“உங்களுக்குள் ஆதிக்க சாதிப் புத்தி இல்லையா?”
கையால் மலம் அள்ளும் பணியையும் உலர் கழிப்பிடங்கள் கட்டுவதையும் தடை செய்யும் 2013-ஆம் ஆண்டு சட்டத்தைக் கண்டிப்போடு நடைமுறைப்படுத்தக் கோரி, “எங்களைக் கொல்லாதீர்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்துத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய நாடு தழுவிய பேரணி, அசாமில் டிசம்பர் 10, 2015-இல் தொடங்கி, அம்பேத்கரின் 125 பிறந்த தின நிறைவு நாளான 13, ஏப்ரல் 2016 அன்று டெல்லியில் முடிவடைந்தது. இப்பேரணி நடந்துகொண்டிருந்த சமயத்தில்தான், சென்னை, துரைப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் அடைபட்டுப் போன பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்ய இறங்கிய நான்கு தொழிலாளர்களுள், மூன்று பேர் விஷவாயு தாக்கி இறந்து போனார்கள்; மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.

மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவத்தைத் தமிழக போலீசு 2013-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வழக்காகப் பதிவு செய்யவில்லை. அதிகார வர்க்கத்தின் இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து தூய்மைப் பணியாளர் சங்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் போராடிய பிறகுதான் அச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், இறந்து போன அந்த மூன்று தொழிலாளர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து உயிர் பிழைத்த மற்றொரு தொழிலாளிக்கும் உச்சநீதி மன்ற உத்தரவுப்படி கொடுக்க வேண்டிய இழப்பீடைத் தர மறுத்து வருகிறது, தமிழக அரசு.
நாடு ‘சுதந்திரமடைந்து’ 46 ஆண்டுகள் கழித்துதான், கையால் மலம் அள்ளும் அடிமைத் தொழிலைத் தடை செய்யும் சட்டத்தை மைய அரசு இயற்றியது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து 2013-இல் அச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இப்புதிய சட்டம் தொடர்பாகத் தூய்மைப் பணியாளர் இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், “அவசரமான, ஆபத்தான காலங்களில்கூட மலக் குழிகள் மற்றும் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்வதற்கு மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது; 1993-ஆம் ஆண்டு தொடங்கி, பணியின்போது இறந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்க வேண்டும்” என 2014-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

“உச்சநீதி மன்றம் உத்தரவு வெளியான பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாடெங்கும் 1,370 தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது விஷவாயு தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் 26 பேருக்கு மட்டுமே நட்ட ஈடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் வெறும் 8 பேருக்கு மட்டும்தான் பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்கப்பட்டிருப்பதாக”க் கூறுகிறார், தூய்மைப் பணியாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெஜவாடா வில்சன்.
அனைத்து மாநில அரசுகளுமே உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதில் அலட்சியமாக நடந்து வருகின்றன என்றபோதும், தமிழகத்தை ஆளும் அ.தி,மு.க. அரசுதான், இவ்வளவு நட்ட ஈட்டுத் தொகையை வழங்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் வழக்காடி வருகிறது. சென்னை மாநகராட்சி மூன்று இலட்ச ரூபாய்தான் நட்ட ஈடு அளிக்க முடியும் எனத் தீர்மானமே நிறைவேற்றி, உச்சநீதி மன்ற உத்தரவை மறுத்திருக்கிறது.
* * *

1993-க்குப் பிறகு தமிழகத்தில் பாதாளசாக்கடை அடைப்பை நீக்க அதனுள் இறங்கியபோது, விஷவாயு தாக்கி இறந்துபோன 150 தூய்மைப் பணியாளர்களுக்கும் உச்சநீதி மன்ற உத்தரவுப்படி தமிழக அரசு பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி “மாற்றத்திற்கான இந்தியா” என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாடம் நாராயணன் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் அரசுத் துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்க முடியுமென்றும், காண்டிராக்டர்கள் கீழ் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கோ, தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஏற்பட்ட சாக்கடை அடைப்புகளை நீக்கப் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி இறந்து போனவர்களுக்கோ இழப்பீடு வழங்க முடியாது என்றும் வாதிட்டு வருகிறது, தமிழக அரசு.
தமிழக அரசின் இந்த வாதமே மோசடியானது. அரசுத் துறைகளில் பணியின் போது இறந்துபோன தூய்மைப் பணியாளர்களுக்கும் அ.தி.மு.க. அரசு உச்சநீதி மன்ற உத்தரவுப்படி பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்கவில்லை என்பதே உண்மை. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், “அரசு, தனியார் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, பணியின்போது இறந்து போகும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடை அரசு அளிக்க வேண்டும்” என உச்சநீதி மன்றம் தனது உத்தரவு குறித்து விளக்கம் அளித்திருந்தும் ஜெயா அரசு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

உச்சநீதி மன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக உயர்நீதி மன்றத்தில் ஆணவத்தோடு தெரிவித்துள்ள ஜெயா அரசு, தமிழகத்தில் இறந்துபோன 41 தூய்மைப் பணியாளர்களின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அலட்சியமாக பதில் அளித்திருக்கிறது.
ஜெயா அரசைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு கொடுப்பது அதீதமானது; அவரது அரசு போடும் ஒரு இலட்ச ரூபாய், இரண்டு இலட்ச ரூபாய் பிச்சை நிவாரணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டு வாயை மூடிக் கொள்ள வேண்டும் என அகம்பாவத்தோடும் ஏளனத்தோடும் நடந்து வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் கத்திக் குத்துப்பட்டு இறந்து போன முனுசாமி என்ற தலைமைக் காவலருக்கு முதலில் ஐந்து இலட்ச ரூபாய் நிவாரண உதவியை அறிவித்த ஜெயா, அதன் பிறகு, எந்த வித சட்டம் அல்லது மரபுக்கும் உட்படாத வண்ணம் ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியை வாரி வழங்கினார். மேலும், பணியின் போது இறந்து போகும் போலீசாருக்கு வழங்கப்படும் நிவாரண உதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவித்து, தன்னை போலீசின் காவல் தெய்வமாகக் காட்டிக் கொண்டார்.

அதே நேரத்தில், பணியின் போது இறந்து போன தூய்மைப் பணியாளருக்கு சட்டம் கொடுக்கச் சொல்லும் நிவாரண உதவியை அளிக்க மறுப்பதற்கு, இந்தத் தொழில் இழிவானது, இந்தத் தொழிலில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட சாதியினர் இழிவானவர்கள் என்ற பார்ப்பன சாதிப் புத்தி தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.
சத்துணவு பணியாளர்கள் தொடங்கி சாலைப் பணியாளர்கள் வரை தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பிரிவு போராடினாலும், உடல் ஊனமுற்றோர் தொடங்கி விவசாயிகள் ஈறாக சமூகத்தின் எந்தப் பிரிவும் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும், அவற்றையெல்லாம் மூட்டைப் பூச்சி போல நசுக்கிவிட வேண்டும் என்ற பார்ப்பன பாசிச புத்தி கொண்ட ஜெயா, தாழ்த்தப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்ட பிரிவினரான தூய்மைப் பணியாளர்கள் தமக்கு வழங்க வேண்டிய சட்டபூர்வ நிவாரணத்தைக் கோரினால், அதற்காகப் போராடினால் பொறுத்துக் கொள்வாரா?
பணியின் போது இறந்துபோன அந்த போலீசுக்காரனின் சாவைவிட, தூய்மைப் பணியாளர்களின் அகால மரணங்கள் எந்தவிதத்தில் குறைந்தது? சாமானியர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பதும், கொள்ளையர்களோடு கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு பங்கு போட்டுக் கொள்வதும்தான் போலீசின் பணி. போலீசு ”கடமையாற்றுவது” நின்றுபோனால், சமூகத்திற்கு நட்டமேதும் இல்லை. ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இல்லையென்றால்….? நகரங்கள் அனைத்தும் நரகமாகிவிடாதா?
அவர்கள் குப்பையில் கைவைக்காமல் போனால், மலக்குழிக்குள் இறங்க மறுத்தால் நகரத்தின் மக்கள்தொகை முழுவதும் கொள்ளை நோய் வந்து சாக வேண்டியிருக்கும். தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருநாளும் பொது சமூகத்தின் நலனுக்காக, அதனின் சுகாதாரத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைக்கிறார்கள் என்பதே உண்மை. பெருமழை, வெள்ளத்தின்பின்னே குப்பைக் காடாக, தொற்று நோய்களின் கிடங்காகக் கிடந்த சென்னையை வாழத்தக்கதாக மாற்றியவர்கள் அவர்கள் என்பதை நன்றியுள்ள யாரும் மறந்துவிட முடியாது.
* * *
தாழ்த்தப்பட்டோர் மீது ஏவப்படும் தனிக் குவளை, தனிச் சுடுகாடு, தனிக் குடியிருப்பு உள்ளிட்ட வன்கொடுமைகளிலேயே மிகக் கொடூரமானது, குப்பையை, மலத்தை, சாக்கடை கழிவுகளை அள்ளிச் சுத்தம் செய்யும் அடிமைத் தொழிலை அவர்கள் மீது சுமத்தியிருப்பதுதான். இந்த இழிவைத் தடைசெய்வது என்ற பெயரில் 1993-ஆம் கொண்டுவரப்பட்ட சட்டம் மனித மலத்தை மனிதர்களைக் கொண்டு அகற்றுவதை மட்டுமே தடை செய்ததே தவிர, மலக்குழிகள், திறந்தவெளி மற்றும் பாதாளச் சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கிச் சுத்தம் செய்வதைத் தடை செய்யவில்லை. மேலும், இந்த அரைகுறையான, ஒப்புக்குச் சப்பாணியான சட்டத்தைக்கூட 1997 வரை அரசிதழில் மைய அரசு வெளியிடவில்லை. 2000-ஆம் ஆண்டு வரை எந்தவொரு மாநில அரசும் மத்திய சட்டத்தின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றவும் இல்லை.
கழிப்பறை காகிதத்திற்கு இருக்கும் மதிப்புகூட 1993 சட்டத்திற்கு இல்லாதிருந்த நிலையில், தூய்மைப் பணியாளர் இயக்கம் உள்ளிட்ட சில தன்னார்வக் குழுக்களும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேரும் இணைந்து, இந்த அடிமைத் தொழிலை உடனடியாக நாடெங்கும் தடை செய்யுவும், தூய்மைப் பணியாளர்களின் மறுவாழ்வுக்கு நிவாரணம் வழங்கவும் கோரி பொதுநல வழக்கொன்றை 2003-இல் உச்சநீதி மன்றத்தில் தொடுத்தனர்.
இந்த வழக்கு ஏறத்தாழ 11 ஆண்டுகள் உச்சநீதி மன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டது. மைய அரசும் மாநில அரசுகளும் 1993-ஆம் இயற்றப்பட்ட சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது போலவும்; ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே இல்லை என்றும், அவர்கள் அனைவரும் அதிலிருந்து விடுவிக்கப்பட்டவிட்டது போலவும் உச்சநீதி மன்றத்தில் சாதித்தன. இந்தப் பொய்களையும் புனைசுருட்டுகளையும் முறியடிக்கும் விதத்தில் பல்வேறு ஆதாரங்களை உச்சநீதி மன்றத்திடம் தூய்மைப் பணியாளர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் எடுத்து வைத்தன.
குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, “இந்தியாவில் 26 இலட்சம் உலர் கழிப்பிடங்கள் இருப்பதையும், அதில் கிட்டதட்ட எட்டு இலட்சம் கழிப்பிடங்கள் மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்படுவதையும், நாடெங்கும் 1,80,657 மலம் அள்ளும் தொழிலாளர் குடும்பங்கள் இருப்பதையும், இவர்களுள் 98 சதவீதப் பேர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்பதையும்” பதிவு செய்தது.
தமிழகத்தில் மனிதர்களால் சுத்தப்படுத்தப்படும் 27,659 உலர் கழிப்பிடங்களும் ஏறத்தாழ 1,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் குடும்பங்கள் இருப்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவுகள் நிறுவின.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இயக்கங்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்த போராட்டங்களின் காரணமாக, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் இந்தியாவில் கையால் மலம் அள்ளும் அடிமைத் தொழிலும், தொழிலாளர்களும் இருப்பது உலகு தழுவிய அளவில் அம்பலப்பட்டுப் போன நிலையில்தான், இந்திய அரசு தனது கௌவரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்து 1993-இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து 2013-ஆம் ஆண்டில் புதிய சட்டத்தை அறிவித்தது.
இப்புதிய சட்டம் உலர் கழிப்பிடங்களையும், கையால் மலம் அள்ளுவதையும் தடை செய்ததோடு, மலக் குழிகள் (septic tanks), திறந்தவெளி சாக்கடைகள் ஆகியவற்றில் ஏற்படும் அடைப்புகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்வதையும் தடை செய்தது. மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளுதல், கழிவு நீர் அடைப்புகளைச் சுத்தம் செய்தல் ஆகியவற்றை 2019-க்குள் முற்றிலுமாக ஒழித்து விடுவதை இலட்சியமாக அறிவித்தது, இச்சட்டம். இதற்காக மாநில, மத்திய அளவிலும் கண்காணிப்பு கமிட்டிகளை அமைப்பது, தூய்மைப் பணியாளர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, அதற்காகப் பல்வேறு நிதியுதவி திட்டங்கள் எனத் தடபுடலாக இயற்றப்பட்டிருந்தாலும், இவை எதுவும் நடைமுறையில் தூய்மைப் பணியாளர்களின் துயரத்தைக் கடுகளவுகூடத் துடைக்கவில்லை.
2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சட்டத்தை ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து, நத்தை வேகத்தில் 2015-இல்தான் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தூய்மைப் பணியாளர்களைக் கணக்கெடுக்கும் பணி மைய அரசு விதித்த கெடுவுக்குள் நடைபெறவில்லை என்பதோடு, அதற்குப் பிறகு நடத்தப்பட்ட இக்கணக்கெடுக்கும் பணி வெறும் கண்துடைப்பாக முடிந்து போனது.
இச்சட்டத்தின்படி மாவட்ட மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட வேண்டிய கண்காணிப்புக் குழுக்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்படவேயில்லை. இக்குழுக்கள் அமைக்கப்பட்ட இடங்களில், அவை அதிகார வர்க்க போட்டி, பொறாமைக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார், கீதா ராமசாமி என்ற சமூக ஆர்வலர்.
தனியாரும், உள்ளூர் அரசு நிர்வாக அமைப்புகளும் கழிவு நீர் அடைப்புகளை அகற்றுவதற்குத் தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்துவது நாடெங்கும் பரவலாக நடந்து வந்தாலும், இச்சட்ட மீறலுக்காக யார் மீதும் வழக்குப் பதியப்படுவதில்லை. மலக்குழிக்குள்ளும், பாதாளச் சாக்கடையில் இறக்கிவிடப்படும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறந்துபோனால்கூட, அவ்வழக்குகள் 2013-ஆம் சட்டப்படியோ, வன்கொடுமைச் சட்டத்தின் கீழோ பதிவு செய்யப்படாமல், மிகச் சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.
வன்கொடுமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அளவிற்குக்கூட, மனிதக் கழிவுகள் அகற்றுதல் மற்றும் திறந்தவெளி கழிவறைகள் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கிறது, அதிகார வர்க்கம். அரியானாவைச் சேர்ந்த ஒரு அதிகாரி, “தூய்மைப் பணியாளர்கள் கையால் மலத்தை அள்ளினாலும், அக்கழிவைத் தமது தலையில் சுமந்தபடி செல்வதில்லை; அதனால், தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கையால் மலத்தை அள்ளும் தொழிலாளர்களே இல்லை” என்று அறிக்கை அளித்திருக்கிறார்.
இரயில்வே துறை தனது இரயில்களிலும் இரயில்வே நிலையங்களிலும் உள்ள 80,000 உலர் கழிப்பிடங்களையும், இரயில்வே பாதைகளையும் சுத்தப்படுத்துவதற்கு மனிதர்களைப் பயன்படுத்துவது ஊரே அறிந்த உண்மை என்றாலும், அத்துறை, “கையுறைகளை மாட்டிக்கொண்டு மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்வதால், தனது துறையில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே இல்லை” என்று சாதிக்கிறது.
இச்சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ வழக்குத் தொடர முடியாது. அந்தப் பொறுப்பும் கடமையும் அதிகார வர்க்கத்திடம் ஒப்படைக்கிறது, 2013-ஆம் ஆண்டு சட்டம். அதேபொழுதில், தனது கடமையைச் செய்யத் தவறும் அதிகார வர்க்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாதபடி அவர்களுக்குப் பாதுகாப்பும் அளிக்கிறது.
* * *
மனித மலத்தை மனிதனைச் சுமக்க வைக்கும் அநாகரிகத்தை இன்னமும் அனுமதித்துக் கொண்டே, நாட்டின் வளர்ச்சி குறித்து, அறிவியல் சாதனைகள் குறித்துப் பீற்றிக் கொள்வது அருவருக்கத்தக்க வெட்கக்கேடு. சாக்கடை, மலக்குழி அடைப்புகளைச் சுத்தம் செய்வதை இயந்திரமயமாக்குவதன் மூலம் இந்த சாதிரீதியான அடிமைத் தொழிலை ஒழித்துக் கட்டிவிட முடியும். கை ரிக்சா, கைவண்டி போன்ற நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாத தொழில்களை ஒழித்துக் கட்டிய அரசும் சமூகமும் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே சுமத்தப்பட்டுள்ள இந்த அடிமைத் தொழிலை இன்னுமும் ஒழிக்காமல் இருப்பதன் காரணம் வெளிப்படையானது. அது, சமூகத்தின் பொதுப்புத்தியிலும், அரசாங்கத்திலும் ஊறிப்போயுள்ள இந்து ஆதிக்க சாதிப் புத்தி.
கும்பமேளா போன்ற இந்து மத திருவிழா கூட்டங்களில் சிக்கிச் செத்துப் போகும் பக்தர்களுக்கு இழப்பீடு அளிப்பதில் தாராள மனதோடு நடந்துகொள்ளும் இந்த ஆதிக்க சாதிப்புத்திதான், விஷவாயு தாக்கி இறந்து போகும் தூய்மைப் பணியாளருக்குப் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க மறுக்கிறது. கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை விடுவிப்பது என்ற பெயரில் அவர்களைப் பொதுக் கழிப்பிடங்களைப் பராமரிக்குமாறு தள்ளிவிடுகிறது. தூய்மை இந்தியா குறித்து நாக்கைச் சுழற்றிப் பேசும் அரசும் சமூகமும் வெள்ளத்தால் ஊரே நாறிப் போகும் அவசர காலங்களில்கூட, அதனைச் சுத்தம் செய்யும் பெரும் பொறுப்பைத் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டும் சுமத்திவிட்டு, ஒதுங்கிக் கொள்கிறது. பார்ப்பன பித்தலாட்டமான ”தூய்மை இந்தியா” திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாயை ஒதுக்கும் மோடி அரசு, மறுபுறம் தூய்மைப் பணியாளர்களின் நிவாரண ஒதுக்கீடை 4,000 கோடி ரூபாயிலிருந்து வெறும் 10 கோடி ரூபாயாக வெட்டுகிறது.
அனைத்திற்கும் மேலாக, இந்த அநாகரிகமான அடிமைத் தொழிலைத் தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்துவதைத் தீண்டாமைக் குற்றமாகப் பார்க்க மறுப்பதோடு, இந்த இழிதொழிலை ஒழித்துக் கட்டப் போவதாக அறிவித்துக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கழிப்பறை காகிதமாக்கி வீசுகிறது.
– செல்வம்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________