privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் மக்களை ஆதரிப்போம் - மதுரை கருத்தரங்க செய்தி

காஷ்மீர் மக்களை ஆதரிப்போம் – மதுரை கருத்தரங்க செய்தி

-

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை சார்பாக 28-08-16 அன்று “காஷ்மீர்: பறிக்கப்படும் உரிமைகளும் மறைக்கப்படும் வரலாறும்” பற்றி அரங்கக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.முரளி சிறப்புரையாற்றினார்.

prpc-hall-meeting-on-kashmir-poster“காஷ்மீர் பிரச்சினையைப் பற்றிப் பேசுவது சிக்கலாகி வருகிறது. காங்கிரஸ் எம்.பி.யும் நடிகையுமான ரம்யா பாகிஸ்தானைப் பற்றி பேசியதற்காக அவர் மீது தேச துரோக வழக்குப் போடச் சொல்லி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சர்வதேச பொது மன்னிப்புக் கழகத்தினைக் கண்டித்து கர்னாடகாவில் சங் பரிவார் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜே.என்.யு.பிரச்சினை, எழுத்தாளர் அருந்ததிராய், பேராசிரியர் ஜிலானி போன்றவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. மத்தியில் எந்த அரசு வந்தாலும் காஷ்மீர் விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள்.

புர்கான் வானி கொல்லப்படுவதற்கு முன்பு நான் காஷ்மீர் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. சிறீநகர் முஸ்லீம்கள் நாங்கள் வறுமையில் இல்லை என்கிறார்கள். கடந்த 50 நாட்களாக ரூ 1000 கோடிக்கு ஆப்பிள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. குங்குமப் பூ விளைகிறது. காஷ்மீர் குடிமக்கள் தவிர வேறு யாரும் அங்கு சொத்து வாங்க முடியாது. அமைதியாக வாழ்வதற்கான சூழல் அங்கு இருந்தும் அவர்களை வாழவிடவில்லை இந்தியாவும் பாகிஸ்தானும்.

காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் நாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்” என்று பாடிக்காட்டுகிறார். எம்.ஜி.ஆர்.சினிமாப் பாட்டைப் பாடி கூத்தடிக்கிறார்கள் நாடாளுமன்றத்தில்.

ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானி என்ற 22 வயது இளைஞன் இந்திய ராணுவத்தால் என்கவுண்டரில் கொல்லப்பட்டான். வானி யாரையும் கொல்லவில்லை. அவன் மீது வழக்கு எதுவும் இல்லை. ஆனால் கொல்லப்பட்டான். ஆங்கில தொலைக் காட்சி டைம்ஸ் நவ் கோஸ்வாமி, ”புர்கான் வானி கொல்லப்பட்டது இந்தியாவிற்கு மாபெரும் வெற்றி” என்று சொல்லுகிறார். பெல்லட் குண்டு தாக்குதல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாதது. காஷ்மீரில் போராடும் மக்களின் முகம் இப்படி சிதைக்கப் பட்டுள்ளது.(புதிய ஜனநாயகம் ஆகஸ்டு மாத இதழின் பின் அட்டையைக் காட்டுகிறார்) சிதைக்கப்பட்ட முகங்கள் தான் காஷ்மீரிகளின் அடையாளமாகி விட்டது. அமைதியான, உலகின் அழகான ஒரு பிரதேசத்தின் அழகும் அமைதியும் சீர்குலைக்கப்பட்டுவிட்டது. காஷ்மீர் மீதான போரில் இதுவரை 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சில லட்சம் பேரைக் காணவில்லை. அடிப்படையில் இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். இந்திய அரசு சாத்வீகமான அரசு அல்ல. ஒரு பயங்கரவாத அரசு. அதன் கோர முகம் காஷ்மீரில் தெரிகிறது.

சில வரலாற்றுக் குறிப்புகள்:-

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.முரளி
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.முரளி

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர், ஹைதராபாத், ஜுனாகத் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையவில்லை. ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சியும், காஷ்மீரில் மன்னர் ஹரி சிங் ஆட்சியும், ஜுனாகத்தில் இஸ்லாமிய மன்னரின் ஆட்சியும் இருந்தது. காஷ்மீரில் இந்து மன்னன், ஆனால் 80% மக்கள் முஸ்லீம்கள். ஜுனாகத்தில் முஸ்லீம் மன்னராட்சி ஆனால் 90% மக்கள் இந்துக்கள். ஹைதராபாத்தில் 90% இசுலாமியர்கள் என்ற நிலை இருந்தது. ஜுனாகத் இந்தியாவுடன் இணைந்துகொண்டது. நிஜாம் ஆட்சியை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். நேரு ராணுவத்தை வைத்து ஆயுதப் புரட்சியை ஒடுக்கினார். நிஜாமுக்கு சிறப்புச் சலுகைகள் கொடுத்தும் சில அதிகாரங்கள் சொத்துக்கள் கொடுத்தும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. நேருவும் படேலும் காஷ்மீர் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாமென்று உறுதிமொழி கொடுத்து, அரசியல் சட்டம் 370 ஆவது பிரிவின்படி சிறப்புச் சலுகைகள் வழங்கி தக்கவைத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் அளித்த உறுதிமொழி கடந்த 70 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. அதை நிறைவேற்றக் கோரி மக்கள் 3 தலைமுறையாகப் போராடி வருகிறார்கள்.

காஷ்மீருக்காக சீனாவும் பாகிஸ்தானும் போர் தொடுத்து சில பகுதிகளைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளன. தேசிய மாநாடு கட்சி, ஹுரியத் மாநாடு, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஹிஸ்புல் முஜாகிதின் போன்ற பல அமைப்புகள் போராடி வருகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி பயங்கரவாத செயல்களை நடத்திவருகிறது. அதைக் காரணம் காட்டி இந்திய அரசு காஷ்மீரில் நிரந்தரமாக 5 லட்சம் துருப்புகளை நிறுத்திவைத்துள்ளது. காஷ்மீரத்துச் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட ஷேக் அப்துல்லா 1931-ல் இந்திய அரசுக்கு எதிராக நடத்திய பேரணி போராட்டத்தின் போது இந்திய ரணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். ஷேக் அப்துல்லா தமிழ் நாட்டில் ஊட்டியில் 12 ஆண்டுகள் நேருவால் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

1947-ல் காஷ்மீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு உறுதியளித்தபடி மக்களின் விருப்பத்தை வாக்கெடுப்பின் மூலம் அறிந்திருந்தால் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் அதைச் செய்வதற்கு இந்திய ஆட்சியாளர்களுக்கு விருப்பமில்லை. காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு மக்கள் பிரிவினர் இருக்கின்றனர். பாகிஸ்தானால் ஊட்டிவளர்க்கப்படும் தீவிரவாதக் குழுக்கள் உள்ளனர். மத அடிப்படைவாதிகள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் தங்களுடைய தலையெழுத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். மற்றவர்கள் காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பதைக் காரணம் காட்டி இந்தியா ராணுவ நிலைகளைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களைக் கட்டவிழ்த்துவிடுகிறது. இந்திய அரசு பயங்கரவாதம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஐ.நா., அமெரிக்கா, சீனா போன்றவை காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 50 நாட்களாக காஷ்மீர் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் மக்கள் போராட்டம் ஓயவில்லை. மிகப் பெரிய மனித உரிமை மீறல் அங்கே நடந்துகொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?” இவ்வறு பேராசிரியர் இரா.முரளி பேசினார்.

மாவட்டச் செயலாளர் ம.லயனல் அந்தோனி ராஜ்
மாவட்டச் செயலாளர் ம.லயனல் அந்தோனி ராஜ்

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்டச் செயலாளர் ம.லயனல் அந்தோனி ராஜ் பேசியதாவது, “காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமில்லை. காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது. இந்தியா ஒரு நாடு அல்ல. பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடம். பலாத்காரமாக ஒன்று படுத்தப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லி மக்களை ஏய்க்கிறது. தேசிய இனங்களின் தனித்த அடையளங்களை ஒழித்து ஒரே அடையளத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது மோடி அரசு.

காஷ்மீர், பாகிஸ்தான் பற்றிய எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.-மோடி அரசு தயாராக இல்லை. விமர்சிப்பவர்களை தேசதுரோகிகள் என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுவதோடு சங்கப் பரிவாரங்களை ஏவி படுகொலை செய்கிறது.

காஷ்மீரில் 95% மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் கூறுகிறார். ஆனால் காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் 5000 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஆனால் புர்கான் வானி கொல்லப்பட்ட போது 2 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இது எதைக் காட்டுகிறது? மக்கள் விரும்பாமலா வருகிறார்கள்? இந்திய அரசு காஷ்மீரில் தேர்தல் நடத்தியபோது 5% வாக்குகள் மட்டுமே பதிவாகியது. 50 நாட்கள் ஊரடங்கு எதனால்.

சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், ஏராளமான இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். கற்கள்தான் அவர்களது ஆயுதம். பெல்லட் குண்டுகள், கொத்துக் குண்டுகள், மிளகாய்ப் பொடி குண்டுகள், பீரங்கிகளுக்கு அவர்கள் பயப்படவில்லை. காஷ்மீரில் இந்திய ராணுவம் தோல்வியடைந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறைகூவி அழைத்தாலும் மக்கள் வரத் தயாரில்லை. அவர்களது ஒரே கோரிக்கை அன்னியர்கள் எல்லோரும் வெளியேறுங்கள் என்பது தான். ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதம் என்று சொல்லி இந்தியா ஆக்கிரமிப்பைக் கைவிட மறுக்கிறது.

சங்கப் பரிவாரங்கள் இந்து மத வெறி, இந்து தேசிய வெறியூட்டப்பட்டு காஷ்மீர் மக்களின் கோரிக்கையை ஆதரிக்கும் எவரையும் தேச துரோகிகள் என்று பறை சாற்றுகின்றனர். இந்தியாவின் தலைப் பகுதியில் காஷ்மீர் இருக்கிறது. வால் பகுதியில் தமிழ் நாடு இருக்கிறது. காஷ்மீரின் நிலைமை தமிழ் நாட்டிற்கு வராது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

வேத, யோகா, சமஸ்கிருத வாரியம் அமைத்து, புதிய கல்விக் கொள்கை-2016 உருவாக்கி நாடு முழுவதையும் காவி மயமாக்கத் துடிக்கிறது மோடி அரசு. தலித் மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லை.ஆனால் பயங்கர அச்சுறுத்தல் இருக்கிறது. தமிழ் நாட்டுக்குள்ளும் வேகமாக புராண இதிகாச மூட நம்பிக்கைக் குப்பைகள் கடத்தப்படுகின்றன. தமிழ் மொழி, இனம், பண்பாடு, இலக்கிய வளம், தொன்மை இவற்றின் பெயரைச் சொல்லிக் கொண்டே, செத்த மொழியாகிய சமஸ்கிருதத்திற்கு அடிமைப்படுத்தும் சதி நடந்து வருகிறது. இது நாடு முழுவதும் வேகமாகத் திணிக்கப்படுகிறது. ஆகவே தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத, அனைத்து முனைகளிலும் இற்று, தோற்றுப் போன இந்த அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்களைப் போல அதிகாரத்தைக் கையிலெடுத்து நாம் போராடவேண்டும்.”

கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். கேள்வி-பதில் நிகழ்வு இடம் பெற்றது.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரைக் கிளை, 9443471003