Tuesday, July 23, 2024
முகப்புஉலகம்ஐரோப்பாரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு ! சென்னையில் 4 கூட்டங்கள் !

ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு ! சென்னையில் 4 கூட்டங்கள் !

-

மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள் 200-ஆம் ஆண்டு !
ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு !!

முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

வாழ்க்கையில் நமக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கிறது என்றும் கூறலாம். கோடிக் கணக்கானவர்களுக்கு வேலை இல்லை. வேலை இருந்தாலும் நல்ல சம்பளம் இல்லை. தினமும் 10, 12 மணி நேரம் உழைக்கிறோம். நல்ல வீடில்லை, உணவில்லை, உடையில்லை. பொருளாதாரப் பிரச்சினைகளால் பல குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன. கொடிய வறுமையால் தாயே குழந்தையை விற்கிறாள்.

கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு பால் இல்லை. ஆனால் கோடிக் கணக்கில் பால் உற்பத்தியாகிறது. அனைவருக்கும் உண்ண உணவிருக்கிறது, ஆனால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கின்றனர். ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் நோய்களால் இறக்கின்றனர். நாட்டில் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு கிடைப்பதில்லை.

இதற்கு யார் காரணம்? என்ன காரணம்? இந்த நிலை மாறுமா, மாறாதா? என்பது நம் அனைவருக்குமே உள்ள கேள்விதான். இது போன்ற கேள்விகளுக்கு அன்றே அறிவியல் பூர்வமாக விடையளித்த மாமேதை தான் கார்ல் மார்க்ஸ். 1818 ஆம் ஆண்டு மே, 5-ல் ஜெர்மனியில் பிறந்த மார்க்ஸ், பெரும்பான்மை மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் உழல்வதற்கான காரணத்தை ஆய்வு செய்து தீர்வையும் முன்வைத்தார். அதுதான் கம்யூனிசம் எனும் தத்துவம், அதற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டார்.

மக்களின் வறுமையைப் போக்க சிந்தித்த மார்க்சின் குடும்பம் கொடிய வறுமையில் வாடியது. மார்க்சின் நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. மார்க்சின் வாழ்க்கையை எழுதிய ஹென்றி ஓல்கவ் “குழந்தைகள் பிறந்தபோது பாலுக்கு காசில்லை; இறந்தபோது சவப்பெட் டிக்கு காசில்லை” என்று மார்க்சின் வாழ்க்கையை குறிப்பிட்டுள்ளார். எனினும், மார்க்ஸ் தனது ஆய்வுப்பணிகளை நிறுத்தவில்லை.  இப்பணியில் மார்க்சின் மற்றொரு உருவகமாக உடனிருந்தவர் அவருடைய நண்பரும் மற்றொரு மாமேதையுமான ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ். இவர்கள் உருவாக்கிய தத்துவம் தான் கம்யூனிசம், அது சமூகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் அறிவியல்பூர்வமான விளக்கத்தையும், தீர்வையும் கூறியது. மார்க்ஸ் பிறந்து இப்போது இருநூறு ஆண்டுகள் துவங்குகிறது. மார்க்சியம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் துவங்கிவிட்டது.

மார்க்சியத் தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு, போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டினார், ஆசான் லெனின். மார்க்சிய ஒளி யில் தொழிலாளர்கள், விவசாயிகளைத் திரட்டி, ரசிய போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்டி, தொழிலாளர்களின் ஆட்சி, அதிகாரத்தை நிறுவினார். “முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!” என்று முழங்கினார். உலக வரலாற்றில் முதல்முறையாக அழுக்குச் சட்டைக்காரர்கள் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆட்சியில் அமர்ந்தனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும், முதலாளிகளின் சுரண்டல் ஆட்சியும் முடி வுக்கு வந்தது. வரலாற்றில் எந்த அரசும் செய்திராத சாதனைகளைச் செய்தது, ரசிய சோசலிச அரசு.

சோசலிசத்தின் சாதனைகள்:

நிலப்பிரபுக்கள், பண்ணையார்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய நாடான ரசியாவை ஐந்தே ஆண்டுகளில் மின்சாரமயமாக்கினர். வறுமை ஒழிக்கப்பட்டது. கல்வியில் காலனிய இந்தியாவுக்கு பின் இருந்த ரசியா, புரட்சிக்கு பின் இங்கிலாந்துக்கு முன்னே சென்றது. உலகிலேயே முதல்முறையாக இலவசக் கல்வி வழங்கிய நாடு ரசியாதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட்டது. கல்விக் கேற்ற வேலையும், ஊதியமும் வழங்கப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது.

மருத்துவத்தை இலவசமாக வழங்கிய நாடும் சோசலிச ரசியாதான். ஆலோசனைகள் முதல் அறுவை சிகிச்சைகள் வரை அனைத்தும் இலவசம். இவை ரசியர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டவருக்கும் வழங்கப்பட்டன. பேருந்து ரயில், மெட்ரோ ரயில் அனைத்திலும் மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. வேலைக்குச் செல்பவர்களுக்கு கட்டணமே இல்லை. அனைவருக்கும் அரசே சொந்த வீடு கட்டிக் கொடுத்தது. அதற்கான தொகையை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தினர்.

ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்டி, பெண்களின் அடிமைச்சங்கிலி தகர்க்கப்பட்டது. ஆண்களைப் போல பெண்களும் அனைத்து துறைகளி லும் பணியாற்றினர். ஆபாசப் பத்திரிக்கைகள், சினிமாக்கள் தடை செய்யப்பட்டன. விபச்சாரம் ஒழிக்கப்பட்டது. அனைவரும் தேர்தலில் போட்டியிடலாம். சோவியத் என்கிற மக்கள் அதிகாரம் செலுத்துகின்ற அமைப்பு ஒவ்வொரு ஊரிலும் இருந்தது. ஊருக்குள் அவை தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும். சோவியத்துகளின் உயர்ந்த வடிவமான சுப்ரீம் சோவியத்துதான் பாராளுமன்றம். பாராளுமன்றத்திற்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண மக்கள். தேர்ந்தெடுக்கவும், தவறிழைத்தால் திரும்ப அழைக் கவும், தண்டிக்கவும் மக்களுக்கு அதிகாரம் இருந்தது.

தோழர் லெனினுக்கு பிறகு ஸ்டாலின் வந்தார். அவருடைய ஆட்சி யில் ரசியா மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியது. பொருளாதாரம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியது. அமெரிக்கா போன்ற வல்லரசு களின் பொருளாதாரத்தையே பின்னுக்குத்தள்ளிவிட்டு பிரமிக்கும் உச்சத்தை எட்டியது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த பாசிச இட்லர் ஒழித்துக்கட்டப்பட்டான்.

பூவுலகில் ஒரு சொர்க்கத்தைப் படைத்த சோசலிசத்தின் சாதனை களை இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போது ரசியப் புரட்சியின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. உழைக்கும் மக்களை ஆட்சியில் அமர்த்திய அந்த நாள்தான் நாம் கொண்டாட வேண்டிய திருநாள். கொண்டாடினால் மட்டும் போதுமா? இல்லை, நமது நாட்டிலும் அத்தகையதோர் புரட்சியை நமது நாட்டின் சூழலுக்கேற்ற “புதிய ஜனநாயகப் புரட்சியை” நடத்தி முடிக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது. இன்று, மோடி தலைமையிலான அரசு உலகமயமாக்கல் கொள்கையின் மூலம் நாட்டை பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கி வருகிறது. மறுபுறம், மதவெறிக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, மக்களைப் பிளவுபடுத்தி இரத்தம் குடிக்கிறது. இந்திய மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், கார்ப்பரேட் பயங்கரவாதத்தையும், பார்ப்பன இந்துமதவெறிப் பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்டாத வரை எந்தப் பிரச்சினையும் தீராது. நாம் அனுபவிக்கின்ற அனைத்து கொடுமைகளும் ஒழிய வேண்டுமென்றால் அடக்கி, ஒடுக்கப்படுகின்ற அனைத்து வர்க்கங்களையும் பாட்டாளிகளின் தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டி, உழைக்கும் மக்களுக்கான ஆட்சி, அதிகாரத்தை நிறுவும் புதிய ஜனநாயகப் புரட்சியை நாம் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு, மார்க்சியத்தை நெஞ்சில் ஏந்தி நவம்பர் புரட்சி நாளில் அணிதிரள்வோம்!

முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும் என சூளுரைப்போம் !

தெருமுனைக் கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்

7.11.2016 மாலை 5 மணி

சென்னையைச் சுற்றி  நான்கு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

1. சென்னை : அம்பேத்கர் திடல் அருகில், சேத்துப்பட்டு,
2. கும்மிடிப்பூண்டி : சிவம் ஜி.அர். மண்டபம், ரெட்டம்பேடு ரோடு.
3. காஞ்சிபுரம் : ஐயங்கார் குளம்
4. பட்டாபிராம்

KPM Nov 7 poster

KPM Nov 7 events

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
9551869588, 9445112675, 8807532859, 9841658457

  1. வினவு தோழர்களுக்கும், அதன் தோழன்மை அமைப்புகளின் தோழர்களுக்கும் எனது நவம்பர் புரட்சி நூற்றாண்டு தின மனமார்ந்த வாழ்த்துகள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க