1994-ம் ஆண்டு இறுதியில் ஹுடு இன மேலாதிக்க அரசும், ஹுடு இனக் கூலிப்படையும் கைகோர்த்துக் கொண்டு கட்டவிழ்த்துவிட்ட இனவெறித் தாக்குதலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான டுட்ஸி இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து டுட்ஸி தேச பக்த முன்னணியைச் சேர்ந்த டுட்ஸி இனத்தினர் அந்நாட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றினர். அரசு அதிகாரம் கைமாறியதால், பழிவாங்கப்படுவோம் என அஞ்சி, 10 லட்சத்துக்கும் மேலான ருவாண்டா ஹுடு இனத்தினர் அருகிலுள்ள ஜாய்ரே நாட்டில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

ரூவாண்டா வரைப்படம்
ருவான்டா வரைபடம்

ஹுடு இனத்தைச் சேர்ந்த ஜாய்ரே நாட்டு அதிபர் மோபுடு, அகதிகளோடு அகதிகளாக ஹுடு இனக் கூலிப்படையினருக்கும், முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கும் தனது நாட்டில் தஞ்சமளித்தார். ஏற்கனவே ஹுடு – டுட்ஸி இன மோதல்களாலும், உள்நாட்டுப் போராலும் கொந்தளித்துக் கொண்டிருந்த ஜாய்ரேயில், மோபுடுவின் இந்த இனப்பற்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆயிற்று.

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஜாய்ரேயின் கிழக்கு எல்லைப் பகுதியில் வாழ்ந்துவரும் டுட்ஸி இனத்தவரைத் துரத்தி விட்டு, அப்பகுதியில் ருவாண்டா ஹுடு  இனத்தவரை நிரந்தரமாகக் குடியமர்த்தும் சதித் திட்டம் தயாரானது. இந்த இனத் துாய்மைப் படுத்தல் நடவடிக்கையில் ஜாய்ரே அரசுப்படையும், ருவாண்டா ஹுடு  இனக் கூலிப் படையினரும் கைகோர்த்துக் கொண்டு இறங்கினர்.

இதனால், ஜாய்ரேயில் கடந்த ஒரு வருடமாக டுட்ஸி – ஹுடு இன மோதல்களும், இனப் படுகொலைகளும், ஜாய்ரே அரசுப் படைகள் – ஹுடு கூலிப்படையினருக்கும், சிறுபான்மை டுட்ஸி இனப் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு சண்டையும் தீவிரமடையத் தொடங்கின. இந்நிலையில் ஜாய்ரேயின் கிழக்கு மாகாண ஆளுநர் ”டுட்ஸி இனத்தவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லை மரணத்தை எதிர்கொள்ள நேரும்” என உத்தரவிட்டார்.

டுட்ஸி மற்றும் ஹூடு
டுட்ஸி மற்றும் ஹூடு இனத்தவர்

இந்த உத்தரவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளெங்கிலும் மோசமான எதிர்விளைவுகளைத் தூண்டியது. டுட்ஸி இனத்தினர் ஆளும் ருவாண்டாவும், புருந்தியும் ஜாய்ரே டுட்ஸி இனப் போராளிகளுக்கு ஆதரவாக நேரடியாகவே களத்தில் இறங்கின. இப்பின்புலத்தை ஆதாரமாகக் கொண்டு, டுட்ஸி இனப் போராளிக் குழு, கிவு பிராந்தியத்திலுள்ள ஸ்வாதே பகுதியைக் கைப்பற்றியது.

இதனால் இப்பிராந்தியத்தில் கோமா எனும் பகுதியில் குடியமர்த்தப்பட்டிருந்த 2 லட்சம் ருவாண்டா ஹுடு இன அகதிகள், உயிருக்கு அஞ்சி முகாமை விட்டு வெளியேறி விட்டனர்; மற்றொரு முகாமான புகாவுவிலுள்ள 4 லட்சம் அகதிகளும் வெளியேறி விடக்கூடும். அலை அலையாக வெளியேறும் அகதிகள், கால்நடையாகவே ருவாண்டாவிற்கும் ஜாய்ரேயின் உள்பகுதியிலும் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.

தீவிரமாகிவரும் உள்நாட்டு சண்டையின் காரணமாக ஐ.நா. உதவிகள் தடைப்பட, ஹுடு  இன அகதிகள் உணவின்றிப் பட்டினியாலும், தொற்று நோயாலும் மரணமடையும் அபாயம், மத்திய ஆப்பிரிக்க நாடுகளைத் திறந்தவெளி இடுகாடாக மாற்றக் காத்திருக்கிறது. மேலும், ருவாண்டா, ஜாய்ரே, புருந்தி, உகாண்டா, தான்சானியா – இந்நாடுகளெங்கும் ஹுடு – டுட்ஸி இனமோதல்கள் பற்றிப் பரவவும், ஜாய்ரே இனரீதியாகச் சிதறுண்டு போகவும் கூடிய பேரழிவின் விளிம்பில் மத்திய ஆப்பிரிக்கா அமர்ந்துள்ளது.

***

இந்த இனவெறியை யார் விதைத்தது? டுட்ஸிக்களா.. இல்லை ஹுடுக்களா? நானூறு ஆண்டுகாலமாக நிலவிவந்த இன ஒற்றுமை, காலனிய ஆட்சியில் சிதைந்து போனது. அந்த வெற்றிடத்தில் இனவெறி குடியமர்ந்து கொள்ள பாதை வகுத்துக்கொடுத்தன, ஏகாதிபத்தியங்கள்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ருவாண்டாவை ஆண்டு வந்த பெல்ஜியம் ஏகாதிபத்தியம், தனது பொருளாதாரச் சுரண்டலுக்காக சமூக நிலங்களைச் சரக்காக மாற்றி, ஹுடு  இனத்தவரைக் கட்டாய உழைப்பில் தள்ளிவிட்டது. காலனியவாதிகளுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்டு, நிலங்களில் வரிவசூலிக்கும் உரிமையை டுட்ஸி இனத்தவரிடம் ஒப்படைத்தது. ஹுடு இனத்தவரை ஆதிக்க சக்திகளாகச் சித்தரித்து, வரலாறு சிதைக்கப்பட்டது. ருவாண்டாவை விட்டு வெளியேறிய பொழுது, ஹுடு இனத்தவரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தது, தீரா இனப்பகைக்கு விதையிட்டுச் சென்றது.

rwanda-grnocide
நானூறு ஆண்டுகாலமாக நிலவிவந்த இன ஒற்றுமை, காலனிய ஆட்சியில் சிதைந்து போனது. அந்த வெற்றிடத்தில் இனவெறி குடியமர்ந்து கொள்ள பாதை வகுத்துக்கொடுத்தன, ஏகாதிபத்தியங்கள்.

நேரடி காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின் தொடர்ந்த சுதந்திர நாட்களிலும் ருவாண்டாவின் பொருளாதாரம் மேற்குலகைச் சார்ந்தே இருந்து வந்தது. காபி ஏற்றுமதி தான் ருவாண்டாவின் முக்கியத் தொழில் எண்பது சதவீத அந்நியச் செலாவணி இதன்மூலம்தான் ஈட்டப்பட்டது. ஏற்றுமதி சார்ந்த பணப் பயிர் உணவுப் பொருள் உற்பத்தியை விழுங்கத் தொடங்கியதால், 1980-ல் ருவாண்டாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1989-ல் அமெரிக்காவின் நலனுக்காக, உலகச் சந்தையில் காபி கொட்டையின் விலை 50 சதவீதம் குறைக்கப்பட்ட பொழுது, ருவாண்டாவின் பொருளாதாரம் மரணப் படுக்கையில் வீழ்ந்தது. உணவுப் பஞ்சம், பொருளாதாரத் தேக்கம், சமூகத்தில் ஏற்கனவே நிலவி வந்த இனப்பகைமை எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, 1990-ல் ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கக் காரணமாயின.

இச்சமயத்தில், எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை இலாபம் என்ற கொள்கை கொண்ட ஐ.எம்.எஃப். ருவாண்டாவில் நுழைந்தது. சுதந்திர சந்தைக்காக அந்நிறுவனம் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், 1994-ல் நடந்த டுட்ஸி இனப் படுகொலைக்கு முதற்காரணமாக அமைந்தன.

வீழ்ந்து கிடந்த காபி ஏற்றுமதியைத் தூக்கி நிறுத்த ஐ.எம்.எஃப். ருவாண்டாவின் பணத்தின் மதிப்பை 50 சதவீதம் குறைத்தது. பணத்தின் மதிப்பு வீழந்த அளவுக்கு காபி கொள்முதலின் விலையை அரசு உயர்த்தாததால், விவசாயிகளின் வருமானம் அன்றாட உணவுத் தேவையைக்கூட ஈடு செய்யவில்லை. 1992-ல் மீண்டும் பணத்தின் மதிப்பு குறைக்கப்பட்டதால், காபி விவசாயிகள் வறுமை-கடன் வலைக்குள் நெட்டித் தள்ளப்பட்டனர்.

காபி கொள்முதலில் ஈடுபட்டு வந்த ‘ருவாண்டெக்ஸ்’ என்ற அரசு நிறுவனம் செயல் இழந்து போனது. நாடெங்கும் கொதித்தெழுந்த விவசாயிகள் மூன்று லட்சம் காபிச் செடிகளை வெட்டி வீழ்த்திய தோடு, காபி உற்பத்தி அதன் இறுதி முடிவை எட்டியது.

1994ல் நடைபெற்ற டுட்ஸி இனப்படுகொலை
1994-ம் ஆண்டு இறுதியில் ஹுடு இன மேலாதிக்க அரசும், ஹுடு இனக் கூலிப்படையும் கைகோர்த்துக் கொண்டு கட்டவிழ்த்துவிட்ட இனவெறித் தாக்குதலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான டுட்ஸி இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.

அரசு செலவைக் கட்டுப்படுத்த விவசாயத்திலும், தொழிலும் அரசு முதலீடு செய்வது கைவிடப்பட்டது. அந்நியக் கடனை அடைக்க, அரசின் மின்சாரத் துறையும் (எலெக்ட்ரோகாஸ்) தொலை தொடர்புத் துறையும் (ருவாண்டாடெல்) தனியார்மயமாக்கப்பட்டன. வாழ்விழந்த விவசாயிகளும், வேலையிழந்த தொழிலாளர்களும், வேலையில்லா இளைஞர்களும் கொண்ட பட்டாளமொன்று உருவானது.

சமூகப் பொருளாதார வாழ்வில் ஏற்பட்ட நசிவு, டுட்ஸி இன மக்கள் தொடுத்து வந்த உள்நாட்டுப் போரைத் தீவிரப்படுத்தியது. உள்நாட்டுப் போரை ஒடுக்க இராணுவம் ஊதிப் பெருக்கப்பட்டது. இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5,000-லிருந்து 40,000-த்தை தொட்டது. இராணுவத் தளவாடங்களைக் குவிக்க ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம், அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதாரக் குழுமம் என எல்லா ஏகாதிபத்தியங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கடனைக் கொடுத்தன. வேலையற்றுச் சுற்றித் திரிந்த பட்டாளத்திடமிருந்து ஹுடு கூலிப்படை உருவாக்கப்பட்டு, பிரான்சிடமிருந்து பெற்ற ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. இதன் உச்சக்கட்டத்தில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட டுட்ஸி இனமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் பத்து இலட்சம் ஹுடு இனமக்கள் அகதிகளாக நாட்டை விட்டு ஓடினர். ஆட்சி மாறினாலும் அவலங்கள் தொடர்கதையானது.

***

ருவாண்டா தனியொரு நாட்டின் வரலாறல்ல ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள துணை சகாரா நாடுகள் அனைத்திற்கும் இது பொருந்தக் கூடியது. காலனிய ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதன் பின்னர், ஐ.எம்.எஃப். உலக வங்கியால் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களும் அவ்வின மக்களிடம் இருந்ததைத் தட்டிப் பறித்துக் கொண்டதேயன்றி, புதிதாக எதையும் தந்துவிடவில்லை. இன்று இக்கண்டத்தின் பெரும்பாலான நாடுகள், உணவிற்கே ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலையிலுள்ளன.

hutustrain
அரசு அதிகாரம் கைமாறியதால், பழிவாங்கப்படுவோம் என அஞ்சி, 10 லட்சத்துக்கும் மேலான ருவாண்டா ஹுடு இனத்தினர் அருகிலுள்ள ஜாய்ரே நாட்டில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

உற்பத்தியின் இயற்கையான பரிணாம வளர்ச்சியில், ஒரே தேசிய இனமாக உருவெடுக்க வேண்டிய இனக்குழுக்களை தீராப் பகைவர்களாக்கி மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன, ஏகாதிபத்தியங்கள். இந்த சுரண்டல் வரலாற்றை மூடி மறைத்துவிட்டு, நாகரிகமற்ற இனவெறியர்கள் என பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கின்றன. அவை ”உதவி”, ”அமைதிப்படை” என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அம்மக்களை அவமானப்படுத்துகின்றன.

”அகதிகளை சொந்த நாட்டுக்குத் திரும்பி விடும்படி” உத்தரவிடுகிறது மேற்குலகம். இதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வாம். ”விவசாயம் குடிமுழுகிப் போன பின்பு சொந்த நாட்டிற்குத் திரும்பி என்ன செய்வது?” இதுதான் அகதிகளின் முன் எழுந்து நிற்கும் கேள்வி. சுயமான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வலுகொண்ட புரட்சிகர வர்க்கங்கள் அரசியல் அரங்கில் எழுந்து நிற்காதவரை, இனப்படுகொலைக்கும், நாடோடி வாழ்க்கைக்கும் நிரந்தரத் தீர்வு காண வாய்ப்பில்லை!

– ரஹீம்

புதிய ஜனநாயகம், 1-15 ஜனவரி, 1997

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க