Sunday, January 16, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 3

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 3

-

இந்தியப் போலி மார்க்சிஸ்டுகளின் சித்தாந்த குரு சங்கரன் நம்பூதிரி மற்றும் அவரது சீடர்களின் மார்க்சிய வரலாற்று ஆய்வுகளும் முடிவுகளும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் ”இந்துத்துவ”க் கோட்பாடுகளும் அடிப்படையில் வேறானவை அல்ல. முன்னவை வஞ்சகமும் துரோகமும் நிறைத்து மூடி மறைக்கப்பட்ட தத்துவ வரலாற்றுப் புரட்டுகள்; பின்னவை பகிரங்கமான பாசிச வெறி நிரம்பியவை. பொதுவில் இதை நிருபிக்கும் வகையில் இத்தொடரின் முதற்பகுதி அமைந்தது; குறிப்பாக ஆரியர் ஆக்கிரமிப்பு அழிவு வேலைகளை மூடிமறைத்து நியாயம் கற்பிக்கும் முயற்சியில் இவர்களுக்கிடையிலான ஒற்றுமையை நிருபிக்கும் வகையில் இரண்டாம் பகுதி அமைந்தது. வருணாசிரம் சாதிய அமைப்பு ஆகியவற்றை உருவாக்கி ஆரிய, பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட வரலாற்றை எப்படிப் போலி மார்க்சிஸ்டுகள் திரித்துப் புரட்டுகிறார்கள் அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுடன் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பதை இந்தப்பகுதியில் பார்ப்போம்.

Brahmin
அறிவுத்துறையில் மட்டும் ஈடுபடுவோர் பிரதானமாக புரோகிதத் தொழிலில் ஈடுபடுவோர் பிராமணர்களாயினர்.

வருணாசிரம சாதிய அமைப்பு முறை ஆரிய பார்ப்பன ஆதிக்கத்துக்காக அவர்களால் உருவாக்கப்பட்டதில்லை; சமூகப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, தன்னியல்பான தேவையின் அடிப்படையில் ஏற்பட்ட வேலைப் பிரிவினையின் காரணமாகத் தானே தோன்றியதுதான் என்று கூறித் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர் நம்பூதிரியும் அவரது சீடர்களும்.

“வாழ்க்கையின் தேவையிலிருந்து எழுந்த தொழில் பிரிவினையே இந்த நால்வருண முறையின் அடிப்படையாக இருந்தது. மற்ற நாடுகளில் பெரும்பாலும் அடிமை. ஆண்டை என்ற இரு வர்க்கத்தினராகவே இருந்தனர். இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் ஆண்டைகளே மூன்று வருணத்தினர் – வர்க்கத்தினர் – ஆயினர். அடிமைகள் சூத்திரர்கள் ஒரு வருணம் – ஒரு வர்க்கமாயினர்” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக்.26)

“சிந்துநதி நாகரிகம் நலிவுற்று ஒரு சூன்யநிலை தோன்றியிருந்த நிலையில் தான் வடஇந்தியாவில் கங்கை நதி நாகரிகத்தின் பிரதிநிதிகள் – ஆரியர்கள் ஆதிக்க நிலையைப் பெறுவது சுலபமாக இருந்தது. ஆரியர்கள் இங்கு வந்த போது வளர்ந்து கொண்டிருந்த விவசாயம், சிறு அளவிலான கைத்தொழில்கள், பண்டப்பரிவர்த்தனை ஆகிய உற்பத்தி விநியோக முறை தங்குதடையின்றி நடைபெறுவது சமூக வாழ்க்கையின் அடிப்படை அம்சமாக இருந்தது. இந்த உற்பத்தியை மேலும் பெருக்குவது, சமுதாயத்தில் ஒரு பிரிவினர் உடல் உழைப்பில் ஈடுபடாமல் அறிவுத்துறையில் மட்டுமே ஈடுபடுவதற்காக உழைப்பவர் ஒவ்வொருவரும் தங்களின் தேவைக்காக மட்டும் உற்பத்தி செய்வதோடன்றி உழைக்காமல் வாழும் பகுதியினருக்காகவும் உழைப்பது, உபரி உற்பத்தி செய்வது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் தேவையாகிறது; இதற்கேற்ப சமுதாயத்தின் வாழ்க்கை முறை உருவாக்கப்பட்டது. இதற்கேற்ப அறிவுத்துறையில் மட்டும் ஈடுபடுவோர் பிரதானமாக புரோகிதத் தொழிலில் ஈடுபடுவோர் பிராமணர்களாயினர். குலத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் சத்திரியர் ஆயினர். வேளாண்மையிலும் பண்ட உற்பத்தியிலும் ஈடுபடுவோர் வைசியர்களாயினர். உடலுழைப்பில் ஈடுபட்டு பொருளுற்பத்தி செய்வோர் சூத்திரர்களாயினர். இந்த நான்கு பிரிவினரும் நான்கு வருணமாக அழைக்கப்பட்டது” (மார்க்சிஸ்டு 1993 டிச பக்.28)

இந்த நால் வருணமுறைதான் இந்திய சமுதாயத்தின் அடிமைமுறை. இது மிகக் கொடுமையானது என்றாலும் உலகின் எல்லா நாடுகளும் அவற்றின் வரலாற்றில் ஒரு கட்டத்தில் அடிமை ஆண்டை முறையைக் கடந்துதான் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்துள்ளன. இதுதான் சமூக விஞ்ஞானம் உணர்த்தும் உண்மை. இந்திய அடிமைச் சமுதாயமான நால் வருண அமைப்பு முறை யாராலும் முன்னதாகத் திட்டமிட்டு, உருவாக்கப்பட்டதல்ல. ஆரிய, திராவிட இன மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அமைப்பு இது. இத்தகைய அமைப்பு தோன்றிய பின் அதனை உறுதிப்படுத்தவும், அதில் ஆதிக்கம் பெற்றவர்கள் அதனை நிரந்தரப்படுத்தவும் தான் அதற்குத் தெய்வீகத்தன்மை கற்பித்தனர்.

namboothiri
E.M.S நம்பூதிரி

இதுதான் நமதுநாட்டில் நால் வருணமுறை தோன்றியதன் வரலாறு என்று புளுகுகிறார்கள் போலி மார்க்சிஸ்டுகள். அதுமட்டுமல்ல இந்த நால்வருண முறையினால் இந்தியா சகல துறைகளிலும் முன்னேறியது என்று ஏகமாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

“இந்த அமைப்பு தோன்றிய பின் இதுதான் இந்தியாவின் பொருளாதார, அரசியல், கலாச்சார வளர்ச்சியை உருவாக்கியது. இந்த சமுதாயத்தின் பெரும்பாலோராக இருந்த சூத்திரர்களின் – அடிமைகளின் உடலுழைப்பினால் உற்பத்தி பெருகியது. அவர்களின் தேவைக்கு மேல் உபரி ஏற்பட்டது. அதனை உண்டு உடலுழைப்பில் ஈடுபடாமல் அறிவுத் துறையில் மட்டும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஒரு பகுதியினருக்குக் கிடைத்தது. இதனால் கல்வி, கலாச்சாரத் துறைகளில் சமுதாயம் முன்னேற வாய்ப்புக் கிடைத்தது. இது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவியது”

“நால் வருணமுறையும் சாதீய முறையும் இந்தியச் சமுக வளர்ச்சிப் போக்கின் பொருளுற்பத்தி, விநியோக முறையின் தவிர்க்க முடியாத விளைவுகளாகவே தோன்றின. ஆனால் இவைகளுக்குத் தெய்வீகத்தன்மை கற்பித்து நிரந்தரமாக்கியதுதான் ஆதிக்கம் செலுத்திய கூட்டத்தினர் செய்த கொடுமை, வேதங்கள் இதற்கும் பயன்பட்டுள்ளன. ஆனால், இக்காலத்தில்தான் இந்திய நாடு, இந்திய மக்கள், இந்தியச் சமுதாயம் என்று உருவாகியது. அது ஆரம்பத்தில் பாரத தேசம் என்று அறியப்பட்டது. பிற்காலத்தில் இந்தியா என்று ஆகியது. வேதங்களும் இதிகாசங்களும் இதில் பெரும்பங்காற்றின. இக்காலத்தில் இந்திய உபகண்டத்தில் பல்வேறு பிரிவு மக்களின் மொழிகள் வளர்ச்சியடைந்தன. பல மொழிகளுக்கு எழுத்தும் இலக்கணமும் தோன்றின. பல மொழிகளில் புகழ்பெற்ற இலக்கியங்களும் இதிகாசங்களும் தோன்றின. கலைகளும் கலாச்சாரங்களும் பெரும் அளவில் வளர்ச்சிபெற்றன – விஞ்ஞானத்தின் பல துறைகளிலும் இந்திய நாடு ஒரு கட்டம் வரை முன்னேறியது. …..கி.பி. முதலாம் நூற்றாண்டுமுதல் 12ம் நூற்றாண்டு வரை இந்தக் கண்டுபிடிப்புகள் நடைபெற்றுள்ளன. தத்துவத் துறையில் இந்தியா மிகவும் முன்னேறிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருந்தது” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக். 33 – 35)

நன்றி: பிபிசி
நன்றி: பிபிசி

ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிஸ்டுகள் கூட இந்த அளவு ஆரிய ஆக்கிரமிப்புக்கும், அவர்கள் உருவாக்கிய நால்வருண முறைக்கும் வக்காலத்து வாங்க முடியாது. நால் வருணமுறைக்கு தெய்வத்தன்மை கற்பித்து நிரந்தரமாக்கியது தவிர ஆரியப் பார்ப்பனர்கள் வேறு எந்தவிதத் தவறும் அநீதியும் புரிந்துவிடவில்லை; சமூக, பொருளாதாரத் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு யாருடைய நலனையும் பாதிக்கவில்லை; மாறாக முன்னேற்றத்துக்கே உதவியது. இந்த சமூக அமைப்பு திராவிட இன மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு, நிர்ப்பந்தம் – வன்முறை, மூலம் திணிக்கப்பட்டதல்ல என்பதே போலி மார்க்சிஸ்டுகளின் வாதம்.

பூணூல் அணியும் உரிமையுடைய இரட்டைப் பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வருணத்தினராக ஆரியர்கள் மட்டுமே வைக்கப்பட்டனர்; அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர் உட்பட இந்தியப் பூர்வகுடிமக்கள் அனைவரும் சூத்திரர்களாகவே வைக்கப்பட்டனர். இதை ஒப்புக் கொள்ளும் போலி மார்க்சிஸ்டுகள் இத்தகைய பூர்வகுடி இனப் பிரிவின் அடிப்படையிலான நால்வருண சமூக அமைப்பு, ஒரு அடிமைச் சமுதாய அமைப்பு என்பதையும் ஒப்புக்கொண்டு, அதனால் அடிமைகளின் மீதான ஒடுக்குமுறை எதுவும் கிடையாது; திராவிட – சூத்திரர்களின் உடலுழைப்பு உபரி மட்டுமே ஆரியர்களால் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது; அதுவும் அறிவுத்துறையில் ஈடுபடும் சமூகநலன் கருதியே செய்தார்கள் என்பதாக வாதிடுகிறார்கள்.

“இதுதான் இந்தியாவின் முதல் சாதிய முறை அல்லது சாதீயத்திரை போர்த்தப்பட்ட அடிமைமுறை. ஆரம்ப காலத்தில் இதில் தொடக்கூடாமை, தீண்டாமை போன்ற பாகுபாடுகள் இருக்கவில்லை. தொழில் பிரிவினை மட்டுமே இருந்தது. இந்த நால் வருணத்தினருக்கு இடையில் மண உறவு உட்பட எல்லா விதமான உறவுகளும் இருந்தன. இதன் மூலம்தான் ஆரிய – திராவிட இன வேறுபாடுகள் மறைந்தன. தொடக்கூடாமை, தீண்டாமை எல்லாம் சமுதாய வளர்ச்சியின் இன்னொரு கட்டத்தில் நிலப் பிரபுத்துவ காலத்தில்தான் தோன்றியது” (மார்க்சிஸ்ட் 1993 ஜூலை, பக்.3).

வெள்ளை நிறவெறியும் இனவெறியும் பிடித்த ஆரியர்கள் கருப்பு நிறமும் வேறு இனத்தையும் சேர்ந்த மக்களிடம் இருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதையும், அடக்குமுறை சுரண்டலையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே நால் வருணமுறை. ஆனால், ஆரிய – திராவிட இனக் கலப்பு, நாகரிகக் கலப்பிற்குப் பிறகு ஏற்பட்டதுதான் என்றும் கூட தானே முன்னுக்குப் பின் முரணாகவும் போலி மார்க்சிஸ்டுகள் எழுதுகின்றனர்.

வலது சாவர்க்கர் நடுவில் கோல்வாக்கர்
வலது புறம் சாவர்க்கர் நடுவில் கோல்வாக்கர்

“ஆரியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் முன்னேறிப் பரவிய காலத்தில், அவர்களுக்கு முன் இங்கு வாழ்ந்து வந்த மக்களின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு ஆரியர்களும் திராவிடர்களும் இதரப் பூர்வகுடி மக்களும் இணைந்து, ஆரிய திராவிட நாகரீகங்கள் இணைந்து – இந்திய நாகரீகம் வளரத் தொடங்கியது. இந்தியாவில் இவ்வாறு வளர்ச்சியடைந்த நாகரீகம் முழுமையான ஆரிய நாகரீகமோ – வேத நாகரீகமோ – திராவிட நாகரீகமோ அல்ல. இரு இன மக்களும் இரண்டற இணைந்தது போலவே இரு இனங்களின் நாகரீகங்களும் இணைந்து உருவானதுதான் பிற்கால இந்திய நாகரிகம் அல்லது வேத நாகரீகம். இரண்டு இன மக்களும் அவர்களின் நாகரீகங்களும் இரண்டற இணைந்த போதிலும் ஆதிக்க நிலையில் ஆரியர்களும் அவர்களின் தத்துவமான வேதங்களுமே இருந்தன” (மார்க்சிஸ்ட்1993 டிச, பக்:28)

இரண்டு இனமக்களும், அவர்களின் நாகரீகங்களும் இரண்டறக் கலந்த பின் ஆரியர்களாகிய ஒரு இனத்தவரும், அவர்களின் தத்துவமான வேதங்களும் ஆதிக்கநிலை பெற்றிருந்ததாக போலி மார்க்சிஸ்டுகள் கூறுகின்றனர். இது சுய முரண்பாடாக அவர்களுக்குத் தெரியவில்லை. ஆரியர்களின் ஆக்கிரமிப்பு – அழிவு வேலைகளை முடி மறைக்கவும் அதன் காரணமாக அவர்கள் மீது இந்தியப் பூர்வகுடிமக்கள் கொண்டிருக்கும் நியாயமான ஆத்திரத்தை மழுங்கடிக்கவும் செய்யப்படும் பித்தலாட்டம்தான் இந்த இனக்கலப்பு – நாகரீகக் கலப்பு என்கிற வாதம்.

இதற்கு ஆதாரமாக போலி மார்க்சிஸ்டுகள் தமது சித்தாந்த மூலமாக மனு தர்மத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள். அது பின்வருமாறு :

“நால் வருணத்தாருக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பால் பிறந்தவர்களுக்குரிய ஒழுக்க மரபுகள் இங்கேதான் தோன்றின என்று கூறப்பட்டுள்ளது, தெளிவாக இல்லை. ஆனால் ஒன்று தெரிகிறது. சூத்திரர்கள் மற்ற வருணத்தாருடனான – மற்ற வருணத்தாரின் இனக்கலப்பு சர்வசாதாரணமாக இருந்து வந்துள்ளது. இந்த இனக்கலப்பின் மூலம் தான் பண்டைய ஆரிய – திராவிட நிறவழி இனங்கள் பெரும்பாலும் மறைந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. எப்படியும் நால் வருணத்தாருக்கிடையே இனக் கலப்பு நடைபெற்று வந்தது என்று மனுதர்மம் கூறுகிறது” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக்:32, 33)

இது ஒரு அப்பட்டமான பித்தலாட்டம். நால் வருணத்தாரிடையே கலப்பு மணத்தை மனுதர்மம் ஏற்றதாக அனுமதித்ததாக எங்கேயும் போலி மார்க்சிஸ்டுகளால் ஆதாரம் காட்ட முடியவில்லை. அவர்களே எடுத்துக்காட்டுமாறு “கலப்பால் பிறந்தவர்களுக்குரிய ஒழுக்க மரபுகள்” தான் மனுதர்மத்தில் உள்ளது. இதன் பொருள் எப்படி கலப்பு மணத்தை நால்வருணமுறை ஏற்றதாகக் கருதமுடியும். அதற்கு மாறாக கலப்பு மணத்தால் பிறந்தவர்களை சங்கர சாதியினர் என்று இழிநிலையில் வைப்பதும், சூத்திரர்களுக்குக் கலப்பு மண உரிமையை தடை செய்வதும்தான் மனுதர்மத்தில் உள்ளது.

சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது
சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது

“கலப்பு மணம் புரிதல் இன்று ஒரு புரட்சிகரமான காரியமாகப் பலர் கருதுகின்றனர். சாதீயப் பாகுபாடு அந்த அளவுக்கு இன்னும் நீடிக்கிறது. ஆனால், நால் வருண காலத்திலேயே கலப்பு மண முறை நடைமுறையில் இருந்தது என்று மனுதர்மம் கூறுகிறது.”

“பிராமணன் கீழ் மூவருணங்களிலும் சத்திரியன் பிராமணன் தவிர்த்த பின் வருணங்களிலும் சூத்திரன் தன் வருணத்தில் மட்டும் பெண் ஏற்கலாம். சூத்திரன் கலப்பு மணத்திற்கு வழியற்றவனாவான்”

“இதிலிருந்து பல விஷயங்கள் தெளிவாகிறது. வேலைப் பிரிவினை தான் அதன் அடிப்படையான அம்சம். சூத்திரன் மற்ற மூவருணத்துக்கும் சேவகம் செய்யும் உடலுழைப்பாளியாக தாசனாக – அடிமையாக இருந்தான்”

“அதே நேரத்தில் பிராமணர்களும் சூத்திரர்களும் நால் வருணத்தின் இரு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்கிடையில் சாதீய உயர்வு தாழ்வு இருந்ததில்லை. அதன் காரணமாகத்தான் அந்த நால்வருணத்தாரிடையில் கொடுக்கல் வாங்கல் சார்ந்த மூன்று வருணத்தாரும் சூத்திரர்களுடன் – திராவிடர்களுடன் மண உறவு கொண்டனர். அதன் காரண மாகத்தான் ஆரிய – திராவிட இனக்கலப்பு மிக வேகமாக நடந்தேறியது. இன்று இந்திய உபகண்டத்தில் வாழ்வோரை ஆரியர் – திராவிடர் என்று பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” (மார்க்சிஸ்ட் 93 ஆக பக்:49)

இதைவிட துணிச்சலான, அப்பட்டமான பித்தலாட்டம் வேறென்ன இருக்க முடியும் சூத்திரனுக்குக் கலப்புமணம் தடை செய்யப்பட்டதாக மேற்கோள் காட்டிவிட்டு, அவன் அடிமை – தாசன் என்று வரையறுப்பதாகக் கூறிக் கொண்டே அவனிடம் சாதீய உயர்வு தாழ்வு பாராட்டவில்லை, கொடுக்கல் வாங்கல் இருந்தது என்று புளுகுகிறார்கள், போலி மார்க்சிஸ்டுகள். அவர்கள் மேற்கோள் காட்டிய மனுவின் தர்மப்படி ஒவ்வொரு மேல் வருணத்தவனுக்கும் கீழ் வருணப் பெண்ணை ஏற்க உரிமை உண்டு; ஒவ்வொரு கீழ்வருணத்தவனும் மேல் வருணத்தவனுக்குள்ள அந்த உரிமையை ஏற்கவேண்டும் என்பதுதான் பொருளாகிறது. அப்படிக் கலப்பு மணத்தால் பிறந்தவர்களை நால்வருண அமைப்புக்குள் வைக்க மறுத்து அதற்கு வெளியே வைத்து இழிவாக நடத்தினர் என்பதுதான் உண்மை. இதை இந்தப் போலி மார்க்சிஸ்டுகளே வேறோரு இடத்தில் ஒப்புக் கொள்கின்றனர்.

“நால்வருண சமுதாயம் அதற்கு அவசியமான, ஆனால் இழிவான தொழில்களைச் செய்வதற்காக சண்டாளர் என்ற ஐந்தாவது ஒரு பிரிவினரை (பஞ்சமர்) வருண அமைப்புக்கு வெளியே தோற்றுவித்தது; அல்லது சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது. ஏற்கனவே குறிப்பிட்ட அதே பகுதியில் பக்கம் 236-ல் 36-வது சூத்திரம் இவ்வாறு கூறு கிறது”.

“கொடுங்குணம், இழிசெயல், ஒழுக்கமின்மை, தீயமொழி, வன்முறை ஆகிய செயல்கள் ஒருவனை இழிபிறப்பாளன் எனக் காட்டும் சூத்திரம் 38 இவ்வாறு கூறுகிறது:

“சாதிக் கலப்பு மறைவானதே, சங்கர சாதியார் (கலப்புச் சாதியினர்) நால் வருணத்தினரைப் போலவே வெளியே தோன்றினும் தொழில் கொண்டு சாதி அறியலாம்; சங்கர சாதியார் ஊருக்குப் புறம்பே, மலை, மலர்ச்சோலை, தோப்பு. சுடுகாட்டின் பக்கம் இவ்விடங்களில் வாழ்க. அங்கே பலரறியத் தம் தொழில் புரிக; சண்டாளர் ஊருக்கு வெளியே வாழ்க, உலோக ஏனம் பயன்படுத்தற்க; இவர் தொட்ட பாத்திரம் துலக்கினும் துய்மையாகாது. இரும்பும் பித்தளையுமே இவர் நகை; சண்டாளர் உடைந்த சட்டியிலேயே உணவுண்க. எவரும் இவருக்கு நேரே உணவு பரிமாறக் கூடாது. பணியாளரை ஏவி உணவிடுக. பிணத்தின் மீதிடும் ஆடைதான் இவர்க்கு உடை; சண்டாளர் தம் சாதியிலேயே பெண் கொள்ளுதலும் கொடுப்பதும் செய்க. நாய், கழுதை வளர்க்கலாம். மாடு வளர்க்கக் கூடாது.”

Brahmin2
வர்ண வியவஸ்தா என்று கூறுவதையே நமது இழிவு என்று நினைக்கிறார்கள்

இதுபோன்ற இன்னும் பல கொடுமையான விதிகளுக்குட்பட்டுத்தான் இம்மக்கள் வாழ வேண்டியிருந்தது என்பது மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது. நால் வருணமுறையில் ஆரியர் வழிவந்த முதல் மூன்று வருணத்தினருக்கும் சூத்திரர்கள் அடிமைகள். அது போதாதென்று நால் வருணம் முழுமைக்கும் அடிமைகளாக சண்டாளர் உருவாக்கப்பட்டனர். (மார்க்சிஸ்ட் 93 ஆக, பக்:43)

“இவை கடவுளின் பேரால் மனிதனுக்கு மனிதன் இழைத்த கொடுமைகள்” என்று ஒருபுறம் புலம்பிக் கொண்டே இந்த போலி மார்க்சிஸ்டுகள் இவற்றுக்குக் காரணமான ஆரியர்களையும், வேதங்களையும் இந்திய சமுதாய முன்னேற்றத்துக்காக மகத்தான பங்களிப்புகள் செய்திருப்பதாகப் பெருமையாகப் பீற்றிக்கொள்ளுகிறார்கள்.

“ஒட்டு மொத்தமாக ஆரியர்களுக்கும் வேதங்களுக்கும் தென்னிந்தியா உட்பட இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் மிகப்பெரிய பங்குண்டு என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மை” – இப்படிப் பீற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இதே போலி மார்க்சிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த குருவை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு கேள்விகள் எழுப்புகின்றனர்:

“ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் கூறுவதைக் கேளுங்கள்:

“வர்ண வியவஸ்தா என்று கூறுவதையே நமது இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும்; சமூக ஏற்றத்தாழ்வு அல்ல; பிற்காலத்தில் தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். (நூல் – சிந்தனைக் கோவை)

“வருணாசிரம முறையில் சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்கிறார் கோல்வால்கர். பிராமணர்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்களாம் எப்படி பிராமணர் என்ற ஒரு சாதி முழுமையும் அறிவுத் திறமைமிக்கவர்களாவார்கள்? பிறவியிலேயே அறிவுத்திறமை வந்து விடுமா? சூத்திரர்கள் தங்கள் தொழிலை செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்கிறார்களாம் தங்கள் தொழில் என்பது என்ன? சூத்திரர்களில் ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட குலத்தொழில் தானே? இதுதானே சாதீய முறையின் அடிப்படை. இந்த நான்கு வருணத்தினரில் சூத்திரர்கள் மட்டும்தானே தொழில் செய்வோர் – பொருளுற்பத்தியில் ஈடுபடுவோர் – மற்ற மூன்று பிரிவினரும் இவர்கள் உற்பத்தி செய்யும் உபரியைச் சுரண்டுவோர் தானே? உடலுழைப்பில் ஈடுபடாமல் வாழ்வோர்தானே? சூத்திரர்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் மேல்சாதியினர் அனைவரிலும் அறிவுத் திறமையால் பிராமணன்தான் மிகவும் உயர்ந்தவன். இவையனைத்தும் நிரந்தரமான ஏற்பாடு. இதுதான் இந்திய அடிமைமுறை. இதனை மூடி மறைக்க இது ஒரு சமூக அமைப்பு; இதில் ஏற்றத் தாழ்வு இல்லை என்று வாதாடுகிறார் கோல்வால்கர். அவர் எழுதியுள்ள வரிகளிலேயே அந்த ஏற்றத்தாழ்வு பளிச்சென்று தெரிகிறது.” (மார்க்சிஸ்ட் 1993 மார்ச், பக்: 27,28)

இங்கே போலி மார்க்சிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களை நோக்கி எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் இவர்களே தெரிவித்துள்ள “மார்க்சிய வரலாற்று ஆய்வுகளோடு” ஒப்பிட்டுப் பார்த்தாலே இவர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்கார்கள் என்பது புரியும் உண்மையில் இவ்விரு பிரிவினரும் தமது மூதாதையர்களான ஆரியத்துக்கு வக்காலத்து வாங்கும் இரட்டை நாயனங்கள் என்பது தெளிவாகவே விளங்கும்.

– தொடரும்.

புதிய கலாச்சாரம், நவ, டிச 1994.

மேலும் படிக்க :

  1. மிகநல்ல, அவசியமான வரலாற்று பதிவுகள்! போலிகளின் வண்டவாளத்தை தோழர்கள் புரிந்து கொள்ள இந்த தொகுதி கட்டுரைகள் உதவும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க