Sunday, May 4, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஉணவுக்காக உடலை விற்கும் அமெரிக்க சிறுமிகள் !

உணவுக்காக உடலை விற்கும் அமெரிக்க சிறுமிகள் !

-

உணவுக்காக உடலை விற்கும் அமெரிக்க சிறுமிகள்!

‘உன் கூட செக்ஸ் வைச்சுக்கிட்டா, இன்னைக்கு நைட்டு எனக்கு உணவு வாங்கித் தரணும்” இந்தக் குரல் ஒலிக்கும் இடம் அமெரிக்கா! இந்தக் குரலுக்குச் சொந்தமானவர்கள் அமெரிக்க பதின்ம வயது இளைஞர்கள்.

us-teensஎந்த அமெரிக்கா என்பது உங்களுக்கு சற்று குழப்பமாயிருக்கும் இல்லையா? ஏனெனில் ஏற்கனவே அமெரிக்க ஊடகங்கள் வெனிசுலா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளில், மக்கள் பிச்சை எடுத்து பிடுங்கித் தின்று வாழ்கிறார்கள் என்று அமெரிக்க சனநாயக மேன்மை குறித்து ஓயாது ஒழியாது பிரச்சாரம் செய்து வருகிறார்கள் அல்லவா?! சந்தேகம் தேவையில்லை. உணவுக்காக தன் உடலை விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் “யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா” எனப்படும் அமெரிக்க வல்லரசு நாட்டில் வாழும் பதின்ம வயது சிறுவர் சிறுமிகள் தான்!

அமெரிக்காவில் 10 முதல் 17 வயதுடைய 68 இலட்சம் இளம் வயதினர் உணவு-பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கிறார்கள். இதில் 29 இலட்சம் இளைஞர்கள் ஆகக் குறைவான உணவுப் பாதுகாப்பையும், மீதியுள்ள 40 இலட்ச இளைஞர்கள் குறுகிய உணவுப் பாதுகாப்பையும் பெற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

“அர்பன் இன்ஸ்டியூட்” மற்றும் “பீட் அமெரிக்கா” (Feed America) எனும் இரு நிறுவனங்கள் வறுமையில் வாடும் அமெரிக்க சிறுவர் சிறுமிகள் அன்றாடம் வறுமையை எவ்விதம் எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து நடத்திய ஆய்வு முடிவுகள் அமெரிக்க இளைஞர்கள் உணவிற்காக விபச்சாரத்தில் தள்ளப்படுவதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள், சிகாகோ, போர்ட்லேண்ட், வாசிங்டன் டி.சி, சான் டியாகோ, இல்லினாய், கரோலினா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய மாகாணங்களில் ஏழ்மையான நிலையில் வாழும் பத்துக்கும் மேற்பட்ட சமூகங்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

மிகக் குறைந்த வருவாயுடைய இந்த சமூகப் பிரிவைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர்களை 20 குழுக்களாக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 20 குழுக்களில், 8 குழுக்களில் பெரும்பான்மையாக ஆப்ரிக்க-அமெரிக்கர்களும், 5 குழுக்களில் பெரும்பான்மையாக இலத்தீன் அமெரிக்கர்களும், 4 குழுக்களில் பெரும்பான்மையாக அமெரிக்க வெள்ளை இனத்தவரும், மீதமுள்ள 3 குழுக்களில் அனைவரும் கலந்து என 13 முதல் 18 வயதுடைய 193 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றிருக்கின்றனர்.

ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களின் உணவு பாதுகாப்பின்மை தேசிய குழந்தைகளுக்கான உணவு பாதுகாப்பின்மை விகிதமான 21.4% விட இரண்டு சதவீதம் அதிகமாக உள்ளது. பத்தில் ஒன்பது பேரின் வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் அமெரிக்க தேசிய சராசரி குடும்ப வறுமையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

“சாத்தியமற்ற தேர்வுகள்” (impossible choices) எனும் தலைப்பில் வெளிவந்த இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க பதின்ம வயது இளைஞர்கள் வறுமையை எவ்விதம் எதிர்கொள்கின்றனர் என்பதை கீழ்வருமாறு தொகுத்திருக்கிறது.

  • பசி என்று வருகிற பொழுது, பெரும்பாலான இளைஞர்கள் வெறும் வயிற்றோடே இருக்கின்றனர். சிகாகோவைச் சேர்ந்த சிறுமி “என் இரு உடன் பிறந்தவர்களும் நன்றாக இருப்பதற்காக நான் சாப்பிடாமல் கூட இருப்பேன். அவர்கள் நன்றாக இருப்பது தான் எனக்கு முக்கியமானது” என்கிறாள்.
  • “மெக்டோனால்டில் ஒரு சில டாலருக்கு கிடைக்கும் உணவு போதுமானது. ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் ஆரோக்கியமான உணவுப்பொருள் 5 டாலருக்கு குறைந்து இருப்பதில்லை. வாங்குவதற்கும் சாத்தியமில்லை; போதவும் செய்யாது” என்கிறாள் கிழக்கு ஓரிகானைச் சேர்ந்த சிறுமி.
  • “கிடைப்பதை வைத்து உயிர் வாழ முடிகிறது. ஆனால் அடிப்படையான வாழ்வை வாழ முடியவில்லை” என்கிறாள் போர்ட் லேண்டைச் சேர்ந்த சிறுமி.
  • “கடந்த கோடை காலத்தில் குறைந்தது முப்பது தடவையாவது எனது மதிய உணவை தேவைப்படும் சிறு குழந்தைகளுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறேன்” என்கிறாள் இதே போர்ட் லேண்டைச் சேர்ந்த சிறுமி.

கீரின்ஸ்பாரோ நகர்ப்புறத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் தங்கள் வீட்டில் சமைப்பதற்கு பாத்திரங்கள் கிடையாது என்கிறார்கள். பணம் கிடைத்தாலும் அதை பாத்திரச்சாமான்கள் வாங்க பயன்படுத்துவதில்லை என்கின்றனர். மானியத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப்படும் உணவுப்பொருள்கள் பாதி மாதத்திலேயே தீர்ந்து விடுகிறது என்கிறார்கள்.

இவ்வளவு வறுமையில் வாடும் இளைஞர்கள் தங்கள் பசியைப் போக்க பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர்.

  • அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டு, சில பாடங்களில் வேண்டுமென்றே தோல்வியுறுவது, அடுத்த வருடத் தேர்வில் மீண்டும் தோல்வியுறுவதன் மூலம் பள்ளியில் கிடைக்கும் உணவுத் திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம் என்கிறார்கள். உலகுக்கே கல்விக் கொள்கை வகுக்க ‘வழிகாட்டும்’ உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கான ‘ஊக்கம்’ இதுதான்
  • சிறைச்சாலைக்குச் சென்றால் உணவு நன்றாக இல்லாவிட்டாலும் மூன்று வேளை உணவு கிடைப்பது உறுதி, தலைக்கு மேல் ஒரு கூரை இருக்கிறது என்கிறார்கள் சிலர். பதின்ம வயதினரில் ஆணாக இருந்தால் கடைகளில் சிறு பொருள்களைத் திருடுவது, ஷு, பைக், கார்களில் உள்ள இசைக்கருவிகளைத் திருடுவது என்று ஒவ்வொரு நாளையும் சமாளிப்பதாகச் சொல்கிறார்கள்.
  • “நான் யாரிடமிருந்தும் திருடுவதைப் பற்றி பேசவில்லை. நான் அங்கு போவது போன்று எது தேவைப்படுகிறதோ அதை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்துவிடுவேன். இதைத்தான் நான் செய்கிறேன். இது அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்கு எதாவது தேவையென்றால் இப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டி வரும்” என்கிறார் சிகாகோவைச் சேர்ந்த இளைஞர்.
  • சாண்டியாகோவைச் சேர்ந்த இன்னொரு இளைஞர், “மார்க்கெட்டில் பொருள்களை தானியங்கி இயந்திரத்தில் கொடுத்து பில் போடும் போது, சில பொருள்களை பில் போடாமல் விட்டுவிடுவேன்” என்கிறார்.

கடையில் திருடும் பழக்கம் 7 அல்லது 8 வயது முதலே ஆரம்பித்துவிடுவதாகச் சொல்கின்றனர். பொருள்களை எடுத்து மாட்டிக்கொண்டால் அதே கடையில் வேலை கேட்டு பொருளுக்கான பணத்தை திருப்பித் தருவதாகச் சொல்கின்றனர். இதையெல்லாம் தாண்டி ஆண் பிள்ளைகள், போதை மருந்துக் கும்பலிடம் சிக்கி, போதை மருந்து வியாபாரம் செய்வதாக ஆய்வில் தெரியவருகிறது.

சிறுமிகளின் நிலைமை இதற்கு இணையாக விபச்சாரத்தில் போய் முடிகிறது. ஆய்வில் பங்கேற்ற பத்து சமூக பிரிவினருமே வறுமையை எதிர்கொள்ள உடலை விற்பது வாடிக்கையானது என்கின்றனர். சிறுமிகளின் உடலை நுகர்வதில் இனம், புவியியல் என எந்த வேறுபாடுமின்றி அனைத்துக் குழுவில் உள்ளவர்களும் பாலியல் சுரண்டலின் பரந்துபட்ட தன்மையை ஆய்வில் தெரியப்படுத்திருக்கின்றனர்.

  • வறுமைக்காக சிறுமிகள் கிழவர்களுடன் உடலை சுரண்ட அனுமதிக்கிற போக்கும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வாசிங்டனைச் சேர்ந்த சிறுமி, தனக்குத் தெரிந்த 17 வயது சிறுமி 40 வயது ஆண் நபருடன் தன் தேவைகளுக்காக டேட்டிங்கில் ஈடுபவதாக பகிர்ந்திருக்கிறாள்.
  • இதே போன்று தனக்குத் தெரிந்த பதினோறு வயது சிறுமி தன் குடும்ப கஷ்டத்தை சமாளிக்க பள்ளிப்படிப்பை ஆறாம் வகுப்பிலேயே பாதியில் நிறுத்தியதுடன் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதை நினைவுபடுத்துகிறாள் சிகாகோ சிறுமி.
  • நடுநிலைப்பள்ளிகளில் மாணவிகள் தங்களது தேவைகளைக் குறித்து துண்டு அறிக்கையை பொதுவெளிகளில் ஒட்டுகின்றனர் என்று இளைஞர்கள் ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள்.

சிடிசி-2015 அறிக்கையின்படி 41% உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லியதுதான் அமெரிக்காவின் சுரண்டல் உலகை நம்மிடம் அம்பலப்படுத்திய அறிக்கையாக இருந்தது. ஆனால் இந்த ஆய்வு, பல சிறுமிகள் உணவுக்காக உடலை விற்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

உணவுக்காக உடலை விற்பதை எப்படி அடையாளம் காண்பது? அமெரிக்காவில் இப்படிச் செய்வதற்கு பரிவர்த்தனை டேட்டிங் (Transactional dating) என்கிறார்கள். உடலை விற்பதற்கு பணம் வாங்குவதற்குப் பதிலாக உணவையும் பொருள்களையும் வாங்கிக்கொள்ளும் அவலத்தைக் காட்டுகிறது இது. இப்படிச் செய்வது, தற்பொழுது இருக்கும் நிலைமையில் சரிதான் என்று விளக்கம் அளிக்கிறார்கள் இளைஞர்கள். ‘பணம் வாங்கினால் தானே விபச்சாரம். உணவுக்காகவும் பிற தேவைகளுக்காவும் இதில் ஈடுபடுவது விபச்சாரத்தை விட பரவாயில்லை. அப்படித்தான் சிறுமிகள் தங்கள் வாழ்க்கையை சமாளித்து வருகின்றனர்’ என்கிறான் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞன்.

உணவுக்காக உடலை விற்கும் குழந்தைகள் பற்றிய இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவின் சமூக நலத்திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆய்வை நடத்திய நிறுவனங்களுள் ஒன்றான “பீட் அமெரிக்கா”, அமெரிக்காவில் உணவு வங்கிகள் எனப்படும் 200 கஞ்சித் தொட்டிகளை நடத்தி வருகிறது. 300 கோடி உணவு பொட்டலங்கள் 4.6 கோடி ஏழைகளுக்கு 60,000 மேற்பட்ட மையங்களில் இருந்து வழங்கிவருவதாக சொல்கிறது இந்த அமைப்பு. உணவுக்காக விபச்சாரம் எனும் அவலத்தைப் போக்க மேலும் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கவும், கோடைகாலங்களிலும் பள்ளிகளில் உணவுத் திட்டத்தை நீட்டிக்கவும் பரிந்துரைக்கிறார்கள் இவர்கள்.

food-service
இலவச உணவு, வேலை வாய்ப்புகள் கொடுத்து ஏழைகளுக்கு உதவுவதற்கான சமுதாய முயற்சிகளில் ஒன்று

ஆய்வை நடத்திய மற்றொரு நிறுவனமான “அர்பன் இண்ஸ்டியுட்” எனும் சிந்தனைக் குழாம் அமெரிக்காவின் சமூக நலத்திட்டங்கள் தோல்வியுற்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஆய்வில் பங்கேற்ற பல்வேறு இளைஞர்கள் ஏற்கனவே அமெரிக்க வறுமை ஒழிப்புத்திட்டத்தின் பயனாளர்களாக இருப்பவர்கள் தான். அவர்களது நிலைமைதான் இப்படி உணவுக்காக உடலைவிற்கும் அவலத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள்.

கடந்த இருபது வருடங்களில் குறை-வருவாய் பிரிவினரின் வேலைவாய்ப்பு முற்றிலும் அருகிப்போனதையும், கூலி உயர்வே இல்லாதிருப்பதும், விலைவாசி உயர்வையும் காரணம் காட்டி சமூக நலத்திட்டங்களின் வீச்சு பெருக வேண்டும் என்று சொல்கிறது ஆய்வு முடிவு. நேரடி பணப்பட்டுவாடாவை கிட்டத்தட்ட மடைமாற்றி நிறுத்திவைத்திருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் அரசு இந்த அடித்தட்டு ஏழைகளுக்கு விரிவான முறையில் வழங்க முன் வரவேண்டும் என்று சொல்கிறது. கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டத்தை மேம்படுத்தி பயனாளர்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது ஆய்வறிக்கை.

ஆய்வை நடத்துவதற்கு போர்டு பவுண்டேசனும் இத்தகைய சிந்தனைக் குழாம்களுக்கு நிதி வழங்கியிருப்பதிலிருந்து ஓர் உண்மை வெளிப்படுகிறது. அமெரிக்க சமூக நலத்திட்டங்கள் தோல்வியுற்றுவிட்டன என்பதை எடுத்துக்கூறி நிலைமையைச் சமாளிக்க வேறு ஏதாவது திட்டம் தீட்டப்படாவிட்டால் அமெரிக்க கார்ப்பரேட் கும்பலுக்கு சிக்கல் என்பதை நாசூக்காக இந்த ஆய்வு உணர்த்தியிருக்கிறது.

இதில் நாம் பெறும் பாடம் இதுதான். இவர்கள் சொல்வது போல அமெரிக்க வல்லரசின் சமூக நலத்திட்டங்கள் தோல்வியுறவில்லை. அது அடிப்படையிலே போங்கானது. விபச்சாரத்தில் தள்ளிவிடும் தன் நிதர்சன நிலைமையை அறிவித்து முழுக்கவும் அம்மணமாக நிற்கிறது அமெரிக்க சமூக நலத்திட்டங்கள்.

ஆனால் உலகெங்கிலும் களநிலைமையோ, சுரண்டலுக்கு எதிராக மக்களிடம் எழும் கொந்தளிப்பை அடக்கி ஆள்வதற்கு முதலாளித்துவ கும்பல் தற்காப்பு நிலையில் இருப்பதற்குத் தோதான சமூக நலத்திட்டங்களின் காலம் காலாவதியாகிவிட்டதைச் சொல்கிறது. இப்பொழுது முதலாளித்துவ கும்பல் மூர்க்கத்தனமாக மக்களைத் தாக்கிவருகிறது.

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் அமெரிக்காதான் சொந்த நாட்டு மக்களை நரகத்தில் தள்ளியிருக்கிறது. விரைவில் அமெரிக்க ஏழைகளும் அகதிகளாய் வெளிநாடுகளுக்கு ஓடும் காலம் வரலாம். எனினும் அப்போதும் அமெரிக்காவை வெட்கம்கெட்டு ஆதரிப்பதற்கும், ஜே போடுவதற்கும் இங்கே இலக்கியம் முதல் அரசியல் வரை பல்வேறு அற்பங்கள் அணிவகுக்கும்.

– இளங்கோ

செய்தி ஆதாரங்கள்

  1. Impossible Choices
  2. US teens often forced to trade sex work for food, study finds