இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கான நிதியாதாரம் ஆண்டாண்டு அதிகரிக்கும் அதேநேரத்தில் பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உலகின் 6-வது பெரிய இராணுவ செலவாளியாக ‘பெருமைப்’ படும் இந்தியா, சமூகப் பாதுகாப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் கூட இல்லை. இதற்காக யார் வெட்கப்படுகிறார்கள்?

இந்தியாவின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி 2004-2005 ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் அதிகரித்து 2016-2017 ஆண்டில் 3,40,922 கோடிகள்(ஓய்வூதியம் உள்ளிட்டு) என எகிறி இருக்கிறது. இது 2016-2017 ஆண்டிற்கான வரவுசெலவில் 17.4 விழுக்காடும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(G.D.P) 2.3 விழுக்காடும் ஆகும். பாதுகாப்புத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் அக்மார்க் தேசபக்தர்கள் இந்த ஒதுக்கீடு போதாதென்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடுகளாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சீனா தனது இராணுவ வலிமைக்காக அதிக நிதியை ஒதுக்குவதால் அதற்குத் தக்க பதிலடி கொடுக்க இந்தியாவும் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கவேண்டும் என்பதே இவர்கள் முன்வைக்கும் வாதம். ஆனால் அதே சீனா தன்னுடைய மக்களுக்காக ஒதுக்கும் சமூகப்பாதுகாப்பு நிதியோடு இவர்கள் ஒப்பிடத் தயாரில்லை. மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு மெல்லிய அளவில் முரண்படும் சீனாவின் இராணுவ வலிமையோடு இந்தியா எப்படி போட்டி போட முடியும்? அதிகபட்சம் இந்த பூச்சாண்டியை காட்டி விலை போகாத அமெரிக்க ஆயுதங்களை இந்தியாவின் தலையில் கட்டுவதைத் தவிர வேறு என்ன நடக்கும்?
இலட்சக்கணக்கான கோடிகள் பாதுகாப்பிற்காக கொட்டினாலும் ஒபாமாவின் இந்தியப் பயணத்தில் அவரது பாதுகாப்பிற்கான கவசவாகனங்கள் மற்றும் விமானம் கூட அமெரிக்காவில் இருந்துதான் கொண்டு வரப்பட்டது. ஆக தன் அதிபரின் பாதுகாப்பைக் கூட இந்தியாவை நம்பி விடாத அமெரிக்காதான் இந்தியாவை வைத்து சீனாவை மிரட்ட போகிறதா என்ன?

ஒபாமா விஜயத்தின் போது டெல்லியைச் சுற்றி 400 கிலோமீட்டர் சுற்றுவட்டதிற்குள் விமானங்கள் பறக்கத்தடை, டெல்லி மெட்ரோ ரயில்நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்துக்கான பாதைகள் அனைத்தும் முன்னதாகவே கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டது என ஆண்டை அமெரிக்கா காலால் இட்ட ஆணைகள் அனைத்தையும் சிரம்மேல் போட்டு நிறைவேற்றியது மோடி அரசு.
இந்த இலட்சணத்தில் மோடியின் ஆப்ரிக்கப் பயணத்தை ஒட்டி ஆப்ரிக்கா நாடுகளின் வி.ஐ.பிக்களை பாதுகாப்பது எப்படி என்றும் முக்கியமான பாதுகாப்புக் கட்டமைப்பைப் குறித்தும் இந்தியாப் பயிற்சி அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படிப் பார்த்தால் வி.ஐ.பி பாதுகாப்பு குறித்து இந்தியா என்ன பாகிஸ்தான் கூட ஆப்ரிக்காவுக்கு சொல்லிக் கொடுக்க முடியும். ஏனெனில் இரு நாடுகளும் மக்களைப் பாதுகாக்காமல் தலைவர்களை மட்டும்தானே பாதுகாக்கின்றன?
ஒபாமாவைப் பாதுகாக்கவும் மோடியை காப்பாற்றவும் பம்பரமாய் சுற்றி வேலை செய்யும் இந்திய அரசு, தமது சொந்தப் பெண்களைப் பாதுகாக்க என்ன செய்தது? உலகமே அதிர்ந்து நின்ற நிற்பயா வன்புணர்வுப் படுகொலைத் தொடங்கி வினுப்ரியா தற்கொலைவரை பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இங்கே என்ன வாழ்கிறது? வினுப்பிரியா புகார் கொடுத்த போது போலீஸ் திமிராக நடந்து கொண்டதுதான் இந்நாட்டின் யதார்த்தமெனில் யார் புகார் கொடுப்பார்கள்? யார் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்?

கடந்த பத்தாண்டுகளில்(2014-15) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தேசியக் குற்றப்பதிவு மையத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தலைநகரம் டெல்லிதான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவின் சராசரியை விட மூன்றுமடங்கு அதிகமாக உள்ளது. 2015-ம் ஆண்டின் முதல் 8 மதங்களில் பதியப்பட்ட பாலியல் கொடுமைகளுக்கான வழக்குகள் 7,124- ல் ஒரு வழக்கு மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளது. இந்த விதத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலும் இந்தியாவின் தலைநகரம் என்ற இழிபெயரை காத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 2009-ம் ஆண்டு முதல் 40,000 கோமாதாக்கள் காப்பற்றப்பட்டிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிசத் ஓநாய் கண்ணீர் விடும் அதே மண்ணில் கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட கொடுமைகளின் எண்ணிக்கை மட்டும் 1,75,593 ஆகும். கணக்கில் வராதது ஏராளம். சொந்தப்பெண்களை இப்படி கொடுமைப்படுத்தும் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள்தான் மாடு முதல்நாடு வரை சீன் போடுகிறார்கள்.
பாரதமாதாவின் கிராமங்களில் ரேப் என்பதே கிடையாது, ரேப் என்பதே மேற்கத்திய கலாச்சாரத்தின் இறக்குமதி என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அடித்துவிடுகிறார். சரிதான். இந்தியாவில் ரேப் என்பது குற்றமல்ல, பார்ப்பனிய சமூக அமைப்பு பெண்களுக்கு வழங்கும் தண்டனை என்பதால் ரேப்பை குற்றமாக பார்க்கும் மேற்கத்திய பார்வையை இந்த கிழக்கத்திய ஜந்து நிராகரிக்கிறது. அதனால்தான் இவர்கள் பில் கிளிண்டனை கிருஷ்ண பரமாத்மா என்று வாழ்த்தின. மோனிகா லிவிகின்ஸ்கி – கோபியர் முதலான பெண்களின் காவலர்களுக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள்!
காஷ்மீர், இந்தியாவின் மையப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப்படைகள் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் வன்முறைகள் தனி.
“இந்தியாவில் பயணம் செய்யும்போது, அது குழுப்பயணமாக இருந்தால் கூட பெண்கள் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும்” என்று தனது மக்களுக்கு ஆலோசனை கூறுகிறது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகள். அவர்களின் இணையப் பக்கத்திலேயே இந்த எச்சரிக்கை ஜொலிக்கிறது.
ஒரு நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, எனவே கவனமாக இருங்கள் என்று ஒரு நாடு கூறுகிறது என்றால் இதையெல்லாம் மானக்கேடாக பார்க்க பாரதமாதா தேசபக்தர்கள் தயாரில்லை. இந்த இலட்சணத்தில் இந்தியாவின் இராணுவ வல்லமை, அணுகுண்டு, ஏவுகணை தொழில்நுட்பம் போன்றவற்றை வைத்து காலரை நிமிர்த்தி என்ன பயன்? இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகிறாள் என்ற உண்மை இருக்கும் போது இந்த நாடும் மக்களும் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?
– சுந்தரம்.
செய்தி ஆதாரம்:
India ranks lower than even Nepal
You’re quick to put CCTV cameras for Obama, why not for Indians: Delhi High Court to government
India to teach Africa how to protect VIPs
Crimes against women reported every two minutes in India
Foreign travel advice India
Gang rape videos on sale in India amid rise in violent crimes against women